உங்களுக்கு இருப்பவற்றில் திருப்தியாய் இருங்கள்
1 குடும்பத்துக்குத் தேவையான பொருள் சம்பந்தமான தேவைகளை பூர்த்தி செய்யும்படி வேத வசனங்கள் நமக்கு புத்திமதி அளிக்கின்றன; ஆனால் அதுவே நம் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக ஆகிவிடக் கூடாது. ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 6:33; 1 தீ. 5:8) ‘கையாளுவதற்கு கடினமான இந்தக் கொடியகாலங்களில்’ முழுமையாக சமநிலையைக் காத்துக்கொள்வது சவாலானதுதான். (2 தீ. 3:1, NW) அதைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவும்?
2 பைபிளின் கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: செல்வச் செழிப்பை நாடுவது ஆவிக்குரிய விதத்தில் நாசகரமானது என கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது. (பிர. 5:10; மத். 13:22; 1 தீ. 6:9, 10) நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில், கூட்டங்கள், படிப்பு, ஊழியம் ஆகிய ஆவிக்குரிய காரியங்கள் வாழ்க்கையில் இரண்டாவது இடத்தை ஏற்கும் அளவுக்கு உலகப்பிரகாரமான வேலையிலோ பொருள் சம்பந்தமான அக்கறைகளிலோ நம்மில் எவராவது அதிகமாக மூழ்கிவிடுவது அழிவில் போய் முடியும். (லூக். 21:34-36) மாறாக, பைபிளின் புத்திமதி இதுவே: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீ. 6:7, 8.
3 கிறிஸ்தவர்கள் வலுக்கட்டாயமாக தங்கள்மீது வறுமையைத் திணித்துக்கொள்வதை இது அர்த்தப்படுத்தவில்லை. மறுபட்சத்தில், பொருள் சம்பந்தமான தேவைகள் என குறிப்பிடுகையில் அவற்றில் உணவும், உடையும், வாழ்வதற்கு தகுந்த உறைவிடமுமே உண்மையில் அடங்கும் என்பதை அவை நமக்கு புரிய வைக்கின்றன. வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபவை நமக்கிருந்தால், அதன் தரத்தை முன்னேற்றுவிப்பதற்கு சதா முயற்சி எடுக்கக்கூடாது. ஏதாவது ஒன்றை வாங்குவதை பற்றியோ இன்னுமொரு வேலையில் சேர்ந்துகொள்வதைப் பற்றியோ யோசிக்கையில், ‘இது உண்மையில் தேவைதானா?’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது, ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பின்வரும் ஆலோசனைக்கு இசைவாக செயல்பட நமக்கு உதவும்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்.”—எபி. 13:5.
4 நாம் யெகோவாவை நம்பினால் அவர் நம்மை ஆதரிப்பார். (நீதி. 3:5, 6) அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கடினமாக உழைப்பது அவசியமாக இருந்தாலும், அவற்றையே நம் வாழ்க்கையின் மையமாக வைத்திருக்க மாட்டோம். நம்மிடம் கொஞ்சமாக இருந்தாலும் சரி, மிகுதியாக இருந்தாலும் சரி, நம் தேவைகளை திருப்தி செய்ய யெகோவாவை சார்ந்திருப்போம். (பிலி. 4:11-13) அதனால் கடவுள் தரும் மனநிறைவையும் இன்னும் அநேக ஆசீர்வாதங்களையும் அனுபவிப்போம்.
5 மற்றவர்களின் விசுவாசத்தை பின்பற்றுங்கள்: ஒற்றைப் பெற்றோராக சத்தியத்தின் பாதையில் தன் மகளை வளர்த்து வந்த ஒரு தாய் படிப்படியாக தன் வாழ்க்கையை எளிமையாக்கி கொண்டார். வீட்டில் சகல செளகரியங்களையும் அனுபவித்து வந்தபோதிலும், அதைவிட சிறிய வீட்டிற்கும், பின்னர் ஒரு அப்பார்ட்மென்ட்டுக்கும் குடிமாறினார். தான் பார்த்துவந்த வேலைக்கு செலவிடும் நேரத்தை குறைத்துக் கொண்டு ஊழியத்தில் அதிக நேரம் செலவிட இந்த மாற்றம் அவருக்கு உதவியது. மகள் வளர்ந்து மணம் முடித்து சென்றதும், இந்த தாய் வேலையிலிருந்து உரிய காலத்துக்கு முன்னரே ஓய்வுபெற்றார். இதனால் வருவாய் மேலும் குறைவதை அவர் பொருட்படுத்தவில்லை. இப்போது இந்த சகோதரி கடந்த ஏழு வருடமாக ஒழுங்கான பயனியராக இருந்து வருகிறார். ராஜ்ய அக்கறைகளை வாழ்க்கையில் முதலாவதாக வைப்பதற்கென்று தான் செய்த பொருள் சம்பந்தமான எந்த தியாகத்திற்காகவும் அவர் எள்ளளவும் வருந்துவதில்லை.
6 மூன்று பிள்ளைகளை வளர்த்து வந்த ஒரு மூப்பரும் அவர் மனைவியும் பல வருடங்களாக பயனியர் சேவையில் ஈடுபட்டிருந்தனர். குடும்பமாக அவர்கள் தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்ள கவனம் செலுத்துவதற்கு மாறாக தேவைகளை பெறுவதில் திருப்தி காண கற்றுக்கொண்டனர். அந்த சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் மிக எளிய வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. இது சில சமயங்களில் கஷ்டமாக இருந்தாலும், எங்களுக்கு தேவையானதை யெகோவா எப்போதுமே கொடுத்து வந்திருக்கிறார். . . . இவ்வாறு என் குடும்பத்தினர் ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதை பார்க்கையில், எல்லாம் சரிவர நடப்பதாக உணருகிறேன். செய்ய வேண்டியதை செய்து முடித்த திருப்தியை அனுபவிக்கிறேன்.” அவருடைய மனைவி தொடர்ந்து சொல்வதாவது: “[என் கணவர்] ஆவிக்குரிய காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதைப் பார்க்கையில் எனக்குள் பரமதிருப்தி ஏற்படுகிறது.” பெற்றோர் முழுநேரமாக யெகோவாவை சேவிக்க தீர்மானித்ததில் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சிதான்.
7 பொருளாதார காரியங்களை நாடித்தேடுவதற்கு பதிலாக தேவ பக்திக்குரிய வாழ்க்கை போக்கை பின்பற்ற தெரிந்துகொள்ளும் அனைவருக்கும், இப்போதும் எதிர்காலத்திலும் அபரிமிதமான ஆசீர்வாதங்கள் கிடைக்குமென பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.—1 தீ. 4:8.