நம் மகத்தான சிருஷ்டிகர் நம்மீது அக்கறை கொள்கிறார்!
1 கீழ்ப்படியாத இஸ்ரவேலிடம் நியாயங்காட்டி பேச யெகோவா முயற்சி செய்கையில் இவ்வாறு கேட்டார்: “உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? பூமியின் கடைக்கோடிகளைப் படைத்தவராகிய யெகோவாவே என்றுமுள்ள கடவுள்.” (ஏசா. 40:28, NW) நம்முடைய மகத்தான சிருஷ்டிகரை நமக்குத் தெரியும், அன்புடன் கவனித்துக்கொள்பவர் என்பதும் தெரியும். ஆனால், கோடிக்கணக்கானோர் அவர் இருப்பதையே சந்தேகிக்கின்றனர் அல்லது பைபிளுக்கு இசைவாக இல்லாத கருத்தை வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?
2 உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புதிய புத்தகம் இப்படிப்பட்ட மக்களுக்கு உதவவே வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மைகளை சீர்தூக்கிப் பார்க்க சிந்திக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. படிப்பவரின் முழுக் கவனத்தைக் கவரும் விஷயங்களும் இந்தப் புத்தகத்திலுள்ள தூண்டுவிக்கும் விவாதங்களும் அதை வாசிப்போரை கொள்ளைகொள்ளும்.
3 படைப்பாளர் புத்தகத்தை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள பொருளடக்கத்தின் அடிப்படை குறிப்புகளை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அண்டம், உயிர், மனிதன்—இவை எப்படி வந்தன, அவற்றுக்கு காரணகர்த்தா யார் என்பதை 2 முதல் 5 அதிகாரங்கள் அலசுகின்றன. பைபிளையும் அதன் ஆசிரியரைப் பற்றியும் குறிப்பாக, படைப்பை பற்றிய ஆதியாகம பதிவு நம்பகமானதா என்பதை பற்றியும் 6 முதல் 9 அதிகாரங்கள் துருவி ஆராய்கின்றன. மனிதன் கேட்கும் மிகச் சிக்கலான கேள்விகளில் ஒன்றிற்கு, அதாவது “படைப்பாளர் அக்கறைகொள்கிறார் என்றால், ஏன் இவ்வளவு துன்பம்?” என்ற கேள்விக்கு 10-ம் அதிகாரம் திருப்தியளிக்கும் பதிலைத் தருகிறது.
4 சந்தேகிக்கிறவர்களிடம் நியாயங்காட்டி பேச முயலுங்கள்: படைப்பாளர் புத்தகத்தில் 78-9 பக்கங்களில் உள்ள தர்க்கரீதியான விவாதத்தை பயன்படுத்தி கடவுளைப் பற்றி சரியான முடிவுக்கு வர நாம் மற்றவர்களுக்கு உதவலாம். அவர்களிடம் இவ்வாறு கேளுங்கள்: “இந்த அண்டத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததா?” ஆரம்பம் இருந்தது என்பதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்வார்கள். அப்படியானால், “அதற்கு எந்தவொரு காரணகர்த்தாவும் இல்லையா அல்லது அது உண்டாக்கப்பட்டதா?” என்று கேளுங்கள். அது உண்டாக்கப்பட்டது என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்கின்றனர். இது, “இந்த அண்டம் என்றென்றும் இருக்கிற ஏதாவதொன்றால் உண்டாக்கப்பட்டதா அல்லது என்றென்றும் வாழ்கிற யாரோ ஒருவரால் உண்டாக்கப்பட்டதா?” என்ற கடைசி கேள்விக்கு வழிநடத்துகிறது. ஒரு படைப்பாளர் இருக்க வேண்டும் என்பதை அநேகர் புரிந்துகொள்வதற்கு இந்த அணுகுமுறை வழிநடத்தும்.
5 படைப்பாளர் புத்தகம் எல்லா மக்களின் கையிலும் சென்று சேர வேண்டிய சரியான புத்தகம். உங்கள் உற்றார் உறவினருடனும் சக பணியாளர்களுடனும் சக மாணவர்களுடனும் பழக்கப்பட்ட மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றி சந்தேகிக்கிறவர்களை நீங்கள் சந்திக்கையில் அவர்களிடம் கொடுப்பதற்காக ஊழியத்தில் உங்களுடன் எப்பொழுதும் எடுத்துச் செல்லுங்கள். இந்தப் புத்தகத்தை நாம் எந்தளவுக்கு அதிகம் தெரிந்து கொள்கிறோமோ அந்தளவுக்கு நம்முடைய படைப்பாளர்மீது நம்முடைய அன்பும் பலப்படும், அவருடைய மகத்தான தராதரங்களுக்கு இசைவாக நடக்க நம்மைத் தூண்டும்.—எபே. 5:1; வெளி. 4:11.