நீங்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கவேண்டும்?
1 முழு மனிதவர்க்கமும் கணக்கு ஒப்புவிப்பதற்கான காலம் நெருங்கிவருகிறது. பைபிள் அதை “யெகோவாவின் நாள்” என்று அழைக்கிறது. அந்தச் சமயத்திலேயே பொல்லாதவர்களுக்கு எதிராக தெய்வீக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும்; நீதிமான்கள் விடுதலை பெறும் காலமாகவும் இருக்கும். அப்போது உயிரோடிருக்கிற எல்லா மனிதர்களும் தாங்கள் வாழ்ந்த விதத்திற்காக கணக்கு ஒப்புவிக்க வேண்டும். அதை மனதில் கொண்டு, பேதுரு சோதித்தாராய்கிற கேள்வியை எழுப்புகிறார்: “நீங்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கவேண்டும்”? அவர் ‘பரிசுத்த நடக்கைக்குரிய செயல்கள், தேவபக்தியின் கிரியைகள், யெகோவாவின் நாளை மனதில் நெருங்க வைத்திருப்பது’ ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ‘கறையற்றவர்களாகவும், மாசில்லாதவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும்’ இருப்பதன் தேவையையும் வலியுறுத்திக் கூறுகிறார்.—2 பே. 3:11-14, NW.
2 பரிசுத்த நடக்கைக்குரிய செயல்களும் தேவபக்தியின் கிரியைகளும்: பரிசுத்த நடக்கை, பைபிள் நியமங்களுக்கு மதிப்புக் காட்டுகிற முன்மாதிரியாயிருக்கும் செயல்களை உட்படுத்துகிறது. (தீத். 2:7, 8) தன்னல, மாம்சப்பிரகாரமான இச்சைகளால் தூண்டப்படுகிற உலகப்பிரகாரமான நடத்தையை ஒரு கிறிஸ்தவன் தவிர்க்க வேண்டும்.—ரோ. 13:11, 14.
3 “தேவபக்தி” என்பது “கடவுளுடைய கவர்ந்திழுக்கும் தன்மைகளுக்காக ஆழமான போற்றுதலினால் தூண்டப்பட்ட இருதயத்திலிருந்து தோன்றும் அவரோடு உள்ள தனிப்பட்ட பிணைப்பாகும்,” என விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தன்மையை வெளிக்காட்டுவதற்கு ஊழியத்தில் நமக்கிருக்கும் வைராக்கியம் தலைசிறந்த வழியாகும். பிரசங்கிப்பதற்கான நம்முடைய உள்நோக்கம் வெறும் கடமையுணர்ச்சியைக் காட்டிலும் மேற்பட்டது; யெகோவாவுக்கான ஆழமாக பதியப்பெற்ற அன்பிலிருந்து தோன்றுகிறது. (மாற். 12:29, 30) அத்தகைய அன்பினால் தூண்டப்பட்டவர்களாக, நம்முடைய தேவபக்தியின் அர்த்தமுள்ள வெளிக்காட்டாக நம்முடைய ஊழியத்தை நாம் கருதுகிறோம். நம்மிடமுள்ள பக்தி தொடர்ந்து இருக்கவேண்டியிருப்பதால், பிரசங்க வேலையில் நம் பங்கும் சீரானதாக இருக்கவேண்டும். நம் வாராந்தர வேலைகளடங்கிய அட்டவணையின் இன்றியமையா பாகமாக இருக்கவேண்டும்.—எபி. 13:15.
4 யெகோவாவின் நாளை “மனதில் நெருங்க” வைத்திருப்பது என்றால், அதை பின்னணியில் முக்கியத்துவமற்ற நிலைக்கு ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாமல், நம்முடைய அன்றாட எண்ணங்களில் முதன்மையாக வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைப்பதை அர்த்தப்படுத்துகிறது.—மத். 6:33.
5 கறையற்றவர்களாகவும், மாசில்லாதவர்களாகவும், சமாதானமுள்ளவர்களாகவும்: திரள் கூட்டத்தின் பாகமாக நாம் ‘அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்களாக’ இருக்கிறோம். (வெளி. 7:14) அப்படியானால், ‘கறையற்றவர்களாக’ இருப்பது என்பது, உலகிலிருந்து வரும் அசுத்தங்கள் நம்முடைய சுத்தமான, ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமீது தெளிக்கப்படாதபடிக்கு நாம் உறுதியாக காத்துக்கொள்ள வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. தேவபக்தியற்ற, பொருள்முதல்வாத நாட்டங்கள் நம்முடைய கிறிஸ்தவ ஆள்தன்மையை கெடுக்க அனுமதியாது இருந்தோமேயானால், நம்மையே நாம் ‘மாசில்லாதவர்களாக’ வைத்துக்கொள்ளுகிறோம். (யாக். 1:27; 1 யோ. 2:15-17) பிறருடன் கொண்டிருக்கும் நம்முடைய எல்லா தொடர்புகளிலும் “தேவசமதான”த்தை பிரதிபலித்தோமானால், ‘சமாதானமாய்’ வாழ்வதை மெய்ப்பித்துக் காட்டுகிறோம்.—பிலி. 4:7; ரோ. 12:18; 14:19.
6 உலகத்தால் களங்கப்படுவதற்கு எதிராக நாம் வெற்றிகரமாக காத்துக்கொள்வோமேயானால், நாம் ஒருபோதும் யெகோவாவால் கண்டனம் செய்யப்பட்டிருக்கும் “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” இருப்போம். மாறாக, நம்முடைய நற்கிரியைகள் “தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற” வித்தியாசத்தைக் காண மற்றவர்களுக்கு உதவும்.—ரோ. 12:2; மல். 3:18.
7 யெகோவா தம்முடைய உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின் மூலம், தொடர்ந்து புத்துணர்ச்சியளிக்கும் ஆவிக்குரிய உணவை அளித்து வருகிறார், இதனால் தேவபக்தியை வெளிக்காட்டுவதற்கான நம்முடைய ஆசை அதிகமாகிறது. அநேக புதியவர்கள் இந்த ஆசையில் பங்குகொள்கின்றனர். ஆகஸ்டில் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள அவர்களுக்கு உதவுவதன் மூலம் நாம் ஒரு ஆசீர்வாதமாய் இருக்கலாம்.
8 யெகோவாவின் பெயர் மேன்மைப்படுகிறது, சபை பலப்படுகிறது, நாம் மனச்சாட்சிபூர்வமாக “நற்கிரியைகளைக்” காத்துக்கொண்டால் மற்றவர்கள் பயனடைகின்றனர். (1 பே. 2:12) எப்போதுமே நாம் அப்பேர்ப்பட்ட நபராக இருப்போமாக.