நீங்கள் சந்தித்த ஆட்களின் அக்கறையைத் தொடர்ந்து அதிகரித்தல்
1 நாம் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருக்கும்போது அக்கறைகாட்டும் ஒரு நபரிடம் வழக்கமாகவே அதிக நேரம் செலவுசெய்து பேசிக்கொண்டிருக்க முடிவதில்லை. பெரும்பாலானவர்களின் விஷயத்தில் நாம் மறுசந்திப்பு செய்து, பைபிள் படிப்பை நடத்தும்போதுதான் உண்மையான போதிக்கும் வேலையே செய்யப்படுகிறது. (மத். 28:19, 20) மறுசந்திப்புகளில் திறம்பட்டவகையில் போதிக்க, இதற்கு முந்தின தடவை நாம் எதை கலந்தாலோசித்தோமோ அதை மறுபார்வை செய்துவிட்டு, அதன் பிறகு கூடுதலாக கலந்தாலோசிப்பதற்குத் தயார்செய்யுங்கள்.
2 குடும்ப ஏற்பாட்டின் நிலையற்ற தன்மையைப்பற்றி பேசியிருந்தீர்களேயானால், “என்றும் வாழலாம்” புத்தகத்தின் 29-ம் அதிகாரத்திலுள்ள விஷயத்தை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமானால், பைபிள் புத்திமதிகளைப் பின்பற்றுவதன் ஞானத்தைப்பற்றி போனமுறை பேசினோம். இன்று ஒற்றுமையுள்ள குடும்பங்களுக்கான திறவுகோல் எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” பதிலுக்காக காத்திருங்கள். பக்கம் 247-ல் பாரா 27-ஐக் குறிப்பிட்டுக் காட்டி, கொலோசெயர் 3:12-14-ஐ வாசித்துக் காண்பியுங்கள். மெய்யான அன்பு எவ்வாறு குடும்பத்தினரை ஒன்றிணைந்திருக்கச் செய்யக்கூடும் என்பதன்பேரில் கூடுதலான குறிப்புகளைச் சொல்லுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தை முறைப்படி படிப்பது எவ்வாறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவக்கூடும் என்பதை விளக்குங்கள்.
3 முதலில் சந்தித்தபோது, சீர்குலைந்துவரும் உலக நிலைமைகளைப்பற்றி பேசியிருந்திருப்பீர்களானால், பின்வருமாறு சொல்லி தொடரலாம்:
◼ “நாம் எப்பொழுதாவது சமாதானமாக வாழவேண்டும் என்றால் பெரிய மாற்றங்கள் தேவையாய் இருக்கின்றன என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நம்முடைய பிரச்சினைகளுக்கெல்லாம் சாத்தான்தான் முக்கிய காரணம் என்பதாக பைபிள் காட்டுகிறது. அவனை ஏன் கடவுள் இவ்வளவு காலமாக விட்டுவைத்திருக்கிறார் என்று அநேகர் யோசிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதில் அளிக்கும்வரை காத்திருங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 20-ல் பாராக்கள் 14, 15-க்குத் திருப்பி, சாத்தான் இதுவரையாக அழிக்கப்படாததற்குக் காரணம் என்ன என்பதை விளக்குங்கள். பின்னர் வெகு சமீபத்தில் நாம் எதை எதிர்பார்க்கலாம் என்பதைக் காட்டும் ரோமர் 16:20-ஐ வாசித்துக் காட்டுங்கள்.
4 கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் அனுபவிக்கப்படப்போகும் ஆசீர்வாதங்களைப்பற்றி பேசியிருந்தீர்களானால், மறுசந்திப்பின்போது, பின்வருமாறு சொல்லலாம்:
◼ “கடவுளுடைய ராஜ்யம் பூமிக்கும் மனிதவர்க்கத்திற்கும் ஆச்சரியகரமான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். 12 மற்றும் 13-ம் பக்கங்களில் இந்த ஆசீர்வாதங்கள் நன்கு சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. உங்களைக் கவரும் எந்தக் காரியத்தை நீங்கள் இங்கு காண்கிறீர்கள்? [பதிலுக்காக காத்திருங்கள்.] இதைப்போன்ற ஒரு உலகத்தில் வாழ்வது எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.” பாரா 12-ஐ வாசியுங்கள். அக்கறை காண்பிப்பாராகில், பாரா 13-ல் காணப்படும் கேள்வியைக் கேட்டு, அதற்கான பதிலைக் கலந்தாலோசியுங்கள். இராஜ்ய ஆசீர்வாதங்களைப் பற்றிய இன்னும் அநேக கேள்விகளுக்கு இந்த அதிகாரம் பதிலளிக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்டி, நீங்கள் அடுத்த முறை வரும்போது அவற்றைக் கலந்தாலோசிக்க மகிழ்ச்சியுள்ளவராய் இருப்பீர்கள் என்பதையும் தெரிவியுங்கள்.
5 இவ்வாறு சொல்வதன் மூலம் நீங்கள் ஒருவேளை படிப்பு ஒன்றைத் தொடங்கலாம்:
◼ “இந்தப் புத்தகத்தை உபயோகித்து அநேகர் தங்களுக்கு எழும்பும் பைபிள் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.” பொருளடக்கத்திற்குத் திருப்பி, “இதில் உங்களுக்கு மிகவும் ஆர்வமூட்டும் விஷயம் எது?” என்று கேளுங்கள். அவர்கள் பதில் சொல்லும்வரை காத்திருந்து, அவர்களுக்கு ஆர்வமூட்டிய அந்த அதிகாரத்திற்குத் திருப்பி, அதில் முதல் பாராவை வாசியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள கேள்விகள் எவ்வாறு ஒவ்வொரு பாராவிலும் உள்ள முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுகின்றன என்பதை விளக்குங்கள். கூடுதலாக ஓரிரு பாராக்களைக் கலந்தாலோசிப்பதன் மூலம் படிப்பை நடத்திக்காட்டிய பிறகு மீண்டும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
6 என்றும் வாழலாம் புத்தகத்தில் காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்ப்பது, நம் ஊழியத்தை முழுமையாகச் செய்துமுடிப்பதற்கான நம்முடைய ஆர்வத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. (2 தீ. 4:5) நாம் சொல்வதைக் கேட்பவர்கள் நித்திய ஜீவனை முயன்று பெறுவதற்கு உதவிசெய்யலாம்.—யோவா. 17:3.