வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்
நன்றி காட்ட நினைவுநாள் வாய்ப்பளிக்கிறது
1. நினைவுநாள் அனுசரிப்பு எதற்கு வாய்ப்பளிக்கிறது?
1 ஏப்ரல் 14, இயேசுவின் மரண நினைவுநாள், யெகோவா காட்டிய அன்பை நினைத்துப் பார்க்கவும் அதற்கு நன்றி காட்டவும் சிறந்த வாய்ப்பளிக்கும். நன்றி காட்டுவதற்கு யெகோவாவும் இயேசுவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது லூக்கா 17:11-18-லிருந்து தெரிகிறது. குணமான பத்து தொழுநோயாளிகளில் ஒரேயொருவர்தான் நன்றி சொன்னார். எதிர்காலத்தில், இயேசுவின் மீட்கும்பலி நம்முடைய நோய்களையெல்லாம் நீக்கி, முடிவில்லா வாழ்வைத் தரும். அந்தச் சமயத்தில், நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்காக தினம் தினம் நன்றி சொல்வோம். சரி, நினைவுநாள் ஆசரிப்பு சமயத்தில் நம் நன்றியை எப்படிக் காட்டலாம்?
2. மீட்பு பலியைப்பற்றி நினைத்துப் பார்க்க என்ன செய்யலாம்?
2 நினைத்துப் பாருங்கள்: நன்றி நம் உள்ளத்திலிருந்து வர வேண்டும். அதற்கு, மீட்பு பலியைப்பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைத்துப் பார்க்க நம் பிரசுரங்களில் வெளிவந்துள்ள நினைவுநாள் அட்டவணையைப் பயன்படுத்தலாம். உதாரணமாக தினவசனம், காலண்டர், ஜனவரி-மார்ச் 2012 காவற்கோபுரம் பக்கங்கள் 21, 22-ஐப் பாருங்கள். அதைக் குடும்பமாகச் சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள். இப்படிச் செய்யும்போது, மீட்பு பலிமீதுள்ள நம் நன்றி பெருக்கெடுக்கும். அதைச் செயலிலும் காட்டுவோம்.—2 கொ. 5:14, 15; 1 யோ. 4:11.
3. நினைவுநாள் அனுசரிப்பு காலத்தின்போது, நம் நன்றியை எப்படியெல்லாம் காட்டலாம்?
3 செயலில் காட்டுங்கள்: நம்முடைய நன்றியைச் செயலில் காட்ட வேண்டும். (கொலோ. 3:15) அந்தத் தொழுநோயாளி இயேசுவைத் தேடிப்போய் நன்றி சொன்னார். தான் அற்புதமாகக் குணமானதைப்பற்றிக் கண்டிப்பாக மற்றவர்களிடமும் சொல்லி சந்தோஷப்பட்டிருப்பார். (லூக். 6:45) நினைவுநாள் அழைப்பிதழை நிறைய பேருக்குக் கொடுப்பதன் மூலம் மீட்பு பலிக்கு நாமும் நன்றி காட்டலாம். நினைவுநாள் அனுசரிப்பு காலத்தின்போது, துணைப் பயனியர் செய்வது அல்லது அதிக நேரம் ஊழியம் செய்வது நம் நன்றியைக் காட்ட இன்னொரு வழி. அதேபோல், நினைவுநாளுக்கு வரும் புதியவர்களை வரவேற்று, அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலமும் நன்றி காட்டலாம்.
4. வாய்ப்பை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம்?
4 இதுதான் நாம் அனுசரிக்கும் கடைசி நினைவுநாளா? (1 கொ. 11:26) நமக்குத் தெரியாது. ஒருவேளை இதுவே கடைசியாக இருந்தால், நன்றி காட்ட இதுபோன்ற ஒரு வாய்ப்பு நமக்குத் திரும்பக் கிடைக்காது. அதனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வீர்களா? யெகோவாவுடைய அன்பை நினைத்துப் பார்ப்போம், மற்றவர்களுக்கும் அறிவிப்போம்! மீட்பு பலியைத் தந்த கொடை வள்ளலான யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவோம்!!—சங். 19:14.