‘வா!’ என்று சொல்லிக்கொண்டேயிருங்கள்
1 இயேசுவுடைய மீட்கும் கிரய பலியின் மூலம் யெகோவா என்னே ஒரு மகத்தான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்! இதில் மக்களை உண்மையில் சந்தோஷப்படுத்துவதற்கு தேவையான எல்லாவற்றிற்குமான அடிப்படையை நாம் காண்கிறோம். (யோவா. 3:16) என்றாலும், வெகு சிலரே இந்தச் சத்தியத்தை அறிய வந்து, அதை உறுதியாக நம்புகின்றனர் என்பதைச் சொல்வதற்கு வருத்தமாயிருக்கிறது. இன்னும், யெகோவா மனிதவர்க்கத்தின் மீது வைத்திருக்கும் அன்பான அக்கறையினால் இந்த நற்செய்தி எங்கும் மக்களுக்குத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறார். தம்முடைய மகன், இயேசு கிறிஸ்துவின் மூலம் சந்தோஷத்தைக் கண்டறிவதற்கு அவர் எல்லாருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை அளித்து நித்திய ஜீவன் என்ற எதிர்பார்ப்பை அளித்திருக்கிறார்.—யோவா. 17:3.
2 ஆயிரக்கணக்கான வருடங்களாக, பாவத்திலிருந்தும் இறப்பிலிருந்தும் மனிதவர்க்கத்தை மீட்பவர் யார் என்பது அறியாமலேயே இருந்தது. அது இயேசு கிறிஸ்து வந்து “ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்”கும் வரை ஓர் “இரகசிய”மாகவே இருந்தது. (ரோ. 16:25; 2 தீ. 1:10) இயேசுவைப் பின்பற்றியவர்கள் முதல் நூற்றாண்டில் இந்த நற்செய்தியை யாவரறியச் செய்யத் தொடங்கினர்; நவீன காலங்களில் வாழக்கூடிய நமக்கு இதே நற்செய்தியை அறிவிக்கும் மேன்மையான சிலாக்கியம் இருக்கிறது. ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கும்போது, ‘வா! ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்’ என்று சொல்லி எல்லா வாழ்க்கை பின்னணிகளிலிருந்து வரும் மக்களை அழைக்கிற யெகோவா தேவனோடும், இயேசு கிறிஸ்துவோடும், கிறிஸ்துவின் சகோதரர்களோடும்கூட நாம் பங்குபெறுகிறோம்.—வெளி. 22:17.
3 எல்லாருமே இந்த நற்செய்திக்குச் செவிகொடுக்கமாட்டார்கள் என்பது உண்மைதான். வெகு சிலரே கவனத்தோடுக் கேட்கின்றனர். சிலர் உயிரளிக்கும் சத்திய தண்ணீர்களிலிருந்து பயனடைய அவர்களை அழைக்கும் கடவுளுடைய ஊழியர்களை வேண்டாமென்று வெறுப்போடு மறுப்புத் தெரிவிக்கின்றனர். இருந்தாலும், யெகோவாவிடமிருந்து கிடைக்கும் பலத்தினால் நாம் இந்த வேலையில் தொடர்ந்து நிலைத்திருக்கிறோம். சத்தியத்தைப் பேசுவதற்கு நாம் மனமுள்ளவர்களாயிருப்பதும் கேட்கக்கூடிய எவருக்கும் உதவிசெய்வதும் யெகோவாவுக்குப் பிரியமாயிருப்பதோடு அவருடைய ஆசீர்வாதத்தையும் கொண்டுவருகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம்.
4 மார்ச்சுக்கான நம்முடைய ஊழியத்தில், இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற புத்தகத்தை வாசித்து இன்று சுத்தமான வாழ்க்கையை வாழ அது கொடுக்கும் நடைமுறையான ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிப்பதற்கும் அதன் இறுதி அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ள எதிர்கால நம்பிக்கையைக் கற்றறியவும் நாம் சத்தியத்தைத் தேடுபவர்களை உற்சாகப்படுத்துவோம். அல்லது நாம் என்றும் வாழலாம் புத்தகத்தை அவர்களுக்குக் காட்டி, அதைக்கொண்டு ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பை அவர்களோடே நடத்துவதற்கு அதை உபயோகிக்கலாம். இந்த அளிப்புகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் அநேக ஆசீர்வாதங்களைப் பெறுவர். எனினும், பைபிளே எதிர்காலத்தை—நம்முடைய, அவர்களுடைய எதிர்காலத்தை—குறித்து அதிகத்தைச் சொல்கிறது. இப்போது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக இருக்கும் பெரும்பான்மையர் என்றும் வாழலாம் புத்தகத்தில் உள்ள பைபிள் போதனைகளின் விளக்கங்களைப் படித்தப் பின்னரே, முதலில் சத்தியத்தில் ஆர்வங்காட்டத் துவங்கினர். அந்தப் புத்தகத்தை விளக்கமாகப் படித்தவர்களாக, சத்தியத்துக்குப் பசிதாகமுள்ள, உண்மைமனமுள்ள ஆட்களுக்கு அதன் முக்கியத்துவத்தை நம்மால் மதித்துணர முடியும். அப்பேர்ப்பட்ட ஆட்களை நம்முடைய ஊழியத்தில் நாம் பார்க்கும்போது, என்றும் வாழலாம் புத்தகத்தின் மதிப்பை அவர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கு, அதிலுள்ள ஓரிரண்டு முக்கியக் குறிப்புகளை சுட்டிக்காட்ட நாம் முயலவேண்டும். மற்ற விஷயங்களோடு, இந்த 20-ஆம் நூற்றாண்டில் நிறைவேறியிருக்கிற பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிய அதன் தெளிவான விளக்கங்களை நாம் குறிப்பிட்டுக் காட்டலாம், அந்தப் புத்தகத்தின் 18-ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள இயேசு கொடுத்த தீர்க்கதரிசனங்கள் போன்றவற்றை.
5 நாம் ஏப்ரல் 6 அன்று கிறிஸ்துவின் இறப்பைப்பற்றிய நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதற்கு ஆயத்தமாகையில், மனிதவர்க்கத்துக்கான யெகோவாவின் அன்பார்ந்த ஏற்பாடுகளைக் குறித்து பேசுவது மிகவும் பொருத்தமானதாயிருக்கும். மக்கள் செவிகொடுக்கத் தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொள்ளாவிட்டாலும், ‘வா! ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்’ என்ற உளமார்ந்த அழைப்பை விருப்பப்பட்டவர்களுக்குக் கொடுக்க கடவுள்-கொடுத்த நம்முடைய நியமிப்பில் நாம் நிலைத்திருப்போமாக.