கல்வியும் உங்கள் ஆவிக்குரிய இலக்குகளும்
1 நீங்கள் துள்ளித்திரியும் பருவத்திலிருக்கையில் அடிப்படைக் கல்வியை சிறந்த விதத்தில் பயில்வது நல்லது. நன்கு படிக்கவும் எழுதவும் உதவுகிற கல்வித் திறமைகளை அது வளர்க்கிறது; புவியியல், வரலாறு, கணிதம், அறிவியல் என பொது அறிவையும் விருத்தி செய்கிறது. போகப் போக, எப்படி தெளிவாக சிந்திப்பது, உண்மைகளை அலசியாராய்வது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, புதுப்புது உத்திகளை கையாளுவது என நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். இத்தகைய படிப்பு வாழ்க்கையில் கடைசி வரை உங்களுக்கு கைகொடுக்கும். உங்கள் கல்விக்கும் ஆவிக்குரிய இலக்குகளுக்கும் சம்பந்தமென்ன? அது எப்படி “நடைமுறை ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்” பெற்றுக்கொள்ள உதவும்?—நீதி. 3:21, 22, NW.
2 கடவுளுடைய சேவையில் பயனுள்ளவர்களாய் ஆகுங்கள்: வகுப்பில் நன்கு கவனம் செலுத்துங்கள், வீட்டுப் பாடங்களை சரிவர செய்யுங்கள். நன்கு வாசிப்பதற்கும் படிப்பதற்கும் பழகிக்கொண்டால், கடவுளுடைய வார்த்தையை இன்னும் எளிதாக ஆராய்ந்து பார்க்க முடியும், உங்களை ஆவிக்குரிய விதத்தில் திடமாக வைத்துக் கொள்ளவும் முடியும். (அப். 17:11) வெவ்வேறு பின்னணிகளை, விருப்புவெறுப்புக்களை, நம்பிக்கைகளை உடைய மக்களை ஊழியத்தில் சந்திக்கிறீர்கள்; அவர்களோடு புரிந்துகொள்ளுதலோடு உரையாட நீங்கள் பெற்ற விரிவான அறிவு துணைபுரியும். கடவுளுடைய அமைப்பில் உங்கள் கிறிஸ்தவ பொறுப்புக்களை கையாள உங்கள் பள்ளி படிப்பு உதவும்.—2 தீமோத்தேயு 2:21; 4:11-ஐ ஒப்பிடுக.
3 சொந்த காலில் நிற்க கற்றுக்கொள்ளுங்கள்: கருத்தாக படித்தால், பள்ளி படிப்புக்குப் பின் வயிற்றுப் பிழைப்புக்கு சம்பாதிக்கத் தேவையான திறமைகளையும் கற்றுக்கொள்ளலாம். (1 தீமோத்தேயு 5:8-ஐ ஒப்பிடுக.) நன்கு யோசித்து சப்ஜெக்ட்ஸை தேர்ந்தெடுங்கள். வேலைவாய்ப்பு குறைவாக உள்ள படிப்புத் துறையில் அதிக கவனம் செலுத்தாதீர்கள். மாறாக ஏதோ ஒரு தொழில் கல்வியையோ அல்லது எங்கு போனாலும் வேலை கிடைப்பதற்கேற்ற பயிற்சியையோ தேர்ந்தெடுத்து பயில்வதைக் குறித்து சிந்தியுங்கள். (நீதி. 22:29, NW) தேவை அதிகம் இருக்கும் இடத்தில் ஊழியம் செய்ய நீங்கள் தீர்மானிக்கிறீர்கள் என்றால் சொந்த காலில் நிற்க கற்றுக்கொள்ள இத்தகைய பயிற்சி உதவும்.—அப்போஸ்தலர் 18:1-4-ஐ ஒப்பிடுக.
4 பள்ளியில் சிறந்த அடிப்படைக் கல்வியைப் பெறுவது உங்கள் ஊழியத்தை விரிவுபடுத்தவும் உதவும். யெகோவாவின் சேவையில் தொடர்ந்து முன்னேறுகையில் உங்கள் சொந்த காலில் நிற்க கற்றுக்கொள்ள திறமைகளைப் பெற இப்போதே கடினமாக உழையுங்கள். அப்போதுதான் உங்கள் ஆவிக்குரிய இலக்குகளை எட்ட உங்கள் பள்ளிப் படிப்பு உறுதுணை புரியும்.