யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி பைபிளை மாற்றிக்கொண்டார்களா?
இல்லை, நாங்கள் அப்படி செய்யவில்லை. எங்களுடைய நம்பிக்கைகள் பைபிளோடு சுத்தமாக ஒத்துப்போகவில்லை என்று எங்களுக்கு தெரியவரும்போது எங்களுடைய நம்பிக்கைகளைத்தான் மாற்றியிருக்கிறோம், பைபிளை அல்ல.
1950-ல் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை நாங்கள் தயாரிப்பதற்கு ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே பைபிளை அலசி ஆராய்ந்து வந்திருக்கிறோம். அதற்காக, எங்களுக்கு கிடைத்த எல்லா மொழிபெயர்ப்புகளையும் பயன்படுத்தினோம். அதற்கேற்ற மாதிரி எங்களுடைய நம்பிக்கைகளை அமைத்துக்கொண்டோம். யெகோவாவின் சாட்சிகளாக, எங்களுக்கு ரொம்ப வருஷங்களாக இருக்கிற நம்பிக்கைகளுக்கு சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம். அவை பைபிள் சொல்வதோடு உண்மையிலேயே ஒத்துப்போகின்றனவா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
எங்களுடைய நம்பிக்கை: கடவுள் ஒரு திரித்துவம் கிடையாது. ஜூலை 1882-ல் வெளிவந்த சீயோனின் காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “நாங்கள் யெகோவாவையும் இயேசுவையும் பரிசுத்த ஆவியையும் நம்புகிறோம் என்பது எங்களுடைய வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஒரு நபருக்குள் மூன்று கடவுள்கள் இருக்கிறார்கள் அல்லது சிலர் சொல்கிறபடி, மூன்று நபர்கள் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்ற திரித்துவ போதனையை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், பைபிள் அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை கற்றுக்கொடுப்பதில்லை.”
பைபிள் என்ன சொல்கிறது: “நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா.” (உபாகமம் 6:4, இண்டியன் ரிவைஸ்டு வெர்ஷன், [IRV]) “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.” (1 கொரிந்தியர் 8:6, தமிழ் O.V. [BSI] பைபிள்) “தந்தை என்னைவிடப் பெரியவர்“ என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.—யோவான் 14:28, பொது மொழிபெயர்ப்பு.
எங்களுடைய நம்பிக்கை: மனிதர்கள் எரிநரகத்தில் என்றென்றைக்கும் வதைக்கப்படுவதில்லை. ஜூன் 1882-ல் “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற தலைப்பில் சீயோனின் காவற்கோபுர இதழ் வெளியானது. அதில் கிங் ஜேம்ஸ் வெர்ஷன் பைபிளிலிருந்து ரோமர் 6:23-ஐ மேற்கோள் காட்டி இப்படிச் சொன்னது: “இந்த வாக்கியம் எவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது. பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிற நிறைய பேர் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ரொம்ப பிடிவாதமாக இருக்கிறார்கள். இது ரொம்ப வினோதமாக இருக்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்றுதான் பைபிள் கற்றுக்கொடுக்கிறது. அதற்குப் பதிலாக, பாவத்தின் சம்பளம் எரிநரகத்தில் நித்திய வாதனை என்று பைபிள் கற்றுக்கொடுப்பதாக சொல்கிறார்கள். அதை உறுதியாகவும் நம்புகிறார்கள்.”
பைபிள் என்ன சொல்கிறது: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.“ (எசேக்கியேல் 18:4, 20, தமிழ் O.V. [BSI] பைபிள்) கடவுளை எதிர்க்கிறவர்களுக்கு கிடைக்கப்போகிற கடைசி தண்டனை நித்திய வாதனை அல்ல, ‘நித்திய அழிவு.’—2 தெசலோனிக்கேயர் 1:10, தமிழ் O.V. (BSI) பைபிள்.
எங்களுடைய நம்பிக்கை: கடவுளுடைய ராஜ்யம் ஒரு உண்மையான அரசாங்கம், இதயத்தில் இருக்கிற ஒரு நிலைமை அல்ல. டிசம்பர் 1881-ல் வெளிவந்த சீயோனின் காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “பூமியில் இருக்கிற அரசாங்கங்களை எல்லாம் நீக்கினால்தான் கடவுளுடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும்.”
பைபிள் என்ன சொல்கிறது: “அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது. அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது. அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு, அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானியேல் 2:44, தமிழ் O.V. (BSI) பைபிள்.
தங்களுடைய நம்பிக்கைகள்தான் சரி என்று சொல்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் புதிய உலக மொழிபெயர்ப்பை சார்ந்திருக்கிறார்களா?
இல்லை. எங்களுடைய ஊழிய வேலையில் நாங்கள் நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்துகிறோம். எங்களுடைய இலவச பைபிள் படிப்புத் திட்டத்தில் நாங்கள் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை விலையில்லாமல் கொடுக்கிறோம். இருந்தாலும், மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளை பயன்படுத்த விரும்புகிறவர்களுக்கு அதிலிருந்தே சந்தோஷமாக சொல்லிக்கொடுக்கிறோம்.