இரத்தத்திற்கு விலகியிருக்க நமக்கு உதவும் புதிய ஏற்பாடு
நிலையான பகராள் செயலுரிமை (durable power of attorney) ஆவணம், மருத்துவ முன்கோரிக்கை/விடுப்பு அட்டை ஆகிய இரண்டின் மிக முக்கியமான அம்சங்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே சட்டப்பூர்வ ஆவணமாக உருவாக்க ஆளும் குழுவினர் அங்கீகரித்திருக்கின்றனர். அதைப் பொதுவாக DPA அட்டை என நாம் அழைப்போம்.
இந்த DPA அட்டை காலவரையறை அற்றது; உலகத்தில் எங்குச் சென்றாலும் அது உங்களுடைய வாக்குமூலமாக செயல்படும். எதிர்காலத்தில், உங்களுடைய விருப்பங்கள், உடல்நல பராமரிப்பு முகவரின் பெயர்கள், விலாசங்கள் அல்லது தொலைபேசி எண்கள் போன்றவற்றை மாற்ற வேண்டியிருந்தால் புதிய DPA அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டும், அல்லது உங்கள் DPA அட்டை தொலைந்து விட்டாலோ நாசமாகி விட்டாலோ புதிய அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
DPA அட்டையை ஜெபசிந்தையோடு வீட்டில் வைத்து கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் அட்டையில் நீங்கள் கையெழுத்திடுவதற்கு முன், சட்ட விதிமுறைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் கையெழுத்திடுவதை இரண்டு சாட்சிகள் பார்க்க வேண்டும் என்று உங்கள் அட்டை கூறுகிறதென்றால், அவ்விருவரும் உடனிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய அட்டையைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு ஏதேனும் உதவி தேவையா என்பதைப் புத்தகப் படிப்புக் கண்காணிகள் அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
DPA அட்டையை மடிப்பதற்கு முன், டாக்டருக்காகவும் உங்கள் பதிவில் வைப்பதற்காகவும் தரம் வாய்ந்த நகல்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நகல்களை உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கும் சபை செயலருக்கும் நீங்கள் கொடுக்கலாம். ஸ்டான்டர்ட் சைஸ் பேப்பரின் (8 1/2ʺ x 11ʺ) நடுவில் DPA அட்டையை வைத்து ஒரு பக்கத்தில் மட்டும் நகல்களை எடுக்க வேண்டும். எங்குச் சென்றாலும் நகல் அல்ல, ஒரிஜினல் DPA படிவத்தை உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
யெகோவாவின் சாட்சிகளது முழுக்காட்டப்படாத பிள்ளைகளுக்காக, 3/99 என்ற தேதியிடப்பட்ட அடையாள அட்டை மாற்றப்படவில்லை. வயது வராத ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு அட்டை சரியாக பூர்த்தி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டிருக்கிறதா எனவும், பொருத்தமான சமயங்களில் பிள்ளைகள் அதைத் தங்களோடு எடுத்துச் செல்கிறார்களா எனவும் பெற்றோர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் உடல்நல பராமரிப்பு குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்ளலாம்; அதற்காக DPA அட்டை மற்றும் அடையாள அட்டையில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வருடத்தில் புதிதாக முழுக்காட்டப்பட்ட எல்லாப் பிரஸ்தாபிகளுக்கும் சபை செயலர் ஒரு DPA அட்டையைக் கொடுக்க வேண்டும்.