அடிக்கடி செய்துமுடிக்கப்பட்ட பிராந்தியத்தில் வேலைசெய்தல்
1 சில சபைகள் தங்களுடைய பிராந்தியத்தை அடிக்கடி செய்துமுடிக்கிறார்கள் என்ற அறிக்கைகளைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். (மத். 24:14; 1 தீ. 2:3, 4) இது தனித்தன்மை வாய்ந்த ஒரு சவாலை அளிக்கிறபோதிலும், எழும்பக்கூடிய பல்வேறு சூழ்நிலைமைகளைக் கையாளுவதற்கு நாம் நன்கு தயார்செய்தவர்களாகவும் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தால், அதை வெற்றிகரமாக சமாளிக்கலாம் என்று அனுபவம் காண்பித்திருக்கிறது.
2 பலன்தரத்தக்க அறிமுகங்களே திறவுகோல்: நன்கு கவனமாக சிந்தனைசெய்து தயார்செய்யப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிமுகங்களைப் பயன்படுத்துவதற்குத் தயாராயிருப்பது மிக முக்கியமானது. நாம் அடிக்கடி சந்திப்பதற்கான இன்றியமையா காரணங்களைத் தெளிவுபடுத்துகிற பொருத்தமான கூற்றுகள் அவற்றில் அடங்கவேண்டும்.
3 நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான அறிமுகங்களின் நல்மாதிரிகள் அநேகத்தை அளிக்கிறது. பக்கம் 15-ல் “அடிக்கடி வேலைசெய்யப்படுகிற பிராந்தியத்தில்” என்ற தலைப்பின்கீழ் மூன்று மாதிரிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உங்களுடைய பிராந்தியத்தில் நீங்கள் பயன்படுத்த விரும்புவதை ஒத்திகைசெய்துபாருங்கள்.
4 சில பிரஸ்தாபிகள், அடிக்கடி வேலைசெய்யப்பட்ட பிராந்தியத்தில் சம்பாஷணைகளைத் தொடங்குவதற்கு உள்ளூர் செய்தித்தாளிலிருந்து எடுக்கப்பட்ட விஷயங்களைப் பயன்படுத்துவதன்மூலம் வெற்றிகாண்கிறார்கள். இது எவ்வாறு செய்யப்படலாம் என்பதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் மூன்று மாதிரிகளைக் கொடுக்கிறது. பக்கம் 10-ல், “குற்றச்செயல்களும்/பாதுகாப்பும்” என்ற தலைப்பின்கீழுள்ள இரண்டாவது அறிமுகத்தையும் பக்கம் 10 மற்றும் 11-ல், “தற்போதைய நிகழ்ச்சிகள்” என்ற தலைப்பின்கீழுள்ள முதல் இரண்டு அறிமுகங்களையும் சிந்தியுங்கள்.
5 நீங்கள் தயார்செய்யும் அறிமுகங்கள்: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரியைப் பின்பற்றி பொருத்தமான அறிமுகக் குறிப்புகளை விரிவுபடுத்தவும் பயன்படுத்தவும் தயக்கப்படாதேயுங்கள். இவற்றை உங்களுடைய சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இயல்பான முறையில் தெரிவியுங்கள். வெளி ஊழியத்தில் இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பாக அனுபவம்வாய்ந்த பிரஸ்தாபி ஒருவரிடம் சொல்லிப்பார்க்கலாம்.
6 உதாரணமாக, நீங்கள் இதுபோன்ற ஒன்றைச் சொல்லலாம்:
◼ “கடைசியாக உங்களைச் சந்தித்ததிலிருந்து, [சமுதாயத்திலுள்ள மக்கள் பேசிக்கொண்டிருக்கிற சமீபத்திய சம்பவத்தைப்பற்றி குறிப்பிடுங்கள்]. நாம் அனைவருமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படுவதால், நம்முடைய அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அநேகர் உள்ளார்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை நீங்களும்கூட இதைக்குறித்து ஓரளவுக்கு சிந்தித்திருப்பீர்கள். [எதிர்பார்க்கும் மறுமொழிகூறுவதற்கு அனுமதிப்பதற்காக சற்று நிறுத்துங்கள்.] இந்தச் சூழ்நிலைமையைக் குறித்து ஏதாவது செய்யப்படலாம் என்று நாம் நிச்சயமாகவே நம்புகிறோம். இருந்தாலும், நிரந்தரமான பரிகாரத்தைக் குறித்ததில் தீர்க்கதரிசியாகிய எரேமியா, அதிகாரம் 10 வசனம் 23-ல் எழுதியதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் இல்லையா? வசனத்தை வாசித்தப் பிறகு, வீட்டுக்காரருடைய குறிப்புகளைக் கண்டறியுங்கள்; பின்பு கலந்தாலோசிப்பிலுள்ள குறிப்பிட்ட பிரச்னையை யெகோவா எவ்வாறு தீர்ப்பார் என்று காட்டுகிற திட்டவட்டமான ஒரு வசனத்திற்கு கவனத்தைத் திருப்புங்கள்.
7 அல்லது நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இன்றைய செய்தியில் நீங்கள் [திட்டவட்டமான சம்பவத்தைக் குறிப்பிடுங்கள்] கவனித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இது நம் அனைவரையுமே பாதிக்கிறது என்பதை ஒருவேளை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். [எதிர்பார்க்கும் மறுமொழிகூறுவதற்கு அனுமதிப்பதற்காக சற்று நிறுத்துங்கள்.] அரசாங்கங்கள் ஒரு குறுகிய கால பரிகாரத்தை திட்டமிடும் என்று நாம் நம்பலாம். என்றபோதிலும், இந்தப் பிரச்னை எவ்வாறு நிரந்தரமாகத் தீர்க்கப்படும் என்பதைப் பைபிள் காட்டுகிறது.” கடவுள் என்ன செய்வார் என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிற ஒரு வசனத்திற்குக் கவனத்தைத் திருப்புங்கள்.
8 “நீங்கள் ஏன் அவ்வளவு அடிக்கடி வருகிறீர்கள்?” உரையாடலை நிறுத்தும் இந்தப் பதிற்சொற்களுக்குப் பொருத்தமான மறுமொழிகள் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், பக்கம் 20-ல் “நீங்கள் ஏன் அவ்வளவு அடிக்கடி வருகிறீர்கள்?” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட கேள்வியை மற்றவர்கள் கேட்காமலேயே, கடவுள்பேரிலும் அயலார்பேரிலுமுள்ள உண்மையான அன்பு முடிந்தளவு அடிக்கடி சந்திப்பதற்கு நம்மைத் தூண்டுவிக்கிறது என்பதை மதித்துணர, மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்குப் பொருத்தமான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நாம் பயன்படுத்தினால், நாம் நல்ல சாட்சி கொடுக்கமுடியும். இதன் சம்பந்தமாக யோவான் 21:15-17-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளைக் கலந்தாலோசிப்பது மிகவும் பயனுள்ளதாய் நிரூபிக்கும்.
9 அதுபோதும் என்று யெகோவா தேவன் சொல்லும்வரையாக, அடிக்கடி செய்துமுடிக்கப்பட்ட பிராந்தியத்தில் வேலைசெய்வதன் சவாலைத் தொடர்ந்து சந்திப்போமாக. இந்தத் தீர்மானத்தோடு, முடிவுவரையாக நாம் அவருடைய வழிநடத்துதல், பாதுகாப்பு, மற்றும் ஆசீர்வாதத்திற்காக நிச்சயமாயிருக்கலாம்.—மத். 28:19, 20.