ஜெபம், தியானம்—பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்ய அவசியம்
1. தான் செய்ய வந்த முக்கிய வேலையிலேயே குறியாக இருக்க இயேசுவுக்கு எது உதவியது?
1 பலவித நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தவர்களைக் குணமாக்குவதிலும் பேய்களைத் துரத்துவதிலும் இயேசு ஒரு மாலை நேரம் முழுவதையும் செலவிட்டிருந்தார். மறுநாள் சீடர்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்தபோது, “எல்லாரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்; முந்தின நாள் மாலை செய்த அற்புதங்களையே தொடர்ந்து செய்யும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், இயேசு நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலேயே குறியாக இருந்தார்; ஏனென்றால், அதுவே தனது முக்கிய வேலை எனக் கருதினார். அதனால், “பக்கத்திலுள்ள வேறு ஊர்களுக்குப் போகலாம், வாருங்கள்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும்; இதற்காகவே வந்திருக்கிறேன்” என்று சொன்னார். தன் வேலையிலேயே குறியாய் இருக்க இயேசுவுக்கு எது உதவியது? ஜெபமும் தியானமுமே உதவியது; அதற்காக அவர் அதிகாலையில் எழுந்திருந்தார். (மாற்கு 1:32-39) அப்படியானால், பக்திவைராக்கியமான ஊழியர்களாக இருக்க ஜெபமும் தியானமும் நமக்கு எப்படி உதவும்?
2. ஊழியத்தில் நாம் எப்போதும் பக்திவைராக்கியமுள்ளவர்களாய் இருக்க எதைப் பற்றியெல்லாம் தியானிக்கலாம்?
2 தியானம்—எதைக் குறித்து? ‘மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் இருந்ததை’ இயேசு கவனித்தார். (மத். 9:36) மக்களுக்கு நாம் அறிவிக்கிற நற்செய்தி எந்தளவு முக்கியம் என்பதை நாமும் யோசித்துப் பார்க்கலாம். இந்தப் பொல்லாத உலகத்திற்கு இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது என்பதையும் நாம் மனதில் வைக்கலாம். (1 கொ. 7:29) யெகோவாவின் மாபெரும் செயல்களையும் அருமையான பண்புகளையும், அவருக்குச் சாட்சிகளாக இருக்க நமக்குக் கிடைத்திருக்கிற பாக்கியத்தையும் குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம்; அதோடு, நம் பிராந்தியத்தில் வசிக்கிற மக்களுக்கு இன்னும் தெரியாத... ஆனால் நாம் கற்றிருக்கிற... கடவுளுடைய வார்த்தையின் அரும்பெரும் சத்தியங்களையும் பற்றி நிதானமாகச் சிந்தித்துப் பார்க்கலாம்.—சங். 77:11-13; ஏசா. 43:10-12; மத். 13:52.
3. நாம் எப்போதெல்லாம் தியானிக்கலாம்?
3 தியானம்—எப்போது? இயேசு செய்ததைப் போலவே, சிலர் அமைதியான அதிகாலைப்பொழுதில் தியானிக்கிறார்கள். வேறு சிலர், இரவு படுக்கப்போவதற்கு முன் தியானிக்கிறார்கள். (ஆதி. 24:63) அவசரகதியில் பம்பரமாய் நாம் சுழன்றாலும், தியானிப்பதற்காகக் கொஞ்ச நேரத்தை ஒதுக்கலாம். சிலர் பொது வாகனங்களில் பயணம் செய்யும்போது தியானிக்கிறார்கள். இன்னும் சிலர், மதிய உணவு இடைவேளையில் கொஞ்ச நேரத்தை ஒதுக்கித் தியானிக்கிறார்கள். ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு முன் சில நிமிடங்கள் தியானித்தாலும் அது பெருமளவு உதவியாய் இருப்பதாக அநேகர் சொல்கிறார்கள்; ஆம், மிகுந்த பக்திவைராக்கியத்தோடும் தைரியத்தோடும் நற்செய்தியை அறிவிக்க அது உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
4. நாம் ஏன் தியானிக்க வேண்டும்?
4 இப்படி ஜெபிப்பதும் தியானிப்பதும் பல வழிகளில் நமக்குப் பலன் தரும். யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற நம் ஆசையை அதிகரிக்கும்; ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க நம்மைத் தூண்டும்; தொடர்ந்து நற்செய்தியை அறிவிப்பதற்காக நாம் எடுத்திருக்கும் தீர்மானத்தைப் பலப்படுத்தும். கடவுளின் முதன்மை ஊழியரான இயேசு தியானித்ததால் பலன் அடைந்தார்; அப்படியானால் நாமும் பலனடைவோம்!