குடும்ப மகிழ்ச்சியின் இரகசியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுதல்
1 மனித சமுதாயத்தினுடைய அடிப்படைக்கூறானது குடும்பம். இந்த குடும்பங்களில் இருந்துதான் கிராமங்கள், நகரங்கள், மாநிலங்கள், மேலும் தேசங்களும் தோன்றுகின்றன. முன்னொருபோதும் இருந்திராத அளவிற்கு அழுத்தங்களை இன்றைய நாட்களில் குடும்பம் எதிர்ப்படுகிறது. கடினமான அச்சுறுத்துதல்கள் ஆதிக்கம் செலுத்துவதனால் குடும்பம் என்று ஒன்று இருப்பதே அதிக ஆபத்தில் இருக்கிறது. இந்தக் குடும்ப ஏற்பாட்டை வடிவமைத்தவராகிய யெகோவா, குடும்ப மகிழ்ச்சியைப் பெறுவதற்கு ஆலோசனைகளை நமக்குக் கொடுத்ததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! அவருடைய ஆலோசனைகளைப் பின்பற்றுவோர் குடும்பத்தில் பிரச்சினைகள் குறைவாய் இருப்பதாகவும், குடும்பம் வெற்றிநடை போடுவதாகவும் காண்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை மற்றவர்களிடமாக அளிக்கும் சிலாக்கியம் நமக்கு இருக்கிறது. குடும்ப வாழ்க்கை என்ற பொருளின்பேரில் மக்களை அணுக நீங்கள் முயற்சி எடுங்கள். சிநேகப்பான்மையோடு, சாதகமான மனப்பான்மையோடு, புரிந்துசெயல்படுவோராய் இருங்கள். நீங்கள் என்ன சொல்லலாம்?
2 நீங்கள் இதுமாதிரியான ஒருசில கேள்விகளை முதலில் எழுப்பலாம்:
◼“பல குடும்பங்கள் வாழ்க்கையின் அழுத்தங்களை எதிர்ப்பட மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லவா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] அநேக மக்களுக்கு வீட்டுப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன. பிரிவினை இல்லாத, மகிழ்ச்சியான குடும்பத்தை அமைக்க எது உதவும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] குடும்ப ஏற்பாட்டை கடவுள் ஆரம்பித்து வைத்ததால், அவர் நமக்குக் கொடுத்த ஆலோசனைகளை ஆராய்ந்து பின்பற்றுவது நியாயமானதாய் இருக்குமல்லவா? [2 தீமோத்தேயு 3:16, 17-ஐப் படிக்கவும்.] இப்படிப்பட்ட பயனுள்ள அறிவுரைகள் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.” இதன் பிறகு, பொதுவான குடும்பப் பிரச்சினை என்று அவர் நினைக்கிற விஷயத்தை சொல்லும்படி கேட்கலாம். அந்த விஷயத்தைப் பற்றி சொல்லும் அதிகாரத்தைக் காட்டி, புத்தகத்தைக் கொடுக்கலாம்.
3 நீங்கள் மறுசந்திப்பு செய்கையில், ஒரு பைபிள் படிப்பை துவங்கும் இலக்குடன் இவ்வாறு சொல்லலாம்:
◼“குடும்பத்தைப் பற்றி நீங்கள் சொன்ன விஷயத்தை நான் யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் நினைத்ததை உங்களுக்குக் காண்பிக்க வந்திருக்கிறேன். [தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைக் காண்பித்து, பக்கம் 16-க்குத் திருப்பி மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ஆறு கேள்விகளை வாசியுங்கள்.] குடும்பத்தில் மகிழ்ச்சி இருப்பதற்கு, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருமே அவரவர் பாகத்தை நிறைவேற்ற வேண்டும். நீங்கள் சில நிமிடங்கள் அனுமதித்தீர்கள் என்றால் இதில் உள்ள விஷயங்களிலிருந்து எவ்விதத்தில் பயனடைய முடியும் என்பதை உங்களிடமாக எடுத்துக் காண்பிக்க விரும்புகிறேன்.” அதன் பின்பு அதிகாரம் 8-லிருந்து படிப்பைத் துவங்குங்கள்.
4 பேச்சைக் தொடங்க வேறொருமுறை, பிரச்சினைகளைக் குறிப்பிட்டு இவ்வாறு சொல்வதாகும்:
◼“எல்லாருமே திருப்தியையும் மகிழ்ச்சியையும் நாடுகிறார்கள், இதில் பல குடும்பங்கள் உண்மையில் வெற்றியை காண்பதில்லை என்பது போல் தெரிகிறது. உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைய எது அவர்களுக்கு உதவிசெய்யும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] வெகுகாலத்திற்கு முன்பே, இன்றைய குடும்பங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளைப் பற்றி பைபிள் சொல்லியிருக்கிறது. [2 தீமோத்தேயு 3:1-3-ஐப் படிக்கவும்.] மேலும், இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து மகிழ்ச்சியைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது. இதைப் பற்றிய நியமங்களைக் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற இந்தப் புத்தகம் அளிக்கிறது.” பின், பொருத்தமான அதிகாரத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் மறுபார்வை பெட்டியைக் காட்டி, அதை வாசித்து அந்தப் புத்தகத்தைக் கொடுங்கள்.
5 மறுபடியுமாக நீங்கள் செல்லும்போது, பைபிள் படிப்பைத் தொடங்க “தேவைப்படுத்துகிறார்” சிற்றேட்டைப் பயன்படுத்துங்கள். நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼“குடும்பத்திற்குப் பொருத்தமான பைபிள் நியமங்களை ஆராய விரும்பும் உங்கள் விருப்பத்தைக் கண்டு எனக்கு அதிக மகிழ்ச்சி. பைபிளின் நடைமுறைக்கேற்ற ஆலோசனைகளைப் பின்பற்றுவது வெற்றியில் முடிவடைகிறது என்பதை அனுபவங்கள் காட்டுகின்றன. அது ஏன் உண்மை என்பதைப் பற்றி எளிமையான ஒரு விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.” தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் முதல் பாடத்தின் முதல் பத்தியைப் படியுங்கள்; வசனங்கள் சங்கீதம் 1:1-3-ஐ அல்லது ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள். சந்தர்ப்பம் அனுமதிக்குமேயானால், அந்தப் பாடத்தின் மீதி பாகத்தை சிந்தியுங்கள். அடுத்த அதிகாரத்தைப் படிக்க மீண்டும் வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
6 விசுவாசத்தில் பலமாக இருந்துகொண்டு, ஆனால் பைபிளின் ஆலோசனையைக் கண்டிப்பாக ஏற்காத நபர்களிடமாக பேசும்பொழுது நீங்கள் இந்த மாதிரியான சிறிய உரையாடலைச் செய்ய விரும்பலாம்:
◼“அநேக மக்கள் அவரவர்களுடைய மதத்தின்மீது நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தபோதிலும், இன்று குடும்பங்கள் மிக அதிகமான பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றன என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். சிலர் கடவுளுடைய வார்த்தையிடமிருந்து ஆலோசனை பெறுகின்றனர். ஆனால் இன்றுள்ள பல இளம் வயதினர்கள் மதப் புத்தகங்களை நடைமுறைக்கு ஒவ்வாதவைகளாக கருதுகிறார்கள். நாம் மிகச் சிறந்தமுறையில் வாழ்ந்திட நம் படைப்பாளர் ஏதேனும் அறிவுரைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்தப் பிரசுரம் குடும்ப விஷயங்களிலும் ஏன் கடவுளையும் மதத்தையும் முக்கியமாக கருத வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.” புத்தகத்தை அளியுங்கள்.
7 அல்லது நீங்கள் இப்படியும் சொல்லலாம்:
◼“உலகம் முழுவதும், குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன; சமுதாயத்தில் உள்ள முக்கியமான நபர்கள் இதைப் பற்றி கவலையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உலகெங்கும் உள்ள குடும்பங்கள் இந்தப் புத்தகத்திலுள்ள ஆலோசனைகளைப் பொருத்திப் பிரயோகிப்பதன்மூலம் நல்ல பலனைப் பெற்றிருக்கிறார்கள்; ஏனென்றால் இது ஒருசில பொது நியமங்களைக் குடும்பத்தின் நலனிற்காக பொருத்துவதற்கு உதவிசெய்கிறது; இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும்படி சிபாரிசு செய்கிறேன். இந்த புத்தகம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கோ அல்லது கலாச்சாரத்தைப் பின்பற்றுவோருக்கோ தயாரிக்கப்படவில்லை. எனவே, உங்களுடைய சொந்த கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், இப்புத்தகத்தில் நடைமுறையான ஆலோசனைகளை நீங்கள் காண்பீர்கள் என நான் நம்புகிறேன்.”
8 குடும்ப மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் இரகசியத்தை, அதாவது கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றுவதை, மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எல்லா முயற்சியும் எடுப்போமாக.—சங். 19:7-10.