ஞாயிறு, நவம்பர் 2
மற்றவர்களைப் போல் நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது; அதற்குப் பதிலாக, விழிப்போடும் தெளிந்த புத்தியோடும் இருக்க வேண்டும்.—1 தெ. 5:6.
நாம் விழிப்போடு இருப்பதற்கும் தெளிந்த புத்தியோடு இருப்பதற்கும் அன்பு என்ற குணம் ரொம்ப முக்கியம். (மத். 22:37-39) யெகோவாமேல் அன்பு இருந்தால், எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் விடாமல் ஊழியம் செய்துகொண்டே இருப்போம். (2 தீ. 1:7, 8) யெகோவாவை வணங்காதவர்கள்மேலும் அன்பு இருப்பதால் தொடர்ந்து ஊழியம் செய்கிறோம். ஃபோன் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும்கூட ஊழியம் செய்கிறோம். மக்கள்மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை என்றைக்கும் குறைவதில்லை. ஒருநாள் அவர்கள் கண்டிப்பாக மாறுவார்கள், சரியானதைச் செய்ய ஆரம்பிப்பார்கள் என்று நம்புகிறோம். (எசே. 18:27, 28) நம் சகோதர சகோதரிகள்மேலும் அன்பு காட்டுகிறோம். ‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதன் மூலமும், ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதன் மூலமும்’ அப்படி அன்பு காட்டுகிறோம். (1 தெ. 5:11) ஒரு போரில் படைவீரர்கள் தோளோடு தோள் சேர்ந்து போராடுவதுபோல் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருக்கிறோம், ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துகிறோம். நாம் யாருமே சகோதர சகோதரிகளை வேண்டுமென்றே காயப்படுத்த மாட்டோம்; தீமைக்குத் தீமை செய்ய மாட்டோம். (1 தெ. 5:13, 15) நம்மை முன்நின்று வழிநடத்தும் சகோதரர்கள்மேலும் அன்பு காட்டுகிறோம். அவர்களை மதிப்பதன் மூலமாக!—1 தெ. 5:12. w23.06 10 ¶6; 11 ¶10-11
திங்கள், நவம்பர் 3
அவர் சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா? —எண். 23:19.
விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான ஒரு வழி, மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பது. கடவுளுடைய வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும் என்பதற்கு மீட்புவிலை ஒரு உத்தரவாதம். யெகோவா எதற்காக மீட்புவிலைக்கு ஏற்பாடு செய்தார்... அதற்காக எந்தளவு தியாகம் செய்தார்... என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது, அவர் வாக்குக் கொடுத்த மாதிரியே புதிய உலகத்தில் என்றென்றும் வாழ்வோம் என்பதில் நம் விசுவாசம் பலமாகும். மீட்புவிலையைக் கொடுப்பதற்காக யெகோவா எந்தளவு தியாகம் செய்தார்? யெகோவா தன்னுடைய ஒரே மகனை, அதுவும் கோடிக்கணக்கான வருஷங்களாக தன்கூடவே இருந்த பாச மகனை, பூமிக்கு அனுப்பினார். இயேசு பரிபூரண மனிதராகப் பிறந்து, எத்தனையோ பாடுகள் பட்டு, கடைசியில் துடிதுடித்து இறந்துபோனார். யெகோவா எவ்வளவு பெரிய விலையைக் கொடுத்திருக்கிறார்! நாம் கொஞ்சக் காலம் மட்டும் நன்றாக வாழ்வதற்காகவா இயேசு பாடுகள் பட்டு இறந்துபோக யெகோவா அனுமதித்திருப்பார்? கண்டிப்பாக இல்லை! (யோவா. 3:16; 1 பே. 1:18, 19) புதிய உலகத்தில் நம்மை அவர் என்றென்றும் வாழ வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை! w23.04 27 ¶8-9
செவ்வாய், நவம்பர் 4
மரணமே, உன் கொடுக்குகள் எங்கே? —ஓசி. 13:14.
இறந்தவர்களை உயிரோடு கொண்டுவர வேண்டுமென்ற ஆசை யெகோவாவுக்கு இருக்கிறது, அதில் சந்தேகமே இல்லை! உயிர்த்தெழுதல் சம்பந்தமாக பைபிளில் நிறைய தடவை தன்னுடைய வாக்குறுதிகளை அவர் பதிவு செய்திருக்கிறார். (ஏசா. 26:19; வெளி. 20:11-13) யெகோவா ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார். (யோசு. 23:14) இறந்தவர்களை உயிரோடு கொண்டுவர அவர் ஆசையாகக் காத்திருக்கிறார். யோபு என்ன சொன்னார் என்று யோசித்துப் பாருங்கள். இறந்துபோனாலும் அவரை மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவா ஏக்கமாக இருப்பார் என்று அவர் சொன்னார். (யோபு 14:14, 15) இறந்துபோன தன் ஊழியர்கள் எல்லாரையுமே மறுபடியும் உயிரோடு கொண்டுவர யெகோவா ஏக்கமாக இருக்கிறார். அவர்களை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ வைக்க ஆசையாகக் காத்திருக்கிறார். ஆனால், யெகோவாவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வாய்ப்பே கிடைக்காமல் இறந்துபோன கோடிக்கணக்கான ஜனங்களுக்கு என்ன ஆகும்? நம்முடைய அன்பான கடவுள், அவர்களையும் உயிரோடு கொண்டுவர ஆசைப்படுகிறார். (அப். 24:15) அவருடைய நண்பராகும் வாய்ப்பை... இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பை... அவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.—யோவா. 3:16. w23.04 9 ¶5-6