உண்மையான சந்தோஷத்திற்கு ஒரு திறவுகோல்
1 லூக்கா 11:28-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தைகள் நமக்கு சந்தோஷமான செய்தியாயிருக்கிறது, ஏனென்றால் சந்தோஷத்தை எவ்வாறு கண்டடைவது என்பதைக் குறித்து அவர் சொல்கிறார். அவர் சொன்னதாவது: “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW].” நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் ஆகிய புத்தகங்கள் அதிக சந்தோஷத்தைக் கண்டடைய அநேகருக்கு உதவியிருக்கின்றன. மற்றவர்களுக்கு அவற்றை அளிப்பதற்கு நமக்கு நல்ல காரணமிருக்கிறது.
2 அதிகரித்துக்கொண்டிருக்கும் குற்றச்செயலைக் குறித்தும் வன்முறையைக் குறித்தும் அநேகர் கவலையுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக, இது ஒருவேளை சிறிது அக்கறையையாவது உண்டாக்கலாம்:
◼ “நமக்கிருக்கும் அதிமுக்கியமான தேவை என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] அமைதியான, சமாதானமான வாழ்க்கை வாழ்வதற்கு பாதுகாப்பே நமக்கு தேவைப்படும் ஒன்றாயிருக்கிறது என்று நம்பக்கூடியவர்கள் அநேகர் இருக்கின்றனர்.” என்றும் வாழலாம் புத்தகத்தை பக்கம் 14-க்கு திருப்பி 16-வது பாராவின் முதல் வாக்கியத்தை வாசியுங்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் தொடருங்கள்: “இருந்தபோதிலும், துன்மார்க்கத்தை அழித்து, பூமியின்மீது அரசாட்சியை ஏற்று, உலகமுழுவதுமாக சமாதானத்தை நிலைநாட்டப்போவதாக கடவுள் வாக்களித்திருக்கிறார். இந்தத் திடீர் பெரிய மாற்றத்திலிருந்து தப்பிப்பிழைக்க நமக்கு சரியாகவே தேவைப்படுவது உண்மையான அறிவு. ஆனால் எதைப் பற்றிய அறிவு?” பைபிளிலிருந்தோ அல்லது புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் 19-வது பாராவிலிருந்தோ யோவான் 17:3-ஐ வாசித்து, எவ்வாறு கடவுளைப் பற்றிய அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும் என்பதை விளக்குங்கள். புத்தகத்தை அளித்துவிட்டு மனிதவர்க்கத்தின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான கடவுளுடைய நோக்கத்தைக் குறித்த அற்புதமான தகவலை எவ்வாறு அது வெளிப்படுத்துகிறதென்பதை மறுபடியுமாக வந்து காண்பிப்பதாகச் சொல்லுங்கள்.
3 உலகத்திலுள்ள துன்பத்தைக் குறித்து அநேகர் கவலையுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக, நீங்கள் இதை முயற்சி செய்யலாம்:
◼ “நான் எவரிடமெல்லாம் பேசுகிறேனோ அவர்களெல்லாருமே எதிர்காலத்தைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர். சமாதானமான ஒரு புதிய சகாப்தத்தின் வாயிலில் நாம் இருப்பதாக சில உலகத் தலைவர்கள் உணருகின்றனர். அதைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] மனிதனுடைய எல்லா முயற்சிகளுக்கு மத்தியிலும், துன்பம் உலகமுழுவதுமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரே நிரந்தரமான பரிகாரத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது. [2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள். பக்கங்கள் 156-லிருந்து 162 வரையாக உள்ள படங்களுக்கு திருப்பி, கடவுளுடைய பரலோக ராஜ்யம் எவ்வாறு நிரந்தரமான சமாதானத்தையும் பாதுகாப்பையும் இந்தப் பூமிக்கு கொண்டுவரும் என்பதை விளக்குங்கள்.] கடவுளுடைய ராஜ்ய அரசாட்சியின்கீழ் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழப்போகும் ஜனங்களடங்கிய இந்தப் புதிய சமுதாயத்தின் பாகமாக நீங்கள் எவ்வாறு இருக்கலாம் என்பதைக் குறித்து தெரிந்துகொள்ள இந்தப் பிரசுரம் உங்களுக்கு உதவக்கூடும்.”
4 வேலையாயிருக்கும் ஒருவரை நீங்கள் சந்திக்கும்போது சுருக்கமாக பேசவேண்டியிருந்தால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “உங்களுக்கு சிறிது நேரமே இருப்பதன் காரணமாக, இவ்வாறு தலைப்பிடப்பட்டிருக்கும் [பொருத்தமான துண்டுப்பிரதியை அல்லது கட்டுரையை தேர்ந்தெடுங்கள்] இந்தத் துண்டுப்பிரதியை [அல்லது பத்திரிகையின் கட்டுரையை] உங்களிடம் விட்டுச்செல்ல விரும்புகிறேன். இதை வாசிக்குமாறு உங்களை உற்சாகப்படுத்துகிறேன். அடுத்த முறை நான் வரும்போது, இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
5 “உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்” என்ற புத்தகத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, இதைப் போன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “முந்திய சந்ததிகள் எதிர்ப்படாத சவால்களை நவீன நாளைய குடும்பம் எதிர்ப்படுகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] உங்களுடைய அபிப்பிராயத்தின்படி, இது ஏன் நடக்கிறது? [பதிலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவியுங்கள். 2 தீமோத்தேயு 3:1-3-க்கு திருப்பி அதை வாசியுங்கள்.] ‘தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்கள்’ மற்றும் ‘சுபாவ அன்பில்லாதவர்கள்’ ஆகிய சொற்றொடர்கள் நம்முடைய நாளில் உள்ள அநேகரை பற்றி திருத்தமாக விவரிக்கின்றன. எனினும், இந்தப் பிரச்சினைகளை முன்னறிவித்த அதே கடவுள் ஒரு குடும்பத்தை எவ்வாறு இன்னும் நெருக்கமாக கொண்டுவருவது என்பதன் பேரில் முழுநிறைவான வழிநடத்துதலையும்கூட கொடுத்துள்ளார்.” பக்கம் 2-ல் உள்ள “பிரசுரிப்பவர்கள்” என்ற பாராவை வாசியுங்கள். புத்தகத்தை 15 ரூபாய் நன்கொடைக்கு அளியுங்கள் (தெலுங்கு பிரதி விசேஷ விலைக்கு அளிக்கப்படலாம்).
6 இந்தப் பிரசுரங்களில் ஒன்றையோ அல்லது இரண்டையோ பிப்ரவரி மாதத்தில் அளிப்பதன் மூலமாக, உண்மையான சந்தோஷத்திற்கான திறவுகோல், பைபிளில் காணப்படும் பழுதற்ற ஆலோசனையை பின்பற்றுவதே என்பதைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஜனங்களுக்கு கொடுப்போமாக.—சங். 119:105.