நம்பிக்கையையும் வழிநடத்துதலையும் பைபிள் அளிக்கிறது
1 “பூமியில் மகிழ்ச்சியான வாழ்க்கை—ஒரு குறுகிய காலத்திற்குங்கூட இதை அனுபவித்து மகிழ்வது கூடிய காரியமாகத் தோன்றுவதில்லை. ஒரு சில பிரச்னைகளைக் குறிப்பிட—நோய், முதுமை, பசி, குற்றச் செயல் ஆகியவை அடிக்கடி வாழ்க்கையை, துயர் மிகுந்ததாக்குகின்றன. ஆகையால், பூமியில் பரதீஸில் என்றும் வாழ்வதைப் பற்றிப் பேசுவது உண்மைக்கு கண்களை மூடிக்கொள்வதாயிருக்கிறது என்று நீங்கள் ஒருவேளை சொல்லக்கூடும். அதைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணாக்குவதே, என்றுமாக வாழ்வது வெறும் ஒரு கனவே என்பதாக நீங்கள் ஒருவேளை உணரக்கூடும்.”
2 இவ்வாறு நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் ஆரம்பிக்கிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டபோது இருந்ததைவிட அதன் முன்னுரை இன்று இன்னும் அதிக பொருத்தமாய் இருக்கிறது. மக்களை பீடித்திருக்கிற அனைத்து பிரச்சினைகளுக்கும் பைபிள் வழிநடத்துதலை அளிக்கிறது என்றும், ஒரு பரிகாரத்தை வாக்களிக்கிறது என்றும் அவர்கள் அறியவேண்டும். என்றும் வாழலாம் புத்தகத்தை டிசம்பர் மாதத்தில் அளிப்பதன் மூலம் மக்களுக்கு உதவ நாம் அதிக முயற்சி செய்வோம். நிச்சயமாகவே, பிரசுரத்தை வெறுமனே ஒரு நபரிடம் விட்டுவருவதுதானே அவர் ராஜ்ய நம்பிக்கையை ஏற்றுக்கொள்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. நாம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் இலக்குடன் மறுசந்திப்புகளைச் செய்யவேண்டும். நாம் இத்தகைய முயற்சியை செய்வோமானால் உதவி நிச்சயம். (மத். 28:19, 20) ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்கள் இதோ சில:
3 நீங்கள் ஒரு வயோதிபரை சந்தித்தால், இந்த அணுகுமுறையை முயற்சிசெய்யலாம்:
◼ “நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா: நீங்கள் சின்னப்பிள்ளையாக இருந்தபோது, சமுதாயத்திலுள்ள மக்கள் ஒருவரையொருவர் எப்படி நடத்தினார்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] இப்பொழுது நிலைமைகள் ரொம்ப மாறிப்போய்விட்டன, இல்லையா? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] நாம் உண்மையில் பைபிளிலுள்ள ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். [2 தீமோத்தேயு 3:1-5-ஐ வாசிக்கவும்.] இன்றைக்கு இருக்கிற மாதிரியே உலகத்தை திருத்தமாக விவரிப்பதோடு மட்டுமல்லாமல், வெகு சீக்கிரத்தில் வரவிருக்கும் ஒரு மேம்பட்ட உலகத்தையும் பைபிள் வாக்குக்கொடுக்கிறது. பைபிளிலுள்ள அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதால், எதிர்காலத்தைக் குறித்து அது சொல்லுகிற காரியங்களும் உண்மையிலேயே நிறைவேறும் என்பதற்கான விசுவாசத்தை நாம் கொண்டிருக்கிறோம். பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அப்படிப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றுதான் கடவுளுடைய வழிநடத்துதலில் ஆளப்படும் ஒரு உலக அரசாங்கம்.” என்றும் வாழலாம் புத்தகத்தில் 112-ம் பக்கத்திற்குத் திருப்பி, 2-ம் பாராவை வாசியுங்கள். எதிர்காலத்திற்காக பைபிள் என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது என்பதை வீட்டுக்காரர் படிப்பதற்காக, அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்.
4 “என்றும் வாழலாம்” புத்தகத்தை வாங்கிய வயோதிபரை நீங்கள் திரும்ப சந்திக்க செல்லும்போது, இவ்வாறு சொல்லலாம்:
◼ “நாம் போனதடவை பேசியபோது, ஒருசில வருஷங்களுக்கு முன்பு இருந்த வாழ்க்கையுடன் நவீன சமுதாயத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அநேக விதங்களில் மிக மோசமாக ஆகிவிட்டது என்பதை ஒத்துக்கொண்டோம். இருந்தாலும், எதிர்காலத்தில் மேம்பட்ட ஒரு உலகம் வருமென்ற நம்பிக்கையை பைபிள் கொடுக்கிறது என்பதை நான் உங்களுக்கு காண்பிக்க வந்தேன். [வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசிக்கவும்.] நாம் எல்லாருமே நல்ல நிலைமைகளில் வாழ விரும்புவதால், இந்த விஷயத்தில் வேறு எதையும் பைபிள் சொல்லுகிறது என்பதை நாம் அலசிப்பார்க்க வேண்டும்.” என்றும் வாழலாம் புத்தகத்தில் 19-ம் அதிகாரத்திற்குத் திறந்து, 1-3 பாராக்களை வாசியுங்கள். இலவச வீட்டு பைபிள் படிப்பைக் குறித்து சொல்லுங்கள்.
5 ஓர் இளைஞரிடம் பேசும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்: ஒரு வாலிபராக, எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதற்கு உங்களுக்கு காரணமிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எதிர்காலம் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] உண்மையில், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடனிருப்பதற்கு உண்மையான காரணம் இருக்கிறது. [சங்கீதம் 37:10, 11-ஐ வாசிக்கவும்.] பைபிளையும் அதிலுள்ள விஷயங்களையும் குறித்து மக்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதால், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற இந்தப் புத்தகத்தை நாங்கள் பிரசுரித்திருக்கிறோம். பைபிள் சொல்லுகிறவற்றை நம்புவதற்கான காரணங்களைக் குறித்து இந்தப் புத்தகம் சொல்லுவதை கவனியுங்கள். [56-ம் பக்கத்திலுள்ள 27-ம் பாராவின் முதல் நான்கு வரிகளையும் 28-ம் பாரா முழுவதையும் வாசிக்கவும்.] பைபிள் என்ன சொல்லுகிறதோ அதில் நாம் விசுவாசம் வைக்கமுடியும் என்பதைக் குறித்து ஒருமுறை நம்பிவிட்டால், எதிர்காலத்திற்காக ஒரு நிச்சயமான நம்பிக்கையை கொண்டிருக்க நாம் ஆரம்பிப்போம். இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்கும்படி நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.”
6 “என்றும் வாழலாம்” புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அந்த இளைஞரை மீண்டும் சந்திக்க செல்லும்போது, இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் ஆரம்பிக்கலாம்:
◼ “எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எவ்வளவு அக்கறையுள்ளவர்களாய் இருந்தீர்கள் என்பதைக் கேட்டு நான் பாராட்டினேன். மகிழ்ச்சியும் பாதுகாப்புமுள்ள ஒரு எதிர்காலத்தை வாக்களிக்கும் பைபிள் வசனம் ஒன்றை நான் உங்களுக்கு காண்பித்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். இதோ மற்றொரு வசனம். [வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசிக்கவும்.] நான் உங்களிடம் கொடுத்துவிட்டுப் போன அந்தப் புத்தகம், பைபிள் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டது என்பதற்கான நம்பவைக்கும் அத்தாட்சியைக் கொடுக்கிறது. அந்த உண்மையானது ஆழமான விஷயத்தை மறைமுகமாக கொண்டிருக்கிறது. கடவுளைப் பற்றி பைபிள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளலாம் என்பதை அது அர்த்தப்படுத்தும். [47-ம் பக்கத்திலுள்ள பாரா 1-2-ஐ வாசியுங்கள்.] நீங்கள் விரும்பினால், உங்களுக்கு இலவசமாக பைபிள் படிப்பு நடத்துவதற்கு பிரியப்படுகிறேன்.” படிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த நபரிடம் ஒரு பைபிள் இருக்கிறதா என்று கேளுங்கள். அவரிடம் இல்லையென்றால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை அல்லது அவர் விரும்புகிற மொழியிலுள்ள ஒரு பைபிளை கொண்டுவருவதாக சொல்லுங்கள்.
7 வாழ்க்கையின் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான வழிநடத்துதலுக்கு எங்கே போவது என்று தெரியாத ஒரு நபர் இந்த அணுகுமுறைக்கு பிரதிபலிக்கலாம்:
◼ “நாம் வாழ்கிற இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட எல்லாருமே மிகப் பெரிய பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள். வழிநடத்துதலுக்காக எல்லா வகையான ஆலோசகர்களிடமும் அநேகர் போகிறார்கள். உதவிக்காக சிலர் ஆவியுலக தொடர்புகொள்பவர்களிடம் போகிறார்கள். உண்மையிலேயே நமக்கு நன்மைபயக்கும் சிறந்த ஆலோசனையை எங்கே கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மையை பைபிள் சொல்லுகிறது.” எரேமியா 10:23-ஐ வாசியுங்கள். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் 29-ம் அதிகாரத்திற்குத் திறந்து, 3-ம் பாராவை வாசியுங்கள். “பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள நியமங்களைப் பின்பற்றுவது நம்முடைய வாழ்க்கையின் தரத்தை இப்பொழுது எந்தளவுக்கு முன்னேற்றுவிக்கும் என்பதையும், கடவுளுடைய ராஜ்யத்தில், எப்படி நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் நீக்கப்படும் என்பதையும் புரிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவிசெய்யும். இதை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா?” அந்தப் புத்தகத்தைக் கொடுங்கள்.
8 வழிநடத்துதலுக்கான மனிதனுடைய தேவையைப் பற்றி முதல் சந்திப்பில் பேசியிருந்தால், இவ்வாறு சொல்வதன் மூலம் நீங்கள் அந்தச் சம்பாஷணையை தொடரலாம்:
◼ “நாம் முதலில் சந்தித்தபோது, வாழ்க்கையின் பிரச்சினைகளை வெற்றிகரமாய் சமாளிக்கப்போவதாய் இருந்தால் கடவுளிடமிருந்து வழிநடத்துதல் தேவை என்பதை ஒத்துக்கொண்டோம். அதன் சம்பந்தமாக, நான் உங்களிடம் கொடுத்துவிட்டு போயிருந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கடைசி குறிப்புகளை நீங்கள் போற்றுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். [என்றும் வாழலாம் புத்தகத்தில் 255-ம் பக்கத்திலுள்ள 14-15 பாராக்களை வாசிக்கவும்.] உங்களது வீட்டில் இலவசமாய் பைபிள் படிப்பு நடத்த நான் பிரியப்படுகிறேன், நான் அதை இப்பொழுதே செய்துகாண்பிப்பதற்கு தயாராய் இருக்கிறேன்.”
9 கடவுளுடைய வார்த்தையின் மதிப்பையும் நம்முடைய வாழ்க்கையில் அதன் வழிநடத்துதலையும் மதித்துணருவதற்கு வயோதிபருக்கும் இளைஞருக்கும் நாம் உதவிசெய்கையில், நம்முடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார்.—சங். 119:105.