இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
அப்பா-அம்மா போடுகிற சட்டத்தை நான் மீறிவிட்டால்...
பொதுவாக எல்லா அப்பா-அம்மாவுமே தங்களுடைய பிள்ளைகளுக்கு சில கட்டுப்பாடு வைப்பார்கள். உதாரணத்துக்கு, எத்தனை மணிக்குள் வீட்டுக்கு வர வேண்டும், எலக்ட்ரானிக் கருவிகளை எவ்வளவு நேரத்துக்கு பயன்படுத்த வேண்டும், மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்ற விஷயங்களில்.
ஒருவேளை அப்பா-அம்மா போட்ட கட்டுப்பாட்டை நீங்கள் மீறிவிட்டால் என்ன செய்வது? நடந்ததை உங்களால் மாற்ற முடியாது. ஆனால் நிலைமை இன்னும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். அது எப்படி? இந்தக் கட்டுரை அதற்கு பதில் சொல்லும்.
என்ன செய்யக் கூடாது?
ஒரு கட்டுப்பாட்டை நீங்கள் மீறியது உங்கள் அப்பா-அம்மாவுக்கு தெரியவில்லை என்றால் செய்த தப்பை மறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஒரு கட்டுப்பாட்டை நீங்கள் மீறியது உங்கள் அப்பா-அம்மாவுக்கு தெரிந்துவிட்டால் சாக்குப்போக்கு சொல்லவோ மற்றவர்கள்மேல் பழி போடவோ நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இந்த இரண்டுமே சரி கிடையாது. ஏனென்றால், செய்த தப்பை மறைப்பதும் மற்றவர்கள்மேல் பழியை தூக்கி போடுவதும் நீங்கள் இன்னும் பக்குவம் ஆகவில்லை என்பதை காட்டுகிறது. இப்படி செய்தால் ‘நான் சின்ன பிள்ளைத்தனமா நடக்கிறேன், நான் இன்னும் வளரலை’ என்று நீங்களே உங்கள் அப்பா-அம்மாவிடம் சொல்வதுபோல் இருக்கும்.
“பொய் சொல்வது நல்ல ஐடியாவே கிடையாது. ஒருநாள் உண்மை எப்படியும் வெளியே வந்துவிடும். நீங்கள் ஆரம்பத்திலேயே உண்மையை சொல்லியிருந்தால் இந்தளவுக்கு வாங்கிக் கட்டியிருக்க மாட்டீர்கள்.”—டயானா.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் செய்ததை ஒத்துக்கொள்ளுங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.” (நீதிமொழிகள் 28:13) நீங்கள் எல்லாவற்றையுமே பக்காவாக செய்ய வேண்டும் என்று உங்கள் அப்பா-அம்மா எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் அவர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
“உங்கள் அப்பா-அம்மாவிடம் உண்மையை சொன்னீர்கள் என்றால் அவர்கள் உங்களை மன்னித்து விடுவார்கள். உங்கள்மேல் அவர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையும் அதிகமாகும்.”—ஒலிவியா.
மன்னிப்பு கேளுங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.” (1 பேதுரு 5:5) நீங்கள் செய்த தப்புக்கு சாக்குப்போக்கு சொல்லாமல் இருப்பதற்கும் மன்னிப்பு கேட்பதற்கும் மனத்தாழ்மை தேவை.
“தப்பு பண்ணிவிட்டு சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருப்பவர்களுடைய மனசாட்சி உறுத்தவே உறுத்தாது. போகப் போக அவர்களுடைய மனசாட்சி மரத்தே போய்விடும்.”—ஹித்தர்.
பின்விளைவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: “சாமர்த்தியசாலி கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறான்” (நீதிமொழிகள் 15:5) நீங்கள் செய்த தவறுக்கு உங்கள் அப்பா-அம்மா ஏதாவது தண்டனை கொடுத்தால் முணுமுணுக்காதீர்கள். அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
“அப்பா-அம்மா கண்டிச்சதை பத்தி நீங்கள் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும். அவர்கள் கொடுக்கிற தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதை பத்தி புலம்பாதீங்க.”—ஜேசன்.
திரும்பவும் நம்பிக்கையை சம்பாதியுங்கள். பைபிள் இப்படிச் சொல்கிறது: ‘உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றிக்கொள்ள பழைய சுபாவத்தைக் களைந்துபோடுங்கள்.’ (எபேசியர் 4:22) பொறுப்பாக நடக்க நடக்க அப்பா-அம்மாவுடைய நம்பிக்கையை உங்களால் சம்பாதிக்க முடியும்.
“நீங்கள் அப்பா-அம்மா சொல்ற பேச்சை கேட்டு நடந்தீங்கனா, திரும்பவும் அதே தப்பை செய்யாம இருந்தீங்கனா, போகப் போக அவர்கள் உங்களை நம்பவும் ஆரம்பித்துவிடுவார்கள்.”—கேரன்.
டிப்ஸ்: உங்களை நம்ப முடியும் என்று காட்டுவதற்கு உங்கள் அப்பா-அம்மா எதிர்பார்ப்பதை விட ஒரு படி மேலேயே செய்யுங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் வெளியே போயிருக்கிறீர்கள். வருவதற்கு லேட் ஆகாது என்று உங்களுக்கு தெரியும். இருந்தாலும் நீங்கள் எப்போது வருவீர்கள் என்பதை உங்கள் அப்பா-அம்மாவிடம் சொல்லுங்கள். இப்படி நீங்கள் செய்யும்போது ‘நீங்க என்னை தாராளமா நம்பலாம்’ என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.