யெகோவா காட்டும் ஜீவ வழியை பின்பற்றுதல்—அதுவே நம் திடதீர்மானம்
1 “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாடுகளில் சிறப்பித்துக் காட்டப்பட்ட ஒரு விஷயம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? மாநாட்டின் கடைசிப் பேச்சில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தையே நாங்கள் குறிப்பிடுகிறோம். “கடவுள் காட்டும் வழியே வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி என்பதாக முழு மனதோடு ஒத்துக்கொள்கிறோம்” என்ற வார்த்தைகளுடன் அத்தீர்மானம் ஆரம்பித்தது. அதற்கு நாம் அனைவரும் “ஆம்” என்று சப்தமாக சொன்னோம் அல்லவா! அந்தத் தீர்மானத்தினுடைய சில முக்கியமான அம்சங்களை சற்று ஞாபகத்திற்கு கொண்டுவரலாமா?
2 உலக கறைபடாமல் யெகோவாவுக்கு முன்பாக சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்க தீர்மானித்திருக்கிறோம். எல்லா சமயத்திலும் நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய சித்தத்திற்கு நாம் முதலிடம் கொடுப்போம். அவருடைய வார்த்தையாகிய பைபிளை நமது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, நாம் வலது பக்கமோ, இடது பக்கமோ திரும்பாமல் இருப்போம். இவ்வாறு செய்வதால் உலகத்தின் வாழ்க்கை முறையைவிட கடவுள் காட்டும் வாழ்க்கை முறைதான் மிகச் சிறந்தது என்பதை நாம் நிரூபிப்போம்.
3 பொதுவாக இந்த உலகம், கடவுள் காட்டும் ஜீவ வழியை அசட்டை செய்திருக்கிறது; இவ்வாறு செய்ததால் அதற்கேற்ற பலனையும் அது அறுத்திருக்கிறது. (எரே. 10:23) ஆகவே நாம் மிகப் பெரிய போதகரான யெகோவாவிடம் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆம், அவர் நம்மிடம் சொல்லுகிறார்: “வழி இதுவே, இதிலே நடவுங்கள்.” (ஏசா. 30:21) பைபிளில் சொல்லப்பட்டுள்ள யெகோவாவின் ஜீவ வழியே எல்லா அம்சங்களிலும் மேம்பட்டது. இந்த வழியில் தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால் யெகோவாவின் போதனைகளை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.
4 யெகோவாவின் தலைசிறந்த கல்வித்திட்டம்: வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும், நம்முடைய வாழ்க்கையை மிகச் சிறந்த விதத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் யெகோவா நமக்கு போதிக்கிறார். மேலும், மனதிலும், ஒழுக்கத்திலும், ஆன்மிகத்திலும் நமது வாழ்க்கை தரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்பதையும் அவர் போதிக்கிறார். அதுமட்டுமா, நம்முடைய சகோதரரோடும் குடும்பத்தாரோடும் உடன் மானிடரோடும் சமாதானமாக கூடிவாழ்வது எப்படி என்றும் கடவுள் நமக்கு போதிக்கிறார். இதை அவர் தம்முடைய வார்த்தையாகிய பைபிள் மூலமாகவும் அமைப்பின் மூலமாகவும் செய்கிறார்.
5 இதில் நம்முடைய சபைக் கூட்டங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. நாம் தவறாமல் எல்லா ஐந்து கூட்டங்களிலும் கலந்துகொண்டு அதில் பங்கெடுப்பதால் என்ன பலன் கிடைக்கிறது? நற்செய்தியின் ஊழியர்களாவதற்கு நல்ல பயிற்சியை இங்கு நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். சமநிலையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கேற்ற போதனையும் இங்குதான் கிடைக்கிறது. (2 தீ. 3:16, 17) அசெம்பிளிகள் மற்றும் மாநாடுகள் மூலமாகவும் நம்முடைய மிகச்சிறந்த போதகர் இன்னுமதிகமான தேவராஜ்ய கல்வியை நமக்கு புகட்டுகிறார். நம்முடைய உடல்நிலையும் சூழ்நிலைமைகளும் ஆஜராவதற்கு சாதகமாக இருக்கும்போது நமது இலக்கு என்னவாக இருக்கவேண்டும்? ஒரு கூட்டத்தையும் நிகழ்ச்சியையும் ஒருபோதும் தவறவிடமாட்டோம் என்பதாக இருக்கட்டும்.
6 யெகோவாவுடைய மகிமையையும் நம்முடைய நித்திய நன்மையையும் ஞாபகத்தில் வைத்தவர்களாய், இனிவரும் காலத்தில் கடவுள் காட்டும் வாழ்க்கை முறையை ஊக்கந்தளராமல் பின்பற்றுவோமாக!—ஏசா. 48:17.