உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நம்பிக்கை உண்மையிலேயே நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகிறதா?
    விழித்தெழு!—2004 | மே
    • நம்பிக்கை—உண்மையிலேயே நம் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகிறதா?

      தானியேலுக்குப் பத்து வயதுதான் ஆகியிருந்தது, ஆனால் ஒரு வருட காலமாக புற்றுநோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கும் சரி அவனுடைய நெருங்கிய சொந்த பந்தங்களுக்கும் சரி, அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் தானியேல் மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை. படித்து, பெரிய ஆராய்ச்சியாளனாகி, என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் போவதாக நம்பிக்கொண்டிருந்தான். முக்கியமாக, அவனுடைய புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் கைதேர்ந்த ஒரு டாக்டர் அவனை சந்திக்கவிருந்ததால் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால் மோசமான சீதோஷ்ண நிலை காரணமாக அவன் எதிர்பார்த்த அந்த டாக்டர் வரமுடியாமல் போய்விட்டது. அதனால் அவன் மனமொடிந்து போனான். முதன்முறையாக, நம்பிக்கையை கைவிட்டான். பின்பு இரண்டே நாட்களில் உயிர் விட்டான்.

      நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் ஆரோக்கியத்தை பாதிக்கும் விதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த சுகாதார பணியாளர் ஒருவர் தானியேலின் கதையை விவரித்தார். நீங்களும் இதுபோன்ற கதைகளைக் கேள்விப்பட்டிருக்கலாம். உதாரணமாக, முதியவர் ஒருவர் மரண படுக்கையில் இருக்கலாம், ஆனால் முக்கியமான ஒரு நிகழ்ச்சியை​—⁠பாசத்திற்குரியவரை சந்திப்பதற்கோ அல்லது ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவதற்கோ​—⁠ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த நிகழ்ச்சி வந்து போன பிறகு, மரணம் சடுதியில் கவ்விக்கொள்கிறது. இப்படிப்பட்ட உதாரணங்களில், என்ன சக்தி செல்வாக்கு செலுத்துகிறது? சிலர் நினைப்பது போல, நம்பிக்கை உண்மையிலேயே அந்தளவு சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்க முடியுமா?

      நம்பிக்கையும் நம்பிக்கையான பிற உணர்ச்சிகளும் ஒருவருடைய வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பலமான செல்வாக்கு செலுத்துகின்றன என அநேக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் இத்தகைய கருத்துக்கள் எப்பொழுதும் ஒருமித்தவையாக இருப்பதில்லை. ஆராய்ச்சியாளர்கள் சிலர், இத்தகைய உரிமைபாராட்டல்கள் அனைத்தையும் விஞ்ஞானப்பூர்வமற்ற கட்டுக்கதை என ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். உடல் ரீதியிலான உபாதைகளுக்கு கண்டிப்பாக உடல் ரீதியிலான காரணங்களே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

      ஆனால், நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றிய சந்தேக மனப்பான்மை புதிய ஒன்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலிடம் நம்பிக்கை என்பதை வரையறுக்கும்படி கேட்கப்பட்டபோது, “அது ஒரு பகல் கனவு” என பதிலளித்தார். சமீபத்தில், அமெரிக்க அரசியல் மேதை பென்ஜமின் ஃபிராங்க்ளின் பட்டென்று இவ்வாறு கூறினார்: “நம்பிக்கையின் மீது சார்ந்திருப்பவன் பட்டினியால் சாவான்.”

      அப்படியானால், நம்பிக்கையைப் பற்றிய உண்மைதான் என்ன? அது எப்பொழுதுமே பகல் கனவுதானா, ஆகாயக் கோட்டை கட்டி ஆறுதலை தேடும் ஒரு வழியா? அல்லது, ஆரோக்கியத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றா? அது உறுதியான ஆதாரமும் உண்மையான நன்மைகளும் கொண்ட ஒன்றென நினைக்கவும் நியாயமான காரணம் இருக்கிறதா? (g04 4/22)

  • நம்பிக்கை—நமக்கு ஏன் தேவை?
    விழித்தெழு!—2004 | மே
    • நம்பிக்கை​—⁠நமக்கு ஏன் தேவை?

      முதல் கட்டுரையின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட தானியேல் மனம் தளராமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? புற்றுநோயை சமாளித்து இன்றைக்கு உயிரோடு இருந்திருப்பானா? குணமாவதற்கு நம்பிக்கை கைகொடுக்கிறது என்ற கருத்தை தீவிரமாக ஆதரிப்பவரும்கூட இதை ஆமோதிக்க மாட்டார். இதில்தான் முக்கியமான குறிப்பே அடங்கியுள்ளது. நம்பிக்கையின் வலிமையை ஒருவர் மிதமிஞ்சி மதிப்பிடக் கூடாது. எல்லாவற்றிற்கும் அது அருமருந்தாகாது.

      டாக்டர் நேதன் சர்னே என்பவர் சிபிஎஸ் செய்திக்கு பேட்டி அளிக்கும்போது, பெரும் வியாதியஸ்தருக்கு சிகிச்சை தரும் விஷயத்தில் நம்பிக்கையின் வலிமையை மிகைப்படுத்திக் காட்டுவதன் ஆபத்தைப் பற்றி எச்சரித்தார்: “போதிய அளவுக்கு தியானம் செய்வதில்லை, போதிய அளவுக்கு நம்பிக்கையான மனநிலை இல்லை என தங்களுடைய மனைவிமார்களை திட்டுகிற கணவன்மார்களுடைய அனுபவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.” டாக்டர் சர்னே மேலும் கூறினார்: “வியாதி முற்றுவதை தடுக்க முடியும் என்ற ஒரு மாயத்தோற்றத்தை இத்தகைய சிந்தனை உருவாக்கியது, நோயாளியின் உடல்நிலை மோசமாகும்போது, அவர் தன் நோயை போதிய அளவுக்கு கட்டுப்படுத்தவில்லை என்று சொல்வதைப் போல் இருக்கிறது; ஆனால் இது எந்த விதத்திலும் நியாயமல்ல.”

      உண்மையில் பார்த்தால், தீரா வியாதியால் அவதியுறுகிறவர்கள் அந்த நோயோடு மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படும் வேதனையோடு இன்னுமதிக வேதனையைக் கூட்ட அன்பானவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அப்படியானால், நம்பிக்கைக்கு மதிப்பில்லை என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா?

      வேண்டியதில்லை. உதாரணமாக, அதே டாக்டர் வேதனையை தணிக்கும் சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருக்கிறார்; அதாவது, வியாதியை நேரடியாக எதிர்ப்பதில்லை அல்லது வாழ்நாளை நீடிப்பதற்கும் கவனம் செலுத்துவதில்லை, ஆனால் அந்த நோயாளி உயிர் பிழைத்திருக்கும் வரை ஓரளவு சௌகரியமாகவும் சந்தோஷமாகவும் வாழ வைப்பதற்கு கவனம் செலுத்துகிறார். மிகவும் வியாதியாக இருப்பவர்களுக்கும்கூட, அதிக மகிழ்ச்சியான மனநிலையைப் பெற உதவும் சிகிச்சைகளை அளிப்பதால் வரும் மதிப்பை இத்தகைய டாக்டர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நம்பிக்கை மகிழ்ச்சியான மனநிலையை தரும்​—⁠இன்னும் அதிக நன்மையையும் தரும்​—⁠என்பதற்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன.

      நம்பிக்கையின் மதிப்பு

      “நம்பிக்கை வலிமைமிக்க சிகிச்சை” என மருத்துவ இதழியலாளர் டாக்டர் டபிள்யு. ஜிப்ஃபோர்டு-ஜோன்ஸ் அடித்துக் கூறுகிறார். தீரா வியாதியால் அவதியுறும் நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வ ஆதரவு எந்தளவு பயனளிக்கிறது என்பதன் பேரில் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை அவர் மறுபரிசீலனை செய்தார். இப்படிப்பட்ட ஆதரவு அதிக நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்வதாக கருதப்படுகிறது. 1989-⁠ல் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், இத்தகைய ஆதரவு அளிக்கப்பட்ட நோயாளிகள் நீண்டகாலம் உயிர் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலோ அதிக உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. என்றாலும், உணர்ச்சிப்பூர்வ ஆதரவைப் பெறும் நோயாளிகள் அப்படிப்பட்ட ஆதரவைப் பெறாத நோயாளிகளைவிட குறைந்தளவு மனச்சோர்வோ வேதனையோதான் அடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

      இருதய நோயின் விஷயத்தில் நம்பிக்கையான மற்றும் நம்பிக்கையற்ற மனநிலை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி நடத்தப்பட்ட மற்றொரு ஆராய்ச்சியை கவனியுங்கள். வாழ்க்கையை நம்பிக்கையான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களா இல்லையா என்பதைக் குறித்து 1,300-⁠க்கும் அதிகமான ஆண்கள் கவனமாக ஆராயப்பட்டார்கள். அவர்களில் 12 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு வகை இருதய நோயினால் அவதியுற்றிருந்தார்கள் என்பதை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆராய்ச்சி கண்டுபிடித்தது. அவர்களில் நம்பிக்கையற்ற மனநிலை உடையவர்கள் நம்பிக்கையான மனநிலை உடையவர்களைவிட 2-⁠க்கு 1 என்ற வீதத்தில் அதிகமாக இருந்தனர். பொது சுகாதாரத்தைச் சேர்ந்த ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் உடல்நலம் மற்றும் சமூக நடத்தை சம்பந்தமாக உதவி பேராசிரியராக பணிபுரியும் லாரா குப்ஸான்ஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “‘நம்பிக்கையோடு சிந்திப்பது’ உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற கருத்தை ஆதரிக்கும் பெரும்பாலான அத்தாட்சி மற்றொருவர் வாயிலாக பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலானது​—⁠இருதய நோய் சம்பந்தப்பட்ட துறையில் இந்தக் கருத்துக்கு உண்மையான மருத்துவ அத்தாட்சி சிலவற்றை இந்த ஆராய்ச்சி தருகிறது.”

      தங்களுடைய உடல்நிலை நன்றாக இருக்கிறது என கருதுபவர்களைவிட தங்களுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது என நினைப்பவர்கள் அறுவை சிகிச்சைக்குப்பின் மெதுவாக குணமாகிறார்கள் என்பதை சில ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. நம்பிக்கையான மனநிலைக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு இருப்பதாகவும்கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதுமையடைவதைக் குறித்ததில், நம்பிக்கையான மற்றும் எதிர்மறையான நோக்கு எவ்வாறு வயதானவர்களை பாதிக்கிறது என்பதை கண்டறிய ஓர் ஆராய்ச்சி நடந்தது. முதுமையுடன் அதிக ஞானத்தையும் அனுபவத்தையும் இணைத்துப் பேசும், மின்னல் வேகத்தில் தோன்றி மறையும் செய்திகளை வயதானவர்கள் பார்க்கும்படி செய்யப்பட்டபோது, அவர்கள் அதற்குப்பின் அதிக பலத்துடனும் தெம்புடனும் நடந்து சென்றதாக கண்டறியப்பட்டது. சொல்லப்போனால், இந்த முன்னேற்றம் 12 வார கால உடற்பயிற்சியால் கிடைக்கும் பலனுக்கு சமமாக இருந்தது!

      நம்பிக்கை, நம்பிக்கையான மனநிலை, நம்பிக்கையான நோக்கு போன்ற உணர்ச்சிகள் ஏன் ஆரோக்கியம் தருவதாக தெரிகிறது? திட்டவட்டமான பதிலை அளிப்பதற்கு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஒருவேளை மனிதனுடைய மனதையும் உடலையும் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், இந்த விஷயத்தைப் பற்றி ஆராய்கிற நிபுணர்கள் ஓரளவு அறிவுப்பூர்வமான தகவலின் அடிப்படையில் ஊகிப்புகள் செய்கின்றனர். உதாரணமாக, நரம்பியல் பேராசிரியர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பது இன்பகரமானது. அதனால் கவலையும் அழுத்தமும் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது, இத்தகைய சூழ்நிலைமைகளில் உடல் செழித்தோங்குகிறது. ஆகவே, ஆரோக்கியத்திற்காக மனிதன் செய்யக்கூடிய மற்றொரு செயல் நம்பிக்கையோடு இருப்பதாகும்.”

      இந்த எண்ணம் சில மருத்துவர்களுக்கும் உளநோய் வல்லுநர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் புதுமையாக தோன்றலாம், ஆனால் பைபிள் மாணாக்கருக்கு இது புதுமையானதல்ல. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஞானியாகிய சாலோமோன் ராஜா இந்தக் கருத்தை எழுத்தில் வடிப்பதற்கு ஆவியால் ஏவப்பட்டார்: “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.” (நீதிமொழிகள் 17:22) இந்த சமநிலையான கருத்தை கவனியுங்கள். மனமகிழ்ச்சி எந்தவொரு வியாதியையும் குணமாக்கிவிடும் என இந்த வசனம் சொல்வதில்லை, ஆனால் அது “நல்ல ஔஷதம்” என்றுதான் சொல்கிறது.

      சொல்லப்போனால், நம்பிக்கை ஒரு மருந்தாக இருந்தால், எந்த மருத்துவர்தான் அதை எழுதிக் கொடுக்க மாட்டார்? அதோடு, ஆரோக்கியம் என்ற வட்டத்திற்கும் அப்பால் அதிக நன்மைகளை நம்பிக்கை அளிக்கிறது.

      நம்பிக்கையான மனநிலை, நம்பிக்கையற்ற மனநிலை, உங்கள் வாழ்க்கை

      நம்பிக்கையான மனநிலையுடைய ஆட்கள் பல வழிகளில் பயனடைவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பள்ளியில், வேலை செய்யுமிடத்தில், விளையாட்டுத் துறையில்கூட அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள். உதாரணமாக, பெண்கள் தடகள அணியைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. பயிற்சியாளர்கள் அந்தப் பெண்களின் விளையாட்டுத் திறமைகளை மட்டுமே நூல்பிடித்தாற் போல மதிப்பிட்டார்கள். அதேசமயத்தில், அந்தப் பெண்களிடம் சுற்றாய்வு நடத்தப்பட்டு, அவர்களுடைய நம்பிக்கையின் அளவு கவனமாக மதிப்பிடப்பட்டது. விளையாட்டுத் திறமைகளைவிட நம்பிக்கையின் அளவே அவர்கள் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பதை துல்லியமாய் சுட்டிக்காட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது. நம்பிக்கைக்கு ஏன் இந்தளவு வலிமைமிக்க செல்வாக்கு இருக்கிறது?

      நம்பிக்கையான மனநிலைக்கு எதிரிடையான நம்பிக்கையற்ற மனநிலையைப் பற்றி ஆராய்வதன் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 1960-களில், மிருகங்களின் நடத்தை சம்பந்தமான பரிசோதனைகள் எதிர்பாராத தகவலை கொடுத்தன. அது, “கற்றுக்கொள்ளப்படும் நம்பிக்கையற்ற மனநிலை” (learned helplessness) என்ற சொற்றொடரை உருவாக்குவதற்கு அவர்களை வழிநடத்தியது. மனிதரும்கூட இதுபோன்ற கோளாறினால் அவதியுறக்கூடும் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். உதாரணமாக, ஆய்வில் உட்படுத்தப்பட்ட மனிதர்கள் காட்டுக் கத்தலான இரைச்சலை கேட்கும்படி செய்யப்பட்டனர், தொடர்ச்சியான பட்டன்களை அழுத்துவதன் மூலம் அதை நிறுத்திவிடலாம் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. அந்த இரைச்சலை நிறுத்துவதில் அவர்கள் வெற்றி கண்டனர்.

      இரண்டாவது தொகுதியினரும் அதையே செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்​—⁠ஆனால் பட்டன்களை அழுத்தியும் இரைச்சல் நிற்கவில்லை. நீங்கள் கற்பனை செய்கிறபடி, இரண்டாவது தொகுதியிலிருந்த அநேகர் நம்பிக்கையற்ற மனநிலையை வளர்த்துக் கொண்டார்கள். பிற்பாடு நடத்தப்பட்ட சோதனைகளில், எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு அவர்கள் தயங்கினார்கள். என்ன செய்தாலும் ஒன்றும் தேறப் போவதில்லை என்றே உறுதியாக நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது தொகுதியினரிலும்கூட, நம்பிக்கையான மனநிலையுடையவர்கள் மனந்தளர மறுத்துவிட்டார்கள்.

      அந்த ஆரம்ப பரிசோதனைகள் சிலவற்றை தயாரிப்பதற்கு உதவிய டாக்டர் மார்ட்டின் செலிக்மன் நம்பிக்கையான மனநிலையையும் நம்பிக்கையற்ற மனநிலையையும் ஆராயும் படிப்பை மேற்கொள்ளும்படி உந்துவிக்கப்பட்டார். லாயக்கற்றவர்கள் என்ற மனச்சாய்வுடையவர்கள் வெளிப்படுத்திய சிந்தையை அவர் கவனமாக ஆராய்ந்தார். இத்தகைய நம்பிக்கையற்ற மனநிலை வாழ்க்கையில் அநேக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கடினமாக்குகிறது அல்லது முற்றிலும் செயலற்ற நிலைக்கு தள்ளுகிறது. நம்பிக்கையற்ற மனநிலையையும் அதன் விளைவுகளையும் செலிக்மன் இவ்வாறு தொகுத்துரைக்கிறார்: “துன்பத்திற்கு நாம்தான் காரணம், அது அப்படியேதான் இருக்கும், நாம் செய்கிற எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும் என நாம் பழக்கமாகவே நம்பினால், இன்னுமதிக துன்பமே நமக்கு நேரிடும் என்பதை என்னுடைய இருபத்தைந்து வருடகால ஆராய்ச்சி என்னை நம்ப வைத்திருக்கிறது.”

      மேற்குறிப்பிடப்பட்ட இத்தகைய முடிவுகள் சிலருக்கு புதிதாக தோன்றலாம், ஆனால் பைபிள் மாணாக்கருக்கு அவை கேள்விப்பட்ட ஒன்றாகவே தொனிக்கின்றன. “ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்ற நீதிமொழியை கவனியுங்கள். (நீதிமொழிகள் 24:10) ஆம், எதிர்மறையான சிந்தைகளுடன்கூடிய சோர்வு, உங்களுடைய பலத்தை உறிஞ்சிவிடும் என பைபிள் தெளிவாக விளக்குகிறது. அப்படியானால், நம்பிக்கையற்ற மனநிலையை எதிர்த்துப் போராடி, உங்களுடைய வாழ்க்கையில் நம்பிக்கையை பெற எது உதவும்? (g04 4/22)

      [பக்கம் 4, 5-ன் படம்]

      நம்பிக்கை அதிக நன்மை தருகிறது

  • நம்பிக்கையற்ற மனநிலையை உங்களால் எதிர்த்துப் போராட முடியும்
    விழித்தெழு!—2004 | மே
    • நம்பிக்கையற்ற மனநிலையை உங்களால் எதிர்த்துப் போராட முடியும்

      வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் சறுக்கல்களை எப்படி நோக்குகிறீர்கள்? இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதில், நீங்கள் நம்பிக்கையான மனநிலையுடையவரா அல்லது நம்பிக்கையற்ற மனநிலையுடையவரா என்பதை சுட்டிக்காட்டும் என நிபுணர்கள் பலர் இப்பொழுது கருதுகிறார்கள். வாழ்க்கையில் நாம் எல்லாருமே பல்வேறு கஷ்டநஷ்டங்களை அனுபவிக்கிறோம், நம்மில் சிலர் மற்றவர்களைவிட அதிகமாக அனுபவிக்கிறோம். ஆனால் ஏன் சிலர் கஷ்டங்களிலிருந்து மீண்டு வந்து, ஏதாவது சாதிக்க தயாராகிவிடுகிறார்கள், மறுபட்சத்தில் சிலர் சிறுசிறு கஷ்டங்கள் வந்தால்கூட நொடிந்துபோய் உட்கார்ந்து விடுகிறார்கள்?

      உதாரணமாக, நீங்கள் ஒரு வேலை தேடி அலைகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு இன்டர்வியூவுக்குப் போகிறீர்கள், ஆனால் அதில் தோல்வி அடைந்துவிடுகிறீர்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? ஒருவேளை இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு, ‘என்னை மாதிரி ஆளை ஒருவரும் வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க. எனக்கு ஒருநாளும் வேலை கிடைக்காது’ என நீங்கள் புலம்பலாம். அல்லது, அதைவிட மோசமாக, உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த ஏமாற்றம் உங்களை செல்வாக்குச் செலுத்த அனுமதித்து, ‘நான் எதற்கும் லாயகில்லை, என்னால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை’ என நினைக்கலாம். இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இப்படிப்பட்ட சிந்தையே நம்பிக்கையற்ற மனநிலைக்கு முழுக் காரணம்.

      நம்பிக்கையற்ற மனநிலையை எதிர்த்துப் போராடுதல்

      நம்பிக்கையற்ற மனநிலையை நீங்கள் எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும்? இத்தகைய எதிர்மறையான சிந்தனைகளை இனம் கண்டுகொள்வது முக்கியமான முதல் படி. அவற்றை எதிர்த்துப் போராடுவது இரண்டாவது படி. உங்களை வேலைக்கு எடுக்காததற்கு நியாயமான வேறுசில காரணங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, யாருமே உங்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் என்பதாலா உங்களை அனுப்பி விட்டார்கள்? அல்லது, வேறுசில தகுதிகளையுடைய வேறொருவரை அந்த முதலாளி தேடிக் கொண்டிருந்ததாலா?

      திட்டவட்டமான உண்மைகள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்திப் பார்ப்பது, நம்பிக்கையற்ற எண்ணங்களை வெளிப்படுத்தும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒதுக்கப்பட்டதால் நீங்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக அர்த்தமாகுமா? அல்லது வாழ்க்கையில் நீங்கள் ஓரளவு வெற்றி பெற்ற வேறுசில அம்சங்களைப் பற்றி, அதாவது உங்களுடைய ஆன்மீக நாட்டங்களையோ குடும்ப உறவுகளையோ நட்புறவுகளையோ பற்றி சிந்தித்துப் பார்க்க முடியுமா? எதிர்காலத்திலும் “தோல்வியே கதி” என்ற உங்களுடைய முன்கணிப்புகளை ஒதுக்கித்தள்ள கற்றுக்கொள்ளுங்கள். சொல்லப்போனால், இனிமேல் உங்களுக்கு வேலையே கிடைக்காது என்று நிச்சயமாக தெரியுமா? எதிர்மறையான எண்ணத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை இன்னும் இருக்கின்றன.

      இலக்குகள் நிறைந்த நம்பிக்கையான மனநிலை

      சமீப காலங்களில் ஆராய்ச்சியாளர்கள் அக்கறைக்குரிய ஆனால் ஓரளவு குறுகிய விளக்கத்தை நம்பிக்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள். நம்பிக்கை என்பது இலக்குகளை உங்களால் அடைய முடியும் என்ற கருத்து என அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை என்பதில் அதிக அர்த்தம் பொதிந்துள்ளது என்பதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம்; ஆனால் இந்த விளக்கம் பல்வேறு வழிகளில் பயனுள்ளதாக தோன்றுகிறது. இத்தகைய தனிப்பட்ட நம்பிக்கையின் இந்த அம்சத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது இலக்குகள் நிறைந்த அதிக நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும்.

      நமது எதிர்கால இலக்குகளை அடைய முடியும் என நம்ப வேண்டுமென்றால், இலக்குகள் வைத்து அவற்றை அடைவதில் நாம் அனுபவம் பெற வேண்டும். உங்களுக்கு அத்தகைய அனுபவம் இல்லை என நீங்கள் உணர்ந்தால், நீங்கள் வைக்கும் இலக்குகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கலாம். முதலாவதாக, உங்களுக்கு ஏதாவது இலக்குகள் இருக்கின்றனவா? உண்மையிலேயே வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறோம், எது நமக்கு மிக முக்கியம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும்கூட நேரமில்லாத அளவுக்கு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் சிக்கியிருக்கலாம். வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டியவற்றை தெளிவாக திட்டமிட்டு வைத்துக்கொள்ளும் நடைமுறையான இந்தக் கொள்கையின் சம்பந்தமாக, “அதிமுக்கியமானவற்றை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என வெகு காலத்திற்கு முன்பே பைபிள் அழகாக சொல்லியிருக்கிறது.​—⁠பிலிப்பியர் 1:10, NW.

      வாழ்க்கையில் முன்னுரிமை கொடுக்க வேண்டியவற்றை தீர்மானித்துவிட்டால், ஆன்மீக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, வேலை, கல்வி போன்ற பல்வேறு அம்சங்களில் முக்கியமான இலக்குகளை தேர்ந்தெடுப்பது சுலபமாகிவிடும். என்றாலும், ஆரம்பத்திலேயே அநேக இலக்குகளை வைக்காதிருப்பதும், எளிதில் அடைய முடியும் என நாம் நினைக்கும் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம். ஓர் இலக்கு மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தால், அது நம்மை திணறடித்துவிடும், கடைசியில் நாம் நம்பிக்கையிழந்து விடக்கூடும். ஆகவே, பெரிய, நீண்டகால இலக்குகளை சிறிய, குறுகியகால இலக்குகளாக பிரித்துக் கொள்வதே பெரும்பாலும் நல்லது.

      “மனமிருந்தால் மார்க்கமுண்டு” என ஒரு பழமொழி கூறுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருப்பதாக தெரிகிறது. மனதில் முக்கியமான இலக்குகளை நாம் தீர்மானித்துவிட்டால், அவற்றை முயன்று அடைய நமக்கு மனோபலம் வேண்டும், அதாவது ஆசையும் உறுதியும் வேண்டும். நமது இலக்குகளின் மதிப்பையும் அவற்றை அடைவதால் வரும் பலாபலன்களையும் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் நமது தீர்மானத்தை நாம் பலப்படுத்தலாம். உண்மைதான், தடைகள் கண்டிப்பாக வரும், ஆனால் அவற்றை தடைக்கற்களாக எண்ணுவதற்குப் பதிலாக சவால்களாக நோக்குவதற்குக் கற்றுக்கொள்வது அவசியம்.

      இருந்தாலும், நம்முடைய இலக்குகளை அடைய நடைமுறையான வழிகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பதும் அவசியம். எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு பல்வேறு வழிகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என சி. ஆர். ஸ்நைடர் என்ற ஆசிரியர் கூறுகிறார்; இவர் நம்பிக்கையின் மதிப்பைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்திருப்பவர். ஆகவே, ஒரு வழி சரிப்பட்டு வரவில்லை என்றால், இரண்டாவது, மூன்றாவது என நாம் முயன்று பார்க்கலாம்.

      ஓர் இலக்கை விட்டுவிட்டு எப்பொழுது மற்றொரு இலக்கிற்கு மாறுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஸ்நைடர் சிபாரிசு செய்கிறார். ஓர் இலக்கை அடைவதற்கு உண்மையிலேயே ஏதாவது தடையாக இருந்தால், அதைப் பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டிருப்பது நம்மை சோர்வடையச் செய்யும். மறுபட்சத்தில், அதற்கு பதிலாக அதிக எதார்த்தமான இலக்கை வைப்பது நம்பிக்கை தரும்.

      இதன் சம்பந்தமாக பைபிளில் பயனுள்ள ஓர் உதாரணம் உள்ளது. தனது கடவுளாகிய யெகோவாவுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென்ற இலக்கை தாவீது ராஜா நெஞ்சார நேசித்து வந்தார். ஆனால் அவருடைய மகன் சாலொமோனுக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கும் என தாவீதிடம் கடவுள் சொன்னார். இதைக் குறித்து முகம் சுளிப்பதற்கு அல்லது இந்த ஏமாற்றத்தை எப்படியாகிலும் மேற்கொள்ள வேண்டுமென கங்கனம் கட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, தாவீது தனது இலக்குகளை மாற்றிக்கொண்டார். அதன்பின்பு, தனது மகன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவைப்படும் நிதியும் பொருளும் திரட்டுவதில் தன்னையே அர்ப்பணித்தார்.​—⁠1 இராஜாக்கள் 8:17-19; 1 நாளாகமம் 29:3-7.

      நம்பிக்கையற்ற மனநிலையை எதிர்த்துப் போராடுவதன் மூலமும் இலக்குகள் நிறைந்த நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக் கொள்வதன் மூலமும் தனிப்பட்ட அளவில் நம்பிக்கையை அதிகரிப்பதில் நாம் வெற்றி பெற்றாலும்கூட, நாம் இன்னும் பெருமளவில் நம்பிக்கை இல்லாமலேயே இருக்கலாம். எப்படி? இந்த உலகில் நாம் எதிர்ப்படும் பெருமளவிலான நம்பிக்கையற்றத் தன்மை நம்முடைய சக்திக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரணங்களால் ஏற்படுகிறது. வறுமை, போர், அநீதி, வியாதி, மரணம் போன்ற பிரச்சினைகள் மனிதகுலத்தை வாட்டி வதைப்பதை சிந்தித்துப் பார்க்கும்போது, எப்படி நாம் நம்பிக்கையான நோக்கை காத்துக்கொள்ள முடியும்? (g04 4/22)

      [பக்கம் 7-ன் படம்]

      ஒரு வேலை தேடி செல்லும்போது அது கிடைக்காவிட்டால், இனிமேல் உங்களுக்கு வேலையே கிடைக்காது என நினைத்துக் கொள்கிறீர்களா?

      [பக்கம் 8-ன் படம்]

      தாவீது ராஜா சூழ்நிலைமைக்கு ஏற்ப தன் இலக்குகளை மாற்றிக் கொண்டார்

  • உண்மையான நம்பிக்கையை எங்கே கண்டடையலாம்?
    விழித்தெழு!—2004 | மே
    • உண்மையான நம்பிக்கையை எங்கே கண்டடையலாம்?

      உங்களுடைய கடிகாரம் நின்றுவிட்டது, அது ரிப்பேர் ஆகிவிட்டது போல் தெரிகிறது. இப்பொழுது அதை சரிசெய்ய வேண்டும், வாட்ச் ரிப்பேர் செய்யும் கடைகள் நிறைய விளம்பரம் கொடுக்கின்றன. சரிசெய்து தருவதாக அவை அனைத்தும் உறுதியளிக்கின்றன, அவற்றில் சில சொல்வது முரண்பாடாக தொனிக்கிறது. ஆனால் உங்களுடைய அண்டை வீட்டுக்காரர் ஒருவர்தான் பல வருடங்களுக்கு முன்பு அந்த வாட்சை தயாரித்த திறமைசாலி என்பது உங்களுக்குத் தெரிய வருகிறது. அப்பொழுது என்ன செய்வீர்கள்? அதோடு, ஒரு பைசாவும் வாங்காமல் உங்களுக்கு இலவசமாக ரிப்பேர் செய்து கொடுப்பதாகவும் சொல்கிறார். இப்பொழுது, யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு குழப்பமே இருக்காது அல்லவா?

      நம்பிக்கை கொள்வதற்குரிய உங்களுடைய சொந்த திறமையுடன் அந்த வாட்சை ஒப்பிட்டுப் பாருங்கள். கொந்தளிப்புமிக்க இவ்வுலகில் வாழும் அநேகரைப் போல, நீங்கள் நம்பிக்கை இழந்து வருவதாக உணருகிறீர்களென்றால், உதவிக்காக எங்கே செல்வீர்கள்? பிரச்சினையை தங்களால் சரிசெய்ய முடியும் என அநேகர் மார்தட்டுகிறார்கள், ஆனால் எண்ணற்ற ஆலோசனைகள் குழப்பமாகவும் முரண்பாடாகவுமே இருக்கின்றன. அப்படியானால், முதன்முதலில் நம்பிக்கை கொள்வதற்கான திறமையைத் தந்து மனிதகுலத்தை உருவாக்கியவரிடம் ஏன் செல்லக் கூடாது? “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்றும், உதவ மனமுள்ளவராக இருக்கிறார் என்றும் பைபிள் சொல்கிறது.​—⁠அப்போஸ்தலர் 17:27; 1 பேதுரு 5:⁠7.

      நம்பிக்கைக்கு ஆழமான விளக்கம்

      நம்பிக்கை என்பதற்கு பைபிள் தரும் கருத்து அதிக விரிவானது, இன்றைய மருத்துவர்கள், விஞ்ஞானிகள், உளவியலாளர்கள் மத்தியில் பொதுவாக காணப்படும் கருத்தைவிட அதிக அர்த்தம் பொதிந்தது. “நம்பிக்கை” என பைபிளில் மொழிபெயர்க்கப்படும் மூலமொழி வார்த்தைகள் ஆர்வத்துடன் காத்திருப்பதையும் நல்லது வருமென எதிர்நோக்கியிருப்பதையும் அர்த்தப்படுத்துகின்றன. அடிப்படையில், நம்பிக்கை என்பதில் இரண்டு அம்சங்கள் உட்பட்டுள்ளன. நன்மையான ஒன்றின்மீது ஆசை வைப்பதையும், அந்த நன்மையான ஒன்று வருமென நம்புவதற்குரிய ஆதாரத்தையும் குறிக்கிறது. பைபிள் தரும் நம்பிக்கை ஏதோவொரு ஆசைக் கனவு அல்ல. அதற்கு உண்மையும் அத்தாட்சியும் கொண்ட உறுதியான ஆதாரம் இருக்கிறது.

      இந்த விஷயத்தில் நம்பிக்கை என்பது விசுவாசத்துடன் தொடர்புடையது; இந்த விசுவாசம் அத்தாட்சியின் அடிப்படையில் இருக்க வேண்டும், இது வெறுமனே மத சம்பந்தப்பட்ட காரியங்களை கண்ணை மூடிக்கொண்டு சட்டென்று நம்பிவிடும் இயல்புடையதல்ல. (எபிரெயர் 11:1, NW) என்றாலும், விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பைபிள் வேறுபடுத்திக் காட்டுகிறது.​—⁠1 கொரிந்தியர் 13:13.

      உதாரணமாக, உங்களுடைய அருமை நண்பரிடம் ஓர் உதவி கேட்கும்போது அதை அவர் செய்வார் என நீங்கள் நம்பிக்கை வைக்கலாம். உங்களுடைய நம்பிக்கை ஆதாரமற்றது அல்ல, ஏனென்றால் உங்களுடைய நண்பர் மீது உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது​—⁠அவரைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும், கடந்த காலத்தில் அவர் உங்களுடன் தயவாகவும் தாராளமாகவும் நடந்திருக்கிறார். உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் நெருங்கிய தொடர்புடையவை, ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கின்றன, ஆனால் அவை வித்தியாசமானவை. இத்தகைய நம்பிக்கையை கடவுள் மீது நீங்கள் எவ்வாறு வைக்கலாம்?

      நம்பிக்கைக்கு ஆதாரம்

      உண்மையான நம்பிக்கைக்கு கடவுளே ஊற்றுமூலர். பைபிள் காலங்களில், “இஸ்ரவேலின் நம்பிக்கை” என யெகோவா அழைக்கப்பட்டார். (எரேமியா 14:8) எந்தவொரு நிச்சயமான நம்பிக்கையையும் அவரிடமிருந்தே அவருடைய ஜனங்கள் பெற்றார்கள். எனவே, அவரே அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தார். இத்தகைய நம்பிக்கை வெறுமனே ஏதோவொன்றிற்காக ஆசைப்படுவதை அர்த்தப்படுத்தவில்லை. நம்பிக்கைக்குரிய உறுதியான ஆதாரத்தை யெகோவா அவர்களுக்கு கொடுத்திருந்தார். நூற்றாண்டுகளாக அவர்களுடன் தொடர்புகொண்டு வந்தபோது, வாக்குறுதிகளை கொடுத்து அவற்றை காப்பாற்றுகிறவர் என்ற ஒரு நல்ல பதிவை ஏற்படுத்தினார். இஸ்ரவேலரிடம் அவர்களுடைய தலைவராகிய யோசுவா இவ்வாறு கூறினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை . . . அறிந்திருக்கிறீர்கள்.”​—⁠யோசுவா 23:14.

      ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின், அந்தப் பதிவு இன்றும் உண்மையாக இருக்கிறது. பைபிளில் கடவுளுடைய ஒப்பற்ற வாக்குறுதிகள் நிறைந்துள்ளன; அவை நிறைவேற்றமடைந்ததைப் பற்றிய துல்லியமான சரித்திரப்பூர்வ பதிவுகளும் அடங்கியுள்ளன. தீர்க்கதரிசனமாக அவர் கொடுத்த வாக்குறுதிகள் அந்தளவுக்கு நம்பகமானவையாக இருப்பதால், ஏற்கெனவே நிறைவேறியதைப் போல சிலசமயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

      அதனால்தான் பைபிளை நம்பிக்கையின் புத்தகம் என நாம் சொல்லலாம். மனிதருடன் கடவுள் கொண்ட தொடர்புகளைப் பற்றிய பதிவுகளை ஆராய்கையில், அவர் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பதற்குரிய ஆதாரம் இன்னும் பலமாகும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”​—⁠ரோமர் 15:4.

      கடவுள் நமக்கு எத்தகைய நம்பிக்கையை கொடுக்கிறார்?

      நம்பிக்கை மிக மிகத் தேவை என்பதை நாம் எப்பொழுது உணருகிறோம்? சாவை எதிர்ப்படும்போது அல்லவா? ஆனால், அநேகருக்கு அந்த கணப்பொழுதில்தான், உதாரணமாக அன்பானவரை மரணம் கொண்டு செல்லும் அத்தருணத்தில்தான் அந்த நம்பிக்கை கைநழுவிப் போவதாகத் தோன்றுகிறது. சொல்லப்போனால், மரணத்தைவிட வேறெது அதிக நம்பிக்கையற்ற ஒன்றாக இருக்க முடியும்? அது ஈவிரக்கமின்றி நம் ஒவ்வொருவரையும் விரட்டி வருகிறது. ஓரளவு காலத்திற்கு மட்டுமே அதை நாம் தவிர்க்க முடியும், நிகழ்ந்த பிறகோ அதை மாற்றும் சக்தியின்றி தவிக்கிறோம். பொருத்தமாகவே, மரணத்தை “கடைசி சத்துரு” என பைபிள் அழைக்கிறது.​—⁠1 கொரிந்தியர் 15:26.

      அப்படியானால், மரணத்தை எதிர்ப்படுகையில் நாம் எவ்வாறு நம்பிக்கையை கண்டடையலாம்? மரணத்தை கடைசி சத்துரு என அழைக்கும் பைபிள் வசனமே இந்தச் சத்துரு ‘அழிக்கப்படுவான்’ என சொல்கிறது. யெகோவா தேவன் மரணத்தைவிட வல்லமை வாய்ந்தவர். இதை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். எப்படி? மரித்தோரை உயிர்த்தெழுப்புவதன் மூலமே. மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கு கடவுள் தமது சக்தியைப் பயன்படுத்திய ஒன்பது சந்தர்ப்பங்களைப் பற்றி பைபிள் விவரிக்கிறது.

      குறிப்பிடத்தக்க ஒரு சந்தர்ப்பத்தில், மரித்து நான்கு நாட்களாகியிருந்த லாசரு என்ற பெயருடைய அருமையான நண்பரை உயிர்த்தெழுப்ப யெகோவா தமது குமாரனாகிய இயேசுவுக்கு வல்லமை அளித்தார். இயேசு இதை இரகசியமாக அல்ல, ஆனால் கூட்டத்தாருக்கு முன்பு வெளிப்படையாக செய்தார்.​—⁠யோவான் 11:38-48, 53; 12:9, 11.

      நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘ஏன் ஆட்கள் உயிர்த்தெழுப்பப்பட்டார்கள்? எப்படியிருந்தாலும், அவர்களும் வயதாகி கடைசியில் மறுபடியும் மரிக்கவில்லையா?’ அவர்கள் மரித்தார்கள். என்றாலும், இதுபோன்ற நம்பகமான உயிர்த்தெழுதல் பதிவுகளின் காரணமாக, மரித்த நமது அன்பானவர்கள் மீண்டும் உயிரடைய வேண்டுமென ஆசை வைப்பது மட்டுமல்ல, அவர்கள் நிச்சயம் வருவார்கள் என நம்பிக்கை வைப்பதற்கும் இப்பொழுது நம்மிடம் அத்தாட்சி இருக்கிறது. வேறு வார்த்தையில் சொன்னால், நமக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறது.

      இயேசு கூறினார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோவான் 11:25) உலகளாவிய விதத்தில் உயிர்த்தெழுதலை நடப்பிப்பதற்கு யெகோவாவிடமிருந்து வல்லமை பெற போகிறவர் இவரே. இயேசு சொன்னார்: ‘பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [கிறிஸ்துவுடைய] சத்தத்தைக் கேட்டு எழுந்து வரும் காலம் வரும்.’ (யோவான் 5:28, 29) ஆம், கல்லறையில் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் அனைவரும் பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கை இருக்கிறது.

      உயிர்த்தெழுதலைப் பற்றி மனதைத் தொடும் இந்த வர்ணனையை தீர்க்கதரிசியாகிய ஏசாயா எழுதினார்: “இறந்தோர் உயிரடைவர், அவர்களுடைய உடல்கள் மீண்டும் எழும்பும். மண்ணிலே உறங்குகிறவர்கள் விழித்தெழுந்து ஆனந்த சந்தோஷத்தில் ஆர்ப்பரிப்பார்கள்; ஏனென்றால் நீர் பெய்விக்கும் பனி மின்னுகிற ஒளி போன்ற பனி. இறந்து நெடுங்காலமானோரை பூமி மறுபடியும் பிறப்பிக்கும்.”​—⁠ஏசாயா 26:19, த நியூ இங்லிஷ் பைபிள்.

      இது ஆறுதலாக இல்லையா? சிசு தனது தாயின் கருப்பையில் பாதுகாப்பாக இருப்பது போல, இறந்தோர் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள். சொல்லப்போனால், கல்லறையில் ஓய்வெடுப்பவர்கள் சர்வ வல்லமையுள்ள கடவுளின் எல்லையற்ற நினைவில் பூரண பாதுகாப்புடன் இருக்கிறார்கள். (லூக்கா 20:37, 38) அவர்கள் விரைவில் உயிரடைவார்கள்; புதிதாக பிறக்கும் குழந்தையின் வரவுக்காக காத்திருந்த குடும்பத்தினர் அதை அன்போடு வரவேற்பதைப் போல மகிழ்ச்சி ததும்பும் உலகில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்! ஆகவே, மரணமே வந்தாலும்கூட நம்பிக்கை இருக்கிறது.

      நம்பிக்கை உங்களுக்கு எதை செய்யும்

      நம்பிக்கையின் மதிப்பைப் பற்றி பவுல் நமக்கு நிறைய கற்பிக்கிறார். நம்பிக்கை ஆன்மீக சர்வாயுதவர்க்கத்தின் இன்றியமையாத பாகம் என அவர் பேசினார்; அதை தலைக்கவசத்திற்கு (ஹெல்மெட்) ஒப்பிட்டார். (1 தெசலோனிக்கேயர் 5:8) ஏன் அவர் அதற்கு ஒப்பிட்டார்? நாம் பார்க்கலாம், பைபிள் காலங்களில், ஒரு படைவீரன் போருக்குச் செல்வதற்கு முன் தோல் அல்லது துணி தொப்பிக்கு மேல் உலோகத்தாலான ஒரு ஹெல்மெட்டை அணிவது வழக்கம். இந்த ஹெல்மெட் இருந்ததால், தலைக்கு வரும் பெரும்பாலான தாக்குதல்கள் ஹெல்மெட்டில் பட்டு தெறித்துச் சென்றுவிடும். பவுல் சொல்ல வந்த குறிப்பு என்ன? தலைக்கு ஹெல்மெட் பாதுகாப்பாக இருப்பது போல, நம்பிக்கை மனதை, அதாவது சிந்தனா திறன்களைப் பாதுகாக்கிறது. கடவுளுடைய நோக்கங்கள் சம்பந்தமாக உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால், துன்பங்கள் வரும்போது பயத்தினாலோ நம்பிக்கையின்மையாலோ உங்களுடைய மன சமாதானம் குலையாது. யாருக்குத்தான் இப்படிப்பட்ட ஹெல்மெட் தேவையில்லை?

      கடவுளுடைய சித்தத்தோடு தொடர்புடைய நம்பிக்கைக்கு பவுல் மற்றொரு தத்ரூபமான உதாரணத்தைப் பயன்படுத்தினார். அவர் இவ்வாறு எழுதினார்: “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.” (எபிரெயர் 6:19) ஒரு தடவைக்கும் மேல் கப்பல் சேதத்திலிருந்து உயிர் தப்பியதால், நங்கூரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பவுல் நன்றாக அறிந்திருந்தார். புயலில் சிக்கிக்கொள்ளும்போது மாலுமிகள் கப்பலின் நங்கூரத்தை கீழே இறக்குவார்கள். கடலுக்கு அடியில் மண்ணில் அது புதைந்துகொண்டு உறுதியாக இருந்தால், கப்பல் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டு பாறையில் மோதி சேதமடைந்துவிடாமல் ஓரளவு பாதுகாப்பாக இருக்கும்.

      இதைப் போலவே, நமக்கு கடவுள் தந்துள்ள வாக்குறுதிகள் ‘நிலையும் உறுதியுமான’ நம்பிக்கையாக இருந்தால், புயல் போல் தாக்கும் கொந்தளிப்புமிக்க காலங்களில் அந்த நம்பிக்கை நம்மை பாதுகாக்கும். போரோ குற்றச்செயலோ துன்பமோ, ஏன் மரணமோகூட மனிதகுலத்தை இனி ஒருபோதும் வாட்டி வதைக்காத ஒரு காலம் விரைவில் வருமென யெகோவா வாக்குறுதி தருகிறார். (பக்கம் 10-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) அந்த நம்பிக்கையை உறுதியாக பற்றிக்கொள்வது பேரழிவிலிருந்து தப்பிப்பிழைக்க நமக்கு உதவும்; இன்று இந்த உலகில் பரவலாக காணப்படும் தாறுமாறான, ஒழுக்கங்கெட்ட மனப்பான்மைக்கு இணங்கிச் செல்வதற்குப் பதிலாக கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதற்குத் தேவையான ஊக்கத்தையும் தரும்.

      யெகோவா தரும் நம்பிக்கை உங்களையும் தனிப்பட்ட விதமாக உட்படுத்துகிறது. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என கடவுள் நோக்கம் கொண்டிருந்தாரோ அதன்படி நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழவே விரும்புகிறார். ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும்’ என்பதே அவருடைய ஆசை. எப்படி? முதலாவதாக, ஒவ்வொருவரும் ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டும்.’ (1 தீமோத்தேயு 2:4) கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தைப் பற்றிய ஜீவனளிக்கும் அறிவை பெறும்படி இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போர் உங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அதன் மூலம் கடவுள் தரும் நம்பிக்கை இவ்வுலகில் நீங்கள் கண்டடையும் எந்தவொரு நம்பிக்கையையும்விட மிகவும் மேலான ஒன்றாக ஆகும்.

      இத்தகைய நம்பிக்கை இருப்பதால், நீங்கள் ஒருபோதும் உதவியற்றவராக உணர வேண்டியதில்லை, ஏனென்றால் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நீங்கள் வைக்கும் எந்த இலக்குகளையும் அடையத் தேவையான பலத்தை கடவுள் உங்களுக்குத் தருவார். (2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13) அப்படிப்பட்ட நம்பிக்கைதான் உங்களுக்குத் தேவை அல்லவா? ஆகவே, அப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு தேவையென்றால், அதற்காக நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், தைரியம் கொள்ளுங்கள். நம்பிக்கை உங்கள் அருகிலேயே இருக்கிறது. அதை நீங்கள் கண்டடைய முடியும்! (g04 4/22)  

      [பக்கம் 10-ன் பெட்டி/படம்]

      நம்பிக்கைக்கு காரணங்கள்

      பின்வரும் பைபிள் கருத்துக்கள் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க உதவும்:

      ◼ மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தை கடவுள் வாக்குறுதி அளிக்கிறார்.

      இந்த முழு பூமியும் பூங்காவனம் போன்ற பரதீஸாக மாறும், ஒன்றுபட்ட ஒரே குடும்பமாக மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என அவரது வார்த்தை சொல்கிறது.​—⁠சங்கீதம் 37:11, 29; ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:3, 4.

      ◼ கடவுளால் பொய் சொல்ல முடியாது.

      எல்லா விதமான பொய்களையும் அவர் வெறுக்கிறார். அளவிட முடியாதளவுக்கு யெகோவா பரிசுத்தமானவர், அதாவது தூய்மையானவர்; ஆகவே அவரால் பொய் சொல்லவே முடியாது.​—⁠நீதிமொழிகள் 6:16-19; ஏசாயா 6:2, 3; தீத்து 1:3; எபிரெயர் 6:⁠18.

      ◼ கடவுளுக்கு அளவற்ற வல்லமை இருக்கிறது.

      யெகோவா மட்டுமே சர்வ வல்லமையுள்ளவர். இப்பிரபஞ்சத்தில் உள்ள எதுவுமே அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தடுக்க முடியாது.​—⁠யாத்திராகமம் 15:11; ஏசாயா 40:25, 26.

      ◼ நீங்கள் என்றென்றும் வாழ வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.

      ​—⁠யோவான் 3:16; 1 தீமோத்தேயு 2:3, 4.

      ◼ கடவுளுக்கு நம்மீது நம்பிக்கை இருக்கிறது.

      நம் குற்றங்குறைகளை பார்க்காமல் நம் நற்குணங்களையும் முயற்சிகளையும் முக்கியமாய் கவனிக்கிறார். (சங்கீதம் 103:12-14; 130:3; எபிரெயர் 6:10) நாம் சரியானதை செய்வோம் என நம்புகிறார், அவ்வாறே செய்யும்போது சந்தோஷப்படுகிறார்.​—⁠நீதிமொழிகள் 27:⁠11.

      ◼ தெய்வீக இலக்குகளை அடைய கைகொடுப்பதாக கடவுள் வாக்குறுதி தருகிறார்.

      தங்களுக்கு உதவி ஏதும் இல்லையென அவரது ஊழியர்கள் ஒருபோதும் நினைக்க வேண்டியதில்லை. நமக்கு உதவ கடவுள் தமது பரிசுத்த ஆவியை தாராளமாக அள்ளி வழங்குகிறார்; அதுதான் இப்பிரபஞ்சத்திலேயே மிக வலிமைமிக்க சக்தி.​—⁠பிலிப்பியர் 4:⁠13.

      ◼ கடவுள்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.

      முழுக்க முழுக்க நம்பகமான அவர் உங்களுக்கு ஒருபோதும் ஏமாற்றமளிக்க மாட்டார்.​—⁠சங்கீதம் 25:⁠3.

      [பக்கம் 12-ன் படம்]

      தலையை ஹெல்மெட் பாதுகாப்பது போல, நம்பிக்கை உங்கள் மனதை பாதுகாக்கிறது

      [பக்கம் 12-ன் படம்]

      நங்கூரத்தைப் போல, உறுதியாக ஊன்றப்பட்ட நம்பிக்கை ஸ்திரத்தன்மையை வழங்கும்

      [படத்திற்கான நன்றி]

      Courtesy René Seindal/Su concessione del Museo Archeologico Regionale A. Salinas di Palermo

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்