பாடம் 25
நம்மை எப்படி வாழ வைக்க கடவுள் நினைக்கிறார்?
“மனுஷன் வாழ்வதே கொஞ்சக் காலம்தான். அதுவும் பெரிய போராட்டம்தான்” என்று பைபிள் சொல்கிறது. (யோபு 14:1) நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கடவுள் நினைக்கிறாரா? அல்லது, எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறார்? அவர் நினைப்பது என்றாவது நடக்குமா? ஆறுதலான பதில்களை பைபிள் தருகிறது.
1. நாம் எப்படி வாழ வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார்?
நாம் ஒரு குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளைப் படைத்து ஒரு அழகான ஏதேன் தோட்டத்தில் அவர்களை அவர் குடிவைத்தார். பிறகு அவர்களிடம், “‘நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள்’. . . என்று சொல்லி ஆசீர்வதித்தார்.” (ஆதியாகமம் 1:28) அவர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்... பூமி முழுவதையும் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும்... விலங்குகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்... என்றெல்லாம் யெகோவா ஆசைப்பட்டார். மனிதர்கள் முழு ஆரோக்கியத்தோடு என்றென்றும் வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார்.
கடவுள் விரும்பியதுபோல் நம் வாழ்க்கை அமையவில்லைதான்.a ஆனால், அவருடைய விருப்பம் மாறவில்லை. (ஏசாயா 46:10, 11) தனக்குக் கீழ்ப்படிகிறவர்கள் ஒரு குறையும் இல்லாத சூழலில் என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் அவர் இன்னமும் ஆசைப்படுகிறார்.—வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள்.
2. நாம் எப்படி இப்போதே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலாம்?
யெகோவா நம்மை ஆன்மீக “ஆர்வப்பசியோடு” படைத்திருக்கிறார். அதாவது, அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும், அவரை வணங்க வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் நம்மைப் படைத்திருக்கிறார். (மத்தேயு 5:3-6-ஐ வாசியுங்கள்.) நாம் அவருடைய நெருங்கிய நண்பராக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். நாம் ‘அவருடைய வழிகளில் நடக்க வேண்டும், அவர்மேல் அன்பு காட்ட வேண்டும்,’ “முழு இதயத்தோடு” அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் அவர் நினைக்கிறார். (உபாகமம் 10:12; சங்கீதம் 25:14) இதையெல்லாம் நாம் செய்யும்போது, பிரச்சினைகள் மத்தியிலும் உண்மையிலேயே சந்தோஷமாக வாழ முடியும். யெகோவாவை நாம் வணங்கும்போது நம் வாழ்க்கைக்கு உண்மையான ஒரு அர்த்தம் கிடைக்கும், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
யெகோவா நமக்காக இந்தப் பூமியைப் படைத்த விதம் எப்படி அவருடைய அளவுகடந்த அன்பைக் காட்டுகிறது? நம் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? பார்க்கலாம்.
3. நம்மை சந்தோஷமாக வாழ வைக்க யெகோவா விரும்புகிறார்
வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
கடவுள் ஏன் இந்த அழகான பூமியைப் படைத்தார்?
பிரசங்கி 3:11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவைப் பற்றி இந்த வசனத்திலிருந்து என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?
4. யெகோவாவின் விருப்பம் மாறவே இல்லை
சங்கீதம் 37:11, 29-ஐயும் ஏசாயா 55:11-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவின் விருப்பம் ஆரம்பத்திலிருந்து மாறவே இல்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
பாழடைந்து கிடக்கும் ஒரு வீட்டை நல்லபடியாக மாற்ற முடியும். அதேபோல், சீரழிந்து கிடக்கும் இந்தப் பூமியைக் கடவுள் நல்லபடியாக மாற்றப்போகிறார். தன்னை நேசிக்கிறவர்களை அங்கே வாழ வைக்கப்போகிறார்
5. யெகோவாவை வணங்கும்போது நம் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கும். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதால் வீடியோவில் நாம் பார்த்த பெண்ணுக்கு என்ன நன்மை கிடைத்தது?
பிரசங்கி 12:13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவா நமக்காக எவ்வளவோ செய்திருப்பதால் நாம் அவருக்காக என்ன செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்?
யாராவது இப்படிக் கேட்கலாம்: “நம்ம வாழ்க்கையோட அர்த்தம் என்ன?”
நீங்கள் எப்படிப் பதில் சொல்வீர்கள்?
சுருக்கம்
நாம் இந்தப் பூமியில் ஒரு குறையும் இல்லாமல் என்றென்றும் வாழ வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். அவரை முழு இதயத்தோடு நாம் வணங்கும்போது இப்போதே நம் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.
ஞாபகம் வருகிறதா?
ஆதாமும் ஏவாளும் எப்படி வாழ வேண்டுமென்று யெகோவா விரும்பினார்?
யெகோவாவின் விருப்பம் ஆரம்பத்திலிருந்து மாறவே இல்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
நீங்கள் என்ன செய்தால் உங்கள் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்?
அலசிப் பாருங்கள்
ஏதேன் தோட்டம் இருந்தது உண்மை என்பதற்கு அத்தாட்சிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
பூமி அழியவே அழியாது என்று நாம் எப்படி உறுதியாக நம்பலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று பைபிள் சொல்வதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையில் எல்லாமே இருந்தும் ஏதோவொரு குறை இருந்ததாக ஒருவர் நினைத்தார். அவர் எப்படி வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடித்தார் என்று பாருங்கள்.
a இதற்கான காரணத்தை அடுத்த பாடத்தில் தெரிந்துகொள்வீர்கள்.