முன்னேறுகிற பைபிள் படிப்புகள்—வாசலிலும் டெலிபோனிலும்
1 பைபிள் படிப்பு ஒன்றைத் துவங்குவது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளிக்கிறது! என்றாலும், பைபிள் படிக்க விரும்புகிற நபர்களைக் கண்டுபிடிப்பது ஓர் ஆரம்பம் மட்டுமே. அதன்பின், அவர்கள் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக ஆவதற்கு நாம் உதவ வேண்டும்; இதுவே பைபிள் படிப்பை நடத்துவதற்கான நம் குறிக்கோளாகும். (மத். 28:19, 20) இந்தக் குறிக்கோளை அடைய நமக்கு எது உதவும்?
2 ஜனங்கள்—படுபிஸி: இன்று ஜனங்கள் படுபிஸியாக இருக்கிறார்கள். சில இடங்களில், எடுத்த எடுப்பிலேயே பைபிள் படிப்பிற்காக ஒரு மணிநேரத்தை ஒதுக்குவது அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு உதவவே, வாசலில் வைத்தோ டெலிபோன் மூலமாகவோ சுருக்கமாய் பைபிள் படிப்புகளை நடத்தும்படி நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி நடத்தப்படும் பைபிள் படிப்புகளுக்கு ஆரம்பக் கட்டத்தில் கொஞ்ச நேரமே தேவைப்படுகிறது; பொதுவாக, பைபிள் கற்பிக்கிறது போன்ற ஏதாவதொரு புத்தகத்தில், ஓரிரண்டு பாராக்களிலுள்ள வசனங்கள் கலந்தாலோசிக்கப்படுகின்றன. அநேக பிரஸ்தாபிகள் இப்படிப்பட்ட பைபிள் படிப்புகளை நடத்திவருவது பாராட்டத்தக்கது!
3 அதற்கென்று, காலமெல்லாம் வாசலில் வைத்தே பைபிள் படிப்பு நடத்தினால் போதுமென்று நாம் நினைக்கலாமா? இல்லை, கூடாது. அவ்விதமாக பைபிள் படிப்பைத் துவங்கும்போது நாம் நீண்ட நேரம் எடுக்காதிருப்பது ஞானமான காரியம்தான், என்றாலும், ஜூன் 1990 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-ல் இவ்வாறு சொல்கிறது: ‘தொடர்ச்சியாக இப்படி பைபிள் படிப்பை நடத்த ஆரம்பித்த பின்னர், வீட்டுக்காரரின் ஆர்வமும் அதிகரித்த பின்னர், படிப்பிற்காக கூடுதலான நேரத்தை ஒதுக்கலாம்.’ இது மிகமிக முக்கியம். உதாரணத்திற்கு: பட்டினியில் வாடிக்கிடக்கும் ஒரு பிள்ளைக்கு முதலில் சிறிதளவு ஆகாரத்தையே கொடுப்போம்; ஆனால், அந்தப் பிள்ளை ஓரளவு தேறிய பிறகும் அதே அளவு ஆகாரத்தையா கொடுத்துக்கொண்டிருப்போம்? மாட்டோம். அந்தப் பிள்ளை நன்கு தேறி, பெரியவனாக வளர்வதற்கு ஆகாரத்தின் அளவை அதிகரிப்போம், அல்லவா? அவ்வாறே, மாணாக்கர் முதிர்ச்சியுள்ள ஓர் ஊழியராக ஆவதற்கு, வாசலிலோ டெலிபோனிலோ கொஞ்ச நேரம் மட்டும் பைபிள் படிப்பை நடத்துவது போதாது. அதைவிட அதிக உதவி அவருக்குத் தேவைப்படுகிறது.—எபி. 5:13, 14.
4 பைபிள் படிப்புகள்—வீட்டினுள்: பைபிள் படிப்பை நடத்துவதற்கு ஒரு தனி இடம் தேவை; அது ஒரு வீடாகவோ, பொருத்தமான வேறு ஏதாவதொரு இடமாகவோ இருக்கலாம். அத்தகைய சூழலில் படிக்கும்போது மாணாக்கர் விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்வார், கடவுளுடைய வார்த்தையை நன்கு உணர்ந்துகொள்வார். (மத். 13:23) அதே சமயத்தில், படிப்பை நடத்துபவரும், மாணாக்கரின் தேவைக்கு ஏற்றவாறு படிப்பை நடத்துவதற்குச் சௌகரியமாக உணருவார். மேலும், படிப்பு நேரத்தை அதிகரிக்கும்போது கடவுளுடைய வார்த்தையை மாணாக்கரால் இன்னும் முழுமையாக அலசி ஆராய முடியும், இதனால் அவருடைய விசுவாசமும் உறுதிப்படும்.—ரோ. 10:17.
5 வாசலைத் தாண்டி வீட்டினுள் பைபிள் படிப்பை நடத்துவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பலமுறை வாசலில் வைத்தே பைபிள் படிப்பை நடத்திய பிறகு, ‘இன்னும் கொஞ்ச நேரம் படிக்கலாமா’ என்றோ, நேரத்தைக் குறிப்பிட்டு அந்த நேரம்வரை படிக்கலாமா என்றோ நீங்கள் மாணாக்கரைக் கேட்கலாம். இல்லையெனில், அப்படி நேரடியாகக் கேட்காமல்: “இந்த விஷயத்தை நாம் உட்கார்ந்து பேச இப்போது உங்களுக்கு நேரம் இருக்கிறதா?” என்றோ, “இந்த விஷயத்தைப் பற்றி நாம் பேசுவதற்கு இப்போது எவ்வளவு நேரத்தை உங்களால் ஒதுக்க முடியும்?” என்றோ நீங்கள் கேட்கலாம். மாணாக்கருக்கு அது வசதிப்படவில்லை என்றால், இன்னும் சில காலம் வாசலில் வைத்தே சுருக்கமாக படிப்பைத் தொடருங்கள். ஆனால், வேறொரு சந்தர்ப்பத்தில் இதுபோன்ற கேள்வியைக் கேட்டு, வீட்டினுள் படிப்பை நடத்த முயலுங்கள்.
6 தகுதியானவர்களைத் தேடிவரும் நாம், பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, அவற்றைத் தொடர்ந்து நடத்துவதற்கான குறிக்கோளை மறந்துவிடாதிருப்போமாக. நல்மனமுள்ளவர்கள் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட ஊழியர்களாவதற்கு உதவுவதே நமது குறிக்கோள். இந்தக் குறிக்கோளுடன் நம் ஊழியத்தைச் செய்துவருகையில், யெகோவா தாமே நம் முயற்சிகளுக்குப் பலன் தருவாராக.—2 தீ. 4:5.
[கேள்விகள்]
1. பைபிள் படிப்பை நடத்துவதற்கான நம் குறிக்கோள் என்ன?
2. வாசலிலும், டெலிபோனிலும் பைபிள் படிப்புகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன, அவை ஏன் பலன் தருகின்றன?
3. வாசலில் பைபிள் படிப்பை நடத்துவதோடு மட்டுமே நாம் ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது?
4. வீட்டினுள் பைபிள் படிப்பை நடத்துவதால் என்ன பயன்?
5. வீட்டினுள் பைபிள் படிப்பை நடத்துவதற்கு நாம் என்ன செய்யலாம்?
6. என்ன குறிக்கோளுடன் நாம் ஊழியம் செய்ய வேண்டும், இந்தக் குறிக்கோளை அடைய இக்கட்டுரையிலுள்ள ஆலோசனைகள் எப்படி உதவும்?