ஊழியத்தில் பெருமளவு பங்குகொள்ள முயற்சி செய்யுங்கள்
1 கடவுளுடைய வழியில் நடக்கும்படியும், அதில் ‘[தொடர்ந்து] இன்னும் முன்னேறும்படியும்’ கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். (1 தெ. 4:1, பொ.மொ.) இதை நாம் எப்படிச் செய்யலாம்? இதற்கு ஒரு வழி, ‘ஆன்மீக காரியங்களில் இன்னும் பெருமளவு பங்குகொள்ள வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடுவதும், ஊழியத்தை [“முழுமையாய்,” NW] நிறைவேற்ற எப்போதும் உழைப்பதுமாகும்.—2 தீ. 4:5.
2 நோக்கம்: நம் படைப்பாளருக்கு இன்னும் அதிகமாய் சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலே ஊழியத்தில் பெருமளவு பங்குகொள்ள தூண்டுகோலாய் அமைகிறது. ஆன்மீகத்தில் முன்னேறவும் நம் ஊழியத்தை மேம்படுத்த வழிகளைக் கண்டுபிடிக்கவும் விரும்புகிறோம். சரியான நோக்கத்தோடு அன்றாடப் பழக்கங்களை முறையாகப் பின்பற்றுவது கடவுளுக்குச் சேவை செய்வதோடு சம்பந்தப்பட்ட இலட்சியங்களை அடைய நமக்கு உதவும்.—சங். 1:1, 2; பிலி. 4:6; எபி. 10:24, 25.
3 நம் ஊழியத்தை விரிவுபடுத்த முயற்சி எடுப்பதற்கு நம்மையே அர்ப்பணிக்கிற, சுயதியாக மனப்பான்மை தேவைப்படுகிறது. இயேசுவின் அருமையான முன்மாதிரியை ஜெபசிந்தையோடு தியானிப்பதன்மூலம் அத்தகைய மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம். (மத். 20:28) தம் ஊழிய காலம் முழுவதும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் இயேசு அதிக சந்தோஷத்தைப் பெற்றார். (அப். 20:35) ஜனங்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதன்மூலமும் ஊழியத்தில் பெருமளவு பங்குகொள்ள கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கவனமாய் இருப்பதன்மூலமும் நாம் இயேசுவைப் பின்பற்றலாம்.—ஏசா. 6:8.
4 பெற்றோரின் பங்கு: மற்றவர்களுக்குச் சேவை செய்யவும், ஊழியத்தில் பெருமளவு பங்குகொள்ளவும் வேண்டுமென்ற ஆசையை சின்னஞ்சிறு வயதிலேயே பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கலாம். குடும்பத்தார் ஊழியத்தில் ஊக்கமாய் ஈடுபடுவதையும் ஊழியத்தை அதிகளவு செய்வதில் மும்முரமாய் பாடுபடுவதையும் பிள்ளைகள் கவனிப்பார்கள். சபை பொறுப்புகளை ஏற்குமளவுக்குத் தகுதிபெற வேண்டுமென்ற ஆசை ஒரு சகோதரருக்குச் சிறுவயதில் ஏற்பட்டது; இதற்கு, தன்னுடைய தாத்தாவுடன் சேர்ந்து சபை காரியங்களில் ஈடுபட்டதே காரணம். தன்னுடைய தாத்தாவின் ஊக்கந்தளரா உழைப்பையும் சந்தோஷத்தையும் கவனித்தது, தன்னுடைய சகோதரர்களுக்குச் சேவை செய்ய வாய்ப்புகளைத் தேடும்படி இந்தச் சகோதரரைத் தூண்டியது. இப்போது இவர் ஓர் உதவி ஊழியராய் இருக்கிறார்.
5 சகோதரர்கள் தேவை: ‘சபையைக் கண்காணிக்கும் பொறுப்பை நாடுகிற எவரும் மேன்மையானதொரு பணியை விரும்புகிறார்.’ (1 தீ. 3:1, பொ.மொ.) இந்த வார்த்தைகள், யெகோவாவின் அமைப்பில் கூடுதலாக சேவை செய்கிற பாக்கியத்திற்குத் தகுதி பெறும்படி சகோதரர்களை ஊக்கப்படுத்துகின்றன. இதற்கு விசேஷ திறமைகள் தேவையில்லை. இப்படிப் பெருமளவு பங்குகொள்ள விரும்புகிற சகோதரர் முதலாவது ராஜ்யத்தைத் தேடுபவராகவும், பக்திவைராக்கியத்துடன் ஊழியத்தில் கலந்துகொள்பவராகவும் இருப்பார். (மத். 6:33; 2 தீ. 4:5) மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரி வைக்க பெருமுயற்சி செய்வார்.
6 உலகெங்கும்: கூட்டிச் சேர்க்கும் வேலையை யெகோவா துரிதப்படுத்துகிறார். (ஏசா. 60:22) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிற எல்லாரும் இன்னும் முழுமையாய் ஊழியத்தில் ஈடுபடுவதற்கான அவசரத் தேவை இருக்கிறது. 2,48,327 பேர் முழுக்காட்டுதல் எடுத்ததாய் 2006 ஊழிய ஆண்டுக்கான உலகளாவிய அறிக்கை காட்டுகிறது. அது ஒவ்வொரு நாளும் சராசரியாய் 680-க்கும் அதிகமானோர் முழுக்காட்டுதல் பெறுவதை அர்த்தப்படுத்துகிறது! ஊழியத்தை இன்னும் முழுமையாய் செய்து முடிப்பதற்கான வழிகளை நாம் எல்லாரும் தொடர்ந்து தேடுவோமாக!