உங்கள் நன்றியுணர்வைக் காட்டுங்கள்
1 “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்” நாம் வாழ்ந்தாலும், யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்க அநேக காரணங்கள் இருக்கின்றன. (2 தீ. 3:1, NW) முக்கியமாய், நமக்காக தம்முடைய குமாரனையே அரும்பெரும் பரிசாக கொடுத்திருக்கிறார்; அதற்கு நாம் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். (யோவா. 3:16) மேலும், பொய் மதத்தார் ஆவிக்குரிய பட்டினியில் வாடுகையில் நாமோ ஆவிக்குரிய உணவை அபரிமிதமாய் அனுபவித்து மகிழ்கிறோம். (ஏசா. 65:13) நாம் உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக இருக்கிறோம், உண்மை வணக்கத்தை விஸ்தரிப்பதில் பங்குகொள்ளும் விசேஷ சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். (ஏசா. 2:3, 4; 60:4-10, 22) யெகோவா நம்மீது பொழியும் ஆசீர்வாதங்களுக்கு நாம் எப்படி நன்றியுணர்வைக் காட்டலாம்?—கொலோ. 3:15, 17.
2 மகிழ்ச்சியோடும் முழு இருதயத்தோடும் சேவை செய்தல்: பொருள் சம்பந்தமாக கொடுப்பதைப் பற்றி குறிப்பிடுகையில், “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொ. 9:7) நாம் கடவுளுக்கு செய்யும் சேவைக்கும் இந்த நியமம் பொருந்துகிறது. சத்தியத்தின் மீது நாம் காட்டும் ஆர்வம், கிறிஸ்தவ கூட்டங்களில் காட்டும் சந்தோஷம், வெளி ஊழியத்தில் காட்டும் வைராக்கியம், கடவுளுடைய சித்தத்தை செய்வதில் காண்பிக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றின் மூலம் நம் நன்றியுணர்வு வெளிப்படுகிறது.—சங். 107:21, 22; 119:14; 122:1; ரோ. 12:8, 11.
3 பூர்வ இஸ்ரவேலில், சில காணிக்கைகளைப் பொறுத்தவரை எவ்வளவு செலுத்த வேண்டுமென திட்டவட்டமான அளவு எதுவும் நியாயப்பிரமாணத்தில் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் ‘யெகோவா அருளிய ஆசீர்வாதத்திற்குத் தக்கதைக்’ கொடுப்பதன் மூலம் தனது நன்றியுணர்வைக் காட்ட முடிந்தது. (உபா. 16:16, 17) அதேபோல் இன்று நம் சூழ்நிலை அனுமதிக்கும் அளவுக்கு ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதிலும் சீஷராக்கும் வேலையிலும் பங்குகொள்ளும்படி நன்றியுள்ள இருதயம் நம்மை உந்துவிக்கும். பெரும்பாலும் கோடை மாதங்கள் நம் நன்றியுணர்வை வெளிக்காட்ட அதிக வாய்ப்பளிக்கின்றன. சிலர் வெளி ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிடுவதற்கு, ஏன் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்குக்கூட வேலையில் கிடைக்கும் விடுப்பை அல்லது பள்ளி விடுமுறையை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தக் கோடை மாதத்தில் ஊழியத்தில் உங்களால் அதிகளவு பங்குகொள்ள முடியுமா?
4 நன்றி செலுத்துவதில் பெருகுதல்: யெகோவாவுக்கு நம் நன்றியைத் தெரிவிப்பதற்கு முக்கிய வழி ஜெபமாகும். (1 தெ. 5:17, 18) ‘விசுவாசத்தோடு நன்றி செலுத்துவதில் பெருகும்படி’ கடவுளுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது. (கொலோ. 2:7, NW) நாம் அதிக வேலையாக இருந்தாலும்சரி அழுத்தத்தின் கீழ் இருந்தாலும்சரி, அன்றாட ஜெபங்களில் எப்போதும் நன்றி சொல்வதற்குத் தவறக்கூடாது. (பிலி. 4:6) ஆம், நம் ஊழியத்தின் மூலமும் நம் ஜெபங்களின் மூலமும் “கடவுளுக்கு மிகுதியாக நன்றி தெரிவிப்பதில் தாராளமாய் இருப்போமாக.”—2 கொ. 9:12, NW.