யெகோவாவின் அருஞ்செயல்களை தொடர்ந்து அறிவியுங்கள்
1 தலைசிறந்த நம் கடவுளாகிய யெகோவாவைப் போன்றவர் எவரும் இல்லை! “ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்; உமக்கு நிகரானவர் எவரும் இலர்; என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே” என்று எழுதினார் தாவீது. (சங். 40:5, பொ. மொ.) சர்வலோக படைப்பு, மேசியானிய ராஜ்யம், தம் மக்களிடம் காட்டும் அன்புள்ள தயவின் செயல்கள், உலகளாவிய பிரசங்க வேலை ஆகிய இவை அனைத்தும் யெகோவாவின் அருஞ்செயல்களில் அடங்கும். (சங். 17:7, 8; 139:14; தானி. 2:44; மத். 24:14) யெகோவாவிடம் வைத்திருக்கும் அன்பும், அவர் செய்துள்ள அனைத்திற்கும் போற்றுதலும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லும்படி நம்மை தூண்டும். (சங். 145:5-7) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இதை இன்னும் அதிகமாக செய்யும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது.
2 ஒரு துணைப் பயனியராக: விசேஷமாக ஊழியம் செய்யப்படும் இந்த மாதங்களில் ஒரு மாதமோ அதற்கும் அதிகமாகவோ ஊழியத்தில் 50 மணிநேரம் செலவிடுவதற்கு உங்களால் திட்டமிட முடியுமா? வழக்கமாக செயல்படுவதிலிருந்து நீங்கள் எவ்வளவு மாற்றங்களை செய்தாலும் அந்த முயற்சி வீண் போகாது. (எபே. 5:16) துணைப் பயனியர் செய்வது ஊழியத்தின் தரத்தை உயர்த்த அநேகருக்கு உதவியிருக்கிறது. வீடுகளில் மிக சகஜமாக பேசவும் பைபிளை அதிகமாக பயன்படுத்தவும் அவர்கள் பழகிவிடுகிறார்கள். ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஆர்வம் காட்டுகிறவர்களைப் போய் மீண்டும் சந்திப்பது சுலபமாகிறது; ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்தியிராதவர்கள் துணைப் பயனியர் செய்கையில் ஒரு படிப்பை தொடங்கியிருக்கிறார்கள். துணைப் பயனியர் செய்யும்போது மற்றவர்களுக்கு உதவ நாம் முயற்சி எடுப்பதால், அது ஒரு சந்தோஷமான செயலாகும்.—அப். 20:35.
3 ‘எனக்கெல்லாம் துணைப் பயனியர் செய்யும் சூழ்நிலை இல்லை’ என உடனே முடிவுகட்டிவிடாதீர்கள். போன வருடம் துணைப் பயனியர் செய்த ஒரு மூப்பருக்கு இரண்டு பிள்ளைகள்; உலகப்பிரகாரமான வேலையும் இருக்கிறது. இத்தனை பிஸியாக இருக்கும் அந்த சகோதரரால் எப்படி பயனியர் செய்ய முடிந்தது? வாரம் முழுக்க வேலை என இருந்ததால், அவர் வார இறுதி நாட்களில் நீண்ட நேரம் ஊழியம் செய்ய திட்டமிட்டார்; சனிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு தெரு ஊழியத்தை தொடங்கிவிடுவார். அந்த சபையில் அதே சூழ்நிலையில் இருந்த பலரும் பயனியர் செய்தார்கள். ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினார்கள். வேறொரு சபையில், 99 வயது சகோதரி மே மாதம் பயனியர் செய்ய தீர்மானித்தார். தன்னுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்படி அவருடைய மகள் அழைத்ததால் பயனியர் செய்தார். வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் பைபிள் படிப்புகளுக்கு செல்கையிலும் அவரது வீல்சேரை தள்ளிக்கொண்டு போவதன்மூலம் சபையிலுள்ள மற்றவர்களும் இந்த வயதான சகோதரிக்கு உதவினார்கள். தொலைபேசி மூலம் சாட்சிகொடுப்பது, தெரு ஊழியம் செய்வது, கடிதம் எழுதுவது ஆகிய முறைகளிலும் ஈடுபட்டார். சொந்த பலத்தினால் அல்ல ஆனால் யெகோவாவின் உதவியால் மட்டுமே இதை செய்ய முடிந்தது என்று உறுதியாக நம்புகிறார்.—ஏசா. 40:29-31.
4 உங்கள் சூழ்நிலைக்குப் பொருந்தும் அட்டவணையை போடுங்கள். இந்தப் பிரதியிலுள்ள மாதிரி அட்டவணைகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். முழுநேர வேலை பார்க்கிறீர்களா அல்லது பள்ளிக்கு செல்கிறீர்களா? அப்படியானால் வார இறுதி நாட்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் அட்டவணையே உங்களுக்கு மிக நடைமுறையானது. உடல்நல பிரச்சினைகள் காரணமாக உங்களால் ஒரே நாளில் நீண்ட நேரம் ஊழியம் செய்ய முடியாதென்றால், ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரம் செய்யும் அட்டவணையே உங்களுக்கு நல்லதாக இருக்கும். துணைப் பயனியர் செய்ய உங்களுக்கிருக்கும் ஆசையை மற்றவர்களிடம் தெரிவியுங்கள். ஒருவேளை அவர்களும் அதை தங்கள் இலக்காக வைப்பார்கள்.
5 இளைஞர் என்னென்ன வழிகளில் பங்கெடுக்கலாம்: யெகோவாவின் அருஞ்செயல்களைப் பற்றி இளைஞர் அறிவிக்கையில் அவர் ஆனந்தமடைகிறார். (சங். 71:17; மத். 21:16) நீங்கள் முழுக்காட்டுதல் எடுத்த இளைஞராக இருந்தால், பள்ளி விடுமுறை காலமாக இருக்கும் ஒரு மாதத்தில் துணைப் பயனியர் செய்யலாம். அப்படி செய்ய முடியாவிட்டால், இந்த மாதங்களில் ஊழியத்தில் அதிகம் பங்கெடுக்கவும் ஊழியத்தின் தரத்தை உயர்த்தவும் திட்டவட்டமான இலக்குகளை உங்களால் வைக்க முடியுமா? நீங்கள் உங்கள் பெற்றோருடன் ஊழியத்திற்கு போய்வருகிறவராக இருந்தும் இன்னும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆகவில்லை என்றால், பிரஸ்தாபியாவதற்கு தகுதிபெற இதுவே ஏற்ற தருணமாக இருக்கும். பைபிள் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் திறம்பட்டவராக இருக்க வேண்டும் என்றோ முழுக்காட்டப்பட்ட பெரியவர்களுக்கு தெரிந்திருக்கும் அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டும் என்றோ நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. அடிப்படை பைபிள் போதனைகளை புரிந்திருக்கிறீர்களா? பைபிளின் ஒழுக்க தராதரங்களை கடைப்பிடிக்கிறீர்களா? யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அறியப்பட விரும்புகிறீர்களா? அப்படியானால், இதைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். இந்த தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்று கண்டறிய உங்களோடு சேர்ந்து மூப்பர்களை சந்திக்க அவர்கள் ஏற்பாடு செய்யலாம்.—நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 98-9-ஐக் காண்க.
6 பிரசங்கிக்க மற்றவர்களுக்கு உதவுதல்: விசேஷ ஊழியத்தில் ஈடுபடும் பின்வரும் மாதங்களில், முன்னேறிவரும் பைபிள் மாணவர்களும் பிரஸ்தாபிகளாவதற்கு தகுதி பெறலாம். உங்கள் பைபிள் மாணவர் ஒருவர் நன்கு முன்னேறி வருகிறார் என்றால், உங்கள் புத்தகப் படிப்பு கண்காணி அல்லது ஊழியக் கண்காணியின் உதவியை நாடுங்கள். அவர்களில் ஒருவர் உங்கள் மாணவரின் முன்னேற்றத்தை கணிக்க உங்களுடன் படிப்புக்கு வரலாம். மாணவர் தகுதியுள்ளவராக இருந்து, பிரஸ்தாபியாக ஆகவும் விரும்பினால், உங்களுடன் சேர்ந்து அவரை சந்திப்பதற்காக இரு மூப்பர்களை நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்யலாம். (காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1989, பக்கம் 20-ஐக் காண்க.) அந்த மாணவர் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உடனடியாகவே ஊழியத்தில் பயிற்றுவிக்க தொடங்குங்கள்.
7 புத்தகப் படிப்பு கண்காணிகள் தங்கள் தொகுதியிலுள்ள செயலற்ற அல்லது ஒழுங்கற்ற பிரஸ்தாபிகளுக்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும். அப்படிப்பட்ட பிரஸ்தாபிகளை உங்களோடு ஊழியத்தில் சேர்ந்து கொள்ளும்படி தனிப்பட்ட விதத்தில் அழையுங்கள். நீண்ட காலமாக செயலற்றவர்களாக இருப்பவர்களிடம் இரண்டு மூப்பர்கள் முதலில் சென்று பேசி அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை கண்டறிவது நல்லது. (நவம்பர் 2000, நம் ராஜ்ய ஊழியம் கேள்விப் பெட்டியைக் காண்க.) விசேஷ மாதங்களில் செய்யப்படும் ஊழியத்தில் சபையார் வைராக்கியத்துடன் கலந்துகொள்வது, இப்படிப்பட்டவர்கள் ஊழியத்தை மீண்டும் தங்கள் வாழ்க்கையில் தவறாத அம்சமாக ஆக்கிக்கொள்வதற்கு தூண்டுவிக்கும்.
8 கூடுதலான வேலைக்கு இப்போதே தயாராகுங்கள்: மூப்பர்களே, துணைப் பயனியர் செய்வதற்கு சபையில் இப்போதிருந்தே உற்சாகமூட்டுங்கள். உங்களுடைய உற்சாகமூட்டும் குறிப்புகளாலும் நல்ல முன்மாதிரியாலும் நீங்கள் அதிகத்தை செய்யலாம். (1 பே. 5:3) சபையில் இதுவரை துணைப் பயனியர்களின் உச்சநிலை எண்ணிக்கை எவ்வளவு? இந்த வருடம் அதை அதிகரிக்கலாமா? புத்தகப் படிப்பு கண்காணிகளும் அவர்களுடைய உதவியாளர்களும் தங்கள் தொகுதியிலுள்ள அனைவரும் தங்கள் ஊழியத்தை அதிகரிப்பதற்கு உற்சாகப்படுத்த வழிமுறைகளை காண வேண்டும். ஊழியக் கண்காணிகள் வெளி ஊழியத்திற்காக கூடுதலான கூட்டங்களை திட்டமிடலாம். செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி சபைக்கு முன்னதாகவே தெரியப்படுத்தவும். முன்நின்று வழிநடத்தவும் வெளி ஊழிய கூட்டங்களை சரியான நேரத்தில் தொடங்கி முடிப்பதற்கும் திறம்பட்ட பிரஸ்தாபிகள் நியமிக்கப்படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (செப்டம்பர் 2001, நம் ராஜ்ய ஊழியம் கேள்விப் பெட்டியைக் காண்க.) போதுமான பிராந்தியம், பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆகியவை இருக்கும்படியும் ஊழியக் கண்காணி பார்த்துக்கொள்ள வேண்டும்.
9 கடந்த வருடம் ஒரு சபையிலுள்ள மூப்பர்கள் ஆர்வத்தோடு வெகு முன்னதாகவே துணைப் பயனியர் ஊழியத்திற்கு உற்சாகமூட்ட தொடங்கினார்கள்; அவர்களில் அநேகர் விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்தார்கள். தெரு ஊழியத்திற்காக காலை 5:30-க்கு, பள்ளி விட்டு வருகிறவர்களுக்காக பிற்பகல் 3:00 மணிக்கு, வேலை முடிந்து வருகிறவர்களுக்காக மாலை 6:00 மணிக்கு என கூடுதலான வெளி ஊழிய கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். இதோடு சனிக்கிழமைகளில் மூன்று வெளி ஊழிய கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் பயனாக அந்த சபையில் ஏப்ரல் மாதம் 66 பேர் துணைப் பயனியர் செய்தார்கள்!
10 அடுத்த முறை குடும்பப் படிப்புக்காக கூடும்போது வரவிருக்கும் மாதங்களுக்காக நடைமுறையான இலக்குகளை வைக்க ஏன் திட்டமிடக்கூடாது? நல்ல ஒத்துழைப்பும் திட்டமிடுதலும் இருந்தால் குடும்பத்தில் சிலராவது, ஏன் அனைவருமேகூட துணைப் பயனியர் ஊழியம் செய்யலாம். அது முடியாவிட்டால், ஊழியத்தில் வழக்கமாக செய்வதைவிட அதிக நேரம் செய்ய வேண்டும் அல்லது கூடுதலான சந்தர்ப்பங்களில் வெளி ஊழியம் செய்ய வேண்டும் என ஊழியத்தை அதிகரிக்கும் இலக்குகளை வையுங்கள். இந்த விஷயத்தைக் குறித்து குடும்பமாக ஜெபியுங்கள். உங்கள் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என நீங்கள் உறுதியாக நம்பலாம்.—1 யோ. 3:22.
11 கடவுளின் மிகச் சிறந்த அருஞ்செயல்: தம்முடைய மகனை மீட்பின் கிரயமாக நமக்கென்று யெகோவா பரிசாக கொடுத்ததே அவருடைய அன்பின் மிகச் சிறந்த வெளிக்காட்டு. (1 யோ. 4:9, 10) மீட்பின் கிரய பலியானது பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதகுலத்தை மீட்பதற்கு சட்டப்பூர்வ ஆதாரமாக அமைகிறது. (ரோ. 3:23, 24) இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தம் புது உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்கி, அபூரண மனிதர் பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்யும் எதிர்பார்ப்புடன் கடவுளுடைய குமாரராக தத்தெடுக்கப்படுவதை சாத்தியமாக்குகிறது. (எரே. 31:31-34; மாற். 14:24) மிக முக்கியமாக, இயேசுவின் முழுமையான கீழ்ப்படிதல் யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தியது. (உபா. 32:4; நீதி. 27:11) ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 4-ம் தேதி, சூரிய மறைவுக்குப் பின் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு உலகெங்கும் அனுசரிக்கப்படும்.
12 கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிப்பது யெகோவாவின் அருஞ்செயல்களுக்கு மகத்துவத்தைச் சேர்க்கிறது. அங்கு கொடுக்கப்படும் பேச்சு, மீட்கும்பொருளை தருவதற்காக யெகோவா என்ன செய்திருக்கிறாரோ அதற்கு போற்றுதலை வளர்க்கிறது. கடவுளின் மற்ற அருஞ்செயல்களை அங்கு வந்திருப்பவர்களால் காண முடியும். யெகோவா தம் மக்களுக்கு கற்றுத் தந்திருக்கும் ஒற்றுமையையும் கனிவான அன்பையும் அங்கு அவர்கள் காண்பார்கள். (எபே. 4:16, 22-24; யாக். 3:17, 18) இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு வருவது, ஒருவருடைய சிந்தனையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் முடிந்தவரைக்கும் அநேகர் அதில் கலந்துகொள்ளும்படி விரும்புகிறோம்.—2 கொ. 5:14, 15.
13 ஆஜராக மற்றவர்களை அழைத்தல்: யார் யாரை அழைக்கலாம் என உடனடியாக ஒரு பட்டியல் போடுவதன் மூலம் இப்போதே தயாராகுங்கள். விசுவாசத்தில் இல்லாத குடும்ப அங்கத்தார், அக்கம்பக்கத்தார், வேலையில் அல்லது பள்ளியில் பழக்கமானவர்கள், முந்தைய தற்போதைய பைபிள் மாணவர்கள், அனைத்து மறு சந்திப்பு நபர்கள் ஆகியோரை அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். செயலற்ற பிரஸ்தாபிகள் இருந்தால், புத்தகப் படிப்பு கண்காணிகள் அவர்களையும் தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
14 நினைவு ஆசரிப்புக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களை பயன்படுத்துங்கள்; நினைவு ஆசரிப்புக்கான நேரத்தையும் இடத்தையும் அவற்றில் டைப் செய்யுங்கள் அல்லது தெளிவாக எழுதுங்கள். அல்லது மார்ச் 15, 2004, காவற்கோபுரத்தில் அல்லது மார்ச் 22, 2004, ஆங்கில விழித்தெழு!-வின் பின்புற அட்டையிலுள்ள அழைப்பையும் பயன்படுத்தலாம். ஏப்ரல் 4, நெருங்கி வரவர, உங்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நேரிலோ தொலைபேசி மூலமோ நினைவூட்டுங்கள்.
15 நினைவு ஆசரிப்பின்போது: நினைவு ஆசரிப்பு அன்று கூட்டத்திற்கு சீக்கிரமாகவே வர முயலுங்கள். புதியவர்களை கனிவுடன் வரவேற்று உபசரிப்பைக் காட்டுங்கள். (ரோ. 12:13) நீங்கள் அழைத்திருப்பவர்களை கவனித்துக்கொள்வது உங்களுடைய விசேஷ பொறுப்பு. அவர்களை கரிசனையுடன் வரவேற்று சபையிலுள்ள மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். ஒருவேளை உங்கள் அருகில் அவர்களை உட்கார வைத்துக்கொள்ளலாம். பைபிளோ பாட்டுப் புத்தகமோ அவர்களிடம் இல்லை என்றால், உங்களுடன் அல்லது வேறு யாருடனாவது சேர்ந்து பார்க்கும்படி செய்யுங்கள். ஆசரிப்புக்குப்பின், அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராய் அவர்கள் அருகில் இருங்கள். முதல் முறையாக சிலர் வந்திருந்தால், கடவுளுடைய வார்த்தையையும் நோக்கத்தையும் பற்றி மேலுமாக தெரிந்துகொள்ள விரும்புகிறார்களா என்று கேளுங்கள். அவர்களுக்கு வீட்டு பைபிள் படிப்பு நடத்த விருப்பம் தெரிவியுங்கள்.
16 ஆசரிப்புக்கு வந்தவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யுங்கள்: நினைவு ஆசரிப்புக்குப் பின் வரும் வாரங்களில், அங்கு வந்தவர்களுக்கு மேலுமான உதவி தேவைப்படலாம். ஒருகாலத்தில் கூட்டங்களுக்கு தவறாமல் வந்திருந்து ஆனால் தற்போது எப்போதாவது மட்டுமே சபையுடன் தொடர்பு கொள்கிறவர்களும் இதில் உட்படுவர். அப்படிப்பட்டவர்களை புறக்கணித்துவிடாதபடி மூப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ஏன் ஆன்மீக முன்னேற்றம் காட்டுவதில் பின்தங்கினார்கள் என்பதை அறிய முயல வேண்டும். காலத்தின் அவசரத்தன்மையை அவர்களுக்கு பதிய வைக்கலாம். (1 பே. 4:7) கடவுளுடைய மக்களுடன் தவறாமல் ஒன்றுகூடிவருவதற்கான வேதப்பூர்வ அறிவுரைக்கு கீழ்ப்படிவதால் வரும் பயனை அனைவரும் புரிந்துகொள்ள உதவுங்கள்.—எபி. 10:24, 25.
17 நாம் நித்திய காலமாய் வாழ்ந்தாலும் யெகோவாவின் அருஞ்செயல்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியாதளவுக்கு அவை மிக அருமையானவை. (யோபு 42:2, 3; பிர. 3:11) ஆகவே அவரை துதிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இல்லாமல் போகவே போகாது. இந்த வருட நினைவு ஆசரிப்பு காலத்திலும் நம் ஊழியத்தை அதிகரிக்க விசேஷ முயற்சி எடுப்பதன்மூலம் யெகோவாவின் அருஞ்செயல்களுக்கு நம் போற்றுதலை வெளிக்காட்டுவோமாக.
[கேள்விகள்]
1. நீங்கள் மதிப்புள்ளதாக கருதும் யெகோவாவின் குறிப்பான அருஞ்செயல்கள் சில யாவை?
2. துணைப் பயனியர் செய்வதால் தனிப்பட்டவர்களாக எப்படி பயன் அடைகிறோம்?
3. கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும் சிலரால் எப்படி துணைப் பயனியர் செய்ய முடிந்திருக்கிறது?
4. துணைப் பயனியர் செய்வதற்கென அட்டவணையிடும்போது என்னென்ன காரியங்களை மனதில் வைக்க வேண்டும்?
5. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்காக இளைஞர் என்னென்ன இலக்குகளை வைக்கலாம்?
6. பைபிள் மாணவர்கள் நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக ஆவதற்கு நாம் எப்படி உதவி செய்யலாம்?
7. ஒழுங்கற்ற மற்றும் செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு எப்படி உதவி செய்யலாம்?
8, 9. விசேஷ ஊழியத்தில் கலந்துகொள்ளும் ஆர்வத்தை தூண்ட மூப்பர்கள் என்ன செய்யலாம்?
10. ஊழியத்தை அதிகரிக்க குடும்பங்கள் எப்படி தயாராகலாம்?
11. (அ) கிறிஸ்துவின் பலி என்ன அருஞ்செயல்களை நிறைவேற்றியது? (ஆ) உள்ளூரில் நினைவு ஆசரிப்பு எங்கு, எப்போது நடைபெறும்?
12. கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புக்கு வருவதால் ஆர்வம் காட்டுவோர் எப்படி பயனடைவார்கள்?
13, 14. நினைவு ஆசரிப்புக்கு யாரை அழைக்கலாம், எப்படி?
15. நினைவு ஆசரிப்பு கூட்டத்தன்று எப்படி நம் உபசரிப்பை காட்டலாம்?
16. நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள் ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கு எப்படி உதவலாம்?
17. நாம் ஏன் யெகோவாவின் அருஞ்செயல்களைக் குறித்து தொடர்ந்து அறிவித்துவர வேண்டும்?
[பக்கம் 5-ன் படம்]
இந்த அட்டவணைகளில் ஒன்றைப் பயன்படுத்தி உங்களால் துணைப் பயனியர் செய்ய முடியுமா?
மார்ச் ஞா தி* செ* பு* வி வெ ச மாதம் மொத்தம்
தினமும் 2 1 1 1 1 1 5 51
இரண்டு நாட்கள் 0 5 0 5 0 0 0 50
வாரயிறுதி மட்டும் 5 0 0 0 0 0 8 52
வாரயிறுதியும் 2 0 0 2 0 2 6 50
வாரத்தில் இரண்டு
நாட்களும்
ஏப்ரல் ஞா தி செ பு வி* வெ* ச மாதம் மொத்தம்
தினமும் 2 1 1 1 1 1 5 50
இரண்டு நாட்கள் 0 0 0 0 5 5 0 50
வாரயிறுதி மட்டும் 5 0 0 0 0 0 8 52
வாரயிறுதியும் 2 0 0 2 0 2 6 50
வாரத்தில் இரண்டு
நாட்களும்
மே ஞா* தி* செ பு வி வெ சனி* மாதம் மொத்தம்
தினமும் 2 1 1 1 1 1 4 51
இரண்டு நாட்கள் 0 5 0 0 0 0 5 50
வாரயிறுதி மட்டும் 3 0 0 0 0 0 7 50
வாரயிறுதியும் 2 0 0 2 0 2 5 51
வாரத்தில் இரண்டு
நாட்களும்
* மாதத்தில் ஐந்து முறை