Mary_Ukraine/stock.adobe.com
விழிப்புடன் இருங்கள்!
அரசியல்வாதிகள்மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்—பைபிள் என்ன சொல்கிறது?
2024-ல், உலகம் முழுவதும் நிறைய தேர்தல்கள் நடக்கும். ஒரு வருஷத்தில் இவ்வளவு தேர்தல்கள் நடப்பது இதுதான் முதல் முறையாக இருக்கப்போகிறது. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம், அரசியல்வாதிகள்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில் நிறைய பேர் என்ன சொன்னார்கள் என்றால், “பெரும்பாலும் அரசியல்வாதிகள் செய்கிற விஷயங்கள் தங்களுடைய சுய லாபத்துக்காக இருக்கிறதே தவிர பொதுமக்களுடைய நலனுக்காக இல்லை.”a—பியூ ஆராய்ச்சி மையம், செப்டம்பர் 19, 2023.
நிறைய இளைஞர்கள்கூட அரசியல்வாதிகளை சுத்தமாக நம்புவதில்லை.
“உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்ற கருத்து டீனேஜர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் உலக பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்பே அரசியல்வாதிகளுக்கு இல்லை என்று ஒரு கருத்துக்கணிப்பில் டீனேஜர்கள் சொல்லியிருக்கிறார்கள்.”—தி நியூயார்க் டைம்ஸ், ஜனவரி 29, 2024.
“ஒரு கருத்துக்கணிப்பின்படி, அரசியல்வாதிகளைவிட யூடியூபர்களைத்தான் இளைஞர்கள் அதிகமாக நம்புகிறார்கள்.”—தி கொரியா டைம்ஸ், ஜனவரி 22, 2024.
ஒரு நல்ல எதிர்காலத்தை அரசியல்வாதிகளால் கொடுக்க முடியுமா? எந்தத் தலைவரைத்தான் நம்புவது?
யாரை நம்புகிறீர்கள் என்பதில் உஷாராக இருங்கள்?
மக்கள் இப்போதெல்லாம் யாரையுமே கண்மூடித்தனமாக நம்புவதில்லை. அது நல்லதுதான். இதைப் பற்றி பைபிள்கூட என்ன சொல்கிறது என்றால், “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
நாம் கேள்விப்படுகிற விஷயங்கள் எல்லாம் உண்மையா, பொய்யா என்று எப்படிக் கண்டுபிடிப்பது? அதற்கு உதவும் சில டிப்ஸ் இந்தக் கட்டுரையில் இருக்கிறது: “பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.”
உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிற சில நேர்மையான அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்த எல்லாவற்றையும் அவர்களால் செய்ய முடிவதில்லை. அதனால் பைபிள் நம்மை இப்படி எச்சரிக்கிறது:
“அதிகாரிகளை நம்பாதீர்கள். . . . அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.”—சங்கீதம் 146:3.
உங்கள் நம்பிக்கைக்குத் தகுதியான ஒரு தலைவர்
நம்முடைய நம்பிக்கைக்குத் தகுதியான, ரொம்பவே திறமையான ஒரு தலைவரை, கடவுளே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. அவர்தான் இயேசு கிறிஸ்து. (லூக்கா 1:32, 33) கடவுள் உருவாக்கியிருக்கிற அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு இருக்கிறார். அந்த அரசாங்கம், பரலோகத்திலிருந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.—மத்தேயு 6:10.
நீங்கள் ஏன் இயேசுவை நம்பலாம்? நம் பிரச்சினைகளை அவர் எப்படி சரிசெய்வார்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள “கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யார்?” மற்றும் “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் செய்யும்?” என்ற கட்டுரைகளைப் படியுங்கள்.
a பியூ ஆராய்ச்சி மையம், “அமெரிக்கென்ஸ் டிஸ்மல் வியூஸ் ஆஃப் தி நேஷன்ஸ் பாலிட்டிக்ஸ்,” செப்டம்பர் 2023.