‘தேசத்தில் நடந்து திரி’
“தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி.”—ஆதியாகமம் 13:17.
1. ஆர்வமூட்டும் என்ன கட்டளையை ஆபிரகாமுக்கு கடவுள் கொடுத்தார்?
வாரயிறுதியில் கிராமப்புற காட்சிகளை ரசிக்க காரில் செல்ல விரும்புகிறீர்களா? சிலர் உடற்பயிற்சிக்காகவும் சாவகாசமாக கண்டுகளிப்பதற்காகவும் சைக்கிளில் சவாரி செய்ய விரும்புகிறார்கள். மற்றவர்களோ இன்னும் நிதானமாக எல்லாவற்றையும் ரசித்து மகிழ்வதற்கு நடந்தே செல்ல விரும்புகிறார்கள். எப்படியிருந்தாலும் கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே இப்படி பயணம் செய்ய முடியும். ஆனால் ஆபிரகாமிடம் கடவுள், “நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்று சொன்னபோது அவர் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்!—ஆதியாகமம் 13:17.
2. ஆபிரகாம் எகிப்திலிருந்து எங்கே சென்றார்?
2 இந்த வார்த்தைகளின் சூழமைவை சற்று சிந்தியுங்கள். தன் மனைவியோடும் மற்றவர்களோடும் ஆபிரகாம் தற்காலிகமாக எகிப்தில் தங்கினார். அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு தங்கள் மந்தைகளுடன் தெற்கே அதாவது நெகெப்புக்கு வந்ததாக ஆதியாகமம் 13-ம் அதிகாரம் சொல்கிறது. அடுத்து ஆபிரகாம் “தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து [“நெகெப்பிலிருந்து,” NW] பெத்தேல் மட்டும்” சென்றார். அவருடைய மந்தை மேய்ப்பருக்கும் அவருடைய அண்ணன் மகன் லோத்துவுடைய மந்தை மேய்ப்பருக்கும் இடையே பிரச்சினை எழும்பியபோது உண்மையிலேயே அவர்களுக்கென தனித்தனி மேய்ச்சல் நிலங்களைக் கண்டுபிடிப்பதற்கான தேவை ஏற்பட்டது; லோத்து, தனக்கு பிடித்த நிலத்தை முதலாவது தேர்ந்தெடுப்பதற்கு ஆபிரகாம் மனதார விட்டுக்கொடுத்தார். “யோர்தான் நதிக்கு அருகான சமபூமி”யை, ‘யெகோவாவுடைய தோட்டத்தைப்போல’ இருந்த செழிப்பான பள்ளத்தாக்கை லோத்து தேர்ந்தெடுத்தார்; பின்னர் அவர் சோதோமில் குடிபுகுந்தார். “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்” என ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார். பெத்தேல் அருகிலுள்ள மேட்டுப் பகுதியிலிருந்து ஆபிரகாம் ஒருவேளை தேசத்தின் மற்ற பகுதிகளையும் பார்க்க முடிந்திருக்கும். ஆனால் வெறுமனே பார்க்கும்படி மட்டுமே கடவுள் அவரிடம் சொல்லவில்லை. ‘தேசத்தில் நடந்து திரிந்து’ அதன் இயற்கை அமைப்புகளையும் பிராந்தியங்களையும் நன்கு அறிந்துகொள்ளும்படி அவரிடம் சொன்னார்.
3. ஆபிரகாம் பயணித்த பாதையை கற்பனை செய்வது ஏன் சிரமமாக இருக்கலாம்?
3 எப்ரோனுக்கு வருவதற்கு முன்பாக ஆபிரகாம் எந்தளவுக்கு அந்த தேசத்தில் சுற்றித் திரிந்திருந்தாலும் சரி, நிச்சயமாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பற்றி நம்மில் அநேகரைவிட அவர் நன்கு அறிந்திருந்தார். இது சம்பந்தமான பைபிள் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நெகெப், பெத்தேல், யோர்தானின் சமபூமி, சோதோம், எப்ரோன் ஆகிய இடங்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இடங்கள் எங்கிருந்தன என்பதைக் கற்பனை செய்து பார்க்க நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அநேகர் சிரமப்படுகிறார்கள்; காரணம், யெகோவாவின் ஜனங்களில் வெகு சிலரே பைபிளில் குறிப்பிடப்படும் இடங்களின் நீளத்தையும் அகலத்தையும் நேரில் போய் பார்த்திருக்கிறார்கள். என்றாலும் அந்த இடங்கள் எங்கிருந்தன என்பதை அறிந்துகொள்வதில் நாம் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். ஏன்?
4, 5. (அ) பைபிள் தேசங்களைப் பற்றிய அறிவுடனும் புரிந்துகொள்ளுதலுடனும் நீதிமொழிகள் 18:15 எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது? (ஆ) செப்பனியா 2-ம் அதிகாரம் எதை விவரிக்கிறது?
4 “புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்” என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 18:15) ஒருவர் எத்தனையோ விஷயங்களில் அறிவை சம்பாதிக்கலாம், ஆனாலும் யெகோவா தேவனையும் அவரது செயல்களையும் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதுதான் மிக முக்கியம். நாம் பைபிளில் வாசிக்கும் விஷயங்களே அப்படிப்பட்ட திருத்தமான அறிவுக்கு அடிப்படையாகும். (2 தீமோத்தேயு 3:16) அறிவைப் பெறுவதோடு, புரிந்துகொள்வதும் அவசியம் என்பதைக் கவனியுங்கள். புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு காரியத்தை நுணுக்கமாக அறிந்து, அதன் வெவ்வேறு அம்சங்களுக்கும் மொத்த விஷயத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளை கிரகிப்பதற்கான திறனாகும். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களைப் பற்றி புரிந்துகொள்ளும் விஷயத்திலும் இது பொருந்தும். உதாரணமாக, நம்மில் அநேகருக்கு எகிப்து எங்குள்ளது என்பது தெரியும், ஆனால் எகிப்திலிருந்து ஆபிரகாம் ‘நெகெப்புக்கும்’ பின்னர் பெத்தேலுக்கும் எப்ரோனுக்கும் போனார் என்ற குறிப்பை நாம் எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறோம்? இந்த இடங்கள் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா?
5 ஒருவேளை, தனிப்பட்ட பைபிள் வாசிப்பின்போது செப்பனியா 2-ம் அதிகாரத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அதில் பட்டணங்களையும், மக்களையும், தேசங்களையும் பற்றி வாசித்திருப்பீர்கள். காசா, அஸ்கலோன், அஸ்தோத், எக்ரோன், சோதோம், நினிவே, கானான், மோவாப், அம்மோன், அசீரியா ஆகிய அனைத்து இடங்களும் ஒரே அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்மையிலேயே ஜனங்கள் வாழ்ந்த—கடவுளுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் பங்கேற்ற ஜனங்கள் வாழ்ந்த—இந்த இடங்களை எந்தளவுக்கு உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது?
6. பைபிளை படிக்கும் சிலர் ஏன் வரைபடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள்? (பெட்டியைக் காண்க.)
6 கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும் அநேகர் பைபிள் தேசங்கள் பற்றிய வரைபடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெரிதும் பயனடைந்திருக்கிறார்கள். அவர்கள் வரைபடங்களிடம் உள்ள ஆர்வத்தினால் மட்டுமே அவற்றை பயன்படுத்துவதில்லை; அவற்றின் உதவியால் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவில் விருத்தியடையலாம் என்பதாலேயே அவற்றை பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளுதலை ஆழமாக்குவதற்கும் வரைபடங்கள் உதவுகின்றன; எப்படியென்றால், ஏற்கெனவே அறிந்திருப்பவற்றை மற்ற தகவல்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க உதவுகின்றன. சில உதாரணங்களை நாம் கலந்தாலோசிக்கும்போது உங்களுக்கு யெகோவாவிடமுள்ள போற்றுதல் இன்னும் ஆழமாகும், பைபிள் பதிவுகளின் பேரில் உங்கள் உட்பார்வை அதிகரிக்கும்.—பக்கம் 14-லுள்ள பெட்டியைக் காண்க.
தூரம் தெரிந்தால் நன்கு புரிந்துகொள்ளலாம்
7, 8. (அ) காசா சம்பந்தப்பட்டதில் மலைக்க வைக்கும் என்ன செயலை சிம்சோன் செய்தார்? (ஆ) என்ன தகவல் சிம்சோனுடைய செயலை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது? (இ) சிம்சோனைப் பற்றிய இப்பதிவை அறிவதும், புரிந்துகொள்வதும் நமக்கு எப்படி உதவலாம்?
7 நியாயாதிபதிகள் 16:2-ல் பெலிஸ்தரின் பட்டணமான காசாவில் சிம்சோன் இருந்ததைப் பற்றி நீங்கள் வாசிக்கலாம். இன்று அடிக்கடி காசா என்ற பெயர் செய்திகளில் அடிபடுவதை நீங்கள் கேட்கலாம். எனவே சிம்சோன் எங்கிருந்தார் என்பதை உங்களால் ஓரளவு ஊகிக்க முடியலாம். அவர் மத்தியதரைக் கடல் கரையோரமிருந்த பெலிஸ்தரின் பிராந்தியத்தில் இருந்தார். [11] இப்போது நியாயாதிபதிகள் 16:3-ஐக் கவனியுங்கள்: “சிம்சோன் நடுராத்திரி மட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின் மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டு போனான்.”
8 காசா போன்ற அரணான பட்டணத்தின் மரக் கதவுகளும் நிலைகளும் பெரியவையாக, கனமானவையாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவற்றைத் தூக்கிக் கொண்டு செல்வதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! சிம்சோன் அதைத்தான் செய்தார், ஆனால் எங்கு போனார், எப்படிப்பட்ட பிரயாணம் செய்தார்? காசா பட்டணம் கரையோரத்தில், ஏறக்குறைய கடல் மட்டத்தில் உள்ளது. [15] ஆனால் எப்ரோனோ அதற்கு கிழக்குப் பக்கத்தில் 900 மீட்டர் உயரத்தில் உள்ளது; செங்குத்தாக மேலே ஏற வேண்டிய பிரயாணம்! “எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலை” திட்டவட்டமாக எங்கிருந்தது என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் எபிரோன் பட்டணத்தைப் பற்றி நமக்குத் தெரியும்; அது காசாவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில், மலைச்சரிவில் அமைந்திருந்தது! இந்தத் தூரத்தை அறிவது சிம்சோனின் சாதனையை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது அல்லவா? இத்தகைய காரியங்களை சிம்சோன் செய்ய முடிந்ததற்கான காரணத்தை சற்று நினைத்துப் பாருங்கள்; ‘யெகோவாவின் ஆவி அவர் மேல் பலமாய் இறங்கினதினாலேயே’ அவற்றை செய்ய முடிந்தது. (நியாயாதிபதிகள் 14:6, 19; 15:14) இன்று கிறிஸ்தவர்களாக நமக்கு அசாதாரணமான உடல் பலத்தை கடவுளுடைய ஆவி தரும்படி நாம் எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும், வலிமை படைத்த அதே ஆவி, ஆழமான ஆவிக்குரிய காரியங்களை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளவும் உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் நமக்கு உதவ முடியும். (1 கொரிந்தியர் 2:10-16; 13:8; எபேசியர் 3:16; கொலோசெயர் 1:9, 10) ஆம், சிம்சோனைப் பற்றிய பதிவைப் புரிந்துகொள்ளும்போது கடவுளுடைய ஆவி நமக்கு உதவ முடியும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
9, 10. (அ) மீதியானியர்களை கிதியோன் வெற்றி சிறந்ததில் எதுவும் உட்பட்டிருந்தது? (ஆ) நிலவியலை நாம் அறிந்துகொள்வது இந்தப் பதிவை எப்படி அதிக அர்த்தமுள்ளதாய் ஆக்கலாம்?
9 தூரத்தை அறிந்துகொள்வதன் மதிப்பைப் புரிந்துகொள்வதற்கு மீதியானியர்கள் மீது கிதியோன் வெற்றி சிறந்ததைப் பற்றிய மற்றொரு பதிவும் உதவுகிறது. நியாயாதிபதியான கிதியோனையும் 300 பேர் கொண்ட அவரது படையையும் பற்றி பைபிள் வாசகர்கள் பெரும்பாலோருக்குத் தெரியும்; இப்படை, 1,35,000 பேர் கொண்ட கூட்டுப் படையை தோற்கடித்தது; இந்தக் கூட்டுப் படையில் மீதியானியர்களும் அமலேக்கியர்களும் மற்றவர்களும் யெஸ்ரயேல் சமவெளியில் மோரே என்ற மேட்டிற்கு அருகே பாளயமிறங்கியிருந்தார்கள். [18] கிதியோனின் ஆட்கள் எக்காளங்களை ஊதினார்கள், தங்கள் தீவட்டிகள் வெளியே தெரிவதற்கு பானைகளை உடைத்தார்கள், ‘யெகோவாவுடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்’ என உரக்க குரல்கொடுத்தார்கள். இதைக் கேட்ட எதிரிகளுக்குக் குழப்பமும் குலைநடுக்கமும் ஏற்பட்டது, எனவே அவர்கள் தங்களில் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க தொடங்கினார்கள். (நியாயாதிபதிகள் 6:33; 7:1-22) இவை அனைத்தும் அந்த இரவு வேளையில் சட்டென நடந்தேறிய ஒரே சம்பவமா? தொடர்ந்து நியாயாதிபதிகள் 7-ம், 8-ம் அதிகாரங்களை வாசித்துப் பாருங்கள். கிதியோன் தொடர்ந்து போரிட்டதை அதில் காண்பீர்கள். அநேக இடங்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன; அவற்றில் சிலவற்றை இன்றுள்ள இடங்களோடு சம்பந்தப்படுத்தி அடையாளம் காண முடியாது, எனவே அவை பைபிள் வரைபடங்களில் இருக்காது. எனினும், கிதியோன் எங்கெல்லாம் சென்றார் என்பதை தெரிந்துகொள்வதற்கு போதுமான இடங்கள் அவற்றில் காட்டப்பட்டுள்ளன.
10 கூட்டுப் படையில் மீதமிருந்தவர்களை, பெத்சித்தாவைக் கடந்து, தெற்குப் புறமாக யோர்தானுக்கு அருகே ஆபேல்மேகொலா வரை கிதியோன் துரத்திச் சென்றார். (நியாயாதிபதிகள் 7:22-25) ‘கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவரும் அவரோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் [அதாவது, சோர்ந்திருந்தும்] (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள்’ என அந்தப் பதிவு சொல்கிறது. யோர்தானைக் கடந்த பின்பு, தெற்கே யாபோக்கிற்கு அருகே சுக்கோத், பெனூவேல் வரைக்கும் பின்னர் யொகிபேயா மலைச்சரிவுகள் (இன்று ஜோர்டானிலுள்ள அம்மானுக்கு அருகே) வரைக்கும் இஸ்ரவேலர் தங்கள் எதிரிகளைத் துரத்திச் சென்றார்கள். இப்படி சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று போரிட்டார்கள். இரண்டு மீதியானிய ராஜாக்களையும் கிதியோன் பிடித்து கொன்று போட்டார்; பின்னர் சண்டை துவங்கிய இடத்திற்கு அருகே உள்ள ஒப்ரா என்னும் அவரது சொந்த ஊருக்குத் திரும்பினார். (நியாயாதிபதிகள் 8:4-12, 21-27) வெறுமனே சில நிமிடங்களுக்கு எக்காளங்களை ஊதி, தீவட்டிகளை ஆட்டி, உரக்க குரல் கொடுத்ததுடன் கிதியோனின் செயல்கள் முடிந்துவிடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. விசுவாசிகளைப் பற்றிய பின்வரும் குறிப்புக்கு இது எந்தளவுக்கு வலிமை சேர்க்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்: ‘கிதியோனையும் [மற்றும் பிறரையும்] குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது. அவர்கள் பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள்.’ (எபிரெயர் 11:32-34) கிறிஸ்தவர்கள்கூட இன்று உடல் ரீதியாக சோர்ந்துவிடலாம், ஆனாலும் கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்வது மிக அவசியமல்லவா?—2 கொரிந்தியர் 4:1, 16; கலாத்தியர் 6:9.
ஜனங்கள் எப்படி யோசிக்கிறார்கள், பிரதிபலிக்கிறார்கள்?
11. இஸ்ரவேலர் காதேஸை அடைவதற்கு முன்னரும் பின்னரும் எங்கெல்லாம் பயணம் செய்தார்கள்?
11 பைபிள் வரைபடங்களில் இடங்களை கண்டுபிடிக்க சிலர் முயலுகிறார்கள், ஆனால் ஜனங்கள் யோசித்த விதத்தைப் புரிந்துகொள்ள அந்த வரைபடங்கள் உதவுமென நினைக்கிறீர்களா? உதாரணத்திற்கு, சீனாய் மலையிலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்ற இஸ்ரவேலரை எடுத்துக் கொள்ளுங்கள். வழியிலே சில இடங்களில் தங்கிவிட்டு, கடைசியில் காதேஸை (அல்லது காதேஸ்பர்னேயாவை) அவர்கள் சென்றடைந்தார்கள். [9] உபாகமம் 1:1 இதை சுமார் 270 கிலோமீட்டர் தூரமுள்ள 11 நாள் பயணம் என்று குறிப்பிடுகிறது. இங்கிருந்துதான் மோசே 12 வேவுகாரர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அனுப்பினார். (எண்ணாகமம் 10:12, 33; 11:34, 35; 12:16; 13:1-3, 25, 26) நெகெப் வழியாக வேவுகாரர்கள் வடக்கே சென்றார்கள்; ஒருவேளை அவர்கள் பெயெர்செபா, எப்ரோன் ஆகியவற்றின் வழியாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வட எல்லைகளை அடைந்திருக்கலாம். (எண்ணாகமம் 13:21-24) பத்து வேவுகாரர்கள் கொடுத்த எதிர்மறையான அறிக்கையை இஸ்ரவேலர் ஏற்றுக்கொண்டதால் 40 வருடம் அந்த வனாந்தரத்தில் அலைந்து திரிய வேண்டியதாயிற்று. (எண்ணாகமம் 14:1-34) அவர்களது விசுவாசம், யெகோவாவை நம்புவதற்கான விருப்பம் ஆகியவை சம்பந்தமாக இது எதை சுட்டிக்காட்டுகிறது?—உபாகமம் 1:19-33; சங்கீதம் 78:22, 32-43; யூதா 5.
12. இஸ்ரவேலரின் விசுவாசத்தைக் குறித்து நாம் என்ன முடிவுக்கு வரலாம், இதைக் குறித்து நாம் சிந்திப்பது ஏன் அவசியம்?
12 நிலவியல் கண்ணோட்டத்தில் இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். யோசுவாவும் காலேபும் சொன்னதை இஸ்ரவேலர் கேட்டு விசுவாசித்திருந்தால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அடைவதற்கு இந்தளவு பயணிக்க வேண்டியிருந்திருக்குமா? ஈசாக்கும் ரெபெக்காளும் குடியிருந்த பெயர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து காதேஸ் சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. [7] வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் தெற்கு எல்லையாக அமைந்த பெயெர்செபா, இங்கிருந்து 95 கிலோமீட்டர் தூரம்கூட இல்லை. (ஆதியாகமம் 24:62; 25:11; 2 சாமுவேல் 3:9) எகிப்திலிருந்து சீனாய் மலைக்கும், அங்கிருந்து 270 கிலோமீட்டர் தூரம் காதேஸுக்கும் பயணித்த பிறகு அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வாசலருகே வந்துவிட்டதைப் போல இருந்தது. நம்மை பொறுத்தவரை, வாக்குறுதி அளிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸின் வாசலருகே நாம் இருக்கிறோம். ஆகவே நாம் என்ன பாடத்தை கற்றுக்கொள்கிறோம்? இஸ்ரவேலரின் சூழ்நிலையுடன் ஒப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் பின்வரும் புத்திமதியைக் கொடுத்தார்: “ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.”—எபிரெயர் 3:16–4:11.
13, 14. (அ) எந்தச் சூழ்நிலையில் கிபியோனியர் ஒரு திட்டவட்டமான நடவடிக்கை எடுத்தார்கள்? (ஆ) கிபியோனியரின் மனநிலையை எது வெளிப்படுத்துகிறது, இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்?
13 வித்தியாசப்பட்ட மனப்பான்மை—அதாவது, கடவுளுடைய சித்தத்தை செய்ய அவர்மீது நம்பிக்கை வைப்பது—அவசியம் என்பதற்கு கிபியோனியர்களைப் பற்றிய பைபிள் பதிவு அத்தாட்சி அளிக்கிறது. ஆபிரகாமின் குடும்பத்தாருக்கு கடவுள் வாக்குறுதி அளித்திருந்த தேசத்திற்கு யோர்தான் நதியைக் கடந்து இஸ்ரவேலரை யோசுவா அழைத்துச் சென்ற பிறகு, கானானியரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான வேளை வந்தது. (உபாகமம் 7:1-3) அந்தக் கானானியரில் கிபியோனியரும் உட்பட்டிருந்தார்கள். எரிகோவையும் ஆயி பட்டணத்தையும் கவிழ்த்த பின்பு கில்காலுக்கு அருகே இஸ்ரவேலர் கூடாரமிட்டிருந்தார்கள். சபிக்கப்பட்ட கானானியராக சாவதற்கு கிபியோனியருக்கு விருப்பமில்லை, எனவே அவர்கள் கில்காலிலிருந்த யோசுவாவிடம் பிரதிநிதிகளை அனுப்பினார்கள். எபிரெயர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்காக கானானுக்கு அப்பாலிருந்து வருவதைப் போல அவர்கள் பாசாங்கு செய்தார்கள்.
14 ‘உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்’ என அந்தப் பிரதிநிதிகள் சொன்னார்கள். (யோசுவா 9:3-9) அவர்களுடைய உடையும் உணவுப் பொருட்களும் வெகு தூரத்திலிருந்து வந்ததற்கு அத்தாட்சி அளித்ததாக தோன்றின, ஆனால் உண்மையில் கில்காலிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலேயே கிபியோன் இருந்தது. [19] பிரதிநிதிகளின் பேச்சை நம்பிய யோசுவாவும் அவரது பிரபுக்களும் கிபியோனோடும் அதன் பட்டணங்களோடும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அழிவை சந்திக்காதிருப்பதற்காகவே கிபியோனியர் இப்படி தந்திரம் செய்தார்களா? இல்லை, இஸ்ரவேலரின் கடவுளுடைய தயவைப் பெற வேண்டுமென்ற ஆவல் அவர்களது செயலில் வெளிப்பட்டது. ‘சபைக்கும் . . . யெகோவாவுடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும்’ இருக்க கிபியோனியரை யெகோவா அனுமதித்தார். (யோசுவா 9:11-27) யெகோவாவின் சேவையில் எளிய வேலைகளை செய்ய மனமுள்ளவர்களாக இருந்ததை கிபியோனியர் எப்போதும் வெளிக்காட்டினார்கள். பாபிலோனிலிருந்து திரும்பி வந்து மீண்டும் கட்டப்பட்ட ஆலயத்தில் சேவை செய்த நிதனீமியரில் இவர்களில் சிலரும் இருந்திருக்கலாம். (எஸ்றா 2:1, 2, 43-54; 8:20) கடவுளுடன் சமாதானத்தைக் காத்துக்கொள்ள முயலுவதன் மூலமும் அவருடைய சேவையில் அற்ப வேலைகளைக்கூட மனமுவந்து செய்வதன் மூலமும் நாம் அவர்களது முன்மாதிரியைப் பின்பற்றலாம்.
சுயதியாக மனப்பான்மையுடன் செயல்படுவது
15. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள நிலவியல் குறிப்புகள் ஏன் ஆர்வத்துக்குரியவை?
15 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பதிவுகளிலும் பைபிள் தேசங்களைப் பற்றிய நிலவியல் குறிப்புகள் உண்டு; உதாரணத்திற்கு, இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் செய்த பிரயாணங்களையும் ஊழியங்களையும் பற்றிய பதிவுகளில் அவை காணப்படுகின்றன. (மாற்கு 1:38; 7:24, 31; 10:1; லூக்கா 8:1; 13:22; 2 கொரிந்தியர் 11:25, 26) பின்வரும் பதிவுகளில் அத்தகைய பயணங்களைக் கற்பனை செய்து பார்க்க முயலுங்கள்.
16. பெரோயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் பவுலிடம் தங்களுக்கிருந்த போற்றுதலை எப்படிக் காட்டினார்கள்?
16 பவுல் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தில் (வரைபடத்திலுள்ள ஊதா நிறக் கோடு) தற்போதைய கிரீஸிலுள்ள பிலிப்பியை வந்தடைந்தார். [33] அங்கு சாட்சி கொடுத்தார், கைது செய்யப்பட்டார், விடுதலை ஆனார், அதன் பின் தெசலோனிக்கே பட்டணத்துக்குச் சென்றார். (அப்போஸ்தலர் 16:6–17:1) யூதர்கள் ஒரு கலகத்தைத் தூண்டிவிட்டபோது தெசலோனிக்கேயிலிருந்த சகோதரர்கள் சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திலிருந்த பெரோயாவுக்குப் போகும்படி அவரை வற்புறுத்தினார்கள். பெரோயாவில் செய்த ஊழியத்தில் பவுல் அருமையான பலன்களைப் பெற்றார், ஆனால் யூதர்கள் அங்கு வந்து ஜனங்களை கலகம் செய்ய தூண்டிவிட்டார்கள். இதனால் “உடனே சகோதரர் பவுலைச் சமுத்திர வழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள்,” ‘பவுலை வழிநடத்தினவர்கள் அவரை அத்தேனே பட்டணம் வரைக்கும் அழைத்துக் கொண்டுபோனார்கள்.’ (அப்போஸ்தலர் 17:5-15) புதிதாக மதம் மாறிய சிலர் ஏஜியன் கடல் வரை 40 கிலோமீட்டர் தூரம் நடக்கவும், கப்பல் பிரயாணத்திற்கு செலவு செய்து, சுமார் 500 கிலோமீட்டர் தூரத்திலிருந்த அத்தேனேக்கு செல்லவும் மனமுள்ளவர்களாக இருந்ததாக தெரிகிறது. இத்தகைய பயணம் ஆபத்தானதாக இருந்திருக்கலாம், ஆனால் சகோதரர்கள் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்வதன் மூலம் கடவுளுடைய இந்தப் பயணப் பிரதிநிதியுடன் அதிக நேரத்தை செலவிட்டார்கள்.
17. மிலேத்துவுக்கும் எபேசுவுக்கும் இடைப்பட்ட தூரத்தை நன்கு புரிந்துகொள்ளும்போது எதை நம்மால் போற்ற முடியும்?
17 பவுல் தன்னுடைய மூன்றாவது பயணத்தில் (வரைபடத்திலுள்ள பச்சை நிறக் கோடு) மிலேத்து துறைமுகத்தை அடைந்தார். அங்கு வரும்படி சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலிருந்த எபேசு சபையிலிருந்து மூப்பர்களுக்கு சொல்லி அனுப்பினார். அந்த மூப்பர்கள் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு பவுலைக் காண வந்ததை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் நடந்து செல்லுகையில் பவுலை சந்திக்கப் போவதைப் பற்றி உற்சாகமாக பேசிக்கொண்டு சென்றிருக்கலாம். பவுலை சந்தித்து விட்டு அவர் ஜெபிப்பதைக் கேட்டபோது ‘அவர்களெல்லாரும் மிகவும் அழுது, . . . பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவரை முத்தஞ்செய்தார்கள்.’ அவர் எருசலேம் செல்வதற்கு ‘கப்பல் வரைக்கும் அவருடனே கூடப்போனார்கள்.’ (அப்போஸ்தலர் 20:14-38) அவர்கள் எபேசுவுக்கு திரும்பிச் செல்லுகையில் யோசிப்பதற்கும் பேசுவதற்கும் அவர்களுக்கு ஏராளமான விஷயங்கள் இருந்திருக்கும். தங்களுக்குத் தகவல் அறிவிக்கவும் உற்சாகப்படுத்தவும் வந்திருந்த பயண ஊழியருடன் இருப்பதற்காக அத்தனை தூரம் நடந்து சென்றதன் மூலம் அவர்கள் காட்டிய போற்றுதல் உங்கள் மனதைத் தொடவில்லையா? உங்களுடைய வாழ்க்கையிலும் எண்ணத்திலும் அவர்களை எவ்விதத்திலாவது பின்பற்ற முடியுமென நினைக்கிறீர்களா?
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தையும், எதிர்காலத்தையும் பற்றி கற்றுக்கொள்ளுங்கள்
18. பைபிள் இடங்களைப் பொறுத்ததில் நாம் என்ன செய்ய தீர்மானமாய் இருக்கலாம்?
18 முன்னர் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்ததும், அநேக பைபிள் பதிவுகளுக்கு அடிப்படையாக அமைந்ததுமான வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதன் மதிப்பை சுட்டிக்காட்டுகின்றன. (பைபிள் பதிவில் காணப்படும் அதன் அண்டை தேசங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வதன் மூலம் நமது மனக்காட்சியை இன்னும் விரிவாக்கலாம்.) முக்கியமாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பற்றி அதிகமதிகமாக அறிவைப் பெற்று அதைப் புரிந்துகொள்ளும்போது ஒரு விஷயத்தை நினைவில் வைப்பது அவசியம்; அதாவது, ‘பாலும் தேனும்’ ஓடுகிற அத்தேசத்தில் பிரவேசித்து அதை மகிழ்ந்து அனுபவிக்க இஸ்ரவேலரிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டது என்பதை நினைவில் வைப்பது அவசியம். அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.—உபாகமம் 6:1, 2; 27:3.
19. எந்த இரண்டு பரதீஸுக்கு நாம் எப்போதும் கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும்?
19 அதைப் போலவே இன்று நம் பங்கில் யெகோவாவுக்குப் பயந்து அவருடைய வழிகளைப் பின்பற்றுவது அவசியம். இவ்வாறு செய்யும்போது, உலகளாவிய கிறிஸ்தவ சபையில் இப்போதுள்ள ஆவிக்குரிய பரதீஸை மேம்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் நாம் பங்களிப்போம். அதன் அம்சங்களையும், ஆசீர்வாதங்களையும் பற்றிய அறிவில் மேன்மேலும் பெருகுவோம். அதோடு, இன்னுமநேக ஆசீர்வாதங்கள் வரவிருப்பதை அறிந்திருக்கிறோம். யோர்தானைக் கடந்து வளமான, திருப்தியான தேசத்திற்கு இஸ்ரவேலரை யோசுவா அழைத்துச் சென்றார். இப்போது, நமக்கு முன்னிருக்கும் நிஜ பரதீஸ் எனும் நல்ல தேசத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி இருப்பதற்கு நமக்கு நியாயமான காரணம் இருக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• பைபிள் தேசங்கள் சம்பந்தமாக இன்னுமதிக அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பெற ஏன் விரும்ப வேண்டும்?
• இந்தக் கட்டுரையில் கலந்தாலோசிக்கப்பட்ட எந்த நிலவியல் விவரம் முக்கியமாக உங்களுக்கு பேருதவியாய் இருந்திருக்கிறது?
• சில சம்பவங்களில் உட்பட்டுள்ள நிலவியல் விவரத்தை அறிந்துகொண்டது என்ன பாடத்தை உங்கள் மனதில் ஆழப் பதிய வைத்தது?
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’
2003-2004-ல் நடைபெற்ற மாவட்ட மாநாடுகளில் ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டை அதிக மகிழ்ச்சியுடன் யெகோவாவின் சாட்சிகள் பெற்றுக் கொண்டார்கள். இந்தப் புதிய பிரசுரம் சுமார் 80 மொழிகளில் கிடைக்கிறது; பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இடங்கள், முக்கியமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாக்குப்பண்ணப்பட்ட தேசம் எப்படி இருந்தது என்பதை விளக்குகிற, முழு-வண்ண வரைபடங்களும் அட்டவணைகளும் இதில் உள்ளன.
இத்துடன் உள்ள கட்டுரையில் குறிப்பிட்ட வரைபடங்களின் பக்க எண்கள் தடித்த எண்களில் (உதாரணத்திற்கு [15]) காட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய சிற்றேடு உங்களிடம் இருந்தால், அதன் விசேஷ அம்சங்களைப் பற்றி தெரிந்துகொள்ள கொஞ்ச நேரம் செலவிடுங்கள்; கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவும் புரிந்துகொள்ளுதலும் அதிகரிப்பதற்கு அது உங்களுக்கு உதவும்.
(1) பெரும்பாலான வரைபடங்களில் குறியீடுகளோ பெட்டிகளோ காணப்படுகின்றன; இவை வரைபடத்திலுள்ள விசேஷ குறிகளை விளக்குகின்றன [18]. (2) பெரும்பாலான வரைபடங்களில், மைல் மற்றும் கிலோமீட்டர் கணக்கில் தூரம் குறிப்பிடப்பட்டுள்ளது; இவை இடங்களின் பரப்பளவையோ தூரத்தையோ புரிந்துகொள்ள உதவும் [26]. (3) வடக்கை சுட்டிக்காட்டும் அம்புக்குறி பொதுவாக திசையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் [19]. (4) பொதுவாக மேடான இடங்களைச் சுட்டிக்காட்டுவதற்கு வரைபடங்களில் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன [12]. (5) வரைபடத்தின் ஓரங்களில் எழுத்துக்களை/எண்களைக் காணலாம்; இவை பட்டணங்களை அல்லது பெயர்களை கண்டுபிடிக்க உதவலாம் [23]. (6) இடங்களின் பெயர்கள் அடங்கிய இரண்டு பக்க இன்டெக்ஸில் [34-5], பக்க எண்கள் தடித்த எண்களில் இருப்பதைக் காணலாம், பெரும்பாலும் அதற்கு அடுத்ததாக E2 போன்று வரைபட ஓரங்களின் எழுத்து/எண்கள் காணலாம். இந்த அம்சங்களை ஓரிரு முறை பயன்படுத்திய பிறகு, பைபிளைப் பற்றிய உங்கள் அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் அதிகரிப்பதற்கு அவை எத்தகைய சிறந்த கருவிகளாக உள்ளன என்பதைக் கண்டு நீங்களே அசந்துவிடுவீர்கள்.
[பக்கம் 16, 17-ன் அட்டவணை/தேசப்படம்]
இயற்கை பகுதிகளின் அட்டவணை
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
A. பெருங்கடலின் கரை
B. யோர்தானுக்கு மேற்கேயுள்ள சமவெளிகள்
1. ஆசேர் சமவெளி
2. தோர் கடலோர பகுதி
3. சாரோனின் புல்வெளிகள்
4. பெலிஸ்த சமவெளி
5. மத்திய கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கு
a. மெகிதோ சமவெளி
b. யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு
C. யோர்தானுக்கு மேற்கேயுள்ள மலைகள்
1. கலிலேயா குன்றுகள்
2. கர்மேல் குன்றுகள்
3. சமாரியா குன்றுகள்
4. ஷெஃபிலா (தாழ்வான குன்றுகள்)
5. யூதாவின் மலைநாடு
6. யூதாவின் வனாந்தரம்
7. நெகெப்
8. பாரான் வனாந்தரம்
D. அராபா (பிளவு பள்ளத்தாக்கு)
1. ஹூலா நீர்த்தேக்கம்
2. கலிலேயாக் கடல் பகுதி
3. யோர்தான் பள்ளத்தாக்கு
4. உப்புக் கடல் (சவக் கடல்)
5. அராபா (உப்புக் கடலின் தென்பகுதி)
E. மலைகள்/யோர்தானின் கிழக்கே உள்ள பீடபூமிகள்
1. பாசான்
2. கீலேயாத்
3. அம்மோன் மற்றும் மோவாப்
4. ஏதோமின் மலைப் பீடபூமி
F. லீபனோன் மலைகள்
[தேசப்படம்]
எர்மோன் மலை
மோரே
ஆபேல் மேகொலா
சுக்கோத்
யொகிபேயா
பெத்தேல்
கில்கால்
கிபியோன்
எருசலேம்
எப்ரோன்
காசா
பெயெர்செபா
சோதோம்?
காதேஸ்
[பக்கம் 15-ன் தேசப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கானான்
மெகிதோ
கீலேயாத்
தோத்தான்
சீகேம்
பெத்தேல் (லூஸ்)
ஆயி
எருசலேம் (சாலேம்)
பெத்லகேம் (எப்பிராத்தா)
மம்ரே
எப்ரோன் (மக்பேலா)
கேரார்
பெயெர்செபா
சோதோம்?
நெகெப்
ரெகொபோத்?
[மலைகள்]
மோரியா
[நீர்நிலைகள்]
உப்புக் கடல்
[நதிகள்]
யோர்தான்
[படம்]
தேசத்தில் ஆபிரகாம் குறுக்கும் நெடுக்கும் பயணித்தார்
[பக்கம் 18-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
துரோவா
சாமோத்திராக்கே
நெயாப்போலி
பிலிப்பி
அம்பிபோலி
தெசலோனிக்கே
பெரோயா
அத்தேனே
கொரிந்து
எபேசு
மிலேத்து
ரோது