துக்கப்படுவோருக்கு ஆறுதல் அளியுங்கள்
1 அன்புக்குரிய ஒருவரை மரணத்தில் பறிகொடுப்பது வேதனையிலும் வேதனை. அதிலும் அப்படிப் பறிகொடுத்தவருக்கு ராஜ்ய நம்பிக்கை இல்லாவிட்டால் சொல்லவே வேண்டாம். (1 தெ. 4:13) பொதுவாக அநேகர், ‘மக்கள் ஏன் இறந்துபோகிறார்கள்? இறந்த பிறகு அவர்களுக்கு என்ன ஏற்படுகிறது? என் அன்புக்குரியவரை நான் இனி பார்க்க முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்கிறார்கள். உறவினரையோ நண்பரையோ மரணத்தில் இழந்து துக்கப்படுகிறவர்களை வெளி ஊழியத்தில் நாம் சந்திக்கையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க இதோ சில ஆலோசனைகள்.—ஏசா. 61:2.
2 வீட்டுக்கு வீடு ஊழியத்தில்: சமீபத்தில் தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டதாக வீட்டுக்காரர் நம்மிடம் சொல்லலாம். அவர் முகத்தில் துயரத்தின் ரேகை படர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்களா? துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களால் வீடு நிறைந்திருக்கிறதா? அப்படியென்றால், நாம் அவருக்கு நீண்ட நேரம் சாட்சிகொடுக்காமல் இருப்பது நல்லது. (பிர. 3:1, 7) நம்முடைய வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு, அவர் விருப்பப்பட்டால் பொருத்தமான ஒரு துண்டுப்பிரதியையோ பத்திரிகையையோ அல்லது சிற்றேட்டையோ கொடுத்துவிட்டு வந்துவிடலாம். பிறகு, அந்த வீட்டுக்காரருக்குச் சௌகரியப்படும் சமயத்தில் மீண்டும் போய் பைபிளிலிருந்து ஆறுதல் அளிக்கும் விஷயத்தை அவருடன் பேசலாம்.
3 வேறு சில சமயங்களில், முதல் சந்திப்பிலேயே நிறைய விஷயங்களை வீட்டுக்காரருடன் பேச முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். தவறான கருத்துகளை விவாதிப்பதற்கான நேரமாக இது இல்லாவிட்டாலும், வீட்டுக்காரர் விருப்பப்பட்டால் உயிர்த்தெழுதல் சம்பந்தமாக பைபிள் தரும் வாக்குறுதிகளை அப்போது அவர்களுக்கு வாசித்துக் காட்டலாம். (யோவா. 5:28, 29) அல்லது, மரித்தவர்களின் நிலைபற்றி பைபிள் சொல்லும் தகவலை அவர்களுக்குக் காட்டலாம். (பிர. 9:5, 10) பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள உயிர்த்தெழுதல் பற்றிய பதிவுகளில் ஒன்றைச் சிந்திப்பதும்கூட அவர்களுக்கு ஆறுதல் அளிக்கலாம். (யோவா. 11:39-44) அல்லது யெகோவாமீது நம்பிக்கை வைத்திருந்ததைப்பற்றி உண்மையாய் வாழ்ந்த யோபு சொன்னதை வீட்டுக்காரருடன் சிந்தித்துப் பார்க்கலாம். (யோபு 14:14, 15) கடைசியில் புறப்படுவதற்கு முன்பு, நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் ஆகிய சிற்றேடுகளில் ஒன்றையோ பொருத்தமான வேறு சிற்றேட்டையோ துண்டுப்பிரதியையோ அவருக்குக் கொடுக்கலாம். அல்லது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையும் பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையும் கொடுத்துவிட்டு, புத்தகத்தில் அதிகாரம் 6-லுள்ள தகவலைக் காட்டலாம். அந்தத் தலைப்பில் அடுத்த முறை பேசுவதற்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
4 வேறு சந்தர்ப்பங்களில்: ராஜ்ய மன்றத்தில் சவ அடக்கப் பேச்சோ ஞாபகார்த்தப் பேச்சோ கொடுக்கப்படும்போது சத்தியத்தில் இல்லாதவர்கள் அங்கு வருவார்களா? ஆறுதல் வார்த்தைகள் நிறைந்த பிரசுரங்களை அப்போது அவர்களுக்குக் கொடுக்கலாம். சில இடங்களில், துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தாரை நேரில் சந்தித்து பொருத்தமான பிரசுரங்கள் சிலவற்றை கொடுக்கையில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம். இறந்தோரைப்பற்றி செய்தித் தாளில் வரும் அறிவிப்புகள், துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவருடைய குடும்பத்தாருக்குச் சுருக்கமான ஓர் ஆறுதல் கடிதம் எழுத சில சமயங்களில் வாய்ப்பளிக்கின்றன. ஒரு சமயம், தன் மனைவியை மரணத்தில் இழந்த ஒருவர் சில துண்டுப்பிரதிகளுடன் இப்படியொரு கடிதத்தைப் பெற்றார். தன் மகளுடன் அவர், அந்தக் கடிதத்தை எழுதிய பிரஸ்தாபியின் வீடு தேடி வந்து, “நீங்களா எனக்கு இந்தக் கடிதம் எழுதினீர்கள்? நான் பைபிளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார். அவரும் அவருடைய மகளும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்கள், சபை கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
5 “விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்” என்று பிரசங்கி 7:2 சொல்கிறது. உல்லாசமாய்ப் பொழுதைக் கழிப்பவரைவிட துக்கத்தில் மூழ்கியிருப்பவர் பொதுவாக கடவுளுடைய வார்த்தையைக் கேட்க அதிக விருப்பமுள்ளவராய் இருக்கிறார். அன்பானவரை மரணத்தில் இழந்து தவிப்போருக்கு ஆறுதல் அளிக்க நாம் எல்லாருமே பொருத்தமான வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்க வேண்டும்.
[கேள்விகள்]
1. துக்கப்படுகிறவர்களுக்கு ஏன் ஆறுதல் தேவை?
2. குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டதாக வீட்டுக்காரர் சொல்கையில் எல்லா சமயங்களிலும் நாம் நீண்ட நேரம் சாட்சி கொடுப்பது சரியா?
3. சூழ்நிலை அனுமதித்தால், துக்கத்தில் மூழ்கியிருக்கும் வீட்டுக்காரருக்கு என்னென்ன வசனங்களைக் காட்டலாம்?
4. ஆறுதல் அளிக்க வேறு என்னென்ன சந்தர்ப்பங்கள் நமக்கு இருக்கின்றன?
5. துக்கப்படுவோருக்கு ஆறுதல் அளிக்க நாம் எல்லாருமே ஏன் வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்க வேண்டும்?