ஓர் யூதரை சந்தித்தால் என்ன சொல்வீர்கள்?
1 முதல் நூற்றாண்டில், இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தை “இஸ்ரவேல் புத்திர”ரில் அநேகர் மதித்து, செவிகொடுத்தனர். (அப். 10:36) அப்போது இருந்ததுபோலவே, இன்றும் உண்மை மனதுள்ள யூதர் அநேகர் முழுமனதோடு சத்தியத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இஸ்ரேலில் மட்டுமல்ல, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய மாகாணங்கள் மற்றும் பல நாடுகளில் உள்ள யூதர்கள் சத்தியத்தை வாஞ்சையோடு ஏற்றுக்கொள்கின்றனர். யூத மதத்தினருக்கு சாட்சி கொடுப்பதில் இன்னும் அதிக வெற்றிகாண நீங்கள் விரும்புகிறீர்களா? மதப்பற்றுள்ள யூதர், மதப்பற்றில்லாத யூதர் என இருசாராருக்கும் சாதுரியமாக சாட்சி கொடுப்பதில் பின்வரும் ஆலோசனைகள் உதவும்.
2 மதப்பற்றுள்ள யூதருக்கு சாட்சிகொடுத்தல்: குறிப்பிட்ட கோட்பாடுகளை விளக்குவதைவிட ரபீக்களின் பாரம்பரியங்களை கடைப்பிடிப்பதில்தான் மதப்பற்றுள்ள யூதர்கள் மிகவும் அக்கறையுடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பொதுவாகவே, பைபிளுக்கு இணையாக பாரம்பரியங்களை அவர்கள் மதிக்கின்றனர். எனவே, பைபிளின் மிக ஆழமான கோட்பாடுகளைப் பற்றி கலந்து பேசுவதில் அவர்களுக்கு ஆர்வம் இருக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும், பைபிள் ஒரு கிறிஸ்தவ புத்தகம் என்ற எண்ணம் உடையவர்களாய் இருக்கின்றனர். இந்த காரணங்களுக்காகவே, பைபிளைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம், “எபிரெய வேதாகமம்” என்றோ “டோரா” அல்லது “வேதாகமம்” என்றோ சொல்லுங்கள். போரில்லா உலகம் என்றாவது வருமா? என்ற ஆங்கில சிற்றேடு, யூத மதத்தினருக்காகவே பிரசுரிக்கப்பட்ட அருமையான வெளியீடு.
3 மதப்பற்றுள்ள யூதர்களின் ஆர்வத்தை தூண்டும் தலைப்புகள் எவை? ஒரேவொரு கடவுள் இருக்கிறார் என்றும், அவர் மனிதனில் அதிக அக்கறை உடையவராய் இருக்கிறார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். மனிதனுடைய விவகாரங்களில் கடவுள் தலையிடுவார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்தப் பொதுப்படையான குறிப்புகளை வைத்தே ஒரு சம்பாஷணையை நீங்கள் துவக்கலாம். கூடுதலாக, இரண்டாம் உலக யுத்தத்தின்போது மக்கள் அனுபவித்த துயரங்கள் யூதர்களின் இருதயத்தை வெகுவாக பாதித்திருக்கின்றன. இப்படிப்பட்ட அநியாயத்தை கடவுள் ஏன் அனுமதித்தார் என்றும் துன்மார்க்கம் எப்போது முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் கேட்கின்றனர். இந்த கேள்விகளுக்கான பதில்கள் நமக்கு நன்றாக தெரியும். உதாரணமாக, யூதர்களுக்கு நடந்த அந்தப் படுகொலையின்போது நம்முடைய சகோதரர்களும் என்ன துயரங்களையெல்லாம் அனுபவித்தனர் என்பதையும் குறிப்பிட்டு அவர்களுக்கு பதில் அளிக்கலாம்.
4 உங்கள் சம்பாஷணையின் ஆரம்பத்திலேயே மேசியாவைப் பற்றிய விவாதத்தை எழுப்புவதை தவிர்ப்பதே ஞானமான செயல். இது, உங்களுக்கும் வீட்டுக்காரருக்கும் இடையே கருத்து பேதத்தை தவிர்க்க உதவும். மாறாக, இஸ்ரவேலர்களின் சரித்திரத்தில் மோசே வகித்த பங்கைப் பற்றி நீங்கள் பேசலாம். மோசேயின் போதனைகள் இன்றும் பொருந்துவதாக நம்புகிறாரா என வீட்டுக்காரரைக் கேளுங்கள். மேசியாவைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும்போது, முதலில் உபாகமம் 18:15-ஐ வாசியுங்கள். அது குறிப்பிடுவதாவது: “உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்.” தன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியென மோசே யாரை மனதில் வைத்து சொன்னார் என கேளுங்கள். பிறகு, போரில்லா உலகம் என்ற சிற்றேட்டில் பக்கம் 14, பாராக்கள் 17, 18-ல் இருந்து சில குறிப்புகளை சொல்லுங்கள்.
5 மதப்பற்றில்லாத யூதர்களின் வித்தியாசமான கருத்துக்கள்: யூதர்கள் என சொல்லிக்கொள்ளும் எல்லாருமே யூதமதத்தின் போதனைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அநேக யூதர்கள் மதப்பற்று இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். யூத மதத்தை கடைப்பிடிப்பதைவிட, அதன் கலாச்சாரம், பாரம்பரியம், கல்வி போன்றவற்றோடு சம்பந்தப்படுத்தி யூதன் என்று தனியாக அடையாளப்படுத்திக்கொள்ளவே அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். மதப்பற்றில்லாத யூதர்களில் சிலர் கடவுளை அறிய முடியாது என்னும் அறியொணாமைக் கொள்கையினராகவும், சிலர் கடவுள் இல்லை என்னும் நாத்திகர்களாகவும் இருக்கின்றனர். ஆரம்பத்தில், எபிரெய வேதாகமத்தில் இருந்து மேற்கோள் காட்டுவதன்மூலம் அதிகமாக ஒன்றும் சாதித்துவிட முடியாது. மதப்பற்றில்லாத ஓர் ஆளை சந்தித்தால் எப்படி பேசுவீர்களோ அதே அணுகுமுறையை கையாளுவதே பலன் அளிக்கும். உதாரணமாக, நம்முடைய நாட்களுக்கு பைபிள் எவ்விதம் நடைமுறை ஆலோசனைகளை தருகிறது என்பதை விளக்கலாம். பைபிள், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட வார்த்தை என வீட்டுக்காரர் நம்பவில்லையென்றால், போரில்லா உலகம் சிற்றேட்டில் இருந்து சில குறிப்புகளை சொல்லலாம். குறிப்பாக, பக்கம் 3-ல் “பைபிள்—கடவுளால் ஏவப்பட்டதா?” என்று தலைப்பிடப்பட்ட பகுதியில் உள்ள குறிப்புகளை உபயோகிக்கலாம்.
6 ஊழியத்தில் யூதர் ஒருவரை சந்தித்தால், இவ்வாறு சொல்லலாம்:
◼ “நமக்கு ரொம்ப வேண்டியவங்க யாரையாவது மரணத்தில் பறி கொடுத்த சோகத்தை நிறைய பேர் அனுபவிச்சிருக்கோம். நம்ம செத்ததுக்கு அப்புறம் நமக்கு என்ன ஆகுதுன்னு நீங்க நினைக்கிறீங்க?” பதில் சொல்ல அனுமதியுங்கள். பிறகு, போரில்லா உலகம் சிற்றேட்டில் பக்கம் 22-ல் உள்ள “மரணம், ஆத்துமா—என்பவை என்ன?” என்று தலைப்பிடப்பட்ட பெட்டிக்கு வீட்டுக்காரரின் கவனத்தை திருப்புங்கள். மரணத்திற்கு பின்னான வாழ்க்கையைப் பற்றி ரபீக்கள் போதிப்பதற்கும் பைபிளுக்கும் உள்ள வித்தியாசத்தை அந்தப் பெட்டியில் உள்ள குறிப்புகள் காட்டுகின்றன. பின், பக்கம் 23, பாரா 17-க்கு திருப்பி, இறந்தவர்கள் மறுபடியும் உயிருக்கு கொண்டு வரப்பட்டு பரதீஸிய பூமியில் வாழ்வார்கள் என பைபிள் சொல்லுகிறதென்பதைக் காட்டுங்கள். சிற்றேட்டை அளியுங்கள். மறுசந்திப்பு செய்வதற்காக, கோத்திரப் பிதாவாகிய யோபுவும்கூட உயிர்த்தெழுதல் நம்பிக்கை உடையவராய் இருந்தார் என சொல்லுங்கள். பாரா 17-ன் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைக் காட்டி, மறுபடியும் சந்தித்து, இதைக் குறித்து கலந்துபேசுவதாக சொல்லுங்கள்.
7 சத்தியத்திற்கு செவிகொடுத்து, அதற்கிசைய நடந்த யூதர்களின் அனுபவங்களை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், மற்றும் அப்போஸ்தலர் புத்தகங்கள் பதிவு செய்துள்ளன. நித்திய ஜீவனுக்கான வாயிலை யெகோவா இன்னும் திறந்தே வைத்திருக்கிறார். உண்மை மனதுள்ள அநேக யூதர்கள் மெய்க் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி இப்போதுகூட கற்றுக்கொண்டு, கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் வாழ முடியும்.—மீ. 4:1-4.