“செப்டுவஜின்ட்”—அன்றும் இன்றும் பயனுள்ளது
எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் எருசலேமிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பாலைவனம் வழியாக தன் இரதத்தில் பயணிக்கையில், ஒரு மத சுருளிலிருந்து சப்தமாக வாசித்துக் கொண்டிருந்தார். அவர் வாசித்த விஷயங்களின் அர்த்தம், அச்சமயம் முதல் அவரது வாழ்க்கையையே மாற்றும் அளவுக்கு அவர்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. (அப்போஸ்தலர் 8:26-38) அந்த மனிதர் ஏசாயா 53:7, 8 வசனங்களை பைபிளின் முதல் மொழிபெயர்ப்பிலிருந்து வாசித்துக் கொண்டிருந்தார்; அம்மொழிபெயர்ப்பே கிரேக்க செப்டுவஜின்ட். பல நூற்றாண்டுகளாக பைபிள் செய்தியை பரப்புவதில் இது முக்கிய பங்காற்றியிருப்பதால், உலகை மாற்றிய பைபிள் மொழிபெயர்ப்பு என அழைக்கப்பட்டிருக்கிறது.
செப்டுவஜின்ட் எப்போது, எந்த சூழ்நிலைகளில் தயாரிக்கப்பட்டது? அப்படிப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பு ஏன் தேவைப்பட்டது? தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் அது எந்தளவு உபயோகமாக இருந்திருக்கிறது? இன்று செப்டுவஜின்ட் நமக்கு எதையாவது சொல்லித் தருகிறதா?
கிரேக்க மொழி பேசிய யூதர்களுக்காக தயாரிக்கப்பட்டது
மகா அலெக்ஸாந்தர் பொ.ச.மு. 332-ல் பெனிக்கே நகரமாகிய தீருவை அழித்துவிட்டு எகிப்திற்குள் நுழைந்தபோது மீட்பராக வரவேற்கப்பட்டார். அங்கே அவர் அலெக்சந்திரியா என்ற நகரை நிறுவினார்; அது அன்றைய உலகின் கல்வி மையமாக திகழ்ந்தது. கைப்பற்றப்பட்ட நாடுகளெங்கும் வாழ்ந்த மக்களிடையே கிரேக்க கலாச்சாரத்தைப் பரப்ப விரும்பி அலெக்ஸாந்தர் தன் மாபெரும் சாம்ராஜ்யத்தில் பொது கிரேக்க மொழியை (கொய்னி) அறிமுகப்படுத்தினார்.
பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டில், அலெக்சந்திரியாவில் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தனர். பாபிலோனிய சிறையிருப்பிற்கு பின் பாலஸ்தீனாவிற்கு வெளியே சிதறியிருந்த குடியிருப்புகளில் வசித்துவந்த அநேக யூதர்கள் அலெக்சந்திரியாவில் குடியேறினர். இந்த யூதர்களுக்கு எபிரெய மொழி எந்தளவு தெரிந்திருந்தது? மெக்ளின்டாக், ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா சொல்கிறதாவது: “பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து யூதர்கள் திரும்பிய பிறகு, தாங்கள் பழக்கப்பட்டிருந்த பூர்வ எபிரெய மொழியை பெருமளவு மறந்திருந்தார்கள் என்பது நன்கு அறியப்பட்டிருக்கும் உண்மை; ஆகவே பாலஸ்தீன ஜெப ஆலயங்களில் மோசேயின் புத்தகங்கள் வாசிக்கப்பட்டபோது அவற்றிற்கு கல்தேய மொழியில் விளக்கம் தரப்பட்டது. . . . அலெக்சந்திரியாவிலிருந்த யூதர்களோ எபிரெய மொழியை ஒருவேளை அந்தளவுக்குக்கூட அறிந்திருக்க மாட்டார்கள்; அலெக்சந்திரிய கிரேக்க மொழியையே அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.” ஆகவே, அலெக்சந்திரியாவில் எபிரெய வேதவசனங்களை கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்ற சூழல் அப்போது நிலவியதாக தெரிகிறது.
எபிரெய சட்டத்தின் ஒரு பதிப்பு கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் தாலமி ஃபிலடெல்ஃபஸின் ஆட்சிக்காலத்தில் (பொ.ச.மு. 285-246) முடிக்கப்பட்டதாகவும் பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூதராகிய அரிஸ்டப்யூலஸ் எழுதினார். ‘சட்டம்’ என அரிஸ்டப்யூலஸ் எதைக் குறிப்பிட்டார் என்பது சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவர் வெறுமனே ஐந்தாகமத்தை அர்த்தப்படுத்தியதாக சிலர் நினைக்கின்றனர்; மற்றவர்களோ, அவர் முழு எபிரெய வேதாகமத்தையும் அர்த்தப்படுத்தியிருக்கலாம் என சொல்கின்றனர்.
எதுவாயிருந்தாலும், சுமார் 72 யூத அறிஞர்கள் எபிரெயுவிலிருந்து கிரேக்க மொழிக்கு வேதவசனங்களை முதன்முறையாக மொழிபெயர்த்து எழுதினார்கள் என பாரம்பரியம் சொல்கிறது. பிற்பாடு 70 என்ற முழு எண் பயன்படுத்தப்படுவது ஆரம்பமானது. ஆகவே அந்த மொழிபெயர்ப்பு “70” என்று பொருள்படும் செப்டுவஜின்ட் என அழைக்கப்பட்டது; 70 என்பதற்குரிய ரோம எண் LXX இதற்குக் குறியீடாக பயன்படுத்தப்பட்டது. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் முடிவிற்குள், எபிரெய வேதாகமத்தின் எல்லா புத்தகங்களும் கிரேக்க மொழியில் வாசிக்க கிடைத்தன. இவ்வாறு, செப்டுவஜின்ட் என்ற பெயர், கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முழு எபிரெய வேதாகமத்தையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது.
முதல் நூற்றாண்டில் பயனளித்தது
இயேசு கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும் வாழ்ந்த காலத்தின்போதும் அதற்கு முன்பும் கிரேக்க மொழி பேசிய யூதர்களால் செப்டுவஜின்ட் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று எருசலேமில் கூடிய அநேக யூதர்களும் யூதர்களாக மாறியவர்களும், ஆசியா, எகிப்து, லிபியா, ரோம், கிரேத்தா ஆகிய இடங்களிலிருந்து வந்திருந்தனர்; இவ்விடங்களில் மக்கள் கிரேக்க மொழியையே பேசினர். அவர்கள் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து வழக்கமாக வாசித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. (அப்போஸ்தலர் 2:9-11) இவ்வாறு, முதல் நூற்றாண்டில் நற்செய்தியை பரப்புவதில் இம்மொழிபெயர்ப்பு பெரும் பங்காற்றியது.
உதாரணத்திற்கு, சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியா, ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது சீஷனாகிய ஸ்தேவான் இவ்வாறு சொன்னார்: “யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை [கானானிலிருந்து] அழைக்க அனுப்பினான்.” (அப்போஸ்தலர் 6:8-10; 7:12-14) ஆதியாகமம் அதிகாரம் 46-ன் எபிரெய பதிப்பில், யாக்கோபின் இனத்தார் எழுபது பேரென சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் செப்டுவஜின்ட் எழுபத்தைந்து என குறிப்பிடுகிறது. அப்படியென்றால் ஸ்தேவான் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்தே மேற்கோள் காட்டியதாக தெரிகிறது.—ஆதியாகமம் 46:20, 26, 27.
அப்போஸ்தலனாகிய பவுல் தனது இரண்டாம், மூன்றாம் மிஷனரி பயணங்களின்போது ஆசியா மைனர், கிரீஸ் ஆகிய தேசங்கள் எங்கும் சென்று கடவுளுக்குப் பயந்து நடந்த அநேக புறஜாதியாருக்கும் ‘பக்தியுள்ள கிரேக்கருக்கும்’ பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 13:16, 26; 17:4) இந்த ஜனங்கள் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து கடவுளைப் பற்றி ஓரளவு அறிந்துகொண்டதால் அவருக்கு பயந்து நடந்தனர் அல்லது அவரை வணங்கினர். கிரேக்க மொழி பேசிய இந்த மக்களுக்கு பிரசங்கித்தபோது பவுல் அந்த மொழிபெயர்ப்பிலிருந்தே அடிக்கடி மேற்கோள் காட்டினார் அல்லது பொழிப்புரை செய்தார்.—ஆதியாகமம் 22:18; கலாத்தியர் 3:8.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் எபிரெய வேதாகமத்திலிருந்து சுமார் 320 நேரடியான மேற்கோள்கள் உள்ளன; எல்லாவற்றையும் சேர்த்து மொத்தத்தில் சுமார் 890 மேற்கோள்களும் குறிப்புகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டவை. இதன் விளைவாக, எபிரெய கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அல்ல, ஆனால் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பாகமாயின. இது என்னே ஒரு சிறப்பம்சம்! ராஜ்யத்தின் நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் பிரசங்கிக்கப்படும் என இயேசு முன்னறிவித்திருந்தார். (மத்தேயு 24:14) இதை நிறைவேற்றுவதற்கு, உலகெங்குமுள்ள மக்கள் வாசிக்கும் பல்வேறு மொழிகளில் தமது வார்த்தை மொழிபெயர்க்கப்படும்படி யெகோவா அனுமதிப்பார்.
இன்று பயனளிக்கிறது
செப்டுவஜின்ட் இன்றுவரை பயனளிக்கிறது; பிற்பட்ட காலத்தில் எபிரெய கையெழுத்துப் பிரதிகள் நகலெடுக்கப்பட்ட போது அறியாமல் செய்யப்பட்ட தவறுகளை புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஆதியாகமம் 4:8 (பொ.மொ.) இவ்வாறு சொல்கிறது: “காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் [வயல்]வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.”
“நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்ற துணைவாக்கியம் பொ.ச. பத்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு உள்ள எபிரெய கையெழுத்துப் பிரதிகளில் காணப்படுவதில்லை. என்றாலும் பழைய செப்டுவஜின்ட் பிரதிகளிலும் இன்னும் சில பழைய பதிவுகளிலும் அது காணப்படுகிறது. எபிரெய கையெழுத்துப் பிரதிகளில், உரையாடலை அறிமுகப்படுத்தும் வார்த்தை காணப்படுகிறது, ஆனால் உரையாடலைக் காணவில்லை. என்ன நடந்திருக்கும்? ஆதியாகமம் 4:8-ல் அடுத்தடுத்த இரண்டு துணைவாக்கியங்கள் உள்ளன, அவை “வயல்வெளி” என்ற பதத்தோடு முடிகின்றன. “அடுத்தடுத்த இரு துணைவாக்கியங்களின் முடிவில் காணப்படும் [ஒரே] வார்த்தை . . . எபிரெய நகலெடுத்தவரின் கண்களை ஏமாற்றியிருக்கலாம்” என மெக்ளின்டாக், ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா சொல்கிறது. எனவே நகலெடுத்தவர், “வயல்வெளிக்குப் போவோம்” என்று முடிவடையும் முந்தைய துணைவாக்கியத்தை கவனியாது விட்டிருக்கலாம். நிச்சயமாகவே, செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பும் இன்று இருக்கும் மற்ற பழைய கையெழுத்துப் பிரதிகளும், பிற்பட்ட காலத்து எபிரெய பிரதிகளிலுள்ள தவறுகளை கண்டுகொள்ள உபயோகமாக இருக்கலாம்.
மறுபட்சத்தில் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலும் தவறுகள் இருக்கலாம்; அதனால் சிலசமயம் எபிரெய பதிப்பைப் பார்த்து கிரேக்க பதிப்பு திருத்தப்படுகிறது. இவ்வாறு, கிரேக்க மொழிபெயர்ப்பையும் மற்ற மொழிபெயர்ப்புகளையும் எபிரெய கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறுகளையும் நகலெடுத்தவர் செய்த தவறுகளையும்கூட கண்டுபிடிக்க உதவுகிறது; இப்படியாக கடவுளுடைய வார்த்தை திருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்த உதவுகிறது.
பொ.ச. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பின் முழு பிரதிகள் இன்று இருக்கின்றன. இவற்றிலும் பிற்பட்ட பிரதிகளிலும், எபிரெய திருநான்கெழுத்தால் (ய்ஹ்வ்ஹ்) அடையாளப்படுத்தப்படும் யெகோவா என்ற கடவுளுடைய பெயர் காணப்படுவதில்லை. எபிரெய பதிப்பில் இந்தத் திருநான்கெழுத்து காணப்பட்ட இடங்களிலெல்லாம் “கடவுள்,” “கர்த்தர்” என்பதற்கான கிரேக்க பதங்களை இந்தப் பிரதிகள் பயன்படுத்தியிருக்கின்றன. இருந்தாலும் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பாலஸ்தீனாவில் செய்யப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு இவ்விஷயத்தை தெளிவுபடுத்தியது. சவக்கடலின் மேற்கு கரைக்கு அருகேயிருந்த குகைகளில் அகழாய்வு செய்த ஒரு குழு, பண்டைய தோல் சுருளின் துண்டுகளை கண்டெடுத்தது; அவற்றில் 12 தீர்க்கதரிசிகளின் (ஓசியா முதல் மல்கியா வரையான) பதிவுகள் கிரேக்கில் எழுதப்பட்டிருந்தன. இவை பொ.ச.மு. 50-க்கும் பொ.ச. 50-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவையாக கணக்கிடப்பட்டன. அதிக பழமையான இந்த சுருள் துண்டுகளில் திருநான்கெழுத்துக்குப் பதிலாக “கடவுள்,” “கர்த்தர்” என்பதற்கான கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. ஆகவே ஆரம்பகால செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டது ஊர்ஜிதமானது.
1971-ல் பண்டைய நாணற்தாள் சுருள் (ஃபோயட் 266 பப்பைரி) துண்டுகள் வெளியிடப்பட்டன. பொ.ச.மு. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பின் பாகங்கள் எதைக் காட்டுகின்றன? இவற்றிலும் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது. செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பின் இந்த ஆரம்பகால துண்டுகள், இயேசுவும் அவரது முதல் நூற்றாண்டு சீஷர்களும் கடவுளுடைய பெயரை அறிந்திருந்தார்கள் என்பதற்கும் அதைப் பயன்படுத்தினார்கள் என்பதற்கும் பலமான அத்தாட்சி அளிக்கின்றன.
இன்று பைபிள், சரித்திரத்திலேயே மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் புத்தகமாக திகழ்கிறது. 90 சதவீதத்திற்கும் அதிகமான மனிதர்களால் அதன் சில பாகங்களையாவது தங்கள் சொந்த மொழியில் வாசிக்க முடிகிறது. நவீன மொழியில் திருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளுக்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; இது முழுமையாகவோ பகுதியாகவோ 40-க்கும் அதிகமான மொழிகளில் இப்போது கிடைக்கிறது. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் உள்ள நூற்றுக்கணக்கான அடிக்குறிப்புகள், செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பையும் மற்ற பண்டைய கையெழுத்துப் பிரதிகளையும் குறிப்பிடுகின்றன. சொல்லப்போனால், நம் நாளில் செப்டுவஜின்ட், பைபிள் மாணாக்கர்களுக்கு ஆர்வத்திற்குரியதாகவும் மதிப்புள்ளதாகவும் தொடர்ந்து விளங்குகிறது.
[பக்கம் 26-ன் படம்]
“செப்டுவஜின்ட்” மொழிபெயர்ப்பிலிருந்து வாசிக்கப்பட்ட ஒரு பகுதியை சீஷனாகிய பிலிப்பு விளக்கினார்
[பக்கம் 29-ன் படங்கள்]
அப்போஸ்தலன் பவுல் அடிக்கடி “செப்டுவஜின்ட்” மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டினார்