கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பல மொழிகள் பேசப்படும் பிராந்தியத்தில் ஒன்றுசேர்ந்து உழைத்தல்
பெரும்பாலும் தங்கள் சொந்த மொழியில் நல்ல செய்தியைக் கேட்கும்போது, மக்கள் இன்னும் நன்றாகப் பிரதிபலிக்கிறார்கள். அதனால்தான், கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று, ‘உலகத்தில் இருந்த எல்லா தேசங்களிலிருந்தும் பக்தியுள்ள யூதர்கள்’ எருசலேமுக்கு வரும்படி யெகோவா ஏற்பாடு செய்திருக்கலாம். இவர்கள் பொதுவாக எபிரெய அல்லது கிரேக்க மொழி பேசியிருக்கலாம்; இருந்தாலும், நல்ல செய்தியைத் தங்களுடைய சொந்த மொழியில் கேட்பதற்கு யெகோவாவின் ஏற்பாடு வழிசெய்தது. (அப் 2:5, 8) இன்று, பல மொழிகள் பேசப்படுகிற பிராந்தியத்தில் இருக்கும் சபைகள் வெவ்வேறு மொழிகளில் கூட்டங்களை நடத்தினாலும், ஒரே பிராந்தியத்தில் ஊழியம் செய்ய வேண்டியிருக்கலாம். அப்படிப்பட்ட சபைகளில் இருக்கும் பிரஸ்தாபிகள் தங்கள் பிராந்தியத்திலுள்ள எல்லாரிடமும் சாட்சி கொடுக்க எப்படி ஒன்றுசேர்ந்து உழைக்கலாம்? ஒரே பிராந்தியத்தில் திரும்பத் திரும்ப ஊழியம் செய்து மக்களை எரிச்சல்படுத்துவதை எப்படித் தவிர்க்கலாம்?
கலந்துபேசுங்கள் (நீதி 15:22): நல்ல செய்தி எல்லாருக்கும் போய்ச் சேருவதற்காக, ஊழியக் கண்காணிகள் கலந்துபேசி, அவர்கள் எல்லாரும் ஒத்துக்கொள்கிற விதத்தில், ஒரு திட்டத்தைப் போட வேண்டும். வேறு மொழியில் பிரசங்கிக்கிற சபைகளின் பிராந்தியம் குறைவாக இருந்தால், அவர்களுடைய மொழி பேசுகிற மக்களுடைய வீடுகளை நீங்கள் விட்டுவிட வேண்டுமென்று விரும்பலாம். ஆனால், அந்த மொழி பேசுபவர்கள் பரவியிருக்கிற பகுதி ரொம்பப் பெரிதாக இருக்கும்போது, அவர்களால் எல்லா வீடுகளையும் சந்திக்க முடியாமல் போகலாம். அதுபோன்ற சூழ்நிலையில், அந்த வீடுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பலாம். அதேசமயத்தில், அக்கறை காட்டுபவர்களுடைய விவரங்களை நீங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். (od-E பக். 93 பாரா 37) அல்லது, அவர்களுடைய மொழி பேசுகிற வீடுகளைக் கண்டுபிடிக்க அவர்கள் உங்களிடம் உதவி கேட்கலாம்; நீங்களும் அந்த வீடுகளுடைய விலாசத்தை அவர்களுடைய சபைக்கு அனுப்பி வைக்கலாம். (km 2/14 பக். 5, பெட்டி) ஒரே வீட்டில் இருப்பவர்கள் நிறைய மொழிகளைப் பேசலாம் என்பதையும் மனதில் வையுங்கள். பிராந்தியம் முழுவதும் பிரசங்கிக்க நீங்கள் எடுக்கிற முயற்சிகள், தகவல் பரிமாற்ற ஆய்வு சட்டங்களை (data protection laws) மீறாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒத்துழையுங்கள் (எபே 4:16): ஊழியக் கண்காணி கொடுக்கும் எல்லா ஆலோசனைகளின்படியும் செய்யுங்கள். உங்களுடைய சபையின் மொழி இல்லாமல் வேறு மொழி பேசுபவருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறீர்களா? அப்படியென்றால், அவருடைய மொழி பேசுகிற சபைக்கோ அல்லது தொகுதிக்கோ அந்தப் படிப்பைக் கொடுத்துவிடுங்கள்; அப்போது, அவர் வேகமாக முன்னேற வாய்ப்பு இருக்கிறது.
தயாரியுங்கள் (நீதி 15:28; 16:1): நீங்கள் சந்திப்பவர் உங்களுடைய சபையின் மொழியைத் தவிர வேறு மொழி பேசினால் என்ன செய்வது? நல்ல செய்தியைச் சொல்வதற்கு உங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யுங்கள். எந்தெந்த மொழி பேசும் மக்கள் உங்கள் பிராந்தியத்தில் இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே யோசித்து, உங்களுடைய ஃபோனில் அல்லது டேப்லெட்டில் அந்தந்த மொழிகளில் பைபிளையும் வீடியோக்களையும் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். JW லாங்குவேஜ் அப்ளிகேஷனை பயன்படுத்தி, அந்த மொழிகளில் எப்படி வாழ்த்துச் சொல்வது என்று கற்றுக்கொள்ளுங்கள்.