கூடுமானவரை எல்லோருக்கும் சாட்சி கொடுங்கள்
1 இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள், ராஜ்ய நற்செய்தியைப் பரப்ப ஊக்கமாக முயன்றார்கள். கூடுமானவரை எல்லோருக்கும் நற்செய்தியைச் சொல்ல அவர்கள் பல நடைமுறையான படிகளை எடுத்தார்கள். தேவ ஆவியினால் ஏவப்பட்ட கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்கள், அன்று வழக்கத்திலிருந்த கிரேக்க மொழியில் வேதவாக்கியங்களை எழுதினார்கள்; அம்மொழியே ரோம சாம்ராஜ்யத்தின் சர்வதேச மொழியாக இருந்தது. அதோடு, பொ.ச. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வைராக்கியமான ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள், கோடெக்ஸை [புத்தக வடிவிலான வேதாகமத்தை] பயன்படுத்தினார்கள். இதில் அவர்கள் முன்னோடிகளாக இருந்திருக்கலாம். மேற்கோள்களைப் பார்ப்பதற்கு, சுருள்களைவிட கோடெக்ஸே வசதியானதாக இருந்தது.
2 தொழில்நுட்பத்தை உபயோகித்தல்: ‘நீ ஜாதிகளின் பாலைக் குடிப்பாய்’ என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னார். (ஏசா. 60:16) இந்தத் தீர்க்கதரிசனத்தின் நவீனநாளைய நிறைவேற்றமாக, யெகோவாவின் ஊழியர்கள் பிரசங்க வேலையை முன்னேற்றுவிக்க தேசங்களின் மதிப்புமிக்க வளங்களை உபயோகிக்கிறார்கள். உதாரணமாக, திரைப்படங்கள் வியாபார உலகில் வெற்றி பெறுவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே, அதாவது 1914-ல், பைபிள் மாணாக்கர்கள் “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற திரைப்படத்தைக் காண்பிக்க ஆரம்பித்தார்கள். ஒலியுடன் கூடிய வண்ணக் காட்சிகளையும் ஸ்லைடுகளையும் கொண்ட அந்த எட்டு மணிநேர திரைப்படம், கோடிக்கணக்கானோருக்கு வலிமைமிக்க விதத்தில் சாட்சி கொடுத்தது.
3 இன்றுகூட கடவுளுடைய ஜனங்கள், வேகமாக அச்சடிக்கிற இயந்திரங்களையும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட கருவிகளையும் உபயோகித்து, பைபிள்களையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் நூற்றுக்கணக்கான பாஷைகளில் பிரசுரிக்கிறார்கள். ராக்கெட் வேக போக்குவரத்து வசதியினால், பைபிள் பிரசுரங்கள் பூமியின் தொலைதூரம் வரை, அதாவது 235 நாடுகளைச் சென்றடைகின்றன. இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களைத் திறம்பட பயன்படுத்தி, சரித்திரத்திலேயே முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு நற்செய்தியை அறிவிக்க யெகோவா தம் ஜனங்களை பரிசுத்த ஆவியின் மூலமாக உந்துவித்திருக்கிறார்.
4 தனிப்பட்ட மாற்றங்களைச் செய்தல்: நற்செய்தியை கூடுமானவரை எல்லோருக்கும் அறிவிக்க, உண்மை வணக்கத்தார் தனிப்பட்ட மாற்றங்களைச் செய்யவும் தூண்டப்பட்டிருக்கிறார்கள். பிரசங்க வேலையில் இன்னுமதிகமாக ஈடுபட அநேகர் தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கிறார்கள். சிலர், ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகம் தேவைப்படும் இடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய ஊழியத்தை விரிவுபடுத்த புதிய பாஷையைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
5 எந்த நேரத்தில் ஜனங்கள் அதிகம் வீட்டில் இருக்கிறார்கள், எங்கு அதிகம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிப்பதன் மூலமும் நற்செய்தியை கூடுமானவரை எல்லோருக்கும் நாம் சொல்லலாம். உங்களுடைய பிராந்தியத்தில் பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீட்டில் இல்லாவிட்டால், சாயங்காலங்களில் ஊழியம் செய்ய உங்களுடைய அட்டவணையை மாற்றிக் கொள்ள முடியுமா? உங்களுடைய பிராந்தியத்தில் சாட்சி கொடுக்க பொது இடங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? தொலைபேசியிலும் வியாபார பிராந்தியங்களிலும் சாட்சி கொடுக்க முயற்சி செய்திருக்கிறீர்களா? சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வாய்ப்புகளைத் தேடுகிறீர்களா?
6 யெகோவாவின் பெயருக்கும் ராஜ்யத்திற்கும் மகத்தான சாட்சி கொடுக்கும் வேலையில் பங்கு கொள்வதற்கு நாம் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறோம்! ஆகவே, எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் ஜீவனைத் தருகிற சத்திய வார்த்தைகளைத் தொடர்ந்து சொல்வோமாக.—மத். 28:19, 20.
[கேள்விகள்]
1. கூடுமானவரை எல்லோருக்கும் நற்செய்தியைச் சொல்ல, ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள்?
2, 3. (அ) ஏசாயா 60:16 நவீன காலங்களில் எவ்வாறு நிறைவேறி வந்திருக்கிறது? (ஆ) உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிக்க தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
4. ராஜ்ய நற்செய்தி அநேகரைச் சென்றடைய சிலர் என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்?
5, 6. உங்களுடைய பிராந்தியத்தில், கூடுமானவரை எல்லோருக்கும் நற்செய்தியைச் சொல்ல என்ன செய்யலாம்?