வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
திருமண நிச்சயத்தை கிறிஸ்தவர்கள் எவ்வளவு முக்கியமானதாக கருதவேண்டும்?
திருமணத்திற்காக நிச்சயிக்கப்படுவது மகிழ்ச்சியில் திளைப்பதற்கான ஒரு காரணமே, ஆனாலும் முக்கியமான ஒரு விஷயமும்கூட. முதிர்ச்சி வாய்ந்த எந்தக் கிறிஸ்தவனும் திருமண நிச்சயத்தை அசட்டையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தான் நினைத்த நேரத்தில் அதை முறித்துவிடலாம் என்றும் நினைக்கக்கூடாது. நிச்சயத்திற்கு பிறகு உள்ள காலம், திருமணத்திற்கு முன்பாக இருவரும் ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்வதற்கும் அனுமதிக்கிறது.
இந்த விஷயத்தைப் பற்றி பேசுகையில் ஒரு முக்கியமான காரியத்தை நாம் மனதில் வைக்க வேண்டும். நிச்சயதார்த்தம், திருமணம் போன்றவை சம்பந்தப்பட்ட பழக்க வழக்கங்கள் காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றாற்போல் வெகுவாக மாறுபடுகின்றன. இதற்கு பைபிளில் நல்ல உதாரணம் உள்ளது.
“புருஷரை அறியாத” லோத்துவின் இரண்டு குமாரத்திகளுக்கும் உள்ளூரிலுள்ள இரண்டு ஆண்களுடன் ஏதோவொரு விதத்தில் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. லோத்துவின் ‘மருமக்கள்மார்’ அவருடைய ‘குமாரத்திகளை விவாகம் பண்ணவிருந்தனர்.’ ஆனாலும் இந்த நிச்சயங்கள் ஏன் அல்லது எவ்வாறு நிகழ்ந்தன என்பதைப் பற்றி பைபிள் நமக்கு எதுவும் சொல்வதில்லை. அவருடைய குமாரத்திகள் வயதுவந்தவர்களாக இருந்தனரா? யாரை மணந்துகொள்வது என்பதைத் தெரிவுசெய்வதில் அவர்களுக்கு அதிக உரிமை இருந்ததா? வெளியரங்கமான ஏதாவது ஒரு செயல் செய்து அவர்கள் நிச்சயம் செய்துகொண்டனரா? எதுவுமே நமக்கு தெரியாது. (ஆதியாகமம் 19:8-14) யாக்கோபின் விஷயமோ முற்றிலும் வேறு. ராகேலின் அப்பாவுக்காக ஏழு வருடம் வேலைசெய்த பிறகு, யாக்கோபு தான் ராகேலைத் திருமணம் செய்துகொள்ள அவரோடு தனிப்பட்ட ஒப்பந்தம் செய்துகொண்டார் என்பது நமக்கு தெரியும். யாக்கோபு, ராகேலை ‘என் மனைவி’ என்று சொன்னபோதிலும் அந்த வருடங்களின்போது அவர்கள் பாலுறவு கொள்ளவில்லை. (ஆதியாகமம் 29:18-21) இன்னொரு உதாரணத்தைக் கவனியுங்கள். தாவீது, சவுலின் மகளைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு பெலிஸ்தர்களைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது. தாவீது, சவுலின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு அவருடைய மகள் மீகாளை அவரால் திருமணம் செய்துகொள்ள முடிந்தது. (1 சாமுவேல் 18:20-28) அந்த “நிச்சயங்கள்” ஒன்றுக்கு ஒன்றும், இன்று அநேக நாடுகளில் பொதுவாக உள்ளதற்கும் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் நிச்சயம், திருமணம் போன்றவற்றைப் பற்றிய சட்டங்கள் இருந்தன. உதாரணமாக, ஓர் ஆண் ஒன்றுக்கும் அதிகமான மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ளலாம். அதோடு, அநேக காரணங்களுக்காக அவன் விவாகரத்து செய்யலாம், ஆனால் மனைவிக்கு அந்த உரிமை இருந்ததுபோல் தெரியவில்லை. (யாத்திராகமம் 22:16, 17; உபாகமம் 24:1-4) நிச்சயிக்கப்படாத கன்னிப் பெண்ணை கற்பழித்த ஒருவன் அவளுடைய அப்பா ஒப்புக்கொண்டால், அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதுமட்டுமா, அவனால் அவளை ஒருபோதுமே விவாகரத்து செய்யமுடியாது. (உபாகமம் 22:28, 29) திருமணம் சம்பந்தப்பட்ட மற்ற சட்டங்களும் இருந்தன; உதாரணமாக, பாலுறவை எந்தச் சமயங்களில் தவிர்க்க வேண்டும் என்பது அவற்றுள் ஒன்று. (லேவியராகமம் 12:2, 5; 15:24; 18:19) ஆனால் திருமண நிச்சயம் சம்பந்தப்பட்ட சட்டங்கள் என்ன?
சட்டத்தின் பார்வையில், நிச்சயிக்கப்படாத இஸ்ரவேல பெண்ணைவிட நிச்சயிக்கப்பட்ட பெண் வித்தியாசமானவள். ஒரு கருத்தில் அவள் திருமணமானவளாக கருதப்பட்டாள். (உபாகமம் 22:23-29; மத்தேயு 1:18, 19) இஸ்ரவேலர்கள் குறிப்பிட்ட சில உறவினர்களோடு நிச்சயம் அல்லது திருமணம் செய்துகொள்ளக் கூடாது. இவை பொதுவாக, இரத்த சம்பந்த உறவுகளாக இருந்தன; ஆனால் சொத்துரிமை காரணமாக சில நிச்சயங்களும் திருமணங்களும் தடைசெய்யப்பட்டன. (லேவியராகமம் 18:6-20; ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 15, 1978, பக்கங்கள் 25-28-ஐக் காண்க.) இதிலிருந்து, திருமண நிச்சயத்தை கடவுளுடைய ஊழியர்கள் அசட்டையாக கருதக்கூடாது என்பது தெளிவாக தெரிகிறது.
இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தின் இப்படிப்பட்ட எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஆனால் இப்பொழுதோ, நிச்சயம் அல்லது திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள் உட்பட கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. (ரோமர் 7:4, 6; எபேசியர் 2:15; எபிரெயர் 8:6, 13) திருமணம் பற்றிய கிறிஸ்தவ தராதரம் நியாயப்பிரமாணத்தில் இருந்ததைவிட வித்தியாசமானது என்றல்லவா இயேசு போதித்தார்? (மத்தேயு 19:3-9) இருந்தாலும், திருமணம் அல்லது நிச்சயத்தின் முக்கியத்துவத்தை அவர் குறைத்துவிடவில்லை. அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் என்பது எவ்வளவு முக்கியமானது?
அநேக தேசங்களில், பலர் தங்களுடைய திருமண துணையை தாங்களே தெரிவு செய்துகொள்கிறார்கள். ஒருவரையொருவர் மணந்துகொள்ள ஓர் ஆணும் பெண்ணும் வாக்குறுதி செய்துகொண்டாலே அவர்களுக்கு நிச்சயமானதாக கருதப்படுகிறது. பொதுவாக, அந்த நிச்சயத்தை உறுதிசெய்ய முறைப்படியான எந்த நடவடிக்கையும் அவசியமில்லை. சில இடங்களில், நிச்சயத்திற்கான அத்தாட்சியாக ஓர் ஆண் தனக்கு மனைவி ஆகப்போகிறவளுக்கு மோதிரத்தைப் பரிசாக கொடுப்பது இயல்பானதே. அல்லது நிச்சயத்தைப் பற்றி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிப்பது வழக்கம். உணவிற்காக குடும்பமாக சேர்ந்திருக்கும்போது அல்லது மற்ற சமயங்களில் சிறிய தொகுதியாக கூடியிருக்கும்போது அதை அறிவிக்கிறார்கள். இவை எல்லாம் தனிப்பட்ட விருப்பங்களே, வேதப்பூர்வ தேவைகள் அல்ல. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒப்புக்கொண்டதே நிச்சயமாகும். a
காதல் சந்திப்புகள், நிச்சயம் அல்லது திருமணம் செய்வதற்கு ஒரு கிறிஸ்தவன் அவசரப்படக் கூடாது. காதல் சந்திப்புகளை, நிச்சய அல்லது திருமண நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்ற சமயம் எது என்பதைத் தீர்மானிக்க உதவும் பைபிள் சார்ந்த விஷயங்களை நாங்கள் பிரசுரித்து வருகிறோம். b அவை எல்லாவற்றிலுமே, கிறிஸ்தவ திருமணம் நிலையான ஒன்று என்ற அறிவுரையே மையமாய் உள்ளது.—ஆதியாகமம் 2:24; மாற்கு 10:6-9.
இரண்டு கிறிஸ்தவர்கள் நிச்சயத்தைப் பற்றி நினைப்பதற்கு முன்பே ஒருவரையொருவர் ஓரளவு நன்றாக அறிந்திருக்க வேண்டும். ‘அவருடைய ஆவிக்குரிய நிலையையும் கடவுளுக்கான பக்தியைப் பற்றியும் எனக்கு நன்றாக தெரியுமா? வாழ்நாள் முழுவதும் அவரோடு சேர்ந்து கடவுளைச் சேவிப்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடியுமா? ஒருவர் மற்றவருடைய ஆள்தன்மைப் பற்றி போதுமானளவு தெரிந்திருக்கிறோமா? நித்தியகாலம் வரைக்கும் ஒத்துவாழ்வோம் என்பதைப் பற்றி நிச்சயமாக இருக்கிறேனா? ஒருவர் மற்றவருடைய முந்திய நடவடிக்கைகள் பற்றியும் தற்போதைய சூழ்நிலைகள் பற்றியும் அறிந்திருக்கிறோமா?’ என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வது மிகச் சிறந்தது.
இரண்டு கிறிஸ்தவர்களுக்கு நிச்சயம் முடிந்திருக்கிறதென்றால், சீக்கிரத்தில் திருமணம் நடக்கும் என அவர்களும் மற்றவர்களும்கூட எதிர்பார்ப்பது நியாயமானதே. ‘உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்’ என்றல்லவா இயேசு ஆலோசனைக் கொடுத்தார்? (மத்தேயு 5:37) நிச்சயம் செய்துகொள்ளும் கிறிஸ்தவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும். இருந்தாலும், ஏதோவொரு வினைமையான காரியம் நிச்சயத்திற்கு முன்பே சொல்லப்படவில்லை அல்லது மறைக்கப்பட்டது என்பதை ஒரு கிறிஸ்தவன் அறியவரலாம். ஏதாவதொரு அரிய சந்தர்ப்பத்தில் இவ்வாறு நிகழலாம். அது ஒருவருடைய முற்கால வாழ்க்கை பற்றிய முக்கியமான விஷயமாக, ஒழுக்கங்கெட்ட நடத்தை அல்லது குற்றச்செயல் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இதை அறியவரும் அந்தக் கிறிஸ்தவரே என்ன செய்வதென்பதை முடிவு செய்யவேண்டும். ஒருவேளை இருவருமாக சேர்ந்து அந்த விஷயத்தைப் பற்றி முற்றுமுழுக்க கலந்துபேசி தங்கள் நிச்சயத்தைத் தொடர தீர்மானிக்கலாம். அல்லது இருவருமாக ஒப்புக்கொண்டு அந்த நிச்சயத்தை முறித்துக்கொள்ள முடிவெடுக்கலாம். அவ்வாறு செய்வது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானம். மற்றவர்கள் அதற்குள் மூக்கை நுழைக்கவோ, இப்படி செய்திருக்கலாமே என்று சொல்லவோ, நியாயந்தீர்க்கவோ கூடாது. மறுபட்சத்தில், வினைமையான அந்த விஷயத்தை அறியவருபவர் நிச்சயத்தை முறித்தே ஆகவேண்டும் என தனிப்பட்ட விதமாக உணரலாம். நிச்சயத்தைத் தொடரவேண்டும் என அடுத்தவர் நினைத்தாலும் இவர் இவ்வாறு முடிவு செய்யலாம்.—ஜூன் 15, 1975, ஆங்கில காவற்கோபுரத்தில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் காண்க.
இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் திருமணத்திற்கு முன்பே தீர்த்துக்கொள்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. ஏனெனில், விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்துகொள்ள ஒரே வேதப்பூர்வ அடிப்படை போர்னியா அல்லது விவாகத்துணைவர் மிக மோசமான பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதே என இயேசு கூறினார். (மத்தேயு 5:32; 19:9) திருமணத்திற்கு முன் நிகழ்ந்த வினைமையான பிரச்சினையை அல்லது தவறை பின்னர் அறியவந்தால், விவாகரத்து செய்து சட்டப்பூர்வ திருமணத்தை முறிக்கலாம் என அவர் சொல்லவில்லை.
உதாரணமாக, இயேசுவின் நாட்களில் குஷ்டரோகத்தால் பாதிக்கப்படுவதற்கு நிறைய சாத்தியம் இருந்தது. திருமணத்தின்போது தன் மனைவி (அறிந்தோ, அறியாமலோ) குஷ்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தாள் என்பதை ஒரு யூதன் அறிய வந்தால் அவளை விவாகரத்து செய்ய அது ஒரு காரணமாகுமா? நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த ஒரு யூதன் அவ்வாறு விவாகரத்து செய்யலாம், ஆனால் இது தம்முடைய சீஷர்களுக்கு பொருத்தமானது என இயேசு சொல்லவில்லை. நவீன நாளைய சந்தர்ப்ப சூழ்நிலைகள் சிலவற்றைக் கவனியுங்கள். மேகப்புண், பிறப்புறுப்பில் புண், எய்ட்ஸ் அல்லது ஆபத்தான மற்ற தொற்றுநோய் உள்ள ஒரு ஆண் அவற்றை வெளிப்படுத்தாமலே திருமணம் செய்துகொள்ளலாம். நிச்சயத்திற்கு முன்பு அல்லது அந்தக் காலப்பகுதியில் அவனுடைய பாலுறவு ஒழுக்கக்கேட்டால் அந்த நோய் ஏற்பட்டிருக்கலாம். அவனுடைய வியாதி அல்லது முன்பு செய்த ஒழுக்கக்கேடு (ஒருவேளை மலட்டுத்தன்மை இருந்தாலும்) அவர்கள் இப்போது திருமணமானவர்கள் என்ற உண்மையை மாற்றிவிடாது. திருமணத்திற்கு முன் நிகழ்ந்த கசப்பான காரியங்கள் திருமணத்தை முறித்துவிடுவதற்கான வேதப்பூர்வ காரணங்கள் அல்ல. அதேபோல, திருமணத்தின்போது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நோய் இருந்து அல்லது மற்றொரு மனிதனால் அவள் கர்ப்பமாகியிருந்து அதை மறைத்திருந்தாலும் இதே நியமம்தான் பொருந்தும். இப்பொழுதோ அவர்கள் திருமணமானவர்கள், ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட வருத்தகரமான சூழ்நிலைகள் அரியவை என்பது உண்மையே. ஆனால், நிச்சயத்தை அசட்டையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அடிப்படை குறிப்பை வலியுறுத்த இந்த உதாரணங்கள் போதுமானவை. நிச்சயத்திற்கு முன்பும் அந்தச் சமயத்திலும் கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்ள முயல வேண்டும். மற்றவர் எதை அறிந்துகொள்ள விரும்புகிறார் அல்லது அறிய உரிமை இருக்கிறது என்ற விஷயத்தில் இருவரும் நேர்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். (சில நாடுகளில், திருமணத்திற்கு முன்பு இருவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது சட்டப்பூர்வ தேவை. மற்ற சிலர், விவரமறிவதற்காக அப்படிப்பட்ட ஒரு பரிசோதனை செய்யலாம்.) இவ்வாறு நிச்சயத்தின் சந்தோஷமும் முக்கியமும் மதிப்புக்குரிய ஒரு நோக்கத்தை நிறைவேற்றும். அதாவது, இன்னுமதிக சந்தோஷமும் முக்கியமும் வாய்ந்த திருமண பந்தத்தில் அவர்கள் இருவரும் சந்தோஷமாக நுழைய உதவும்.—நீதிமொழிகள் 5:18, 19; எபேசியர் 5:33.
[அடிக்குறிப்புகள்]
a இன்றும் சில சமுதாயங்களில் பெற்றோர்தான் தங்கள் பிள்ளைகளின் நிச்சயத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ளும் நிலையை அடைவதற்கு சற்று முன் இவ்வாறு செய்யப்படலாம். இந்தச் சமயத்தில், அவர்கள் திருமணம் ஆனவர்களாக கருதப்படுவதில்லை. ஆனால், நிச்சயிக்கப்பட்டதாக அல்லது ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளப் போகிறவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
b உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 28-32-ஐயும் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தில் அதிகாரம் 2-ஐயும் காண்க.