நம்முடைய ஊழியம்—இரக்கம் காட்டும் ஒரு வேலை
1 தம்முடைய செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்த திரளான ஜனங்கள் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்ததை இயேசு கவனித்தார். (மத். 9:36) கனிவோடும் அன்போடும் யெகோவாவின் வழிகளை அவர்களுக்குப் போதித்தார், ஆறுதல் அளித்தார், ஆன்மீக தேவைகளை பெற அவர்களுக்கு இரக்கத்தோடு உதவினார். அவர் நடந்துகொண்ட விதத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கையில், அவரைப்போலவே சிந்திக்கவும் உணரவும் நாம் கற்றுக்கொள்கிறோம், அவர் காட்டிய இந்த இரக்க குணத்தை நம் ஊழியத்திலும் வெளிக்காட்டுகிறோம்.
2 உதவிக்காக தவித்த மக்கள் அவரைத் தேடி வந்தபோது இயேசு நடந்துகொண்ட விதத்தைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். (லூக். 5:12, 13; 8:43-48) ஊனமுற்றவர்களிடம் அவர் தயவாக நடந்துகொண்டார். (மாற். 7:31-35) பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அவர்களிடத்தில் அக்கறை காட்டினார். வெளித் தோற்றத்தை வைத்து அவர் யாரையுமே எடைபோடவில்லை. (லூக். 7:36-40) ஆம், கடவுளுடைய கனிவான இரக்கத்தை இயேசு அப்படியே வெளிக்காட்டினார்.
3 ‘மனதுருகினார்’: இயேசு வெறுமனே கடமைக்காக ஊழியம் செய்யவில்லை. அவர் ஜனங்களைப் பார்த்து ‘மனதுருகினார்.’ (மாற். 6:34) அதேபோல இன்றும், நாம் செய்தியை சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. மாறாக, மதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்ற நாம் முயலுகிறோம். ஜனங்களுடைய பிரதிபலிப்பைப் புரிந்துகொள்ள முயலுங்கள். அவர்களுடைய கவலைக்கு என்ன காரணம்? பொய்மதத் தலைவர்களால் அவர்கள் அலட்சியம் செய்யப்பட்டிருக்கிறார்களா, ஏமாற்றப்பட்டிருக்கிறார்களா? நாம் மற்றவர்களிடம் உண்மையான அக்கறை காட்டும்போது, அவர்கள் நற்செய்தியைச் செவிகொடுத்துக் கேட்க தூண்டப்படலாம்.—2 கொ. 6:3, 4, 6.
4 இரக்கம் இருதயங்களைத் தொடுகிறது. உதாரணத்திற்கு: ஒரு அம்மா தன் மூன்று மாதப் பெண் குழந்தையை பறிகொடுத்த சோகத்தில் ஆழ்ந்துபோய் இருந்தாள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவளை சந்தித்தார்கள். கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை தவறென நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை உள்ளே அழைத்தாள். ஆனால், பிற்பாடு அந்தப் பெண் இவ்வாறு சொன்னாள்: “அவர்கள் மிகுந்த பரிவோடு நான் சொன்னதை கேட்டார்கள், அது எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. அதனால், இன்னொரு முறை என்னை வந்து சந்திப்பதற்கு சம்மதித்தேன்.” ஊழியத்தில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இரக்கத்தைக் காட்ட நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?
5 இரக்க குணத்தை வளர்த்துக்கொள்வது மற்றவர்களுக்கு உண்மையான ஆறுதலை அளிக்க நமக்கு உதவுகிறது. அவ்வாறு நாம் செய்யும்போது ‘இரக்கங்களின் பிதாவான’ யெகோவாவை மகிமைப்படுத்துவோம்.—2 கொ. 1:3.