பக்திவைராக்கியத்தைத் தொடர்ந்து காண்பிப்பது எப்படி
1 பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்துவந்த அப்பொல்லோவைப் பற்றிய பதிவை பைபிளில் வாசிக்கும்போது, அவ்வாறு பக்திவைராக்கியத்தோடு பிரசங்கிக்கும் இன்றைய கிறிஸ்தவர்கள் சிலருடைய ஞாபகம் நமக்கு வரலாம். (அப். 18:24-28) என்றாலும், எல்லாருக்குமே பின்வருமாறு அறிவுறுத்தப்படுகிறது: “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” (ரோ. 12:11) கிறிஸ்தவ ஊழியத்தில் பக்திவைராக்கியத்தை அதிகரித்து அதைத் தொடர்ந்து காண்பிக்க எது நமக்கு உதவும்?
2 பக்திவைராக்கியத்தை அதிகரிக்கும் அறிவு: உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு ஒருமுறை தம் சீஷர்கள் இருவருக்குக் காணப்பட்டார்; “வேத வாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.” அதன்பிறகு அவர்கள் இப்படிச் சொல்லிக்கொண்டார்கள்: “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா”? (லூக். 24:27, 32) அதைப் போலவே, கடவுளுடைய வார்த்தையைப் படித்து மேன்மேலும் புரிந்துகொள்கையில், நம்முடைய உள்ளத்திலும் உற்சாகத் தீ பற்றி எரிகிறதல்லவா? ஆம், அறிவு நமது விசுவாசத்தை அதிகரிக்கிறது. ரோமர் 10:17 இப்படிக் கூறுகிறது: “விசுவாசம் கேள்வியினாலே வரும்.” யெகோவாவின் வாக்குறுதிகள் மீதுள்ள நம்பிக்கை நம் இருதயத்தில் நிறைந்திருக்கும்போது, நாம் கற்றுக்கொண்டவற்றைப் பற்றி நம்மால் பேசாதிருக்கவே முடியாது!—சங். 145:7; அப். 4:20.
3 எப்பொழுதோ படித்துப் பெற்ற அறிவை வைத்து காலமெல்லாம் கடவுள் மீதுள்ள அன்பை நம்மால் பலப்படுத்த முடியாது, பக்திவைராக்கியத்துடன் அவருடைய சேவையில் தொடர்ந்து ஈடுபடவும் முடியாது. சத்தியத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள நாம் முயற்சி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்; யெகோவாவின் மீதுள்ள நம் அன்பை ஆழமாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் நாளடைவில் நாம் ஏனோதானோவென்று அவருக்குச் சேவை செய்ய ஆரம்பித்துவிடுவோம். (வெளி. 2:4) அதனால்தான், ‘தேவனை அறிகிற அறிவில் [தொடர்ந்து] விருத்தியடையும்படி’ கடவுளுடைய வார்த்தை நம்மை அறிவுறுத்துகிறது.—கொலோ. 1:9, 10.
4 நாம் படிக்கும் விதம்: ஆகவே, நாம் எப்படிப் படிக்கிறோம் என்பதற்குக் கவனம்செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, காவற்கோபுர படிப்புக் கட்டுரையில் நாம் பதில்களைக் கோடிட்டு, கூட்டத்தின்போது அவற்றைச் சரியாகச் சொல்லலாம். ஆனால் கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் பைபிளில் எடுத்துப் பார்க்கிறோமா, படிக்கிற விஷயம் நம் வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்கிறோமா? வாராந்தர பைபிள் வாசிப்புப் பகுதிக்காகத் தயாரிக்கும்போது, நம் சூழ்நிலை அனுமதிக்குமானால் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய முயலுகிறோமா, அந்தப் பகுதியிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களைக் குறித்து தியானிக்கிறோமா? (சங். 77:11, 12; நீதி. 2:1-5) கடவுளுடைய வார்த்தையிலிருந்து படித்தவற்றையே சிந்தித்துக்கொண்டு, அவற்றிலேயே நிலைத்திருப்பது நமக்கு எவ்வளவாய்ப் பயனளிக்கும்! (1 தீ. 4:15, 16) இப்படிக் கருத்தூன்றிப் படிப்பது, ‘நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகும்படி’ நம்மைப் பலப்படுத்தும்; அதைத் தொடர்ந்து காண்பிக்கவும் ஊக்கமளிக்கும்.—தீத். 2:14.