அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
1 அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தை ‘நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமும்’ என்பதாக வரையறுக்கிறார். அவர் மேலும் கூறினார், “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.” (எபி. 11:1, 6) விசுவாசத்தை அப்பியாசிக்கும்படி, அதனால் பெருகும்படி மற்றும் அதைத் தொடர்ந்து நாடும்படி நம்மைப் பவுல் துரிதப்படுத்தினார்.—2 கொ. 4:13; கொலோ. 2:7; 2 தீ. 2:22.
2 விசுவாசத்தின் தலைசிறந்த உதாரணங்கள் பல பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளன. தகர்க்கப்படாத விசுவாசத்தை மெய்ப்பித்துக்காட்டிய சாட்சிகளின் நீண்ட பட்டியலை எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் பவுல் கொடுக்கிறார். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பவர் ஆபேல், அவர் தன்னுடைய விசுவாசத்தின் நிமித்தம் முதலாவதாக தியாக மரணம் அடைந்தவர். நோவா பட்டியலிடப்பட்டிருக்கிறார், ஏனென்றால் தன்னுடைய விசுவாசத்தின் மூலம் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான தேவ பயத்தை அவர் காட்டினார். ஆபிரகாம் அவரது விசுவாசத்திற்காகவும் கீழ்ப்படிதலுக்காகவும் போற்றப்படுகிறார். விசுவாசத்தினாலே மோசே அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல தொடர்ந்து உறுதியாய் இருந்ததனால் புகழப்படுகிறார். உதாரணங்களின் பட்டியல் அவ்வளவு நீளமாக இருந்ததால், அவற்றை விவரித்துக்கொண்டே போகவேண்டுமானால் தனக்குக் காலம் போதாது என்று பவுல் கூறினார். அவர்களுடைய ‘பரிசுத்த நடக்கையையும் தேவபக்தியையும்’ மறுபார்வை செய்வதன் மூலம் நமது விசுவாசத்தைப் பலப்படுத்தமுடியும் என்பதற்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாக நாம் இருக்கிறோம்!—2 பே. 3:11.
3 முதல் நூற்றாண்டில் இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டார்: “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ”? (லூக். 18:8) அப்படியென்றால், வாழ்ந்துகொண்டிருக்கும் விசுவாசத்தின் உதாரணங்களை இன்று நம்மிடையே உடையவர்களாய் நாம் இருக்கிறோமா? பைபிள் காலங்களில் கடவுளுடைய மக்கள் காட்டியதைப்போல் யெகோவாவின்மீது அசைக்கமுடியாத விசுவாசத்தை மெய்ப்பித்துக்காட்டும் ஆண்களையும் பெண்களையும், இளையோர் முதியோர் என இரு சாராரையும் நாம் காண்கிறோமா?
4 விசுவாசத்தின் நவீன-நாளைய உதாரணங்கள்: விசுவாசத்தின் தலைசிறந்த உதாரணங்களை நம்மைச் சுற்றிலும் காணமுடிகிறதே! நம்மிடையே காரியங்களை முன்நடத்தி செல்லும் கண்காணிகளினுடைய விசுவாசம் பின்பற்றுவதற்குத் தகுதியுள்ளது. (எபி. 13:7) ஆனால், விசுவாசத்தில் முன்மாதிரிகளாக இருப்பது இவர்கள் மாத்திரம் அல்ல. ஒவ்வொரு சபையிலும் அதனோடு தொடர்புகொண்டிருக்கும் உண்மைப்பற்றுறுதியுள்ளவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யெகோவாவுக்கு உண்மையோடு சேவைசெய்ததன் நீண்டகால பதிவை கொண்டுள்ளனர், பெரும்பாலும் மிகவும் கஷ்டமான சூழ்நிலைமைகளின்கீழும் சேவைசெய்யப்பட்டது.
5 எதிர்க்கும் கணவன்மார்களின் எதிர்ப்பை பல வருடங்களாக சகித்துவரும் நம் உண்மையுள்ள சகோதரிகளின் விசுவாசத்தை நாம் வியக்கவேண்டும். பிள்ளை வளர்ப்பில் இருக்கும் சவாலை ஒற்றைப் பெற்றோர்கள் தனியே சந்திக்கவேண்டியிருக்கிறது. உற்சாகம் தர குடும்ப அங்கத்தினர் இல்லாதபோதிலும் சபை நடவடிக்கைகளை என்றுமே தவறவிடாத வயதான விதவைகள் நம்மிடையே இருக்கிறார்கள். (லூக்கா 2:37-ஐ ஒப்பிடுக.) தீராத உடல்நல பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டிருப்போரின் விசுவாசத்தை நாம் வியக்கிறோம். சேவையில் அதிகப்படியான சிலாக்கியங்கள் நியமிக்கப்படுவதிலிருந்து தங்களைத் தடைசெய்யக்கூடிய குறைபாடுகளை பலர் உடையவர்களாய் இருந்தபோதிலும் அவர்கள் உண்மைப்பற்றுடன் தொடர்ந்து சேவிக்கிறார்கள். பள்ளியில் எதிர்ப்பின் மத்தியிலும் தைரியமாக விசுவாசத்தை அப்பியாசித்த இளம் சாட்சிகள் இருக்கிறார்கள். சொல்ல முடியாத பிரச்சினைகளை வருடக்கணக்கில் எதிர்ப்படுகையிலும் விடாமுயற்சியுடன் இருக்கும் உண்மையுள்ள பயனியர்களை நாம் கவனிக்கையில் நமது தேவபக்தி அதிக ஸ்திரமடைகிறது. ராஜ்ய சேவையிலுள்ள அனைத்து அனுபவங்களையும், இந்தச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளால் செய்யப்பட்ட விசுவாசத்தின் செயல்களையும் விவரிக்க நாம் முயன்றால் பவுலைப்போல் நமக்கும் காலம் போதாதே!
6 இந்த விசுவாசிகளின் உதாரணங்கள் நமக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. (1 தெ. 3:7, 8) நாம் அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவது நல்லது, ஏனென்றால் “விசுவாசத்துடன் செயல்படுகிறவர்களோ [யெகோவாவுக்கு] பிரியம்.”—நீதி. 12:22, NW.