வியாழன், அக்டோபர் 30
முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்.—பிலி. 3:16.
உங்களுக்கு ஒத்துவராத ஒரு குறிக்கோளை நீங்கள் அடையவில்லை என்பதற்காக நீங்கள் தோற்றுப்போய்விட்டதாக யெகோவா ஒருநாளும் நினைக்க மாட்டார். (2 கொ. 8:12) தடங்கல்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏற்கெனவே செய்திருப்பதை யோசித்துப் பாருங்கள். “உங்களுடைய உழைப்பை . . . மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 6:10) உங்களுடைய உழைப்பை நீங்களும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஏற்கெனவே என்னவெல்லாம் செய்து முடித்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, நீங்கள் ஏற்கெனவே யெகோவாவோடு ஒரு நட்பை வளர்த்திருக்கலாம், மற்றவர்களிடம் அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கலாம், ஞானஸ்நானமும் எடுத்திருக்கலாம். இப்படி ஏற்கெனவே நல்ல நல்ல குறிக்கோளை வைத்து அதை அடைந்திருக்கலாம். அதையெல்லாம் உங்களால் அடைய முடிந்திருக்கிறதென்றால், இப்போது வைத்திருக்கிற குறிக்கோளையும் கண்டிப்பாக அடைய முடியும்! உங்களுடைய குறிக்கோளை அடைய தொடர்ந்து உழைக்கும்போது, யெகோவா எப்படியெல்லாம் உங்களுக்கு உதவி செய்கிறார்... எப்படியெல்லாம் உங்களை ஆசீர்வதிக்கிறார்... என்பதைப் பார்த்து சந்தோஷப்பட மறந்துவிடாதீர்கள்! (2 கொ. 4:7) நீங்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால் இன்னும் பெரிய ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடிவரும்.—கலா. 6:9. w23.05 31 ¶16-18
வெள்ளி, அக்டோபர் 31
தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் என்மேல் பாசம் வைத்து, கடவுளுடைய பிரதிநிதியாக நான் வந்திருப்பதை நம்புகிறீர்கள்.—யோவா. 16:27.
யெகோவா யார்மேல் பாசம் வைத்திருக்கிறாரோ அவர்களை ஏற்றுக்கொள்வதை வெளிப்படையாக காட்டுகிறார். இயேசு பூமியில் இருந்தபோது யெகோவா அவர்மேல் அன்பு வைத்திருந்ததையும் அவரை ஏற்றுக்கொள்வதையும் இரண்டு சந்தர்ப்பங்களில் சொன்னார். (மத். 3:17; 17:5) யெகோவா உங்களைப் பற்றியும் இப்படி சொல்ல வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்றைக்கு யெகோவா பரலோகத்திலிருந்து பேசுவது இல்லைதான்! ஆனால் தன்னுடைய வார்த்தையான பைபிள் மூலமாக பேசுகிறார். இயேசு தன் சீஷர்களிடம் சொன்ன வார்த்தைகள் சுவிசேஷ புத்தகங்களில் இருக்கின்றன. அதைப் படிக்கும்போது யெகோவாவின் குரலை நம்மால் “கேட்க” முடியும். ஏனென்றால், இயேசு தன் அப்பாவை அப்படியே பின்பற்றினார். பாவ இயல்புள்ள தன் சீஷர்கள் தவறுகள் செய்தபோதுகூட இயேசு அவர்களை ஏற்றுக்கொண்டார். இதைப் பற்றியெல்லாம் படிக்கும்போது யெகோவாவும் நம்மை அப்படித்தான் ஏற்றுக்கொள்வார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. (யோவா. 15:9, 15) கஷ்டங்கள் வருகின்றன என்பதற்காக யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. நாம் அவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம்... அவரை எவ்வளவு நம்புகிறோம்... என்பதைக் காட்டுவதற்கு அவை வாய்ப்புகளைக் கொடுக்கின்றன.—யாக். 1:12. w24.03 28 ¶10-11
சனி, நவம்பர் 1
பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும் உங்களுக்குப் புகழ் உண்டாகும்படி செய்தீர்கள்.—மத். 21:16.
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், வயதுக்கு ஏற்ற பதில்களைத் தயாரிக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம். சில சமயம், கல்யாணமானவர்களுக்கு வரும் பிரச்சினைகளைப் பற்றி அல்லது ஒழுக்க சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றி கட்டுரையில் இருக்கும். இதெல்லாம் பெரியவர்களுக்கு ஆலோசனை சொல்வதுபோல் இருந்தாலும், பிள்ளைகளும் பதில் சொல்வதற்கு ஓரிரு பாராக்களாவது இருக்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் இன்னொரு விஷயத்தையும் புரியவைக்கலாம். கை தூக்கும் எல்லா சமயங்களிலும் அவர்களிடம் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லலாம். அப்போதுதான், வேறு யாரையாவது கேட்டால்கூட அவர்கள் சோர்ந்துபோக மாட்டார்கள். (1 தீ. 6:18) நம் எல்லாராலுமே, யெகோவாவைப் புகழும் விதத்திலும் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தும் விதத்திலும் நல்ல பதில்களைத் தயாரித்து சொல்ல முடியும். (நீதி. 25:11) அவ்வப்போது நம் சொந்த அனுபவத்தைச் சுருக்கமாகச் சொல்வதில் தவறு இல்லை. ஆனால், எப்போது பார்த்தாலும் நம்மைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. (நீதி. 27:2; 2 கொ. 10:18) யெகோவாவைப் பற்றியும், அவருடைய வார்த்தையைப் பற்றியும், அவருடைய மக்களைப் பற்றியும்தான் முக்கியமாகப் பேச வேண்டும்.—வெளி. 4:11. w23.04 24-25 ¶17-18