கிறிஸ்தவ ஊழியர்கள் ஜெபிக்க வேண்டும்
1. ஊழியம் செய்ய எது அவசியம்?
1 நம் சொந்த பலத்தால் ஊழியம் செய்ய முடியாது. அதைச் செய்ய யெகோவா நமக்கு பலம் கொடுக்கிறார். (பிலி. 4:13) செம்மறியாடு போன்றவர்களை கண்டுபிடிக்க தூதர்களின் மூலம் அவர் நமக்கு உதவுகிறார். (வெளி. 14:6, 7) நாம் நட்டு நீர் பாய்ச்சுகிற சத்திய விதைகளை யெகோவாதான் விளையச் செய்கிறார். (1 கொ. 3:6, 9) ஆகையால், கிறிஸ்தவ ஊழியர்கள் ஜெபத்தில் பரலோகத் தகப்பனைச் சார்ந்திருப்பது எவ்வளவு முக்கியம் !
2. எந்தெந்த காரியங்களுக்காக ஜெபிக்கலாம்?
2 நமக்காக: நாம் பிரசங்கிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஜெபிக்க வேண்டும். (எபே. 6:18) எந்தெந்த காரியங்களுக்காக ஜெபிக்கலாம்? பிராந்தியத்தைப் பற்றி நல்ல மனப்பான்மை கொண்டிருப்பதற்காகவும் தைரியத்திற்காகவும் ஜெபிக்கலாம். (அப். 4:29) நல்மனமுள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களோடு பைபிளைப் படிக்க வழிநடத்துமாறு யெகோவாவிடம் கேட்கலாம். நம்மிடம் வீட்டுக்காரர் ஏதேனும் கேள்வி கேட்டால், அவரிடம் சரியான பதில் கொடுக்க உதவும்படி நம் மனதுக்குள் சுருக்கமாக ஜெபம் செய்யலாம். (நெ. 2:4) சாதகமற்ற சூழ்நிலைகளிலும் தொடர்ந்து சாட்சி கொடுப்பதற்கு தைரியத்திற்காகவும் விவேகத்திற்காகவும் ஜெபிக்கலாம். (மத். 10:16; அப். 4:29) ஊழியத்தை முதலிடத்தில் வைக்க ஞானத்திற்காகவும் கேட்கலாம். (யாக். 1:5) அவருடைய ஊழியர்களாக இருக்கும் பாக்கியத்திற்காக நன்றி சொல்லும்போதும் யெகோவா சந்தோஷப்படுகிறார்.—கொலோ. 3:15.
3. மற்றவர்களுக்காக ஜெபிப்பது பிரசங்க வேலையை எப்படி ஆதரிக்கும்?
3 மற்றவர்களுக்காக: நாம் “ஒருவருக்காக ஒருவர் ஜெபம்” செய்வதும் அவசியம். அப்படிச் செய்யும்போது, பொருத்தமான சமயங்களில் சக ஊழியர்களின் பெயரைக்கூட குறிப்பிடலாம். (யாக். 5:16; அப். 12:5) உடல் நல குறைவால் ஊழியத்தில் அதிகம் செய்ய முடியவில்லையா? அப்படியானால் நல்ல ஆரோக்கியமுள்ள சக ஊழியர்களுக்காக ஜெபியுங்கள். மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதை ஒருபோதும் துச்சமாகக் கருதக் கூடாது. பிரசங்க வேலைக்கு அதிகாரிகள் மதிப்பு கொடுக்கவும் நாம் ஜெபிக்கலாம். அப்போதுதான் நம் சகோதரர்களால் ‘தொல்லையில்லாமல் அமைதியாக வாழ’ முடியும்—1 தீ. 2:1, 2.
4. நாம் ஏன் ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டும்?
4 நற்செய்தியை உலகமெங்கும் பிரசங்கிப்பது ஒரு மாபெரும் வேலை. ‘ஜெபத்தில் உறுதியாக’ இருந்தால் யெகோவாவின் உதவியோடு இந்த வேலையைச் செய்ய முடியும்.—ரோ. 12:12.