மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
நாம் மனப்பூர்வமாகவும் நல்ல நோக்கத்தோடும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. அப்படிக் கொடுக்கும்போது வாங்குபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் சந்தோஷமாக இருக்கும். (நீதிமொழிகள் 11:25; லூக்கா 6:38) “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார்.—அப்போஸ்தலர் 20:35.
எப்படிக் கொடுப்பது சரி?
மனப்பூர்வமாகக் கொடுப்பதுதான் சரி, அது கடவுளை சந்தோஷப்படுத்தும். “ஒவ்வொருவரும் தயக்கத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—2 கொரிந்தியர் 9:7, அடிக்குறிப்பு.
மனதார கொடுப்பது கடவுள் ஏற்றுக்கொள்ளும் ‘வழிபாட்டின்’ ஒரு பாகமாக இருக்கிறது. (யாக்கோபு 1:27) உதவி தேவைப்படுகிறவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவி செய்கிறவர்கள் கடவுளோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் என்று சொல்லலாம். இப்படித் தாராளமாக மற்றவர்களுக்குக் கொடுப்பதைத் தனக்கே கொடுத்த கடனாகக் கடவுள் நினைக்கிறார். (நீதிமொழிகள் 19:17) அப்படிக் கொடுப்பவர்களுக்குக் கடவுளே திருப்பிக் கொடுப்பார் என்று பைபிள் சொல்கிறது.—லூக்கா 14:12-14.
எப்படிக் கொடுப்பது சரியல்ல?
தவறான உள்நோக்கத்தோடு கொடுப்பது சரியல்ல. உதாரணத்துக்கு:
மற்றவர்களைக் கவருவதற்காகக் கொடுப்பது.—மத்தேயு 6:2.
ஏதோவொன்றை எதிர்பார்த்துக் கொடுப்பது.—லூக்கா 14:12-14.
கடவுளுடைய தயவை வாங்க நினைத்து கொடுப்பது.—அப்போஸ்தலர் 8:20.
கடவுள் வெறுக்கும் விஷயங்களை ஆதரிப்பதற்காகக் கொடுப்பது சரியல்ல. உதாரணத்துக்கு, சூதாடுவதற்கோ போதைப்பொருள் பயன்படுத்துவதற்கோ குடிப்பதற்கோ ஒருவருக்குப் பணம் கொடுப்பது தவறு. (1 கொரிந்தியர் 6:9, 10; 2 கொரிந்தியர் 7:1) அதேபோல், உழைத்து சம்பாதிக்க முடியும் என்றாலும் அப்படிச் செய்யாமல் இருக்கும் ஒருவருக்குப் பண உதவி செய்வது சரியாக இருக்காது.—2 தெசலோனிக்கேயர் 3:10.
குடும்பத்தைக் கவனிக்காமல் மற்றவர்களுக்குக் கொடுப்பது சரியல்ல. குடும்பத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு குடும்பத் தலைவர்களுக்கு இருப்பதாக பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:8) அப்படியிருக்கும்போது, தன்னுடைய குடும்பத்தைத் தவிக்க விட்டுவிட்டு மற்றவர்களுக்கு வாரிக் கொடுப்பது சரியாக இருக்காது. இயேசுவின் காலத்தில் சிலர் தங்களுடைய எல்லா சொத்துகளையும் “கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கையாக” கொடுத்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டு, தங்களுடைய வயதான அப்பா அம்மாவைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். அப்படிப்பட்ட ஆட்களை இயேசு கண்டனம் செய்தார்.—மாற்கு 7:9-13.