யெகோவாவை மகிமைப்படுத்த மற்றவர்களுக்கு உதவுதல்
1 உலகம் முழுவதிலும் ஒரு முக்கியமான செய்தி அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தச் செய்தி இதுவே: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” (வெளி. 14:6, 7) அந்த அறிவிப்பில் பங்கேற்பது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். யெகோவாவுக்குப் பயந்து அவரை தொழுதுகொள்வதற்கு ஜனங்கள் அவரைப் பற்றி என்ன அறிந்துகொள்ள வேண்டும்?
2 அவருடைய பெயர்: இன்று ஜனங்கள் பொய்க் கடவுள்களிலிருந்து மெய்க் கடவுளை அவருடைய பெயரை வைத்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். (உபா. 4:35; 1 கொ. 8:5, 6) உண்மையில், பைபிள் எழுத்தாளர்கள் யெகோவா என்ற சிறப்பு பெயரை பைபிளில் 7,000-க்கும் அதிக தடவை பயன்படுத்தினர். கடவுளுடைய பெயரை எப்பொழுது அறிமுகப்படுத்துவது என்பதில் நாம் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டியது பொருத்தமானாலும் அதை மறைக்கவோ அதைப் பயன்படுத்தாதிருக்கவோ கூடாது. மனிதகுலம் முழுவதும் தம் பெயரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம்.—சங். 83:17.
3 அவருடைய ஆளுமை: யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கு அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஜனங்கள் அறிந்திருக்க வேண்டும். அவருடைய தலைசிறந்த அன்பு, ஒப்பற்ற ஞானம், வழுவாத நீதி, சர்வ வல்லமை ஆகிய குணங்களையும், அத்துடன் இரக்கம், அன்புள்ள தயவு, இன்னும் பிற அருமையான குணங்களையும் அவர்கள் அறிய வழிசெய்ய வேண்டும். (யாத். 34:6, 7) தங்கள் உயிர் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதையே சார்ந்திருப்பதை புரிந்துகொண்டு, கடவுளிடம் ஆரோக்கியமான பயத்தோடிருக்கவும், அவரை உயர்வாக மதிக்கவும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.—சங். 89:7.
4 தேவனிடம் நெருங்கி வருதல்: வரவிருக்கும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பில் காப்பாற்றப்படுவதற்கு ஜனங்கள் விசுவாசத்துடன் யெகோவாவை தொழுதுகொள்ள வேண்டும். (ரோ. 10:13, 14; 2 தெ. 1:7, 8) இதற்கு, கடவுளுடைய பெயரையும் அவருடைய குணங்களையும் பற்றி அறிவது மட்டும் போதாது. யெகோவாவின்மீது முழு இருதயத்தோடு நம்பிக்கை வைத்து, அவருடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள நாம் ஜனங்களுக்கு உதவ வேண்டும். (நீதி. 3:5, 6) கற்றுக்கொண்டதை அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து, அவரிடம் உருக்கமாக ஜெபித்து மன்றாடுவதன் மூலம் அவருடைய உதவியை தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கையில், அவர்களுடைய விசுவாசம் அதிகரிக்கும், அது, யெகோவாவிடம் நெருங்கி வர உதவும்.—சங். 34:8.
5 கடவுளுடைய பெயரை நாம் வைராக்கியத்துடன் அறிவிப்போமாக; அவரில் முழு நம்பிக்கை வைத்து அவருக்குப் பயப்படும்படி மற்றவர்களுக்கு உதவுவோமாக. யெகோவாவை அறிந்துகொண்டு அவரை தங்கள் “இரட்சிப்பின் தேவ”னாக மகிமைப்படுத்துவதற்கு இன்னும் அநேகருக்கு தொடர்ந்து உதவலாம்.—சங். 25:5.