உகரிட்—பாகால் வணக்கத்தின் பிடியிலிருந்த பூர்வ நகரம்
அந்த வருடம் 1928. சிரியாவைச் சேர்ந்த விவசாயி தன் நிலத்தில் உழுகையில் அவருடைய ஏரில் ஏதோ தட்டுப்பட்டது. பூர்வகால பீங்கான் பொருட்கள் நிறைந்த ஒரு கிடங்கை மூடியிருந்த கல் அது. அந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அவர் உணராமல் இருந்திருக்கலாம். எதிர்பாராத இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி கேள்விப்பட்ட பிரான்ஸை சேர்ந்த புதைபொருள் ஆராய்ச்சி குழு ஒன்று அதற்கடுத்த வருடம் அங்கு சென்றது. கிளோட் ஷாஃபேர் அந்த குழுவின் தலைவராக இருந்தார்.
சிறிது காலத்திலேயே, கல்வெட்டு ஒன்றை தோண்டி எடுத்தார்கள். அங்கிருந்த இடிபாடுகளை அடையாளம் காண அது உதவியது. ‘கீழை நாடுகளைச் சேர்ந்த பூர்வ நகரங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான’ உகரிட் நகரமே அது என்பது தெளிவானது. “வேறு எந்த புதைபொருள் கண்டுபிடிப்பும், ஏன் சவக்கடல் சுருள்களின் கண்டுபிடிப்பும்கூட பைபிள் சம்பந்தமான நம் அறிவுக்கண்களை இந்தளவிற்கு திறந்ததில்லை” என்று எழுத்தாளர் பாரி ஹோபர்மன் சொன்னார்.—தி அட்லான்டிக் மன்திலி.
முக்கிய சந்திப்பில் அமைந்திருந்தது
உகரிட், தற்போதைய வட சிரியாவில் மத்தியதரைக் கடல் ஓரத்திலுள்ள ராஸ் ஷம்ரா என அழைக்கப்பட்ட மண்மேட்டில் அமைந்திருந்தது. அது, 3,000-திற்கும் அதிக வருடங்களுக்கு முன்பு ஒரு பெருநகரமாக தழைத்தோங்கியது. அந்த ராஜ்யத்தின் எல்லை, வடக்கே காசியஸ் மலையிலிருந்து தெற்கே டெல் சுகாஸ் வரை ஏறக்குறைய 60 கிலோமீட்டரும், மேற்கே மத்தியதரைக் கடலிலிருந்து கிழக்கே ஒரான்டிஸ் பள்ளத்தாக்கு வரை 30 முதல் 50 கிலோமீட்டருமாக பரவியிருந்தது.
உகரிட்டின் மிதமான சீதோஷ்ண நிலை கால்நடைகளுக்கு ஏற்றதாக இருந்ததால் அவை கொழுகொழுவென்று வளர்ந்து பெருகின. தானிய வகைகள், ஒலிவ எண்ணெய், திராட்சரசம், மெசோபொத்தோமியாவிலும் எகிப்திலும் அறவே இல்லாத மரக்கட்டைகள் ஆகியவை அங்கு கிடைத்தன. அதோடு அந்நகரம், அதிமுக்கிய வணிக தடங்களின் சந்திப்பில் அமைந்திருந்ததால் முதல் மாபெரும் சர்வதேச துறைமுகங்களில் ஒன்றானது. ஈஜியன், அனடோலியா, பாபிலோன், எகிப்து, மத்திய கிழக்கின் மற்ற பகுதிகள் ஆகியவற்றிலிருந்து வந்த வணிகர்கள் உகரிட்டில்தான் உலோகங்களையும், விவசாய பொருட்களையும், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஏராளமான மற்ற பொருட்களையும் வணிகம் செய்தனர்.
செல்வச் செழிப்புமிக்க நகரமாக இருந்தபோதிலும் உகரிட் எப்போதும் ஓர் அடிமை ராஜ்யமாகவே இருந்தது. பொ.ச.மு. 14-ம் நூற்றாண்டில் மதசார்பற்ற ஏத்திய சாம்ராஜ்யத்தோடு இணைக்கப்படும் வரை அந்த நகரம் எகிப்திய சாம்ராஜ்யத்தின் வடகோடியிலிருந்த குடியேற்றமாகவே விளங்கியது. தன்னை ஆண்ட வல்லரசுக்கு கப்பம் கட்டவும் படைகளை அனுப்பவும் உகரிட் கட்டாயப்படுத்தப்பட்டது. அனடோலியாவையும் (மத்திய துருக்கி) வட சிரியாவையும் “கடல் மக்கள்”a தாக்கி அழிக்க ஆரம்பித்தபோது, உகரிட்டின் காலாட் படைகளையும் கப்பற் படைகளையும் உதவிக்காக அனுப்பும்படி ஏத்தியர்கள் கேட்டனர். அதன் விளைவாக, உகரிட்டிற்கு பாதுகாப்பு இல்லாமல் போகவே சுமார் பொ.ச.மு. 1200-ல் அது அடியோடு அழிக்கப்பட்டது.
கடந்த காலத்தை உயிர்ப்பித்தல்
உகரிட் அழிந்தபோது அந்த இடத்தில் ஏறக்குறைய 20 மீட்டர் உயரமும் 60 ஏக்கருக்கும் அதிக பரப்பளவும் கொண்ட பெரிய மண்மேடு உருவானது. இதில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதன் இடிபாடுகளில், ஏறக்குறைய 100 அறைகளும் பல முற்றங்களும் கொண்ட பிரமாண்டமான மாளிகை வளாகத்தின் சிதிலங்களை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் பரப்பளவோ சுமார் 10,000 சதுர மீட்டராகும். அந்த வளாகத்தில் குழாய் நீர் வசதியும், கழிவறைகளும், சாக்கடைகளும் இருந்தன. மேஜை, நாற்காலிகள் போன்றவற்றில் தங்கம், விலையுயர்ந்த நீல மணிக்கற்கள், தந்தம் போன்றவை பதிக்கப்பட்டிருந்தன. மிகவும் அருமையாக செதுக்கப்பட்ட, தந்தத்தாலான பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர் கொண்ட ஒரு தோட்டமும் நிலமட்டத்தைவிட தாழ்வாக இருந்த குளமும் மாளிகையின் அழகிற்கு அழகு சேர்த்தன.
அந்த நகரத்திலும் அதை சுற்றியுள்ள சமவெளியிலும் பாகாலின் ஆலயங்களும் தாகோனின் ஆலயங்களும் நிறைந்திருந்தன.b இந்த ஆலய கோபுரங்கள் 20 மீட்டர் உயரம் இருந்திருக்கலாம்; அதில், தெய்வத்தின் சன்னிதி வரை ஒரு சிறிய நடைபாதை சென்றது. மொட்டை மாடிக்கு செல்ல ஒரு படிக்கட்டு இருந்தது; அங்கிருந்துதான் அரசர் பல்வேறு சடங்குகளை நடத்தி வைத்தார். இரவில் அல்லது புயல் நேரத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக துறைமுகத்திற்கு வந்து சேர உதவியாக அந்த ஆலயங்களின் உச்சிகளில் தீபங்கள் கொளுத்தப்பட்டிருக்கலாம். புயல் தெய்வமான பாகால் ஹாடாட்டின் அருளால்தான் கப்பல்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாக மாலுமிகள் நம்பினர்; அத்தெய்வத்தின் சன்னிதியில் காணப்பட்ட 17 கல் நங்கூரங்களை நேர்த்திக்கடனாக அவர்களே செலுத்தியிருக்க வேண்டும்.
பொறிக்கப்பட்ட எழுத்துக்களின் பொன்னான கண்டுபிடிப்பு
உகரிட்டின் இடிபாடுகள் எங்கும் ஆயிரக்கணக்கான களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐந்து எழுத்து வடிவங்கள் கொண்டு எட்டு மொழிகளில் எழுதப்பட்ட பொருளாதார, சட்டப்பூர்வ, அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஷாஃபேரின் குழுவினர், 30 ஆப்புவடிவ சின்னங்களை உபயோகித்து இந்நாள் வரைக்கும் அறியப்படாத ஒரு மொழியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை கண்டுபிடித்தார்கள். அதற்கு உகரிட்டிக் என்று பெயரிட்டார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பழமையான எழுத்துக்களில் அதுவும் ஒன்றாகும்.
உகரிட்டிக்கில் எழுதப்பட்ட ஆவணங்களில் அன்றாட விஷயங்கள் மட்டுமல்ல, இலக்கியப் பதிவுகளும் இருந்தன. அக்காலத்து மத கோட்பாடுகளையும் பழக்கங்களையும் பற்றி புதுப்புது விஷயங்களைப் புரிந்துகொள்ள அவை உதவின. உகரிட்வாசிகள் கடைப்பிடித்த மதமானது அருகிலிருந்த கானானியர்களின் மதத்தை பெரிதும் ஒத்திருந்ததாக தோன்றுகிறது. இந்தப் பதிவுகள், “இஸ்ரவேலர் கானான் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அங்கே நிலவிய கலாச்சாரத்தை மிகவும் துல்லியமாக படம்பிடித்து காட்டுகின்றன” என்று ராலான் டா வோ கூறுகிறார்.
பாகால் நகரத்தின் மதம்
ராஸ் ஷம்ரா பதிவுகளில் 200-க்கும் அதிகமான தெய்வங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எல் என்பதே ஒப்பற்ற தெய்வமாக இருந்தது, தெய்வங்களுக்கும் மனிதனுக்கும் தகப்பன் என அழைக்கப்பட்டது. புயல் தெய்வமான பாகால் ஹாடாட், “மேகங்களில் சவாரி செய்பவன்” என்றும் “பூமியின் ஆண்டவன்” என்றும் அழைக்கப்பட்டான். எல், மனிதரைவிட்டு வெகு தொலைவிலிருக்கும் ஞானமான, வெள்ளை தாடியுடைய தாத்தாவாக சித்தரிக்கப்படுகிறான். மறுபட்சத்தில், தெய்வங்கள் மீதும் மனிதர்கள் மீதும் ஆட்சிசெய்ய விரும்பும் வலிமை வாய்ந்த, பதவி ஆசை பிடித்த தெய்வமாக பாகால் சித்தரிக்கப்படுகிறான்.
கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பதிவுகள், புது வருடம் அல்லது அறுவடை போன்ற மத திருவிழாக்களின்போது ஓதப்பட்டிருக்கலாம். என்றாலும், இவற்றின் சரியான விளக்கம் யாருக்கும் தெரியாது. ஆட்சியை பிடிக்க நடக்கும் சண்டை பற்றி ஒரு செய்யுள் விளக்குகிறது. அதில், எல்லின் பிரிய மகனாகிய கடல் தெய்வம் யாமை பாகால் தோற்கடிக்கிறான். இந்த வெற்றியே, கடலில் செல்கையில் பாகால் தங்களை காப்பாற்றுவான் என உகரிட்டின் மாலுமிகளுக்கு நம்பிக்கை அளித்திருக்கலாம். மாட் தெய்வத்தோடு சண்டையிடுகையில் பாகால் தோற்றுப்போய் ஆவி உலகிற்கு சென்றுவிடுகிறான். அதன் விளைவாக வறட்சி ஏற்பட்டு மனித செயல்பாடுகள் ஸ்தம்பித்து விடுகின்றன. பாகாலின் மனைவியும் சகோதரியுமான, அன்புக்கும் யுத்தத்திற்கும் தெய்வமான ஆனாத், மாட் தெய்வத்தை கொன்று பாகாலை திரும்ப உயிருக்கு கொண்டு வருகிறாள். எல்லின் மனைவியான ஆதிராட்டின் (அஷேராவின்) மகன்களை பாகால் கொன்றுபோட்டு அரியணையை கைப்பற்றுகிறான். ஆனால் ஏழு வருடங்கள் கழித்து மாட் திரும்ப வருகிறான்.
இந்தச் செய்யுள், பருவ காலங்களின் வருடாந்தர சுழற்சியை சுட்டிக்காட்டுவதாக சிலர் விளக்குகிறார்கள். அந்த சுழற்சியில், உயிரளிக்கும் மழையை கோடை காலத்தின் பயங்கர வெப்பம் வெற்றிகொண்டு விடுகிறது, பிறகு இலையுதிர் காலத்தில் அம்மழை மறுபடியும் உயிருக்கு வருகிறது. இந்த ஏழு வருட சுழற்சி, பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்ற பயத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதாக மற்றவர்கள் கருதுகிறார்கள். எதுவாயிருந்தாலும், பாகால் மேன்மையடைவதே மனித செயல்பாடுகள் வெற்றிபெற இன்றியமையாததாக கருதப்பட்டது. “பாகால் மேன்மை அடையும்படி பார்த்துக்கொள்வதே பாகால் மதத்தின் குறிக்கோளாகும். பாகால் மேலான நிலையில் இருக்கையில்தான், மனிதன் உயிர்வாழ இன்றியமையாதவையான பயிர்களும் கால்நடைகளும் தொடர்ந்து வாழும் என அவனை வணங்கியோர் நம்பினர்” என்று வல்லுனர் பீட்டர் கிரேகி குறிப்பிடுகிறார்.
புறமதத்திற்கு எதிரான பாதுகாப்பு
உகரிட்டின் மதம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை தோண்டி எடுக்கப்பட்ட உரைகள் தெளிவாக காட்டுகின்றன. “இந்த தெய்வங்களை வணங்கியதால் ஏற்பட்ட கீழ்த்தரமான விளைவுகளை உரைகள் காட்டுகின்றன; யுத்தம், ஆலய விபசாரம், சிற்றின்ப காமம் போன்றவற்றிற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமும் அதன் விளைவாக சமூகத்தில் ஏற்பட்ட சரிவும் சித்தரிக்கப்படுகின்றன” என்று தி இல்லஸ்ட்ரேட்டட் பைபிள் டிக்ஷ்னரி கூறுகிறது. “யாவே வழிபாட்டை உண்மையாய் கடைப்பிடித்தவர்களும் பெரும் தீர்க்கதரிசிகளும் இந்த வணக்கத்தை எவ்வளவாய் அருவருத்தார்கள் என்பதை இந்த செய்யுட்களை படிக்கும்போது ஒருவரால் புரிந்துகொள்ள முடிகிறது” என டா வோ கூறுகிறார். பூர்வ இஸ்ரவேல் தேசத்தாருக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாண சட்டம் அப்படிப்பட்ட பொய் மதத்திற்கு எதிரான பாதுகாப்பாக இருந்தது.
குறிசொல்லுதல், சோதிடம், மாயமந்திரம் போன்றவை உகரிட்டில் சர்வசாதாரணமாய் இருந்தன. நட்சத்திரங்களையும் கிரகங்களையும் வைத்து மட்டுமல்ல உருக்குலைந்த சிசுக்களையும் பலி செலுத்தப்பட்ட மிருகங்களின் உள்ளுறுப்புகளையும் வைத்துக்கூட குறியும் சகுனமும் பார்த்தனர். “சடங்காச்சார முறையில் பலி செலுத்தப்பட்ட மிருகம் அந்த தெய்வத்தோடு ஒன்றிவிட்டதாகவும் தெய்வத்தின் ஆவி அந்த மிருகத்தின் ஆவியோடு இணைந்துவிட்டதாகவும் நம்பப்பட்டது. ஆகவே, அதன் உறுப்புகளில் தென்படும் குறிகளை வாசித்து தெய்வங்களின் சித்தத்தை தெளிவாக உணர்ந்துகொள்ள முடியுமென கருதப்பட்டது. இவ்வாறு, எதிர்கால நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட கேள்வியைப் பற்றி அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றி சாதகமான அல்லது எதிர்மறையான பதிலை அந்த தெய்வங்களால் அளிக்க முடிந்தது என்றும் நம்பப்பட்டது” என சரித்திராசிரியர் ஷாக்லின் காஷே கூறுகிறார். (ல பேயி டுகாரிட் ஓட்டுர் ட 1200 ஆவான் ஷேஸ் கிரிஸ்ட்) மறுபட்சத்தில், இஸ்ரவேலர்கள் அப்படிப்பட்ட பழக்கங்களை வெறுத்து ஒதுக்க வேண்டியிருந்தது.—உபாகமம் 18:9-14.
மோசேயின் நியாயப்பிரமாணம் மிருகப்புணர்ச்சியை தெள்ளத்தெளிவாக தடைசெய்தது. (லேவியராகமம் 18:23) உகரிட்வாசிகள் இப்பழக்கத்தை எவ்வாறு கருதினார்கள்? பாகால் ஓர் இளம் பசுவோடு உறவு கொண்டதாக, கண்டுபிடிக்கப்பட்ட பதிவுகள் காண்பிக்கின்றன. “இதற்காக பாகால் ஒரு காளையின் உருவத்தை எடுத்துக்கொண்டதாக வாதாடினாலும்கூட கட்டுக்கதைகளில் அவனைப் பற்றி சொல்லப்பட்டதை அப்படியே செய்யும் அவன் ஆசாரியர்களும் அவ்வாறு உருமாறினார்கள் என்று சொல்லவே முடியாது” என புதைபொருள் நிபுணரான சைரஸ் கார்டன் கூறினார்.
“செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாம[ல்] . . . இருப்பீர்களாக” என்ற கட்டளை இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. (லேவியராகமம் 19:28) என்றாலும், பாகால் மரித்ததை பொறுக்க முடியாமல் எல், “கத்தியால் தன் சரீரத்தை வெட்டி, சவரக் கத்தியால் தன் கன்னங்களிலும் தாடையிலும் கிழித்துக்கொண்ட”தாக சொல்லப்படுகிறது. பாகால் வணக்கத்தார் மத்தியில் சடங்காச்சார முறையில் உடலைக் கிழித்துக்கொள்ளும் பழக்கமிருந்ததாக தோன்றுகிறது.—1 இராஜாக்கள் 18:28.
ஆட்டுக்குட்டியை பாலிலே சமைப்பது கானானிய மதத்தின் பிரபல கருவள சடங்கின் பாகமாயிருந்ததாக உகரிட்டிக் செய்யுள் ஒன்று குறிப்பிடுவது போல தோன்றுகிறது. மோசேயின் நியாயப்பிரமாணத்திலோ, “வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்” என்ற கட்டளை இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.—யாத்திராகமம் 23:19.
பைபிள் வசனங்களோடு ஒப்பிடுதல்
முக்கியமாய், பைபிளில் உபயோகிக்கப்பட்ட எபிரெய மொழியின் உதவியைக் கொண்டே உகரிட்டிக் உரைகள் ஆரம்பத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. “எபிரெய பைபிளில் உபயோகிக்கப்பட்ட அநேக வார்த்தைகளின் அர்த்தங்கள் தெளிவாக இல்லை, சில சமயங்களில் அறியப்படவே இல்லை; 20-ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு வழிமுறைகள் மூலமாக அவற்றின் அர்த்தத்தை ஊகித்தனர். ஆனால் அதே வார்த்தைகள் உகரிட்டிக் உரைகளில் காணப்படும்போது அவற்றின் அர்த்தத்தை புரிந்துகொள்வது சுலபமாகிறது” என்று பீட்டர் கிரேகி கூறுகிறார்.
உதாரணமாக, ஏசாயா 3:18-ல் உபயோகிக்கப்பட்ட ஒரு எபிரெய வார்த்தை பொதுவாக ‘சுட்டிகள்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்ற உகரிட்டிக் மூல வார்த்தை ஒன்று சூரியனையும் சூரிய தேவதையையும் குறிக்கிறது. ஆகவே, ஏசாயா தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்ட எருசலேமின் ஸ்திரீகள் கானானிய கடவுட்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் சிறிய சூரியன் வடிவ தொங்கட்டான்களையும் “பிறைச்சிந்தாக்குகளையும்” அணிந்து கொண்டிருந்திருக்கலாம்.
மஸோரெட்டிக் மூலவாக்கியத்தின்படி நீதிமொழிகள் 26:23-ல், “எறியும் உதடுகளும் தீயநெஞ்சமும்” ‘வெள்ளிக் கழிவு’ பூசப்பட்ட மண் பாண்டத்திற்கு ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்புமையை, “மண்பாண்டத்துண்டு மேலுள்ள பளபளப்பு போல” என்று மொழிபெயர்க்க உகரிட்டிக் மூல வார்த்தை அனுமதிக்கிறது. எனவே இந்த நீதிமொழியை, “அனலான உதடுகளோடு கூடிய கெட்ட இருதயம், மண்பாண்டத்தின் மேல் பூசப்பட்ட வெள்ளி முலாமிற்கு சமமாக இருக்கிறது” என்று புதிய உலக மொழிபெயர்ப்பு பொருத்தமாகவே மொழிபெயர்க்கிறது.
பைபிளின் அஸ்திவாரமா?
பைபிளிலுள்ள சில பகுதிகள் உகரிட்டிக் செய்யுள் இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்டதாக ராஸ் ஷம்ரா பதிவுகளை ஆராய்ந்த சில வல்லுனர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். “கானானிய கலாச்சாரத்தின் அஸ்திவாரத்தில்தான் இஸ்ரவேலரின் மதம் அமைந்திருந்தது” என பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டின் அங்கத்தினரான ஆன்ட்ரே ககோ கூறுகிறார்.
சங்கீதம் 29-ஐப் பற்றி, “யாவிஸத்தை பின்பற்றியோர், புயல் தெய்வமான பாகாலுக்கு பாடப்பட்ட பழைய கானானிய பாடலை தழுவி இந்த சங்கீதத்தை எழுதினர் . . . அந்த சங்கீதத்திலுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு வார்த்தையுமே பழைய கானானிய உரைகளில் காணப்படலாம்” என்று ரோமிலுள்ள பான்டிஃபிக்கல் பிப்லிக்கல் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த மிச்சல் டேஹட் கூறுகிறார். அந்த முடிவிற்கு வருவது நியாயமானதா? இல்லவே இல்லை!
நிபுணர்களில் மிதவாதிகளோ இப்படிப்பட்ட ஒப்புமைகள் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக கருதுகிறார்கள். “எந்தவொரு உகரிட்டிக் உரையும் சங்கீதம் 29 முழுவதையும் ஒத்தில்லை” என இறையியல் வல்லுனரான கெரி பிரென்ட்லி கூறுகிறார். மேலுமாக, “சங்கீதம் 29 (அல்லது பைபிளிலுள்ள வேறு எந்த பகுதியும்) புறமத கட்டுக்கதையை தழுவி எழுதப்பட்டது என கூறுவதற்கு எந்த திட்டவட்டமான அத்தாட்சியும் இல்லை” என்றும் கூறுகிறார்.
இரண்டு படைப்புகளின் அணி இலக்கணம், செய்யுள் நடை, நயமான எழுத்து நடை போன்றவை ஒத்திருப்பது, ஒன்று மற்றொன்றை தழுவி எழுதப்பட்டதற்கு அத்தாட்சியாகிவிடுமா? மறுபட்சத்தில், அப்படிப்பட்ட ஒப்புமைகளை எதிர்பார்க்கத்தான் வேண்டும். “உருவிலும் பொருளிலும் ஒப்புமை இருப்பதற்கு கலாச்சாரமே காரணம்; உகரிட்டும் இஸ்ரவேலும் பூகோள, அரசியல் ரீதியில் வித்தியாசப்பட்ட போதிலும் அவை ஒரே பெரிய கலாச்சாரத்தின் அங்கமே. அந்தப் பெரிய கலாச்சாரத்தில் செய்யுள் வார்த்தைகளும் மத வார்த்தைகளும் ஒரே மாதிரியாக இருந்தன” என தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் குறிப்பிடுகிறது. ஆகவே, “வெறுமனே மொழியியல் சார்ந்த ஒப்புமைகள் இருப்பதால் பைபிள் மூலவாசகத்திற்கு புறமத நம்பிக்கைகளே அடிப்படை என்று விதண்டாவாதம் செய்வது சரியல்ல” என கெரி பிரென்ட்லி கூறுகிறார்.
முடிவாக, ராஸ் ஷம்ரா பதிவுகளுக்கும் பைபிளுக்கும் ஏதாவது ஒப்புமைகள் இருந்தாலும்கூட அவை இலக்கிய ஒப்புமைகளே தவிர ஆன்மீக ஒப்புமைகள் அல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். “பைபிளில் காணப்படும் தார்மீகம், ஒழுக்கம் சார்ந்த உயர்ந்த தராதரங்கள் உகரிட்டில் இல்லவே இல்லை” என புதைபொருள் வல்லுனரான சைரஸ் கார்டன் கூறுகிறார். உண்மையில், ஒப்புமைகளைவிட வித்தியாசங்களே மிக ஏராளம்.
பைபிள் எழுத்தாளர்களின் மற்றும் முழு எபிரெய தேசத்தின் கலாச்சார, சரித்திர, மத சூழ்நிலையை புரிந்துகொள்ள உகரிட்டில் நடக்கும் ஆராய்ச்சிகள் பைபிள் மாணாக்கர்களுக்கு தொடர்ந்து உதவலாம். ராஸ் ஷம்ரா பதிவுகளை மேலுமாக ஆராய்கையில் பூர்வ எபிரெயுவை புரிந்துகொள்ள புதிய விளக்கமும் கிடைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, உகரிட்டில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள் கண்டுபிடிப்புகள் பாகாலின் கீழ்த்தரமான வணக்கத்திற்கும் யெகோவாவின் சுத்தமான வணக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெளிவாக வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
[அடிக்குறிப்புகள்]
a “கடல் மக்கள்” என்பது பொதுவாக மத்தியதரைக் கடல் தீவுகளையும் கடலோரப் பகுதிகளையும் சேர்ந்த மாலுமிகளை குறிக்கும். பெலிஸ்தியர்களும் அவர்கள் மத்தியில் இருந்திருக்கலாம்.—ஆமோஸ் 9:7.
b பல்வேறு கருத்துக்கள் நிலவுகிற போதிலும் தாகோன் ஆலயமும் எல் தெய்வத்தின் ஆலயமும் ஒன்றே என சில நிபுணர்கள் கருதுகின்றனர். நியாயாதிபதிகள் 16:23-லும், 1 சாமுவேல் 5:1-5-லும் சொல்லப்பட்ட தாகோன்தான் எல் தெய்வத்தின் உண்மையான பெயர் என்று ராலான் டா வோ கூறுகிறார்; இவர் ஒரு பிரெஞ்சு வல்லுனரும் ஜெருசலேம் ஸ்கூல் ஆஃப் பிப்ளிக்கல் ஸ்டடீஸின் பேராசிரியரும் ஆவார். “தாகோன் ஏதோவொரு விதத்தில் [எல்லோடு] சம்பந்தப்பட்டு அல்லது ஐக்கியப்பட்டு” இருந்திருக்கலாம் என்று தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் கூறுகிறது. பாகால், தாகோனின் குமாரன் என்று ராஸ் ஷம்ரா பதிவுகள் கூறுகின்றன; ஆனால் “குமாரன்” என இங்குள்ள வார்த்தையின் அர்த்தம் தெளிவாக இல்லை.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
உகரிட்டில் நடந்த புதைபொருள் கண்டுபிடிப்புகள் வேதவசனங்களைப் பற்றிய நமது புரிந்துகொள்ளுதலை அதிகரித்திருக்கின்றன
[[பக்கம் 24, 25-ன் தேசப்படம்/படங்கள்]
பொ.ச.மு. 14-ம் நூற்றாண்டில் ஏத்திய சாம்ராஜ்யம்
மத்தியதரைக் கடல்
ராத்து
காசியஸ் மலை (ஜெபில் எல்-ஆக்ரா)
உகரிட் (ராஸ் ஷம்ரா)
டெல் சுகாஸ்
ஒரான்டிஸ்
சிரியா
எகிப்து
[படங்களுக்கான நன்றி]
பாகால் மற்றும் மிருக தலையின் வடிவிலுள்ள பான பாத்திரத்தின் சிறு உருவச்சிலை: Musée du Louvre, Paris; அரச மாளிகையின் ஓவியம்: © D. Héron-Hugé pour “Le Monde de la Bible”
[பக்கம் 25-ன் படம்]
மாளிகை நுழைவாயிலின் இடிபாடுகள்
[பக்கம் 26-ன் படம்]
உகரிட்டிக் புனைக்கவிதை ஒன்று, யாத்திராகமம் 23:19-ன் பின்னணியை அளிக்கலாம்
[படத்திற்கான நன்றி]
Musée du Louvre, Paris
[பக்கம் 27-ன் படங்கள்]
பாகாலின் நினைவுச்சின்னம்
தங்க தட்டில் பொறிக்கப்பட்ட வேட்டைக் காட்சி
தந்த அலங்கார பெட்டியின் மூடியில் கருவள தெய்வத்தின் சித்திரம்
[படத்திற்கான நன்றி]
அனைத்து படங்களும்: Musée du Louvre, Paris