ராஜ்ய செய்தியை அறிவியுங்கள்
1 “நான் . . . தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்.” (லூக். 4:43) இயேசு இப்படி சொன்னபோது தம்முடைய ஊழியத்தின் முக்கிய செய்தி கடவுளுடைய ராஜ்யம் என்பதை சுட்டிக் காட்டினார். இன்று நாம் அறிவிக்கும் செய்தியும் ராஜ்யத்தை மையமாக கொண்டதே; இது, “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என மத்தேயு 24:14-ல் முன்னறிவிக்கப்பட்டது. கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தமாக என்னென்ன சத்தியங்களை மக்கள் அவசியம் கேட்க வேண்டும்?
2 கடவுளுடைய ராஜ்யம் தற்போது பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கிறது, சீக்கிரத்தில் எல்லா மனித ஆட்சிகளையும் மாற்றீடு செய்யப் போகிறது. பிசாசு ஏற்கெனவே பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டான், தற்போதைய பொல்லாத உலக நிலைமையும் முடிவடையும் தறுவாயில் உள்ளது. (வெளி. 12:10, 12) சாத்தானின் இந்தப் பொல்லாத உலக நிலைமையும் சுவடு தெரியாமல் முற்றிலுமாக அழிக்கப்படும், ஆனால் கடவுளுடைய ராஜ்யமோ அசைக்கப்படுவதில்லை. அது நித்தியமாக நிலைத்திருக்கும்.—தானி. 2:44; எபி. 12:28.
3 கீழ்ப்படிதலுள்ள மனிதர் அனைவருடைய நியாயமான ஆசைகளையும் ராஜ்யம் பூர்த்தி செய்யும். யுத்தம், குற்றச்செயல், கொடுமை, வறுமை ஆகியவற்றால் ஏற்படும் வேதனையை அடியோடு நீக்கிவிடும். (சங். 46:8, 9; 72:12-14) அனைவரும் வயிறார சாப்பிட உணவு வழங்கும். (சங். 72:16; ஏசா. 25:6) சுகவீனத்தையும் ஊனத்தையும் அடியோடு அழித்துவிடும். (ஏசா. 33:24; 35:5, 6) மனிதகுலம் பரிபூரணத்தை மெல்ல மெல்ல அடைகையில் பூமி ஒரு பூங்காவனமாக மாறும், மக்கள் ஒற்றுமையாக குடியிருப்பார்கள்.—ஏசா. 11:6-9.
4 இப்போது நாம் வாழும் விதத்தில் கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக இருக்க விரும்புவதைக் காட்டுகிறோம். நம் இலக்குகள், முன்னுரிமைகள் உட்பட நம் வாழ்க்கை முறையை ராஜ்ய செய்தி கட்டுப்படுத்த வேண்டும். உதாரணமாக, நம் வீட்டாருக்குத் தேவையானவற்றை கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிற போதிலும் ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களை பொருள் சம்பந்தப்பட்ட காரியங்கள் நெருக்கிப் போட நாம் இடங்கொடுக்கக் கூடாது. (மத். 13:22; 1 தீ. 5:8) மாறாக, இயேசுவின் பின்வரும் புத்திமதிக்குக் கீழ்ப்படிய வேண்டும்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சம்பந்தப்பட்ட காரியங்கள்] உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத். 6:33.
5 காலம் கடந்துவிடும் முன்பு மக்கள் ராஜ்ய செய்திக்குச் செவிசாய்த்து அதற்கேற்ப நடக்க வேண்டும்; இது அவசரம். அவ்வாறு அவர்கள் செயல்படுவதற்கு, ‘தேவனுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட விஷயங்களை . . . மெய்யென காட்டி நம்ப வைப்பதன்’ மூலம் நாம் உதவுவோமாக.—அப். 19:8, NW.