உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 3/15 பக். 21-பக். 24 பாரா. 10
  • ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏலிக்கு பின் சாமுவேல் நியாயாதிபதியாகிறார்
  • (1 சாமுவேல் 1:1–7:17)
  • இஸ்ரவேலின் முதல் ராஜா​—⁠வெற்றி பெற்றாரா தோல்வியடைந்தாரா?
  • (1 சாமுவேல் 8:1–15:35)
  • மேய்ப்பனான ஒரு சிறுவன் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறான்
  • (1 சாமுவேல் 16:1–31:13)
  • ‘பலியைப் பார்க்கிலும் சிறந்தது’ எது?
  • பைபிள் புத்தக எண் 9—1 சாமுவேல்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • இஸ்ரவேலின் முதல் ராஜா
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பல ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ஏமாற்றங்கள் மத்தியிலும் சகித்திருந்தார்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 3/15 பக். 21-பக். 24 பாரா. 10

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது

ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

அது பொ.ச.மு. 1117-⁠ம் வருடம். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை யோசுவா கைப்பற்றி இப்போது சுமார் முன்னூறு வருடங்கள் உருண்டோடி விட்டன. இஸ்ரவேலரின் மூப்பர்கள் ஓர் அசாதாரண வேண்டுகோளுடன் யெகோவாவுடைய தீர்க்கதரிசியிடம் வருகிறார்கள். அவர் அதைக் குறித்து ஜெபிக்கிறார். யெகோவாவும் அவர்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். இது நியாயாதிபதிகளுடைய காலத்தின் அஸ்தமனத்தையும் இராஜாக்களுடைய காலத்தின் உதயத்தையும் குறிக்கிறது. இஸ்ரவேலரின் சரித்திரத்தில் ஏற்பட்ட இந்தத் திருப்புக்கட்டத்தின்போது நடந்த பரபரப்பூட்டும் சம்பவங்களை ஒன்று சாமுவேல் புத்தகம் விவரிக்கிறது.

இதை எழுதியவர்கள் சாமுவேல், நாத்தான், காத் ஆகியோர். (1 நாளாகமம் 29:30) இப்புத்தகத்தில் 102 வருட கால சம்பவங்கள், அதாவது பொ.ச.மு. 1180-1078 வரை நிகழ்ந்த சம்பவங்கள் உள்ளன. இதில் இஸ்ரவேலின் நான்கு தலைவர்களை, அதாவது இரண்டு நியாயாதிபதிகளையும் இரண்டு ராஜாக்களையும் பற்றிய பதிவு உள்ளது. இவர்களில் இருவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறவர்கள், மற்ற இருவரோ கீழ்ப்படியாதவர்கள். சிறந்த முன்மாதிரி வைக்கும் இரண்டு பெண்களைப் பற்றியும், தைரியமான, அதே சமயத்தில் சாந்தமான ஒரு போர்வீரனைப் பற்றியும் இது குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட பதிவுகள், பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க வேண்டியதுமான மனப்பான்மைகளையும் செயல்களையும் குறித்த மதிப்புமிக்க பாடங்களைப் புகட்டுகின்றன. இப்படியாக இந்த ஒன்று சாமுவேல் புத்தகம் நம் சிந்தைகளிலும் செயல்களிலும் வல்லமை செலுத்த முடியும்.​—⁠எபிரெயர் 4:12.

ஏலிக்கு பின் சாமுவேல் நியாயாதிபதியாகிறார்

(1 சாமுவேல் 1:1–7:17)

இது சேர்ப்புக்கால பண்டிகை சமயம்; ராமாவில் வாழ்கிற அன்னாள் ஆனந்தத்தில் திளைக்கிறாள்.a யெகோவா அவளுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்து அவளுக்கு ஒரு மகனைக் கொடுத்திருப்பதே அதற்குக் காரணம். தன்னுடைய பொருத்தனையை நிறைவேற்றும் வகையில், “கர்த்தருடைய ஆலய” பணிக்காக தன் மகன் சாமுவேலை அவள் அர்ப்பணிக்கிறாள். அங்கே இந்தச் சிறுவன் “ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை” செய்கிறான். (1 சாமுவேல் 1:24; 2:11) சாமுவேல் இன்னும் சிறுவனாகத்தான் இருக்கிறான், அப்போது ஒருநாள் அவனிடம் யெகோவா பேசுகிறார்; ஏலியின் வீட்டாரைத் தண்டிக்கப் போவதாகச் சொல்கிறார். சாமுவேல் வளர்ந்து பெரியவராகும்போது, இஸ்ரவேலர் எல்லாரும் அவரை யெகோவாவின் தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

சில காலத்திற்குப் பிறகு, இஸ்ரவேலருக்கு விரோதமாய் பெலிஸ்தர் யுத்தம் செய்கிறார்கள். அவர்கள் உடன்படிக்கை பெட்டியைக் கைப்பற்றுகிறார்கள், ஏலியின் இரண்டு மகன்களைக் கொன்று விடுகிறார்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் வயதான ஏலி இறந்துவிடுகிறார், ‘அவர் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தவர்.’ (1 சாமுவேல் 4:18) உடன்படிக்கை பெட்டியைத் தங்கள் வசம் வைத்திருப்பதால் பெலிஸ்தர் பல விபரீதங்களை எதிர்ப்படுகிறார்கள், அதனால் அதை இஸ்ரவேலரிடமே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். இப்போது இஸ்ரவேலரை சாமுவேல் நியாயம் விசாரிக்கிறார், தேசத்தில் சமாதானம் நிலவுகிறது.

வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:

2:10​—⁠இஸ்ரவேலை ஆள எந்த ராஜாவும் இல்லாதிருக்கையில் யெகோவா ‘தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு பெலன் அளிக்கும்படி’ அன்னாள் ஏன் ஜெபித்தாள்? இஸ்ரவேலரை ஒரு ராஜா ஆளுவார் என மோசேயின் நியாயப்பிரமாணத்தில் முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (உபாகமம் 17:14-18) ‘செங்கோல் [ராஜ அதிகாரத்திற்குரிய அடையாளம்] யூதாவைவிட்டு நீங்குவது இல்லை’ என்று யாக்கோபு தனது மரணப்படுக்கையில் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். (ஆதியாகமம் 49:10) மேலும், இஸ்ரவேலரின் மூதாதையாகிய சாராளைக் குறித்து யெகோவா இவ்வாறு கூறியிருந்தார்: ‘அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாவார்கள்.’ (ஆதியாகமம் 17:16) அப்படியானால், எதிர்காலத்தில் வரவிருந்த ஒரு ராஜாவைக் குறித்தே அன்னாள் ஜெபித்தாள்.

3:3​—⁠சாமுவேல் உண்மையிலேயே மகா பரிசுத்த ஸ்தலத்தில்தான் தூங்கினாரா? இல்லை. சாமுவேல், ஆசாரியரல்லாத கோகாத் வம்சத்தைச் சேர்ந்த லேவியனாக இருந்தார். (1 நாளாகமம் 6:33-38) ஆகவே, ‘பரிசுத்தமானவைகளைப் பார்க்கிறதற்காக உட்பிரவேசிக்க’ அவர் அனுமதிக்கப்படவில்லை. (எண்ணாகமம் 4:17-20) ஆசரிப்புக்கூடாரத்தின் பிரகாரத்திற்குள் செல்வதற்கு மட்டுமே அவருக்கு உரிமை இருந்தது. அதனால், அங்குதான் அவர் தூங்கியிருக்க வேண்டும். ஏலியும்கூட அங்கு எங்காவதுதான் தூங்கியிருக்க வேண்டும். அப்படியானால், “தேவனுடைய பெட்டி இருக்கிற” இடம் என்பது ஆசரிப்புக்கூடாரப் பகுதியையே குறிக்கிறது.

7:7-9, 17​—⁠யெகோவா தேர்ந்தெடுத்த இடத்தில் மட்டுமே தவறாமல் பலிகள் செலுத்த வேண்டியிருக்க சாமுவேல் ஏன் மிஸ்பாவிலே தகன பலி செலுத்தி, ராமாவிலே பலிபீடத்தைக் கட்டினார்? (உபாகமம் 12:4-7, 13, 14; யோசுவா 22:19) சீலோவில் இருந்த ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து பரிசுத்தப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்ட பிறகு, யெகோவாவின் பிரசன்னம் இனிமேலும் அங்கு இருக்கவில்லை. ஆகவே, கடவுளுடைய பிரதிநிதியான சாமுவேல் மிஸ்பாவிலே தகன பலி செலுத்தினார், ராமாவிலே ஒரு பலிபீடத்தையும் கட்டினார். இவ்வாறு செய்ததை யெகோவா நிச்சயம் அங்கீகரித்திருப்பார்.

நமக்குப் பாடம்:

1:11, 12, 21-23; 2:19. அன்னாளின் ஜெப சிந்தை, மனத்தாழ்மை, யெகோவாவின் இரக்கத்திற்கு அவள் காட்டிய நன்றியுணர்வு, அவளுடைய மங்காத தாய்ப்பாசம் இவையாவும் தேவ பயமுள்ள பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரிகளாகும்.

1:8. வார்த்தைகளால் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் எல்க்கானா எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்! (யோபு 16:5) வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அன்னாளின் மனதை நோகடிக்காமல், “ஏன் சஞ்சலப்படுகிறாய்?” என முதலில் அவளிடம் கேட்டார். இப்படி அவர் கேட்டதால்தான் அவள் தன்னுடைய மனதிலுள்ளதையெல்லாம் கொட்டித் தீர்க்க முடிந்தது. அதன் பிறகு, “பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா” என்று சொல்லி அவள் மீது தனக்குள்ள பாசத்தை உறுதிப்படுத்தினார்.

2:26; 3:5-8, 15, 19. கடவுள் கொடுத்த வேலையை ஊக்கமாகச் செய்யும்போது, ஆன்மீகப் பயிற்சியை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்போது, அடக்கமாக, மரியாதையாக நடந்துகொள்ளும்போது கடவுளுக்கும் மனிதருக்கும் அதிக ‘பிரியமுள்ளவர்களாக’ நாம் ஆகிறோம்.

4:3, 4, 10. பரிசுத்தமாகக் கருதப்பட்ட உடன்படிக்கை பெட்டிக்குக்கூட பாதுகாப்பளிக்கும் மந்திரசக்தி இருக்கவில்லை. எனவே, நாம் ‘விக்கிரகங்களுக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்ள’ வேண்டும்.​—⁠1 யோவான் 5:21.

இஸ்ரவேலின் முதல் ராஜா​—⁠வெற்றி பெற்றாரா தோல்வியடைந்தாரா?

(1 சாமுவேல் 8:1–15:35)

சாமுவேல் தன் காலம் பூராவும் யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கிறார், ஆனால் அவருடைய புதல்வர்களோ அவ்வாறு இருப்பதில்லை. இஸ்ரவேலின் மூப்பர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென கேட்கும்போது யெகோவா அதற்கு அனுமதிக்கிறார். அவர் கொடுக்கிற அறிவுரைப்படி பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த சௌந்தரியவானான சவுலை ராஜாவாக அவர் அபிஷேகம் செய்கிறார். அம்மோனியரை சவுல் முறியடித்து ராஜா என்ற தன் ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார்.

தாணையம் இருந்த, அதாவது காவலுக்கு இருந்த பெலிஸ்தரை சவுலின் புதல்வனும் பலசாலியுமான யோனத்தான் முறியடிக்கிறார். எனவே அவர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் படை திரண்டு வருகிறார்கள். மிரண்டு போன சவுல், சட்டத்தை மீறி தானே தகன பலி செலுத்துகிறார். வீரமிக்க யோனத்தான் தன்னுடைய ஆயுததாரியை மட்டும் அழைத்துச் சென்று மற்றொரு பெலிஸ்த புறக்காவற்படையைத் தாக்குகிறார். என்றாலும், சவுல் முன்யோசனையின்றி ஆணையிடுவதால் எதிர்பார்த்தளவு அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்பு “சுற்றிலும் இருக்கிற” தன் எல்லாச் சத்துருக்களுக்கும் விரோதமாக சவுல் ‘யுத்தம் பண்ணுகிறார்.’ (1 சாமுவேல் 14:47) ஆனால், அமலேக்கியரை முறியடிக்கும்போது யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் ‘சாபத்தீடானவைகளை’ அழிக்காமல் விட்டுவிடுகிறார். (லேவியராகமம் 27:28, 29) இதன் விளைவாக, ராஜ பதவியிலிருந்து சவுலை யெகோவா நீக்குகிறார்.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

9:9​—⁠“இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்” என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? சாமுவேலின் காலத்திலும் ராஜாக்களின் காலத்திலும் தீர்க்கதரிசிகள் பிரபலமானவர்களாக ஆனபோது “ஞானதிஷ்டிக்காரன்” என்ற பெயருக்குப் பதிலாக “தீர்க்கதரிசி” என்ற பெயர் புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது. தீர்க்கதரிசிகளின் வரிசையில் சாமுவேல்தான் முதலானவர் என்று கருதப்படுகிறார்.​—⁠அப்போஸ்தலர் 3:24.

14:24-32, 44, 45​—⁠யோனத்தான், சவுலின் ஆணையை மீறி தேனைச் சாப்பிட்டதால் கடவுளுடைய தயவை இழந்தாரா? அப்படி இழந்ததாகத் தெரியவில்லை. முதலாவதாக, தன் தகப்பனின் ஆணையைப் பற்றி யோனத்தானுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல, போலி வைராக்கியத்துடன் அல்லது ராஜ பதவியைக் குறித்த தவறான எண்ணத்துடன் இடப்பட்ட இந்த ஆணையால் ஜனங்களுக்குப் பல பிரச்சினைகள் வந்தன. இத்தகைய ஓர் ஆணையின் மீது கடவுளுடைய அங்கீகாரம் இருந்திருக்குமா என்ன? ஆணையை மீறியதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள யோனத்தான் மனமுள்ளவராய் இருந்தபோதிலும் அவர் கொல்லப்படவில்லை.

15:6​—⁠கேனியருக்கு சவுல் ஏன் தனிச் சலுகை காட்டினார்? கேனியர், மோசேயின் மாமனாருடைய சந்ததியார் ஆவர். சீனாய் மலையிலிருந்து புறப்பட்டபோது இஸ்ரவேலருக்கு அவர்கள் துணைபுரிந்தார்கள். (எண்ணாகமம் 10:29-32) கானான் தேசத்தில் யூதா கோத்திரத்தாரோடு அவர்கள் கொஞ்ச காலம் குடியிருந்தார்கள். (நியாயாதிபதிகள் 1:16) பிற்பாடு, அமலேக்கியர் மத்தியிலும், வேறு பல இனத்தார் மத்தியிலும் அவர்கள் குடியிருந்தார்கள், ஆனாலும் இஸ்ரவேலரோடு அவர்களுக்குத் தொடர்ந்து நட்புறவு இருந்தது. எனவே, கேனியரை சவுல் தப்புவித்ததற்கு நியாயமான காரணங்கள் இருந்தன.

நமக்குப் பாடம்:

9:21; 10:22, 27. சவுல் ராஜாவாக ஆன புதிதில் அடக்கமுள்ளவராக, மனத்தாழ்மையுள்ளவராக இருந்தார். “பேலியாளின்” மக்கள் சிலர் அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது அவர்களிடம் முட்டாள்தனமாய் நடந்துகொள்ளாதிருக்க இக்குணங்கள் அவருக்கு உதவின. இப்படிப்பட்ட மனநிலை, யோசிக்காமல் திடுதிப்பென்று ஒரு காரியத்தில் இறங்கிவிடாதபடி நம்மை எவ்வளவாய்ப் பாதுகாக்கிறது!

12:20, 21. மனிதரையே நம்பியிருப்பது, இராணுவ பலத்தில் நம்பிக்கை வைப்பது, அல்லது விக்கிரகாராதனையில் ஈடுபடுவது போன்ற ‘வீணான’ காரியங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பிவிட ஒருபோதும் இடமளிக்காதீர்கள்.

12:24. யெகோவாவிடம் பயபக்தியோடு இருப்பதற்கும் முழு இருதயத்தோடு அவரைச் சேவிப்பதற்கும் முக்கியமாக உதவுவது, பூர்வ காலத்திலும் நவீன காலத்திலும் தம்முடைய மக்களுக்கு அவர் செய்திருக்கும் ‘மகிமையான காரியங்களைச் சிந்தித்துப் பார்ப்பதாகும்.’

13:10-14; 15:22-25, 30. கீழ்ப்படியாமலோ கர்வத்துடனோ துணிகரமாகச் செயல்படுவதைத் தவிருங்கள்.​—⁠நீதிமொழிகள் 11:2.

மேய்ப்பனான ஒரு சிறுவன் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறான்

(1 சாமுவேல் 16:1–31:13)

யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தாவீதை வருங்கால ராஜாவாக சாமுவேல் அபிஷேகம் பண்ணுகிறார். அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே, ஒரு சிறிய கூழாங்கல்லைப் பயன்படுத்தி பெலிஸ்த இராட்சதனான கோலியாத்தை தாவீது கொல்கிறார். தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு மலர்கிறது. சவுல் தன் போர்வீரர்கள் அனைவருக்கும் தாவீதைத் தலைவராக நியமிக்கிறார். தாவீதுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவிகிறது. இதனால் “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என இஸ்ரவேல் பெண்கள் பாடுகிறார்கள். (1 சாமுவேல் 18:7) இதைக் கேட்ட சவுல் பொறாமையில் பொங்கியெழுந்து, தாவீதைக் கொல்ல வழி தேடுகிறார். இவ்வாறு சவுல் மூன்று முறை தாவீதைத் தாக்க முயற்சி செய்கிறார். அதன் பிறகு, தாவீது தப்பியோடி, ஒரு நாடோடியாகச் சுற்றித் திரிகிறார்.

இந்த வருடங்களில், சவுலைக் கொல்வதற்குக் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களையும் தாவீது விட்டுவிடுகிறார். அபிகாயில் என்ற ஓர் அழகான பெண்ணைச் சந்திக்கிறார், பிற்பாடு அவளை மணம் செய்துகொள்கிறார். இஸ்ரவேலருடன் போர் செய்ய பெலிஸ்தர் வருகையில் சவுல் யெகோவாவிடம் விசாரிக்கிறார். ஆனால் யெகோவா அவரை ஏற்கெனவே நிராகரித்திருந்தார். சாமுவேலும் இறந்துவிட்டிருந்தார். நம்பிக்கையிழந்த நிலையில், குறிசொல்கிற ஒரு பெண்ணிடம் அவர் செல்கிறார்; போரில் பெலிஸ்தர் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்பதை அவளிடமிருந்து அறிந்துகொள்கிறார். அந்த யுத்தத்தில் பலத்த காயமடைகிறார், அவருடைய புதல்வர்களும் இறந்துவிடுகிறார்கள். தோல்வி கண்டவராக கடைசியில் அவரும் இறந்துவிடுகிறார். இத்துடன் இப்பதிவு முடிவடைகிறது. தாவீது இன்னும் ஒளிந்து ஒளிந்துதான் வாழ்கிறார்.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

16:14​—⁠எந்தப் பொல்லாத ஆவி சவுலைக் கலங்கப் பண்ணிக் கொண்டிருந்தது? சவுலுடைய மனதிலும் இருதயத்திலும் இருந்த கெட்ட எண்ணமே, அதாவது தவறு செய்ய வேண்டுமென்ற உள்தூண்டுதலே, அவருடைய மன அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்த பொல்லாத ஆவியாகும். யெகோவா தமது பரிசுத்த ஆவியை சவுலிடமிருந்து நீக்கியதால் அவர் அதன் பாதுகாப்பை இழந்தார்; இதனால் சவுலுடைய கெட்ட ஆவி, அதாவது மனப்பான்மை அவரை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை சவுலிடமிருந்து நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அந்தப் பொல்லாத ஆவியை அப்படி ஆக்கிரமிக்க அனுமதித்ததால், அது “கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

17:55​—⁠1 சாமுவேல் 16:17-23-ஐக் கவனிக்கையில், தாவீது யாருடைய மகன் என சவுல் ஏன் கேட்டார்? தாவீதின் தகப்பனுடைய பெயரை வெறுமனே அறிந்துகொள்வதற்காக சவுல் அவ்வாறு கேட்கவில்லை. ஓர் இராட்சதனையே வீழ்த்தும் அளவுக்கு மாபெரும் சாதனை படைத்த இளைஞனின் தகப்பன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ள விரும்பியதாலேயே அவர் அப்படிக் கேட்டிருப்பார்.

நமக்குப் பாடம்:

16:6, 7. மற்றவர்களுடைய வெளித்தோற்றத்தைப் பார்த்து மயங்கிவிடுவதற்குப் பதிலாக அல்லது அவர்களைக் குறித்து அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்குப் பதிலாக, யெகோவா பார்க்கிற விதத்தில் நாம் அவர்களைப் பார்க்க வேண்டும்.

17:47-50. கோலியாத்தைப் போன்ற விரோதிகளிடமிருந்து வரும் எதிர்ப்பையும் துன்புறுத்தலையும் நாம் தைரியமாக எதிர்ப்பட முடியும்; ஏனென்றால் ‘யுத்தம் யெகோவாவுடையது.’

18:1, 3; 20:41, 42. யெகோவாவை நேசிப்போர் மத்தியில் உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிக்க முடியும்.

21:12, 13. வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்கையில் நம்முடைய சிந்தனா சக்தியையும் திறமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார், இது விவேகத்தையும் அறிவையும் சிந்திக்கும் திறனையும் நமக்கு அளிக்கிறது. (நீதிமொழிகள் 1:4) கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியும் நமக்கு உள்ளது.

24:6; 26:11. யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு உள்ளப்பூர்வ மரியாதையைக் கொடுப்பதில் தாவீது எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி வைக்கிறார்!

25:23-33. அபிகாயிலின் புத்திசாலித்தனம் பின்பற்றத்தக்கது.

28:8-19. பொல்லாத ஆவிகள், மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு அல்லது அவர்களுக்குத் தீங்கு செய்வதற்கு இறந்துபோன சில ஆட்களைப் போல நடிக்கலாம். எனவே ஆவியுலகத் தொடர்புடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் நாம் விலகியிருக்க வேண்டும்.​—⁠உபாகமம் 18:10-12.

30:23, 24. எண்ணாகமம் 31:⁠27-⁠ன் அடிப்படையிலான இத்தீர்மானம், இன்று சபையில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களானாலும் சரி, சிறிய சிறிய உதவிகளைச் செய்பவர்களானாலும் சரி, அவர்களை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அப்படியானால், நாம் எதைச் செய்தாலும், ‘அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்வோமாக.’​—⁠கொலோசெயர் 3:24.

‘பலியைப் பார்க்கிலும் சிறந்தது’ எது?

ஏலி, சாமுவேல், சவுல், தாவீது ஆகியோரின் அனுபவங்கள் மூலம் என்ன முக்கியமான உண்மை வலியுறுத்திக் காட்டப்படுகிறது? அந்த உண்மை இதுவே: “பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது.”​—⁠1 சாமுவேல் 15:22, 23.

உலகளாவிய ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் பங்குபெறும் எப்பேர்ப்பட்ட அருமையான சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்! நாம் “உதடுகளின் காளைகளை” யெகோவாவுக்குச் செலுத்தி வருகையில், அவருடைய வார்த்தையின் மூலமும் பூமிக்குரிய அமைப்பின் மூலமும் அவர் அளிக்கிற வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.​—⁠ஓசியா 14:2; எபிரெயர் 13:15.

[அடிக்குறிப்பு]

a ஒன்று சாமுவேல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டில் 18-19 பக்கங்களைக் காண்க.

[பக்கம் 23-ன் படம்]

மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் இருந்த இஸ்ரவேலின் முதல் ராஜா கர்வமும் துணிகரமுமுள்ளவராக மாறினார்

[பக்கம் 24-ன் படம்]

கோலியாத்தைப் போன்ற விரோதிகளிடமிருந்து எதிர்ப்பு வரும்போது, எதைக் குறித்து நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்