குடும்ப அங்கத்தினர் முழுமையாய் ஒத்துழைப்பது எப்படி—ஊழியத்தில்
1 கணவர்களும் மனைவிகளும், பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்வதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி அல்லவா? இவ்வாறு யெகோவாவுடைய பெயரை மற்றவர்கள் முன்பாக துதிக்கின்றனர். (சங். 148:12, 13) வெளி ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்ள எல்லா குடும்பங்களும் ஓர் ஒழுங்கை காத்துவர வேண்டும். நீங்கள் குடும்பமாக ஊழியத்தில் பங்குகொள்ள ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளை ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், என்ன திட்டமிட வேண்டும் என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருப்பார்கள், முழுமையான பங்குகொள்ளவும் முடியும்.—நீதி. 21:5அ.
2 குடும்பமாக ஊழியத்தில் பங்குகொள்ளும் முன், நீங்கள் உபயோகிக்க போகும் அளிப்புகளை ஏன் ஒன்றாக சேர்ந்து தயாரிக்கக்கூடாது? இவ்வாறு பழகிப்பார்த்தால் பெரும் உதவியாக இருக்கும். அதுமட்டுமா, உண்மையான குடும்ப ஒத்துழைப்பையும் தோற்றுவிக்கும். குடும்ப அங்கத்தினர் அனைவரும் நன்றாக தயாரித்து முழு குடும்பமும் வெளி ஊழியத்தில் பங்குகொண்டால் எவ்வளவு அருமையாக இருக்கும்!
3 பயணக் கண்காணி ஒருவர் முழு குடும்பத்தோடு சேர்ந்து பத்திரிகை ஊழியத்தில் பங்குகொண்டார். அந்தக் குடும்பத்திலிருந்த சிறுமிகளில் ஒருத்தியுடன் வீட்டுக்கு வீடு வேலை செய்தபோது, “எவ்வளவு நேரம் நீங்க என்னோட ஊழியம் செய்யப் போறீங்க?” என அவரிடம் கேட்டாள். பிறகு தன் அப்பாவோடு ஊழியம் செய்யப்போவதாகவும் அந்தப் பெண் கூறினாள். அவளும் அவள் அப்பாவும் ஒன்றாக சேர்ந்து ஊழியம் செய்வதை உண்மையில் அனுபவித்தனர் என்பது தெளிவாய் இருந்தது. என்னே அருமையான குடும்ப ஒற்றுமை!
4 சில குடும்பங்கள், வருடத்தில் ஒரு மாதம் ஒன்றாக சேர்ந்து துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியலாம். அல்லது குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் தொடர்ச்சியாக துணைப் பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ சேவிக்க வாய்ப்பு இருக்கலாம். குடும்பத்தில் நல்ல திட்டமிடுதலும் ஒத்துழைப்பும் இருந்தால் பயனியர் செய்பவருக்கு உதவுவதன் மூலம் குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஊழியத்தில் தங்கள் தனிப்பட்ட பங்கை அதிகரிக்க முடியும். இவ்வாறு ஊழியத்தில் அதிகமாக பங்குகொள்வதாலும் அதில் கிடைக்கும் நல்ல அனுபவங்களினாலும் அந்தக் குடும்பம் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படும்.—மல். 3:10.
5 சுவிசேஷ வேலையில் முழு பங்கு வகித்தால் குடும்பங்கள் யெகோவாவின் சேவையில் ஒன்றாகவும் வைராக்கியமாகவும் பலன் தருகிறவையாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.—பிலிப்பியர் 2:1, 2-ஐ ஒப்பிடுக.