குடும்ப அட்டவணை—சபை கூட்டங்கள்
1 நீங்கள் ஒரு கிறிஸ்தவ பெற்றோரா? அப்படியென்றால் உங்கள் பிள்ளைகள் யெகோவாவை நேசித்து, அவருக்குப் பிரியமாக சேவை செய்து, கடைசியில், அவர் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள், அல்லவா? யெகோவாவின் வணக்கத்திற்கு அவர்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க நீங்கள் அவர்களுக்கு எப்படி உதவலாம்? உங்கள் முன்மாதிரியின் மூலம் உதவுவதே மிக முக்கியமான வழியாகும். (நீதி. 20:7) யெகோவாவின் சாட்சியான தன் அம்மாவின் முன்மாதிரியைக் குறித்து ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “நாங்கள் கூட்டத்திற்குப் போகிறோமா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லாதிருந்தது.” இது, அவருடைய மனதில் அதன் முக்கியத்துவத்தை ஆழப் பதிய வைத்தது.
2 சபை கூட்டங்களின் நோக்கத்தை உங்கள் குடும்பத்தார் புரிந்துகொண்டிருக்கிறார்களா? இந்தக் கூட்டங்களில் பெறும் போதனைகள் எப்போதும் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நம்மை ஊக்குவிக்கின்றன. அதுமட்டுமல்ல, அங்கு நம் சகோதரர்களுடன் அனுபவிக்கும் தோழமை உற்சாகத்தின் ஒப்பற்ற ஊற்றுமூலமாக விளங்குகிறது. (ஏசா. 54:13; ரோ. 1:11, 12, NW) ஆனாலும் “சபைகளிலே” யெகோவாவுக்குத் துதியை ஏறெடுக்க வேண்டும் என்பதே இந்தக் கூட்டங்களின் முக்கிய நோக்கமாகும். (சங். 26:12) யெகோவா மீதுள்ள அன்பை வெளிக்காட்டுவதற்கும் அவரை வணங்குவதற்கும் கிறிஸ்தவக் கூட்டங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.
3 ‘அதிக கவனமாய் இருங்கள்’: கூட்டங்கள் நடத்தப்படுவதன் பரிசுத்த நோக்கத்தை சரியாக புரிந்து வைத்திருப்பது, முக்கியமே இல்லாத காரியங்களுக்காக மெல்ல மெல்ல கூட்டங்களைத் தவறவிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளாதபடி ‘அதிக கவனமாய் இருக்க’ நம்மைத் தூண்டுவிக்கும். (எபே. 5:15, 16, NW; எபி. 10:24, 25) குடும்ப அட்டவணையை நீங்கள் போடும்போது அதில் முதலாவது சபை கூட்டங்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். பிறகு வேறெந்தக் காரியமானாலும் கூட்டத்திற்குரிய நேரத்தை எடுத்துக்கொள்ளாதபடி கவனமாய் இருங்கள். இவ்வாறு உங்கள் குடும்பத்தில் சபை கூட்டங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.
4 கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொள்வதற்கு நம் சகோதரர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி வாசிக்கும்போது நெகிழ்ந்துபோகிறோம், அல்லவா? உங்கள் சூழ்நிலைகள் அந்தளவுக்கு குறிப்பிடத்தக்கவையாக இல்லாவிட்டாலும் நீங்களும்கூட பல சவால்களைச் சந்திக்கலாம். யெகோவாவை வணங்குவதை அவருடைய ஜனங்களுக்கு சாத்தான் அதிகக் கடினமாக்கிக்கொண்டே வருகிறான். ஆனாலும் தவறாமல் குடும்பமாகச் சபை கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை உங்கள் பிள்ளைகள் கண்டிப்பாகக் கவனிப்பார்கள். ஆம், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுடைய மனதைவிட்டு ஒருபோதும் மறையாத ஆன்மீக பரிசை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கலாம்.