கூட்டங்களில் பதில் சொல்வதன்மூலம் ஒருவரையொருவர் கட்டி எழுப்புங்கள்
1 ‘அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பும்படி’ எபிரெயர் 10:24-ல் (பொது மொழிபெயர்ப்பு) நமக்கு புத்திசொல்லப்படுகிறது. இது கூட்டங்களில் பயனளிக்கும் குறிப்புகளைச் சொல்லி ஒருவரையொருவர் கட்டி எழுப்புவதையும் உட்படுத்துகிறது. நாம் ஏன் கூட்டங்களில் பதில் சொல்ல வேண்டும்? எப்படிப்பட்ட பதில்களை சொல்ல வேண்டும்? இதனால் பயனடையப் போவது யார்?
2 எத்தனையோ முறை மற்றவர்கள் சொன்ன தெளிவான, எளிய பதில்களால் நீங்கள் சரியான விதத்தில் விளக்கங்களை புரிந்துகொண்டு ஆவிக்குரிய விதமாக பலப்பட்டதை மறந்துவிடாதீர்கள். இப்போதோ மற்றவர்களுக்காக அதே விதமாக பதில் சொல்லும் சிறப்புரிமை உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பதில்சொல்லுகையில், கூட்டத்திற்கு வந்திருக்கும் எல்லாருடைய நன்மைக்காக ‘ஆவிக்குரிய சில வரங்களை கொடுக்க’ நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறீர்கள்.—ரோ. 1:11, 12, NW.
3 எப்படி பயனுள்ள பதில்களை சொல்வது: பதில் சொல்கிறேன் என்று பாராவிலுள்ள எல்லா குறிப்புகளையும் ஒன்றுவிடாமல் சேர்த்து சொல்லிவிடாதீர்கள். வளவளவென கொடுக்கப்படும் பெரிய பதில்களில் விஷயமே இருக்காது; முக்கியமான குறிப்பும் விடுபட்டுவிடும், மற்றவர்கள் பதில் சொல்வதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடும். முதல் பதிலில் பாராவிலுள்ள கேள்விக்கான நேரடியான பதிலை சுருக்கமாக சொல்ல வேண்டும். அதற்குப்பிறகு பதில் சொல்பவர்கள் அந்தப் பொருளோடு சம்பந்தப்பட்ட குறிப்புகளை நடைமுறைக்கு பொருந்தும் விதத்தில் சொல்லலாம் அல்லது கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை பொருத்திக் காட்டலாம். பள்ளி துணைநூல், பக்கங்கள் 90-2-ஐக் காண்க.
4 பதில் சொல்வதற்கு பயமாக இருப்பதாக உணர்ந்தீர்கள் என்றால் முன்னதாகவே சின்ன சின்ன பதில்களை தயாரித்து வையுங்கள்; நீங்கள் பதில் தயாரித்திருக்கும் பாராவிற்கான பதிலை உங்களிடம் கேட்கும்படி முன்கூட்டியே நடத்துனரிடம் சொல்லி வையுங்கள். இதைப்போல் சில கூட்டங்களுக்கு தயார்செய்து வந்தீர்கள் என்றால் மெல்ல மெல்ல பதில் சொல்வது சுலபமாகிவிடும். பொதுமக்கள் முன்னிலையில் பேசுவதற்கு தங்களுக்கு திறமை இல்லை என்று மோசேயும் எரேமியாவும் சொன்னதை நினைத்துக்கொள்ளுங்கள். (யாத். 4:10; எரே. 1:6, NW அடிக்குறிப்பு) ஆனாலும் யெகோவா தம்முடைய பிரதிநிதிகளாக பேசும்படி அனுப்பி, அவர்களுக்கு உதவவும் செய்தார். அவ்வாறே அவர் உங்களுக்கும் நிச்சயம் உதவுவார்.
5 உங்கள் பதில்களால் யார் பயனடைவர்? முதலாவது பயனடையப்போகிறவர் நீங்கள் தான்; உங்கள் பதில்களால், சத்தியம் இன்னும் அதிக ஆழமாக உங்கள் மனதிலும் இருதயத்திலும் பதியும். பின்னர் விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு எளிதாக இருக்கும். உங்களுடைய உற்சாகமான பதில்களால் மற்றவர்களும் பயனடைகின்றனர். அதிக காலம் சத்தியத்தில் இருப்பவர்களோ, இளைஞர்களோ, கூச்ச சுபாவமுள்ளவர்களோ, புதியவர்களோ யாராக இருந்தாலும்சரி, சபைக் கூட்டங்களில் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்கள் சொல்லும் பதில்களால் நாம் அனைவருமே உற்சாகமடைகிறோம்.
6 கூட்டங்களில் பதில் சொல்வதன்மூலம் ஒருவரையொருவர் கட்டி எழுப்புகையில் “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது” என்பதை நாமே நிச்சயமாக கண்ணாரக் காண்போம்!—நீதி. 15:23.