யெகோவா எப்போதும் நீதியானதையே செய்கிறார்
‘யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்.’—சங்கீதம் 145:17.
1 .உங்களைப் பற்றி ஒருவர் தவறான முடிவுக்கு வருகையில் நீங்கள் எப்படி உணருவீர்கள், இப்படிப்பட்ட ஓர் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
யாராவது உங்களைப் பற்றித் தவறான முடிவுக்கு எப்போதாவது வந்திருக்கிறார்களா? ஒருவேளை விஷயத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல், உங்களுடைய செயல்களையோ உள்நோக்கங்களையோ சந்தேகித்திருக்கிறார்களா? அப்படியானால் உங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. இதிலிருந்து நாம் முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்: நமக்கு ஒரு விஷயம் முழுமையாகத் தெரியாதபோது அதைக் குறித்து அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதிருப்பது ஞானமான செயலாகும்.
2, 3. எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் அளவுக்கு போதிய விவரங்கள் இல்லாத பைபிள் பதிவுகளைக் குறித்ததில் சிலர் என்ன செய்கிறார்கள், ஆனாலும் யெகோவாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
2 யெகோவா தேவனைக் குறித்து நாம் முடிவுக்கு வரும்போதும் அந்தப் பாடத்தை மனதில் வைப்பது அவசியம். ஏன்? ஏனென்றால், பைபிளிலுள்ள பதிவுகள் சிலவற்றை வாசித்ததும் அவை நம் மனதைக் குழப்புவதாகத் தோன்றலாம். ஒருவேளை அப்பதிவுகளில், அதாவது கடவுளுடைய வணக்கத்தார் சிலருடைய செயல்களைப் பற்றிய அல்லது கடந்த காலத்தில் கடவுள் தண்டனைத் தீர்ப்புகள் வழங்கியதைப் பற்றிய பதிவுகளில் நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் அளவுக்கு போதிய விவரங்கள் இல்லாதிருக்கலாம். சிலர் அப்பதிவுகளைக் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள், ஏன், கடவுளுடைய நீதியையும் நியாயத்தையும்கூட சந்தேகித்திருக்கிறார்கள், இது வருந்தத்தக்க விஷயம். ஆனாலும், ‘யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்’ என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 145:17) அதுமட்டுமல்ல, அவர் ‘அநியாயஞ் செய்ய மாட்டார்’ என்றும்கூட அவருடைய வார்த்தை உறுதியளிக்கிறது. (யோபு 34:12; சங்கீதம் 37:28) அப்படியானால், அவரைப் பற்றி மற்றவர்கள் தவறான முடிவுக்கு வரும்போது அவருக்கு எப்படி இருக்குமென சற்று கற்பனை செய்துபாருங்கள்.
3 யெகோவாவின் தீர்ப்புகளை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களை நாம் சிந்திக்கலாம். அதன் பிறகு, அந்தக் காரணங்களை மனதில் வைத்து, சிலருக்குப் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் இரண்டு பைபிள் பதிவுகளை நாம் ஆராயலாம்.
யெகோவாவின் தீர்ப்புகளை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
4. கடவுளுடைய செயல்களைக் குறித்துச் சிந்திக்கையில் நாம் ஏன் பணிவுடன் இருக்க வேண்டும்? விளக்கவும்.
4 முதல் காரணம், ஒரு சம்பவத்தில் உட்பட்டுள்ள எல்லா உண்மைகளும் கடவுளுக்குத் தெரியும், நமக்குத் தெரியாது; ஆகவே, அவருடைய செயல்களைக் குறித்துச் சிந்திக்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும். இதை இப்படி விளக்கலாம்: பாரபட்சமற்றவர் எனப் பெயரெடுத்திருக்கும் ஒரு நீதிபதி, வழக்கு ஒன்றில் தீர்ப்பளிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். என்ன நடந்தது, ஏது நடந்ததென முழுமையாகத் தெரியாத ஒருவர், அல்லது அதில் உட்பட்டுள்ள சட்டதிட்டங்களை உண்மையில் அறியாத ஒருவர் அவருடைய தீர்ப்பைக் குறைகூறினால் அந்த நபரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் தவறான முடிவுக்கு வருவது முட்டாள்தனமாகும். (நீதிமொழிகள் 18:13) அப்படியானால் அற்ப மனிதர்கள், ‘சர்வலோக நியாயாதிபதியைக்’ குறைகூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!—ஆதியாகமம் 18:25.
5. சிலருக்குக் கடவுள் அளித்த தீர்ப்புகளைப் பற்றிய பைபிள் பதிவுகளை வாசிக்கையில் நாம் எதை மறந்துவிடாதிருக்க வேண்டும்?
5 கடவுளுடைய தீர்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு இரண்டாவது காரணம், மனிதரைப் போல் அல்லாமல் அவர் இருதயத்தைப் பார்க்கிறார் என்பதே. (1 சாமுவேல் 16:7) “கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்” என அவருடைய வார்த்தை சொல்கிறது. (எரேமியா 17:10) ஆகவே, கடவுள் சிலருக்கு அளித்த தீர்ப்புகளைப் பற்றிய பைபிள் பதிவுகளை நாம் வாசிக்கையில், மனதில் புதைந்திருக்கும் எண்ணங்கள், நோக்கங்கள், யோசனைகள் என எல்லாவற்றையும் அவர் பார்க்கிறார் என்பதை நாம் மறந்துவிடாதிருப்போமாக.—1 நாளாகமம் 28:9.
6, 7. (அ) பெரிய நஷ்டமே வந்தாலும் யெகோவா நியாயமும் நீதியுமான தராதரங்களை உறுதியாகக் கடைப்பிடிக்கிறவர் என்பதை எப்படிக் காண்பித்திருக்கிறார்? (ஆ) கடவுள் நீதியாகவும் நியாயமாகவும் செயல்பட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிற பைபிள் பதிவு ஒன்றை வாசிக்கும்போது, நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
6 யெகோவாவின் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு மூன்றாவது காரணத்தைக் கவனியுங்கள்: தமக்குப் பெரிய நஷ்டமே வந்தாலும் அவர் தம்முடைய நீதியான தராதரங்களை உறுதியாகக் கடைப்பிடிக்கிறார். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக யெகோவா தம் குமாரனை அளிப்பதன் மூலம் தம்முடைய நியாயமும் நீதியுமான தராதரங்களைக் கடைப்பிடித்தார். (ரோமர் 5:18, 19) ஆனாலும், தம்முடைய நேசக் குமாரன் கழுமரத்தில் பாடுபட்டு மரிப்பதைக் கண்டது அவருக்குத் தாங்க முடியாத வேதனையை அளித்திருக்கும். இது யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன தெரிவிக்கிறது? ‘கிறிஸ்து இயேசு அளித்த மீட்பைப்’ பற்றிக் குறிப்பிடுகையில், ‘கடவுளுடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டே’ அது அளிக்கப்பட்டது என பைபிள் கூறுகிறது. (ரோமர் 3:24-26) மற்றொரு மொழிபெயர்ப்பில் ரோமர் 3:25 இவ்வாறு சொல்கிறது: “கடவுள் எப்போதுமே நீதியும் நேர்மையுமான காரியங்களைச் செய்கிறவர் என்பதை இது காட்டியது.” (நியூ சென்ச்சுரி வர்ஷன்) ஆம், மீட்கும்பொருளை அளிக்க ஏற்பாடு செய்கையில் யெகோவா மாபெரும் தியாகம் செய்ய மனமுள்ளவராய் இருந்தது, “நீதியும் நேர்மையுமான காரியங்களை” அவர் எவ்வளவு உயர்வாக மதித்தார் என்பதைக் காட்டுகிறது.
7 ஆகவே, கடவுள் நீதியாகவும் நியாயமாகவும் செயல்பட்டாரா எனச் சிலரது மனதில் கேள்வியை எழுப்புகிற பைபிள் பதிவு ஒன்றை வாசிக்கும்போது, நாம் இதை நினைவில் வைக்க வேண்டும்: நியாயமும் நீதியுமான தராதரங்களின் மீது அவருக்குள்ள பற்றுதல் காரணமாக தம் சொந்தக் குமாரனென்றும் பாராமல் அவரை வேதனைமிக்க மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அப்படியானால், மற்ற விஷயங்களில் இந்தத் தராதரங்களை அவர் மீறுவாரா என்ன? யெகோவா தம்முடைய நீதியும் நியாயமுமான தராதரங்களை ஒருபோதும் மீற மாட்டார் என்பதே உண்மை. ஆகவே, அவர் எப்போதுமே நீதியாகவும் நேர்மையாகவும் செயல்படுகிறவர் என்பதை நம்புவதற்கு நமக்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன.—யோபு 37:23.
8. யெகோவா நியாயத்திலும் நீதியிலும் ஏதோவொரு விதத்தில் குறைவுபடுகிறாரென மனிதர்கள் நினைப்பது ஏன் பொருத்தமற்றது?
8 யெகோவாவின் தீர்ப்புகளை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான நான்காவது காரணத்தை கவனியுங்கள்: யெகோவா தம் சாயலில் மனிதனைப் படைத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:27) ஆகவே நியாயம், நீதி போன்ற உணர்வுகளுடன் அவருடைய பண்புகளை நாமும் பெற்றிருக்கிறோம். நியாயத்திலும் நீதியிலும் ஏதோவொரு விதத்தில் யெகோவா குறைவுபடுகிறாரென எண்ணும்படி நம்மிடமுள்ள அப்பண்புகள் தூண்டினால் அது பொருத்தமற்றதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட பைபிள் பதிவு நம் மனதைக் குழப்புமானால், சுதந்தரித்துள்ள பாவத்தின் காரணமாகத்தான் நீதி, நியாயம் பற்றிய நம் உணர்வு குறைவுபட்டுள்ளது என்பதை நாம் நினைவில் வைப்பது அவசியம். யெகோவா தேவன் நியாயத்திலும் நீதியிலும் பூரணராக இருக்கிறார்; அவரது சாயலில் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். (உபாகமம் 32:4) அப்படியிருக்க, கடவுளைவிட மனிதர்கள் நீதியிலும் நியாயத்திலும் உயர்ந்தவர்கள் என நினைத்துப் பார்ப்பதுகூட அபத்தமானது.—ரோமர் 3:4, 5; 9:14.
9, 10. யெகோவா தம் செயல்களைப் பற்றி மனிதர்களிடம் விளக்கவோ நிரூபிக்கவோ வேண்டிய கட்டாயம் ஏன் இல்லை?
9 யெகோவாவின் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு ஐந்தாவது காரணம், அவரே “பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.” (சங்கீதம் 83:17) தம் செயல்களைப் பற்றி மனிதர்களிடம் விளக்கவோ நிரூபிக்கவோ வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை. அவர் ஒரு பெரிய குயவராக இருக்கிறார், நாம் மண்பாண்டங்களாக வடிவமைக்கப்படுகிற களிமண் போல் இருக்கிறோம்; ஆகவே, மண்பாண்டங்களான நம்மை என்ன செய்ய வேண்டுமென விரும்புகிறாரோ அதன்படியே அவர் செய்கிறார். (ரோமர் 9:19-21) அவருடைய கையில் உருவான மண்பாண்டங்களாகிய நமக்கு, அவரது தீர்மானங்களையும் செயல்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? மனிதரிடம் கடவுள் நடந்துகொண்ட விதத்தை முற்பிதாவாகிய யோபு தவறாகப் புரிந்துகொண்டபோது யெகோவா அவரைத் திருத்தினார். “நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக் கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?” என்று கேட்டார். தவறுதலாய் பேசிவிட்டதற்காக யோபு பிற்பாடு மனம் வருந்தினார். (யோபு 40:8; 42:6) கடவுளிடம் நாம் ஒருபோதும் குறை காணாதிருப்போமாக!
10 ஆகவே, யெகோவா எப்போதும் நீதியானதையே செய்கிறவர் என நம்புவதற்கு நல்ல காரணங்கள் இருப்பது தெளிவாகிறது. யெகோவாவின் வழிகளைப் புரிந்துகொள்ள உதவும் இந்த அடிப்படை காரணங்களை மனதில் வைத்து இரண்டு பைபிள் பதிவுகளை இப்போது ஆராயலாம்; இவை சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. முதல் பதிவு கடவுளுடைய வணக்கத்தார் ஒருவரின் செயல்களைப் பற்றியது, இரண்டாவது கடவுளே நிறைவேற்றிய ஒரு தண்டனைத் தீர்ப்பைப் பற்றியது.
கோபக்கார கும்பலிடம் தன் மகள்களைக் கொடுக்க லோத்து முன்வந்தது ஏன்?
11, 12. (அ) மனித உருவில் இரண்டு தேவதூதர்களைச் சோதோமுக்குக் கடவுள் அனுப்பியபோது என்ன நடந்ததென விளக்குங்கள். (ஆ) இப்பதிவு சிலருடைய மனதில் என்ன கேள்விகளை எழுப்பியுள்ளன?
11 மனித உருவில் இரண்டு தேவதூதர்களைச் சோதோமுக்குக் கடவுள் அனுப்பியபோது என்ன நடந்தது என்பதை ஆதியாகமம் 19-ம் அதிகாரத்தில் நாம் காணலாம். விருந்தாளிகளாக வந்த அந்தத் தேவதூதர்களை லோத்து தன்னுடைய வீட்டில் தங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார். அன்று இரவில் பட்டணத்திலிருந்த ஆண்கள் கும்பலாக வந்து அவரது வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள்; அந்த விருந்தாளிகளிடம் முறைகேடாய் நடந்துகொள்வதற்காக அவர்களை வெளியே அனுப்பும்படி அதிகாரம் செய்தார்கள். அவர்களிடம் லோத்து நியாயத்தை எடுத்துரைக்க முயன்றும் பயனில்லாமல் போயிற்று. தன்னுடைய விருந்தாளிகளைப் பாதுகாக்க வழிதேடி, “சகோதரரே, இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டு வருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்ய வேண்டாம்” என அவர் சொன்னார். அவர்களோ அதைக் கேட்காமல் கதவை உடைத்துவிடும் அளவுக்கு வந்துவிட்டார்கள். விருந்தாளிகளாக வந்த தேவதூதர்கள், வெறிபிடித்த அந்தக் கூட்டத்தாரை கடைசியில் குருடர்களாகிப் போகும்படிச் செய்தார்கள்.—ஆதியாகமம் 19:1-11.
12 இப்பதிவு சிலருடைய மனதில் கேள்விகளை எழுப்பியிருப்பது நியாயம்தான். ‘விருந்தாளிகளைப் பாதுகாக்க, காம வெறிபிடித்த கும்பலிடம் தன் மகள்களைக் கொடுக்க லோத்து ஏன் முன்வந்தார்? அவர் அப்படி நடந்து கொண்டது முறையற்றதல்லவா, சொல்லப்போனால் கோழைத்தனம் அல்லவா?’ என அவர்கள் நினைக்கிறார்கள். இப்பதிவு சம்பந்தமாக, ‘நீதிமானாகிய லோத்து’ என எழுதும்படி பேதுருவைக் கடவுள் ஏன் ஏவினார்? கடவுளுடைய ஒப்புதலோடுதான் லோத்து அவ்வாறு நடந்துகொண்டாரா? (2 பேதுரு 2:7, 8) தவறான முடிவுக்கு வந்துவிடாதிருக்க இச்சம்பவத்தை இப்போது நாம் ஆராயலாம்.
13, 14. (அ) லோத்துவின் செயல்களைக் குறித்த பைபிள் பதிவில் நாம் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்? (ஆ) லோத்து கோழைத்தனமாகச் செயல்படவில்லை என எது காட்டுகிறது?
13 முதலாவதாக, லோத்துவின் செயல்கள் சரியானது என்றோ தவறானது என்றோ பைபிள் சொல்லாமல் நடந்த சம்பவத்தை மட்டுமே சொல்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். லோத்து என்ன நினைத்துக் கொண்டிருந்தார் அல்லது அந்த ஆட்களிடம் ஏன் அப்படிச் சொன்னார் என்பதையும்கூட பைபிள் விளக்குவதில்லை. ‘நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலில்’ அவர் வரும்போது ஒருவேளை அதைக் குறித்த விவரங்களை அவர் தெரியப்படுத்தலாம்.—அப்போஸ்தலர் 24:15.
14 லோத்து நிச்சயமாகவே ஒரு கோழை அல்ல. அவர் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்தார். அந்த விருந்தாளிகள் தன்னுடைய ‘கூரையின் நிழலிலே வந்திருக்கிறார்கள்’ எனச் சொன்னதன் மூலம், அவர்களுக்குப் பாதுகாப்பும் புகலிடமும் கொடுப்பது தன் கடமை என உணர்ந்ததைக் காட்டினார். ஆனால் அப்படிப் பதிலளிப்பது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. ஏனென்றால், சோதோம் பட்டணத்தார் “மனிதரிடம் அநியாயமாக நடந்துகொண்டார்கள், துளியும் கடவுள் பயமில்லாதவர்களாக இருந்தார்கள் . . . அவர்கள் அந்நியரை வெறுத்தார்கள், சோதோமிய பழக்கவழக்கங்களால் தங்களையே கெடுத்துக் கொண்டிருந்தார்கள்” என யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் குறிப்பிடுகிறார். என்றாலும், வெறுப்புணர்ச்சி கொண்ட அந்தக் கும்பலைக் கண்டு அவர் பயந்துவிடவில்லை. மாறாக, அவர் வெளியே வந்து அந்தக் கோபக்கார ஆட்களிடம் நியாயம் பேசினார். அதுமட்டுமல்ல, ‘வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவையும் பூட்டினார்.’—ஆதியாகமம் 19:6.
15. லோத்து விசுவாசத்துடன்தான் செயல்பட்டிருப்பார் என ஏன் சொல்லலாம்?
15 ‘என்னதான் இருந்தாலும், லோத்து ஏன் அந்தக் கும்பல்காரர்களிடம் தன் மகள்களைக் கொடுக்க முன்வர வேண்டும்?’ எனச் சிலர் கேட்கலாம். அவருடைய உள்நோக்கம் மோசமாக இருந்தது என முடிவுகட்டி விடுவதற்குப் பதிலாக, வேறு என்னென்ன சாத்தியங்கள் இருந்திருக்கும் எனச் சிந்தித்துப் பார்க்கலாம் அல்லவா? முதலாவதாக, லோத்து விசுவாசத்துடன்தான் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஏன் அப்படிச் சொல்லலாம்? தன் சித்தப்பாவான ஆபிரகாமின் மனைவி சாராளை யெகோவா காப்பாற்றிய சம்பவம் லோத்துவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அச்சம்பவத்தைச் சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். சாராள் மிக அழகாக இருந்ததால் தன்னை சகோதரன் என்று சொல்லும்படி ஆபிரகாம் அவளிடம் கூறியிருந்தார். ஏனென்றால் மற்றவர்கள் அவளைக் கடத்திச் செல்வதற்காக தன்னை எங்கே கொன்றுவிடுவார்களோ என்று பயந்தார்.a அதன் பிறகு, பார்வோனின் வீட்டிற்குச் சாராள் கொண்டு செல்லப்பட்டாள். ஆனால், அப்போது யெகோவா தலையிட்டு, அவளைப் பார்வோன் பலாத்காரம் செய்துவிடாதபடிப் பார்த்துக்கொண்டார். (ஆதியாகமம் 12:11-20) தன்னுடைய மகள்களையும் இதேவிதமாக அவர் பாதுகாப்பார் என்ற விசுவாசம் லோத்துவுக்கு இருந்திருக்க வேண்டும். ஆம் அதேதான் நடந்தது, யெகோவா தம் தூதர்கள் மூலம் தலையிட்டு, அந்த இளம் பெண்களைப் பாதுகாக்கவே செய்தார்.
16, 17. (அ) சோதோமிலிருந்த ஜனங்கள் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்த லோத்து எந்த விதத்தில் முயன்று கொண்டிருந்திருக்கலாம்? (ஆ) லோத்து எடுத்துரைத்த நியாயங்கள் எதுவாக இருந்தாலும் எந்த விஷயத்தைக் குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
16 மற்றொரு சாத்தியமும் இருந்தது. அதாவது, அந்த ஜனத்தார் மத்தியில் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்காகக்கூட லோத்து ஒருவேளை முயன்று கொண்டிருந்திருக்கலாம். அந்த சோதோம் பட்டணத்தார் ஓரினப் புணர்ச்சி வெறியர்கள் என்பதால் தன்னுடைய மகள்களை விரும்ப மாட்டார்கள் என அவர் நினைத்திருக்கலாம். (யூதா 7) அதுமட்டுமல்ல, அவருடைய மகள்களுக்கு ஏற்கெனவே திருமணம் நிச்சயமாகியிருந்ததால் அதே பட்டணத்தைச் சேர்ந்த அவருடைய மருமகன்களின் உறவினர்களும், நண்பர்களும், வியாபாரக் கூட்டாளிகளும் அந்தக் கும்பலில் இருந்திருக்கலாம். (ஆதியாகமம் 19:14) இந்த பந்தங்களின் நிமித்தம் அந்தக் கும்பலில் உள்ள சிலர் தன் மகள்களைப் பாதுகாக்க முன்வரலாம் என லோத்து நினைத்திருக்கலாம். இப்படியாக அந்தக் கும்பல் பிளவுபட்டுவிட்டால் நிலைமை அந்தளவுக்கு ஆபத்தாகி விடாது எனவும் அவர் நினைத்திருக்கலாம்.b
17 லோத்து எடுத்துரைத்த நியாயங்களும் அவருடைய உள்நோக்கங்களும் எப்படிப்பட்டவையாய் இருந்தாலும், ஒரு விஷயத்தைக் குறித்து நாம் உறுதியோடிருக்கலாம்: யெகோவா எப்போதும் நீதியானதையே செய்வதால், லோத்துவை ‘நீதிமானாக’ அவர் கருதியதற்கு நல்ல காரணம் இருந்திருக்க வேண்டும். வெறிபிடித்த அந்த ஆட்களின் செயல்களைப் பற்றிச் சிந்திக்கையில், அந்தத் துன்மார்க்க பட்டணத்தார் மீது யெகோவா தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றியது முற்றிலும் நியாயமானதே என்பதில் எந்தச் சந்தேகமாவது இருக்க முடியுமா?—ஆதியாகமம் 19:23-25.
ஊசாவை யெகோவா ஏன் சாகடித்தார்?
18. (அ) பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவர தாவீது முயன்றபோது என்ன நடந்தது? (ஆ) இப்பதிவு என்ன கேள்வியை எழுப்புகிறது?
18 சிலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிற மற்றொரு பதிவு, தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவர தாவீது எடுத்த முயற்சியைப் பற்றியது. அந்தப் பெட்டி ஒரு வண்டியில் வைக்கப்பட்டது, ஊசாவும் அவனுடைய சகோதரனும் அதற்கு முன் சென்றார்கள். “அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் [“அவபக்தியான செயலின் நிமித்தம்,” NW] தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்” என பைபிள் விவரிக்கிறது. சில மாதங்களுக்குப் பிற்பாடு, கடவுள் சொன்ன விதமாக கோகாத் புத்திரரான லேவியர் அதைச் சுமந்து சென்றபோது அது நல்ல முறையில் எருசலேமை அடைந்தது. (2 சாமுவேல் 6:6, 7; எண்ணாகமம் 4:15; 7:9; 1 நாளாகமம் 15:1-14) ‘யெகோவா ஏன் இவ்வளவு கடுமையாக நடந்துகொண்டார்? பெட்டியைப் பாதுகாக்கத்தானே ஊசா முயன்றான்’ எனச் சிலர் கேட்கலாம். தவறான முடிவுக்கு நாம் வந்துவிடாதிருக்க, சில பயனுள்ள விவரங்களை இப்போது சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
19. அநீதியாகச் செயல்பட யெகோவாவால் ஏன் முடியாது?
19 அநீதியாகச் செயல்பட யெகோவாவால் முடியாது என்பதை நாம் நினைவில் வைப்பது அவசியம். (யோபு 34:10) அவரைப் பொறுத்தவரை அது அன்பற்ற செயலாகும்; அதுமட்டுமல்ல ‘தேவன் அன்பாக இருக்கிறார்’ என்பதை நம்முடைய பைபிள் படிப்பு மூலம் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 4:8) மேலும், “நீதியும் நியாயமும் [கடவுளுடைய] சிங்காசனத்தின் ஆதாரம்” எனவும் பைபிள் நமக்குச் சொல்கிறது. (சங்கீதம் 89:14) அப்படியானால், யெகோவாவால் எப்படி அநீதியாகச் செயல்பட முடியும்? அவர் அப்படிச் செயல்படுவாரானால், அது அவருடைய பேரரசுரிமையின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்வதாய் இருக்குமே.
20. உடன்படிக்கை பெட்டி சம்பந்தமான சட்டங்களை ஊசா அறிந்திருக்க வேண்டும் என ஏன் சொல்லலாம்?
20 ஊசாவுக்கு விஷயங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதை மனதில் வையுங்கள். அந்தப் பெட்டி யெகோவாவின் பிரசன்னத்துக்கு அடையாளமாக இருந்தது. உரியவர்களைத் தவிர வேறு யாரும் அதைத் தொடக்கூடாதென நியாயப்பிரமாணம் கட்டளையிட்டிருந்தது, மீறுபவர்களுக்கு மரண தண்டனை எனவும் தெள்ளத்தெளிவாக எச்சரித்திருந்தது. (எண்ணாகமம் 4:18-20; 7:89) ஆகவே, அந்தப் பரிசுத்தப் பெட்டியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது ஏனோதானோவென செய்ய வேண்டிய ஒரு வேலையாக இருக்கவில்லை. ஊசா (ஆசாரியனாக இல்லாவிட்டாலும்) ஒரு லேவியனாக இருந்ததால் நியாயப்பிரமாணச் சட்டத்தை அவன் நன்கு அறிந்தவனாக இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அந்தப் பெட்டி பத்திரமாக இருப்பதற்காக பல வருடங்களுக்கு முன்பு அவனுடைய அப்பாவின் வீட்டிற்கு அது கொண்டு வரப்பட்டிருந்தது. (1 சாமுவேல் 6:20–7:1) சுமார் 70 வருடங்கள் அந்த வீட்டிலேயே அது இருந்தது, அதன் பிறகுதான் அதை அங்கிருந்து எடுத்துவர தாவீது தீர்மானித்தார். ஆகவே, அந்தப் பெட்டி சம்பந்தமான சட்டங்களைச் சிறுவயதிலிருந்தே ஊசா அறிந்திருக்க வேண்டும்.
21. ஊசாவின் விஷயத்திலிருந்து, இருதயத்தின் எண்ணங்களை யெகோவா பார்க்கிறார் என்பதை நாம் நினைவில் வைப்பது ஏன் முக்கியம்?
21 முன்பு குறிப்பிட்டபடி, யெகோவா இருதயத்தைப் பார்க்கிறவர். ஊசா செய்தது ‘அவபக்தியான செயல்’ என பைபிள் சொல்வதால், தன்னலமான ஏதோவொரு நோக்கம் அவனுக்கு இருந்ததை யெகோவா பார்த்திருக்கலாம்; பைபிள் பதிவு அதைத் திட்டவட்டமாகக் குறிப்பிடாவிட்டாலும் யெகோவா அதைப் பார்த்திருப்பார். ஒருவேளை அகந்தை பிடித்தவனாக, வரம்பு மீறி நடக்கிறவனாக ஊசா இருந்தானா? (நீதிமொழிகள் 11:2) தன் குடும்பத்தார் பாதுகாத்து வந்த அந்தப் பெட்டியை எல்லாருக்கும் முன் தலைமைதாங்கி எடுத்துச் சென்றதில் அவனுக்குத் தற்பெருமை தலைக்கேறியதா? (நீதிமொழிகள் 8:13) யெகோவா, தமது பிரசன்னத்துக்கு அடையாளமாக விளங்கிய அந்தப் பரிசுத்தப் பெட்டியை விழாதவாறு தடுக்க முடியாது என நினைக்குமளவுக்கு அவன் விசுவாசமற்றவனாக இருந்தானா? காரணம் எதுவாயினும், யெகோவா நீதியானதையே செய்தார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். ஊசாவின் இருதயத்தில் இருந்த ஏதோவொன்றை அவர் பார்த்திருக்க வேண்டும், அதனால்தான் அவர் உடனடியாக அவனைத் தண்டித்தார்.—நீதிமொழிகள் 21:2.
நம்பிக்கைக்குச் சிறந்த ஆதாரம்
22. சில சமயங்களில், யெகோவாவின் வார்த்தை குறிப்பிட்ட சில நுட்பவிவரங்களை அளிக்காதது அவருடைய ஞானத்தை எப்படிப் பளிச்சிடச் செய்கிறது?
22 சில சமயங்களில் யெகோவாவின் வார்த்தை குறிப்பிட்ட சில நுட்பவிவரங்களை அளிக்காதது அவரது ஒப்பற்ற ஞானத்தை பளிச்சிடச் செய்கிறது. அப்படி நுட்பவிவரங்களை அளிக்காததன் மூலம் அவர் மீதுள்ள நம்பிக்கையை வெளிக்காட்ட நமக்கு வாய்ப்பு கொடுக்கிறார். நாம் இதுவரை ஆராய்ந்த விஷயங்களிலிருந்து, யெகோவாவின் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு நமக்குத் தகுந்த காரணங்கள் இருப்பது தெளிவாக இருக்கிறதல்லவா? ஆம், நேர்மை இருதயத்துடனும் திறந்த மனதுடனும் யெகோவாவுடைய வார்த்தையை நாம் படிக்கும்போது, அவர் எப்போதுமே நியாயத்தையும் நீதியையும் செய்பவர் என்பதை உறுதியாக நம்புமளவுக்கு அவரைப் பற்றி ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். ஆகவே, பைபிள் பதிவுகள் சிலவற்றை வாசிக்கும்போது கேள்விகள் எழும்பினால், அவற்றிற்குரிய நேரடியான, தெளிவான பதில்களைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், யெகோவா நீதியானதையே செய்திருக்கிறார் என்பதில் முழு நம்பிக்கை வைப்போமாக.
23. யெகோவா எதிர்காலத்தில் என்ன செய்வாரென நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்?
23 யெகோவா எதிர்காலத்தில் செய்யப் போவதைக் குறித்ததிலும் நாம் இதே விதமான நம்பிக்கையோடு இருக்கலாம். ஆகவே, நெருங்கி வந்துகொண்டிருக்கும் மிகுந்த உபத்திரவத்தில் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது, அவர் ‘துன்மார்க்கனோடே நீதிமானையும் சேர்த்து அழித்துவிட மாட்டார்’ என நாம் உறுதியோடிருக்கலாம். (ஆதியாகமம் 18:23) நீதி, நியாயத்தின் மீது அவருக்குள்ள அன்பு, அவ்வாறு செய்ய அவரை ஒருபோதும் அனுமதிக்காது. வரவிருக்கும் புதிய உலகில் நம்முடைய எல்லாத் தேவைகளையும் மிகச் சிறந்த விதத்தில் அவர் பூர்த்தி செய்வார் என்றும்கூட நாம் முழு நம்பிக்கையோடு இருக்கலாம்.—சங்கீதம் 145:16.
[அடிக்குறிப்புகள்]
a ஆபிரகாம் அப்படிப் பயந்தது நியாயமானதே; ஏனென்றால் ஒரு பார்வோன், ஆயுதந்தரித்த தன் ஆட்களை அனுப்பி, ஒருவரைக் கொன்று, அவருடைய அழகிய மனைவியைப் பிடித்துக்கொண்டு வந்ததாக பழங்கால நாணற்புல் சுவடி ஒன்று சொல்கிறது.
b கூடுதல் தகவல்களுக்கு டிசம்பர் 1, 1979 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கம் 31-ஐக் காண்க.
நினைவிருக்கிறதா?
• என்ன காரணங்களுக்காக யெகோவாவின் தீர்ப்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
• கோபக்கார கும்பலிடம் லோத்து தன் மகள்களைக் கொடுக்க முன்வந்ததைப் பற்றித் தவறான முடிவுக்கு வராதிருக்க எது நமக்கு உதவும்?
• ஊசாவை யெகோவா சாகடித்ததற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள என்ன அம்சங்கள் நமக்கு உதவும்?
• யெகோவா எதிர்காலத்தில் என்ன செய்வாரென நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்?