ஆர்வங்காட்டியிருக்கிற அனைவருக்கும் உதவுதல்
1 மார்ச்சின்போது ராஜ்ய செய்திக்கு ஆர்வங்காட்டியிருக்கிற அனைவருக்கும் உதவவும், நினைவு ஆசரிப்பு தினத்துக்கு வருமாறு அழைக்கவும், நம்முடைய விசுவாசமும் மற்றவர்களிடமான நம்முடைய அன்பும் நம்மை உந்துவிக்கும். அப்பேர்ப்பட்ட ஆட்கள், கிறிஸ்துவின் மீட்கும் கிரய பலியை மையமாகக் கொண்டிருக்கும் இரட்சிப்பின் கடவுளுடைய ஏற்பாட்டினிடம் வழிநடத்தப்படவேண்டும்.—எபி. 9:28.
2 நினைவு ஆசரிப்புத் தினத்துக்கு வரவழைக்க விரும்புபவர்களை நீங்கள் பட்டியலிட்டுக்கொள்வது ஒரு நல்ல காரியமாகும். அவ்வப்போது கூட்டங்களுக்கு ஆஜராகும் ஆட்கள், முன்பு படித்துக்கொண்டிருந்த ஆட்களையும் மற்ற வழிகளில் ஆர்வங்காட்டியவர்களையும் உட்படுத்திக்கொள்ளுங்கள். விசுவாசத்திலில்லா துணைவர்களையும் மற்ற குடும்ப அங்கத்தினர்களையும் மறந்துவிட வேண்டாம். பட்டியலிட்டப் பிறகு, ஒவ்வொருவரையும் சென்று சந்திக்க விசேஷ முயற்சியெடுங்கள். ஒருசில சந்திப்புகளைச் செய்ய மூப்பர்களுடைய உதவியை நீங்கள் கேட்கலாம்.
3 சந்திப்பில் நீங்கள் என்ன சொல்லலாம்?
அனலான வாழ்த்துதலுக்குப் பின், இதுபோல ஏதாவது நீங்கள் சொல்லலாம்:
◼ “முன்பு, நீங்கள் ஆவிக்குரிய விஷயங்களின்பேரில் ஆர்வங்காட்டியிருக்கிறீர்கள், ஆதலால் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கான இந்த அழைப்பை நீங்கள் மதித்துணருவீர்கள் என்று நான் நினைக்கிறேன். [நினைவு ஆசரிப்பு தினத்துக்கான அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழை வீட்டுக்காரரிடம் கொடுங்கள்.] கிறிஸ்துவின் இறப்பை நினைவுகூரும்படியான இந்த நிகழ்ச்சியை மட்டுமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றியவர்கள் அனுசரிக்கும்படி கட்டளையிட்டார். தம்முடைய இறப்பினால் கிறிஸ்து எதை நிறைவேற்றினார் என்பதையும் அதன் மூலம் நாம் எவ்வாறு நித்திய ஜீவனைப் பெறலாம் என்பதையும் விமர்சிப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். இந்த விசேஷ கூட்டத்திற்கு கடந்த வருஷம் 1 கோடியே 14 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் ஆஜராயிருந்தனர். இந்த வருஷம் என்னோடுகூட நீங்களும் ஆஜராவது சந்தோஷமாக இருக்கும்.” உங்களுடைய சபை நினைவு ஆசரிப்பை அனுசரிக்கக்கூடிய நேரத்தையும் இடத்தையும் எழுதிக்கொடுக்க நிச்சயமாயிருங்கள். மேலும், அவசியமிருந்தால் போக்குவரத்து ஏற்பாடு செய்யுங்கள்.
4 புதியவர்கள் நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகும்போது, அவர்களை வரவேற்கவேண்டும். அவர்கள் உள்ளூர் பிரஸ்தாபிகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிசெய்யுங்கள். அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் ஆர்வமான ஆட்கள் யாரேனும் இருந்தால் அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள். அவர்களுடைய சொந்த அயலவரிடத்திலேயே அநேகர் சத்தியத்தில் ஆர்வங்காட்டுகிறார்கள் என்பதை அறிவது அவர்களுக்கு உற்சாகமாயிருக்கும். கூடுமானால், நினைவு ஆசரிப்பு தினத்தன்று உங்களுடைய குடும்பத்தோடுகூட அவர்களையும் உட்கார வைத்துக்கொள்ளுங்கள்.
5 வெறுமனே நினைவு ஆசரிப்பு தினத்துக்கு ஆஜராவது இரட்சிப்பை அவர்களுக்கு உறுதிப்படுத்தாது என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அழைப்புக் கொடுக்கிற அநேக ஆட்களுக்கு, ஒருவேளை அதுதானே இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின்பேரில் விசுவாசம் வைப்பதற்கான முதற்படியாக இருக்கலாம். கூட்டம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பொது கூட்டத்துக்கும் காவற்கோபுர படிப்புக்கும் அவர் ஆஜராக விரும்புகிறாரா என்று வந்தவரிடம் கேளுங்கள். அனலோடும் உதவும் மனப்பான்மையோடும் இருங்கள். எவ்விதத்திலும் உதவுவதற்கு நீங்கள் மனமுள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்பதை அவர் உணரட்டும். எவ்வளவு சீக்கிரமாக அவர் நம்மோடு ஒழுங்காகக் கூட்டுறவுகொள்ள துவங்குகிறாரோ அவ்வளவு வேகமாக அவருடைய ஆவிக்குரிய முன்னேற்றமும் இருக்கும். நம்மால் உதவ முடிந்த மற்ற அநேக ஆட்களோடுகூட, “மிகுந்த உபத்திரவத்”தைத் தப்பிப்பிழைப்பது என்னே ஆனந்தத்தையும் மனநிறைவையும் நமக்குக் கொடுக்கும்!—வெளி. 7:9, 14.