யெகோவா மிகவும் புகழப்படத்தக்கவர்
கர்த்தருடைய இராப் போஜனம் ஏப்ரல் 16-ம் தேதி அனுசரிக்கப்படும்
1 ஏப்ரல் 16, 2003 நெருங்க நெருங்க நம் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அன்று இரவு நாம் இயேசுவின் மரணத்தை நினைவுகூருவோம், உலகமுழுவதும் உள்ள சக விசுவாசிகளோடு சேர்ந்து யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவோம். மீட்புக்கான அற்புத ஏற்பாட்டை செய்திருப்பதால் யெகோவா நம் எல்லாருடைய போற்றுதலையும் பெற உகந்தவர். அந்த ஏற்பாட்டின் மூலம், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தின் மீது அருமையான ஆசீர்வாதங்களை பொழியப்போகிறார். “கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்” என்று பாடிய சங்கீதக்காரனோடு சேர்ந்து இப்போது நாமும் மனதார பாடுகிறோம்.—சங். 145:3.
2 கடவுளின் நற்குணத்தைப் பற்றி தியானிப்பதற்கு இதுவே நேரம்; அதோடு, ‘தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால்’ யெகோவாவுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடனைப் பற்றி தியானிப்பதற்கும் இதுவே நேரம். (1 யோ. 4:9, 10) கீழ்ப்படிதலோடு கர்த்தருடைய இராப் போஜனத்தை ஆசரிக்கையில், “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும் . . . மிகுந்த கிருபையும் உள்ளவர்” என்பது நம் மனதில் ஆழமாக பதியும். (சங். 145:8) கண்டிப்பாகவே, இந்த மீட்கும் பொருள் முழு மனிதகுலத்தின் மீது யெகோவாவுக்குள்ள அன்பின் மிகச் சிறந்த வெளிக்காட்டாகும். (யோவா. 3:16) கடவுளின் அன்பைப் பற்றி சிந்திக்கும்போதும், இயேசுவின் உண்மை மாறா பற்றுறுதியைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கும்போதும் நாம் யெகோவாவை துதிப்பதற்கு தூண்டப்படுகிறோம். நமக்கு நித்திய ஜீவன் கிடைப்பதற்கு வழி செய்த அவருடைய எல்லையில்லா அன்புக்கு என்றென்றும் அவரை புகழ்வோமாக.—சங். 145:1, 2.
3 மற்றவர்களும் யெகோவாவை துதிக்க உதவுங்கள்: மீட்கும் பொருளே கடவுளின் மிக உன்னத பரிசு; நம்மோடு சேர்ந்து மற்றவர்களும் யெகோவாவை துதிக்கும்படி அழைப்புவிடுக்க, அதன் மீதுள்ள போற்றுதலே நம்மை தூண்டுகிறது. சங்கீதக்காரன் கடவுளுடைய ஆவியின் ஏவுதலால், “அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்” என்று எழுதினார். (சங். 145:7) உலகமுழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் சென்ற வருடம் மட்டும் வெளி ஊழியத்திற்காக நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரத்தை அர்ப்பணித்தனர். அவர்கள் பட்ட பிரயாசத்திற்கு பலன்? ஒவ்வொரு வாரமும், சராசரியாக 5,100-க்கும் அதிகமானோர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றனர். நினைவு நாளன்று மொத்தம் 1,55,97,746 பேர் ஆஜராயிருந்தனர்; அதில் 90 லட்சம் பேர் இன்னும் நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக யெகோவாவை துதிக்க ஆரம்பிக்கவில்லை; அப்படியென்றால் இன்னுமதிக வளர்ச்சி ஏற்பட ஏராளமான வாய்ப்பிருக்கிறது! ராஜ்ய பிரஸ்தாபிகளாக, நாம் நற்செய்தியை அறிவித்து, யெகோவா தேவனிடமாகவும், அவர் குமாரனிடமாகவும், ராஜ்யத்தினிடமாகவும் மற்றவர்களின் மனதை திருப்பும்படி பெற்ற விசேஷ சிலாக்கியத்தை பொக்கிஷமாக கருதுகிறோம்.
4 யெகோவாவை மகிமைப்படுத்தும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கான ஒரு நல்ல வழி, கர்த்தருடைய இராப் போஜனத்தை நம்மோடு சேர்ந்து அனுசரிப்பதற்கு அவர்களை அழைப்பதாகும். யார் யாரை அழைக்க வேண்டும் என்றும், யார் யாருக்கு தேதியையும் நேரத்தையும் ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் பட்டியலிட்டிருக்கிறீர்களா? உங்கள் பட்டியலில் உள்ள எல்லாருக்குமே நீங்கள் அழைப்பிதழை கொடுத்து விட்டீர்களா? இல்லையென்றால், மீந்திருக்கும் இந்த நாட்களில் ஊக்கத்தோடு அவர்களை அழையுங்கள். இந்த ஆசரிப்பின் நோக்கத்தை அவர்கள் புரிந்துகொள்ள உதவுங்கள். அந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்க தயாராக இருங்கள். அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள் என்று அவர்கள் உணரும்படி செய்யுங்கள், மற்றவர்களிடம் அவர்களை அறிமுகப்படுத்துங்கள், அதோடு, அங்கே வந்ததற்காக அவர்களை பாராட்டுங்கள்.
5 நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்வது, புதியவர்களை ஆவிக்குரிய விதத்தில் முன்னேற உந்துவிக்கும். பைபிள் மாணாக்கர் ஒருவர், தன் வாழ்க்கையில் நடந்த கோர சம்பவத்தால் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக, பொது இடங்களைக் கண்டாலே அவருக்கு பீதி ஏற்படும். அவர் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார். அந்தக் கூட்டத்தைப் பற்றி அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டபோது, “அந்த இரவு மிகவும் பயபக்தியூட்டுவதாக இருந்தது. அதில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது” என்று சொன்னார். அன்றிலிருந்து கூட்டங்களுக்கு போகத் தொடங்கினார்.
6 நினைவு ஆசரிப்புக்கு பிறகு: இப்படிப்பட்ட ஆர்வமுள்ளவர்கள் யெகோவாவை துதிப்பவர்களாக ஆவதற்கு எப்படி உதவலாம்? நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த புதியவர்களிடம் மூப்பர்கள் கவனம் செலுத்த வேண்டும்; தகுதியுள்ள பிரஸ்தாபிகள் அவர்களைப் போய் சீக்கிரத்திலேயே சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த ஆசரிப்பின்போது அவர்கள் காதால் கேட்ட, கண்ணால் கண்ட புத்துணர்ச்சியளித்த காரியங்களைப் பற்றி அப்போது கலந்தாலோசிக்கலாம். ஒரு சிலர் பைபிளைப் படிக்க விருப்பம் தெரிவிக்கலாம். அவர்களை வாராந்தர சபை கூட்டங்களுக்கும் அழைக்க வேண்டும், ஏனெனில், தொடர்ந்து கூட்டங்களுக்கு போகும்போதுதான் அவர்களுக்கு பைபிள் அறிவு பெருகும்.
7 கூட்டங்களுக்கு தொடர்ந்து வரும்படி ஒழுங்கற்ற பிரஸ்தாபிகளையும் செயலற்ற பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. செயலற்ற ஒருவருக்கு, திரும்பவும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள உதவும்படி மூப்பர்கள் கேட்டுக்கொண்டால், அதற்கு தயாராக இருங்கள். நம்முடைய சகோதரரிடம் இப்படிப்பட்ட அன்பான கரிசனை காட்டுவது அப்போஸ்தலனாகிய பவுலின் அறிவுரைக்கு இசைவாக இருக்கும்: “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.”—கலா. 6:10.
8 ஏப்ரல் 16-ம் தேதி, நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள நாம் எல்லாரும் விசேஷ முயற்சி எடுப்போமாக. யெகோவாவை துதிப்பதற்கான இந்த மகா பரிசுத்த நிகழ்ச்சியை ஒருபோதும் தவறவிடாதிருப்போமாக. ஆம், இன்றும் என்றும், யெகோவாவின் பிரமாண்டமான செயல்களுக்காக அவரை துதிப்போமாக!—சங். 145:21.