வரவிருக்கும் வட்டார மாநாட்டு நிகழ்ச்சி
உண்மை வணக்கத்தைக் கடுமையாய் எதிர்ப்பவர்களை எப்படித் தைரியமாக எதிர்த்து நிற்க முடியும்? தேவபக்தியில்லாத உலகத்தில் நம்மை மீண்டும் தள்ள சதா வழிதேடும் சாத்தானின் பிடியில் சிக்காமல் எப்படித் தப்பலாம்? இந்த முக்கியமான கேள்விகளுக்கு 2009 ஊழிய ஆண்டில் நடைபெறவிருக்கும் வட்டார மாநாட்டு நிகழ்ச்சி பதில் அளிக்கும். ‘தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்’ என்பதே இந்த மாநாட்டின் பொருள். (ரோ. 12:21) இதில் என்னென்ன பேச்சுகள் இடம் பெற உள்ளன என்பதைச் சிந்திப்போம்.
“தீமையை நன்மையால் வெல்லுவதற்குப் பலப்படுத்திக்கொள்ளுதல்,” “மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்,” “எல்லா தீமைக்கும் முடிவு விரைவில்!,” “உலகத்தை ஜெயிப்பதற்கு நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளுதல்” ஆகிய தலைப்புகளில் மாவட்ட கண்காணி பேசுவார். ரோமர் 13:11-13-ன் அடிப்படையில் அமைந்துள்ள “விழித்திருப்பதற்கான காலம் இதுவே!” என்ற பேச்சையும் நீதிமொழிகள் 24:10-ன் அடிப்படையில் அமைந்துள்ள “ஆபத்துக்காலத்தில் நீங்கள் சோர்ந்து போகாதிருங்கள்” என்ற பேச்சையும் வட்டாரக் கண்காணி கொடுப்பார். “வட்டாரத்தின் தேவைகளுக்குக் கவனம் செலுத்துதல்” என்ற தலைப்பில் அவர் கொடுக்கவிருக்கும் பேச்சை கேட்கவும் நாம் ஆவலாகக் காத்திருக்கிறோம். “உங்களால் இந்த ‘ஊழியத்தை’ செய்ய முடியுமா?—பயனியர் சேவையின் மூலம்” என்ற பேச்சு அதிக உற்சாகம் அளிப்பதாய் இருக்கும். இந்த வட்டார மாநாட்டில் இடம்பெறும் இரண்டு தொடர்பேச்சுகளில் முதலாவது, “பிசாசின் தந்திரமான செயல்களை உறுதியாய் எதிர்த்து நில்லுங்கள்” என்பதாகும். இந்தத் தொடர்பேச்சு, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, கல்வி ஆகிய துறைகளில் பிசாசு பயன்படுத்தும் தந்திரங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் அவற்றைத் தவிர்க்கவும் நமக்கு உதவும். “இந்தப் பொல்லாத காலத்தில் சாத்தானை எதிர்த்து நிற்க பலத்தைப் பெறுங்கள்” என்ற தொடர்பேச்சு, எபேசியர் 6:6-10-ல் கடவுள் தரும் அறிவுரையை இன்னும் முழுமையாகப் பின்பற்றுவதற்கான வழியைக் காட்டும்.
தீமையின் மூல காரணனான சாத்தானை வெல்லுவதற்கும் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் இடையே நேரடி தொடர்பு இருக்கிறது. (வெளி. 12:17) எனவே, யெகோவாவின் சாட்சிகளை சாத்தான் விடாது, மும்முரமாகத் தாக்குவதற்கான காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? (ஏசா. 43:10, 12) ‘தீமையை நன்மையினாலே வெல்லுவதற்கு’ நாம் தீர்மானமாய் இருப்பதால் பிசாசு படுதோல்வி அடையப்போவது நிச்சயம். இந்த வட்டார மாநாட்டில் இரண்டு நாளும் தவறாமல் கலந்துகொண்டு முழுமையாய் பயனடைய எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்.