ஊழியத்தில் அதிகம் ஈடுபட இப்போதே திட்டமிடுங்கள்
1. நினைவு நாள் அனுசரிப்பு சமயத்தில் என்ன வாய்ப்பு கிடைக்கிறது, அதற்காக இப்போதே நாம் என்ன செய்யலாம்?
1 ஒவ்வொரு வருடமும் நினைவுநாள் அனுசரிப்பு காலத்தில் ‘யெகோவாவை அதிகமாகத் துதிக்க’ நமக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. (சங். 109:30) நமக்காக மீட்புவிலையைக் கொடுக்க ஏற்பாடு செய்த யெகோவா தேவனுக்கு நன்றி செலுத்த ஒரு வழி, மார்ச் மாதத்தில் அதிகமாக ஊழியம் செய்வது. அதற்கு நீங்கள் முயற்சி செய்வீர்களா? திட்டமிடுவதற்கு இதுதான் சரியான நேரம்.
2. சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் சேவைக்கான மணிநேரம் குறைக்கப்பட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? மற்றவர்களுக்கும் எப்படி இருந்தது?
2 துணைப் பயனியர்: சென்ற வருடம், ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்பவர்கள் 30 மணிநேரம்கூட அறிக்கை செய்யலாம் என்பதைக் கேட்டதும் எல்லாருக்கும் ஒரே சந்தோஷமாக இருந்தது. அதற்கு ஒரு சகோதரர்: “நான் உயர்நிலைப் பள்ளியில படிக்கிறதுனால, ஒழுங்கான பயனியர் ஆக முடியல. ஆனா, இந்த ஏப்ரல்ல துணைப் பயனியர் செய்யப்போறேன். 30 மணிநேரம் எழுதிக் கொடுத்துட்டு 50 மணிநேரம் செய்ய முயற்சி செய்யப் போறேன்” என்று எழுதினார். முழுநேரமாக வேலை பார்க்கும் ஒரு சகோதரி எழுதினார்: “முப்பது மணிநேரம் செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்!” முன்பு பயனியராக இருந்த 80 வயதைத் தாண்டிய ஒரு சகோதரி இந்த அறிவிப்பைக் கேட்டபோது இப்படிச் சொன்னார்: “இதுக்காகத்தான் நான் காத்துட்டுருந்தேன்! பயனியர் செய்த காலத்துல நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்னு யெகோவாவுக்குத் தெரியும்.” அந்த மாதத்தில் துணைப் பயனியர் செய்ய முடியாமல் போன பிரஸ்தாபிகள் அதிகமாக ஊழியம் செய்ய இலக்குகளை வைத்தார்கள்.
3. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் செய்ய என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?
3 இந்த வருடம் மார்ச் மாதத்தில் துணைப் பயனியர் செய்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால், இந்த முறையும் துணைப் பயனியர் செய்பவர்கள் 30 மணிநேரமோ 50 மணிநேரமோ செய்யலாம். அதோடு, மார்ச் 17 சனிக்கிழமைமுதல் நாம் ஒரு விசேஷ வினியோகிப்பில் ஈடுபட போகிறோம். ஆம், ஏப்ரல் 5-ல் நடக்கப்போகும் நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொள்ள அழைப்பிதழ்களைக் கொடுக்கப் போகிறோம். மார்ச் மாதத்தில் ஊழியம் செய்யும்போது கிடைக்கும் உற்சாகத்தில் அநேகர் ஏப்ரல், மே மாதத்திலும் 50 மணிநேரம் அறிக்கை செய்து துணைப் பயனியர் செய்ய முன்வருவார்கள்.
4. ஊழியத்தில் அதிகமாக ஈடுபட நாம் என்ன செய்யலாம், அதனால் என்ன பலன்கள் கிடைக்கும்?
4 நினைவுநாள் அனுசரிப்பு காலத்தில் உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் எப்படி அதிகமாக ஊழியம் செய்யலாம் என்பதைப் பற்றி அடுத்த குடும்பப் படிப்பில் கலந்துபேசலாம், அல்லவா? (நீதி. 15:22) உங்கள் முயற்சியை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (1 யோ. 3:22) இப்படி அதிகமாக ஊழியம் செய்யும்போது யெகோவாவைத் துதிக்க அதிக வாய்ப்பு கிடைக்கும். அதோடு, உங்கள் சந்தோஷமும் அதிகரிக்கும்.—2 கொ. 9:6.