அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
மன்னிப்பு இரட்சிப்புக்கு வழிதிறக்கிறது
அதிர்ச்சியூட்டும் ஓர் இரகசியம் எகிப்தின் பிரதம மந்திரிக்கு முன்னால் நிற்கும் யாக்கோபின் பத்து குமாரர்களுடைய காதில் விழுகிறது. பல வருடங்களுக்குமுன் தங்களுடைய ஒன்றுவிட்ட சகோதரன் யோசேப்பை அடிமையாக விற்றிருந்தார்கள். யோசேப்பை ஒரு கொடிய மிருகம் கொன்றுவிட்டதென தங்களுடைய தகப்பனாரிடம் கதைகட்டிவிட திட்டம்போட்டு இப்படி செய்திருந்தார்கள்.—ஆதியாகமம் 37:18-35.
இப்பொழுது, சுமார் இருபது ஆண்டுகளுக்குப்பின், ஒரு கொடிய பஞ்சம் இந்தப் பத்து பேரும் தானியம் வாங்குவதற்காக எகிப்துக்கு வரும்படி செய்தது. ஆனால் காரியங்கள் சுமுகமாய் செல்லவில்லை. உணவு நிர்வாகியாகவும் பிரதம மந்திரியாகவும் இருந்தவர் அவர்களை வேவுகாரர்கள் என குற்றம்சாட்டினார். அவர்களில் ஒருவரை சிறையில் அடைத்துவிடுகிறார், மீதிபேர் வீடுசென்று கடைக்குட்டி பென்யமீனை திரும்ப அழைத்துவரும்படி வற்புறுத்தினார். அவர்கள் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது, பென்யமீனை கைதுசெய்வதற்கு அந்தப் பிரதம மந்திரி போட்ட ஒரு திட்டம் நிறைவேறியது.—ஆதியாகமம் 42:1–44:12.
யாக்கோபின் குமாரர்களில் ஒருவனாகிய யூதா மறுப்பு தெரிவித்து, ‘பென்யமீன் இல்லாமல் வீடுதிரும்பினால், எங்களுடைய தகப்பனார் இறந்து போவார்’ என்று சொன்னான். அதன்பின் யூதாவோ அவனோடுகூட வந்த மற்றவர்களோ எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது. யாக்கோபின் குமாரர்களைத் தவிர மற்றெல்லாரையும் அந்த அறையைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டபின், அந்தப் பிரதம மந்திரி சத்தமிட்டு அழுதார். அதன்பின், தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “நான் யோசேப்பு” என்று தெரிவித்தார்.—ஆதியாகமம் 44:18–45:3.
இரக்கமும் விடுதலையும்
“என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா” என்று யோசேப்பு தன் சகோதரர்களிடம் கேட்டார். யாரும் வாயைத் திறக்கவில்லை. யோசேப்பின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்ன சொல்வதென்றே அறியாமல் தவித்தார்கள். அவர்கள் மகிழ்ச்சிப் பரவசமடைய வேண்டுமா, அல்லது பயந்துநடுங்க வேண்டுமா? சொல்லப்போனால், 20 வருடங்களுக்கு முன்பு, அவர்கள் இந்த மனிதனை அடிமையாக விற்றிருந்தார்களே. அவர்களை சிறையிலடைப்பதற்கோ உணவில்லாமல் வீட்டுக்கு விரட்டுவதற்கோ ஏன், கொலைசெய்வதற்கும்கூட யோசேப்புக்கு அதிகாரம் இருந்ததே! நல்ல காரணத்தோடுதான், யோசேப்பின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் ‘அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள்;’ ஏனெனில் ‘அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்தார்கள்.’—ஆதியாகமம் 45:3.
யோசேப்பு அவர்களை சாந்தப்படுத்தினார். “என் கிட்ட வாருங்கள்” என்று சொன்னார். அவரிடம் போனார்கள். அதன்பின்பு அவர்களிடம்: “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” என்று சொன்னார்.—ஆதியாகமம் 45:4, 5.
யோசேப்பின் இரக்கம் ஆதாரமின்றி காண்பிக்கப்படவில்லை. மனந்திரும்பிய அத்தாட்சியை ஏற்கெனவே அவர்களிடம் கவனித்திருந்தார். உதாரணமாக, தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களை வேவுகாரர்கள் என யோசேப்பு குற்றம்சாட்டியபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் இப்படி சொல்லிக்கொள்வதை கேட்டார்: “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; . . . ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது.” (ஆதியாகமம் 42:21) அதோடு, பென்யமீன் தன் தகப்பனிடம் திரும்பிச் செல்வதற்கு அவனுக்குப் பதிலாக தான் அடிமையாவதாக யூதா முன்வந்தான்.—ஆதியாகமம் 44:33, 34.
ஆகவே, யோசேப்பு இரக்கம் காண்பித்தது நியாயமானதே. அது தன்னுடைய முழு குடும்பமும் காப்பாற்றப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தார். எனவே, அவர்கள் தன் தகப்பனிடம் சென்று சொல்லச் சொன்னதாவது: “தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம். நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்.”—ஆதியாகமம் 45:9-11.
பெரிய யோசேப்பு
இயேசு கிறிஸ்துவை பெரிய யோசேப்பு என்று அழைக்கலாம், ஏனென்றால் இந்த இருவருக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருக்கின்றன. யோசேப்பை போலவே, இயேசுவை அவருடைய சகோதரர்கள், அதாவது ஆபிரகாமின் சந்ததியார் மோசமாக நடத்தினார்கள். (அப்போஸ்தலர் 2:14, 29, 37-ஐ ஒப்பிடுக.) ஆனால், இருவருடைய நிலைமையும் தலைகீழாக மாறியது. காலப்போக்கில், யோசேப்பின் அடிமை நிலை பார்வோனுக்கு அடுத்த பிரதம மந்திரி என்ற ஸ்தானத்திற்கு மாறியது. அதேபோல், மரித்த நிலையிலிருந்து இயேசுவை யெகோவா உயிர்த்தெழுப்பி, ‘தேவனுடைய வலது பாரிசத்தில்’ அமரும் மிக உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்தினார்.—அப்போஸ்தலர் 2:33; பிலிப்பியர் 2:9-11.
பிரதம மந்திரியாகிய யோசேப்பு, தானியம் வாங்க எகிப்துக்கு வந்த அனைவருக்கும் உணவை பகிர்ந்தளிக்க முடிந்தது. இன்று, பெரிய யோசேப்பு இந்தப் பூமியில் உண்மையும் விவேகமுள்ள அடிமை வகுப்பாரை வைத்திருக்கிறார்; அவர்கள்மூலம் ‘ஏற்றவேளையிலே’ ஆவிக்குரிய உணவை பகிர்ந்தளிக்கிறார். (மத்தேயு 24:45-47, NW; லூக்கா 12:42-44) உண்மையில், இயேசுவிடம் வருகிறவர்கள் “இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; . . . சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்.”—வெளிப்படுத்துதல் 7:16, 17.
நமக்குப் படிப்பினை
இரக்கத்திற்கு யோசேப்பு சிறந்த முன்மாதிரி. தன்னை அடிமையாக விற்றவர்களை தண்டிப்பதற்கு நீதி தராசை கராராக பிடித்திருந்திருக்கலாம். அல்லது அவருடைய பாச உணர்ச்சி அவர் கண்ணை மறைப்பது போன்ற காரணத்தால் அவர்களுடைய மீறுதலை கண்டுகொள்ளாமல் விட்டிருந்திருக்கலாம். ஆனால் இந்த இரண்டு சூழ்நிலைகளாலுமே யோசேப்பு ஆட்கொள்ளப்படவில்லை. பதிலாக, தன்னுடைய சகோதரர்களுடைய மனந்திரும்புதலை பரிசோதித்தார். அதற்குப்பின், அவர்களுடைய வருத்தம் உள்ளப்பூர்வமானது என்பதை கண்டபோது அவர்களை மன்னித்தார்.
நாமும் யோசேப்பை பின்பற்றலாம். நமக்கு விரோதமாக யாராவது பாவம்செய்து மனப்பூர்வமாக மாறியிருந்தால், நாம் அவரை மன்னிக்க வேண்டும். ஆனால், ஒருபோதும் நாம் உணர்ச்சிவயப்பட்டு பெருந்தவறை கண்டுகொள்ளாமல் விட்டுவிட அனுமதிக்கக் கூடாது. மறுபட்சத்தில், மனக்கசப்பான உணர்ச்சிகளால் உண்மையான மனந்திரும்புதலுக்கேற்ற செயல்களுக்கு கண்களை மூடிக்கொள்ளவும் கூடாது. ஆகவே தொடர்ந்து நாம் ‘ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னிப்போமாக.’ (கொலோசெயர் 3:13) அப்படி செய்வதால், ‘மன்னிக்க தயாராயிருக்கிற’ நம்முடைய தேவனாகிய யெகோவாவை பின்பற்றுகிறவர்களாய் இருப்போம்.—சங்கீதம் 86:5; மீகா 7:18, 19.